Read in : English
நீங்கள் இடதுசாரியாக இருக்கலாம்; வலதுசாரியாக இருக்கலாம்; இரண்டுமில்லாமல் மத்திமமாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும், ஒரு சமூகத்தில் குழந்தைகள் இறப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். இந்தக் கருத்தை இன்மதிக்கு அளித்த ஒரு நேர்காணலில் தரவியல் விஞ்ஞானி ஆர்.எஸ்.நீலகண்டன் கூறினார். அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைக்கும், நம் குழந்தைகளைக் காப்பாற்ற நம்மைத் தூண்டும் விசயத்திற்கும் சம்பந்தமில்லை என்று சூசகமாகத் தெரிவிக்கிறார் அவர்.
ஒரு சமூகம் நல்ல கட்டமைப்புடன் இருந்தால் அல்லது ஒரு சமூகக் கட்டமைப்பு சரியாக இருந்தால் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்புவார்கள். அல்லது அதைச் சாதிக்கும் விதமாக உழைப்பார்கள். அப்போது அவர்களின் அரசுகள் மிகப்பெரிய அளவுக்குப் பொறுப்புடன் செயலாற்றி நல்விளைவுகளை உருவாக்குவார்கள் என்கிறார் நீலகண்டன்.
தெற்கும் வடக்கும்: ஒரு பெரும்பிளவு என்ற தன்புத்தகத்தில் நீலகண்டன் தரவு ஆதாரங்களோடு, எவ்வளவு தூரம் கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றங்களை தென்மாநிலங்கள் சாதித்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறார். இந்தச் சமூகக் குறியீடுகளில் செழிப்பான சில வடஇந்திய மாநிலங்கள் கூட பின்தங்கியேதான் இருக்கின்றன என்பதையும் அவரது புத்தகம் எடுத்துரைக்கிறது.
உதாரணமாக, குழந்தை இறப்பு விகிதத்தை (ஐஎம்ஆர்) சுட்டிக்காட்டுகிறார் நீலகண்டன். பிறந்து ஓராண்டுக்குள் ஆயிரத்தில் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதை அளவிடுவது இந்த ஐஎம்ஆர். கேரளாவில் இந்த விகிதம் வெறும் 6-தான்; இதை அவர் அமெரிக்காவின் ஐஎம்ஆரோடு ஒப்பிடுகிறார். அதே சமயம் குழந்தை இறப்பு விகிதம் மத்திய பிரதேசத்தில் 48; இதைப் போரினால் அல்லல்பட்ட ஆஃப்கானிஸ்தானுடனும் மேற்கு ஆஃப்ரிக்காவின் நைஜரோடும் ஒப்பிடுகிறார்.
வடக்கும் தெற்கும்: ஒரு பெரும்பிளவு என்ற தன் புத்தகத்தில் நீலகண்டன் தரவு ஆதாரங்களோடு எவ்வளவு தூரம் கல்வி, சுகாதார, பொருளாதார முன்னேற்றங்களை தென்மாநிலங்கள் சாதித்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறார். வடஇந்திய மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன என்பதையும் அவரது புத்தகம் எடுத்துரைக்கிறது
தொழில்மயமாதல் விசயத்தில் தமிழ்நாட்டை விட குஜராத் அதிகம் தொழில்மயமான மாநிலம்தான். ஆனால் தென்மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான ஆலைத்தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கே தொழில்மயம் என்பது மிகவும் பரவலாக இருக்கிறது.
சில அளவீடுகளில் தமிழகம் கேரளாவையும் தாண்டியிருக்கிறது என்பதை நீலகண்டனின் தெற்கும் வடக்கும்: ஒரு பெரும்பிளவு புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. தமிழகம் வெற்றிபெற்ற விசயங்களில் ஒன்று கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் விகிதம். கல்வி கற்கும் வயதில் இருக்கும் மக்கள்தொகையில் எத்தனை சதவீதம்பேர் பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஓர் அளவீடு ஜிஈஆர் (கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ).
மேலும் படிக்க: மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்
மேனிலை மற்றும் கல்லூரிக் கல்வியில், கேரளாவின் ஜிஈஆர் குறைவாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கல்லூரி செல்லும் வயதுடைய மக்களில் பாதிக்கு மேலானவர்கள் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இது கேரளாவை விட அதிகம்.
இந்த சாதனைகளின் அர்த்தம் உயர்ந்த அளவு மக்கள்தொகைக் கட்டுப்பாடுதான். தமிழகத்தின் முழு கருவள வீதம் (டோட்டல் ஃபெர்டிலிட்டி ரேட் – டிஎஃப்ஆர்) 2-க்கும் கீழே எப்போதோ குறைந்துவிட்டது. அதாவது, ஒவ்வொரு தம்பதிக்கும் அவர்களது இடங்களை நிரப்புவதற்கு இரண்டு குழந்தைகள் கிடையாது.
மேலும் பட்டதாரிப் பெண்களின் முழு கருவளவீதம் (டிஎஃப் ஆர்) வெறும் 1 தான். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இன்னும் ஏராளமான பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்வார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு இரண்டு தம்பதிகளுக்கும், அதாவது நான்குபேருடைய இடத்தை நிரப்ப இரண்டு குழந்தைகளே இருப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் தமிழகத்தின் மக்கள்தொகை முழுமையான அளவில் படுதுரிதமாகக் குறைந்துவிடும். நீலகண்டனின் புத்தகம் சொல்வது போல, 2030-லிருந்து தமிழகத்தின் மக்கள்தொகை இன்னும் குறைந்துவிடும்.
ஆனால் இந்த வெற்றி அச்சமூட்டுவதாக இருக்கிறது என்பதையும் நீலகண்டன் சுட்டிக் காட்டுகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் அந்தந்த மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அமையும். இதுதான் நமது அரசியல் கட்டமைப்பு.
மக்கள்தொகை குறைந்தால் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும்.
அதனால் மக்கள்தொகையைக் குறைக்க மாநிலங்கள் தயங்கும் என்பதால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பாராளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி 1976-ல் 42-ஆவது சட்டத்திருத்தம் மூலம் நிறுத்திவைத்தார். பின்பு இந்த நிறுத்திவைப்பு 2001-ல் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு 2026-ல் முடியவிருக்கிறது.
பாஜகவின் செல்வாக்கு வடஇந்தியாவில் அதிகமிருப்பதும் அக்கட்சியின் மைய அதிகார போக்கும் நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான். அதனால் சில ஆண்டுகளுக்குப் பின் நிகழக்கூடிய தொகுதி மறுசீரமைப்புப் பணியின்போது, தமிழ்நாட்டின் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதிருக்கும் 39 (1971 சென்ஸஸ் படி)-லிருந்து 30-ஆக குறையலாம். மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 90-ஆக உயரலாம்.
அனுகூலச் சத்துரு என்பது போல, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்ற மாநிலங்களுக்கு இது தண்டனையாகும்; மேலும் ஒன்றிய அரசின் அதிகார மையத்தில் அந்த மாநிலங்களின் செல்வாக்கு செல்லாக் காசாகி விடும். இதுதான் தரவியல் விஞ்ஞானி நீலகண்டனின் வாதம்.
சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்த குறியீடுகளில் தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையே பெரியதோர் இடைவெளி விரிந்துகொண்டே போகிறது. எனினும், ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே கொள்கை இலக்குகளை விதித்துக் கொண்டே இருக்கிறது என்று நீலகண்டனின் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது.
உதாரணமாக, திரட்டப்படும் வரிகளை மாநிலங்களோடு ஒன்றிய அரசு பகிர்ந்துகொள்ளும் என்ற உறுதிமொழியைச் சொல்லலாம். மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்தபோது, மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றிய அரசு திரட்டும் மொத்த வரிகளிலிருந்து மாநிலங்களுக்குச் சேரவேண்டிய பங்கு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசின் வரிவருமானத்தில் தங்களின் பங்காக அதிகமான நிதியைப் பெற மாநிலங்களால் முடியவில்லை என்கிறார் நீலகண்டன். காரணம், ஒன்றிய அரசு செஸ், சர்சார்ஜ் என்று அடையாளப்படுத்திய வரிகளை கொள்கை அடிப்படையில் இரண்டு மடங்காக்கி விட்டது; செஸ், சர்சார்ஜ் போன்ற வருமானங்கள் மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.
மத்திய அரசு நிதியால் செயல்படுத்தப்படும் ஆரோக்கியம், கல்வி போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள், பெரும்பாலும் வடஇந்திய மாநிலங்களின் தேவைகளையே பூர்த்தி செய்கின்றன; அதற்காக இந்த செஸ், சர்சார்ஜ் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. நன்றாகச் செயல்படும் மாநிலங்கள் எப்படி நிதி மறுக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இது என்கிறார் நீலகண்டன்.
சில ஆண்டுகளுக்குப் பின்வரும் தொகுதி மறுசீரமைப்புப் பணியில், தமிழ்நாட்டின் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதிருக்கும் 39 (1971 சென்சஸ் படி)-லிருந்து 30-ஆக குறையலாம். மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 90-ஆக உயரலாம்
தென்னிந்திய மாநிலங்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியது உபதேசியவாதத்தை வளர்த்தெடுத்த மொழி அடையாளம்தான் என்று வாதம் செய்கிறார் நீலகண்டன். அந்த மொழி அடையாளம்தான் அந்த மாநிலங்களுக்குப் பலமான சமூகக் கட்டமைப்பை, ஒற்றுமையை, நல்லாட்சி முறையைத் தந்தது. ஆனாலும் மொழி அடையாளம் ஒரு காரணம் என்பது வெறும் யூகம்தான்; சொல்லப்போனால் அது பல்வேறு காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பதை நீலகண்டன் ஒத்துக் கொள்கிறார்.
கேரளாவில் மலையாள மொழி அடையாளத்தை வளர்த்தெடுத்தது ஐக்கிய கேரள இயக்கம் என்று நீலகண்டனின் தெற்கும் வடக்கும் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. கேரள மாடலில் இடதுசாரி சித்தாந்தம் பெரும் பங்காற்றியிருக்கிறது என்ற கருத்துக்கு நீலகண்டன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதே இடதுசாரிக் கட்சிதான் மேற்கு வங்கத்திலும் நீண்டகாலம் ஆட்சி செய்தது; ஆனால் அந்த மாநிலம் பெரிதாக முன்னேறியதாகத் தெரியவில்லை என்கிறார் அவர். சொல்லப்போனால் மேற்கு வங்கத்தில் பல்வேறு அளவீடுகளில் பழைய தலைமுறை சிறப்பாக இருக்கிறது.
ஆனால் மேற்குவங்கத்தின் இளைய தலைமுறை பல குறியீடுகளில் சரிந்து காணப்படுவது வீழ்ச்சியின் அடையாளம். “மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கலாம். அதனால் மக்களுக்கு மார்க்சிஸ்ட் சித்தாந்தங்கள் பிடித்துப்போனது என்று அர்த்தமா? மார்க்சிஸ்ட் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மக்கள் ஒன்றுதிரண்டு உழைத்தார்கள் என்று அர்த்தமா?” என்று இன்மதிக்கு அளித்த நேர்காணலில் வாசகர்களிடம் கேள்வியெழுப்புகிறார் நீலகண்டன்.
இதிலிருந்து சற்று விலகி, தெற்கும் வடக்கும் புத்தகத்தின் பிரதானமான வாதத்திற்கு மாற்றுக் கருத்து தர முடியும். பல குறியீடுகளில் வடஇந்தியா முன்னேறுவதற்கும், அங்கே சிறப்பான ஆட்சியைத் தருவதற்கும் தேவையான ஒரு சமூக ஒருங்கிணைப்பைப் பல வடஇந்திய மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி உருவாக்க முயற்சிக்கிறார். இந்தியாவை முன்னேறச் செய்வதற்கு ஒருவேளை தேசியவாதம் அவசியமாக இருக்கலாம்.
மேலும் படிக்க: டில்லியோடு திமுக இணக்கமாகப் போகாததால் நட்டம் தமிழ்நாட்டுக்குத்தான்
இதற்குத் தோள்குலுக்கி நீலகண்டன் பதில் சொல்கிறார். “மதம்தான் வட இந்தியாவிற்குச் சமூகக் கட்டமைப்பைத் தரும் என்றால், நல்லது, அவர்களுக்கு நல்லதிர்ஷ்டம் கிடைக்கட்டும்” என்கிறார். ஆனால் தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்.
ஒரு தேசமாக இந்தியா ஜீவித்தால்தான், மாநிலங்களின் முன்னேற்றம் சாத்தியப்படும் என்று சொல்வார்கள் தேசியவாதிகள். ”ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க ராணுவத் தேவைகள் அவசியம். வடஇந்திய மாநிலங்களே ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் அதிகமும் பங்களிக்கின்றன. தேசத்தில் நிலவும் சமச்சீர்வின்மைகளை ஒன்றிய அரசால்தான் சரிசெய்ய முடியும்; அதைச் செய்வது ஒன்றிய அரசு உருவாக்கும் திட்டங்களே. அப்போதுதான் இந்த நாடு சிதறாமல் ஒன்றுபட்டு பலமாக ஜீவிக்க முடியும்”. இப்படி வாதம் செய்வார்கள் தேசியவாதிகள்.
இந்தியா முழுமைக்கும் ஓர் ஒட்டுறவைத் தரவும், தேசத்தை மேலும் வளர்த்தெடுக்கவும், இந்துமத அடிப்படையிலான பலமானதொரு தேசியவாதத்தால் இயலும் என்ற கருத்தியலின் சாரத்திலே மோடி அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்னேற்றத்திற்கு அடையாள அரசியல்தான் வேண்டும் என்றால், அது ஏன் நாடு முழுமைக்கும் இந்து அடையாளமாக இருக்கக்கூடாது என்று பாஜக வாதிடலாம்.
தெற்கும் வடக்கும்: ஒரு பெரும்பிளவு என்ற இந்தப் புத்தகம் இன்றைய இந்தியாவிலிருக்கும் அழுத்தங்களையும் எதிர்அழுத்தங்களையும் சித்திரப்படுத்தும் புத்தகங்களின் பட்டியலில் மேலும் ஒரு வரவு.
“இந்தியா தனது ஆளுமைக் கட்டமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். மறுதலிப்பவர்களுக்கும் எதிர்ப்பு அதிகாரத்தைத் தரக்கூடிய அரசாங்க அமைப்பு உருவாக வேண்டும்” என்கிறார் நீலகண்டன். மாற்றுக் கருத்தோடு வந்து மறுதலிப்பவர்களால் அரசின் முடிவுகள் அல்லது ஆட்சிமுறை வேகமாகச் செயல்பட முடியாது.
அதனால் எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவில் அரசின் முடிவுகளும் தீர்மானங்களும் அமையப்பெறும். அதுதான் ஒரு நல்ல சமூகக் கட்டமைப்பின் பிரதிபலிப்பு. அந்த ஒருமித்த போக்கு மாநிலஅளவில் இருந்தால், மாநிலங்கள் முடிவுகளை எடுக்கட்டும்; உள்ளாட்சி அமைப்பு அளவில் இருந்தால், உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு பல தீர்மானங்களை எடுக்கும்.
நீலகண்டன் முன்வைக்கும் இந்த ஆட்சிக் கட்டமைப்பு டில்லியில் ஆளும் வர்க்கம் ஆதரிக்கும் அரசியல் கட்டமைப்புக்கு நிச்சயமாக முற்றிலும் எதிரானது.
Read in : English