Read in : English
தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருப்பது இவ்விவாகரத்தில் பாஜகவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
உக்கடம் குண்டுவெடிப்பு!
கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஒரு காரில் சிலிண்டர் வெடித்தது; இச்சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபின் பலியானார். 2019ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் முபினும் ஒருவர். இந்த தகவல் தெரிய வந்ததையடுத்து, தீபாவளி கொண்டாட்டத்தை குலைக்கும் வகையில் இந்த கார் வெடிப்பு சம்பவத்தின் தடங்கள் அமைந்திருப்பதாக எதிர்ப்பு எழுந்தது.
1998 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இதே கோவை நகருக்கு அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி வந்தபோது தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது; 11 இடங்களில் நடைபெற்ற 12 குண்டுவெடிப்புகளில் 58 பேர் இறந்தனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டனர். அது, பாஜக கூட்டணிக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. கோவை மாவட்டத்தில் பாஜக வெற்றிபெறவும் வளர்ச்சிபெறவும் அந்த குண்டுவெடிப்பு காரணமானது. ஆனால், தற்போது உக்கடத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பை அச்சம்பவத்தோடு எந்தவகையிலும் ஒப்பிட முடியாது.
குண்டு வெடித்தபின் கோவை மாநகரில் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. பல நாட்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், சாலையோரக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு முக்கிய சாலைகளும் வெறிச்சோடின. தமிழ்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து அதுபோன்ற பயங்கரவாத சம்பவம் நடந்ததில்லை என்பதால் மாநிலம் முழுவதும் மக்களிடம் கடும் தாக்கத்தை அந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தியது. அது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது.
2019ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் முபினும் ஒருவர்
இந்த முறை காரை ஓட்டிச் சென்றவரைத் தவிர வேறு யாரும் பலியாகவில்லை. அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததால் பெரும் பாதிப்பு இல்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதபோதும், இதனை முன்வைத்து அரசியல் விளையாட்டுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் பெருமளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போனதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறது பாஜக; இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாநகரில் பந்த் அறிவித்துள்ளது.
என்ஐஏ வருகை!
அடுத்தடுத்த நாட்களில் இச்சம்பவம் தொடர்பாகப் புதிதாகப் பல செய்திகள் வெளியாக, கடந்த 27ஆம் தேதியன்று இவ்வழக்கு விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சர்வதேசத் தொடர்புகள் இந்த சம்பவத்தில் காணப்படும் வாய்ப்புகள் இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக, இது பாஜகவுக்குப் பலத்த அதிர்ச்சியைத் தரும். அதனால், பாஜகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லி திமுக தலைவரைப் பாராட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
மேலும் படிக்க: அருணா ஜெகதீசன் ஆணையம்: சொல்லப்படாத கதை
குண்டுவெடிப்பு அரசியல்!
மக்களின் கவனம் பாஜகவை நோக்கித் திரும்புவதற்குள் முதல்வரின் அறிவிப்பு என்ஐஏ வருகைக்கு வித்திட்டிருக்கிறது. ஆனால், ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகளை இந்த சம்பவம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்த அறிக்கைகள் குறித்து மௌனம் காத்த முன்னாள் முதல்வர்கள் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கோவை கார் குண்டுவெடிப்புக்குப் பின் மீண்டும் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
திமுக மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். ஆனால், இருவரின் அறிக்கைகளும் அரசியல்ரீதியாகவே இருந்தன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக இருவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குண்டுவெடிப்பு நடக்கிறது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அரசியல் தலையீடு காரணமாக காவல் துறையின் கவனம் எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு போடுவதில் இருப்பதாகக் கூறினார். திமுக அரசு பழிவாங்கும் அரசியலைக் கையில் எடுக்கிறது என்ற வழக்கமான குற்றச்சாட்டே அவரின் அறிக்கையில் ஒலித்தது. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் திமுக ஆட்சியில் 1998ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கையிலோ கட்சி அரசியலையும் தாண்டி மதவாத நெடி தூக்கலாக வீசியது. தமிழ்நாட்டின் உளவுப்பிரிவில் 60 சதவீதம் டி.எஸ்.பி.க்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் என்.ஜி.ஓ. அமைப்புகள் போலவும் மிஷினரிகள் போலவும் செயல்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். உளவுப்பிரிவை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
கடந்த 27ஆம் தேதியன்று இவ்வழக்கு விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். கண்டிப்பாக, இது பாஜகவுக்குப் பலத்த அதிர்ச்சியைத் தரும்
அண்ணாமலையின் கருத்துகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. நிலைமையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட அண்ணாமலை முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். பாஜகவின் வெறுப்பு அரசியலே சில இஸ்லாமியக் குழுக்களும் தனிநபர்களும் வகுப்புவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் மதமோதல்கள் நிகழ்வதற்கும் காரணம் என்று அவர் சாடினார்.
ஆனால், இந்த முட்டல் அரசியல் களத்தின் மையத்துக்கு வருவதற்கு முன் கார் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்துவிட்டது.
மேலும் படிக்க: போதைமருந்து யுத்தம்: கேரளாவை தொடருமா தமிழகம்!
முதல்வரின் இம்முடிவுக்கு விமர்சனங்கள் எழாமலும் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இந்த முடிவு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றிருக்கிறார். “விசாரணையை முடிக்காமலே இந்த சம்பவத்தில் சர்வதேசத் தொடர்புகள் இருப்பதாக முதல்வர் எப்படி முடிவுக்கு வந்தார்?
அவரது போலீஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா? போலீஸ் துறைக்கு மதவாத சாயம் பூசி பாஜக சொன்ன கருத்துகளை முதல்வர் ஏற்றுக்கொண்டாரா?” என்று கேள்விகளை அடுக்கிய சீமான் தனது பொறுப்பில் இருந்து முதல்வர் நழுவிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Read in : English