Read in : English
தமிழகத்தின் பிரதானமான தலித் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பற்றி நான் நிறையவே எழுதிவிட்டேன். ஆனால் அருமை நண்பர் என். ரவிக்குமார் சமீபகாலமாக திருமாவளவனைப் பற்றி ’ஆகா ஓகோ’ என்று புகழ்ந்து எழுதியதை வாசித்தபோது எனக்கு மீண்டும் எழுத ஆவல் எழுந்தது.
திருமாவளவன் ஒரு மதச்சார்பின்மைப் போராளி என்றும், இந்த விசயத்தில் மற்ற கட்சிகள் அவருக்குப் பின்னே அணிவகுத்து நிற்கிறது போலவும் அவரைப் பற்றிய கீர்த்தி விவரணைகள் விவரிக்கின்றன. இந்த மாநிலத்தில் என்னமாதிரியான உயரமும் கம்பீரமும் கொண்டவர்கள் தலித் தலைவர்கள்? மிக முக்கியமாக, எல்லாவிதமான உட்பிரிவுகளையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த தலித் மக்கள்தொகை என்ன?
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் தலித்துகள். திருமாவளவன் சார்ந்த பறையர் பிரிவு 13 சதவீதம்; பள்ளர்கள் ஐந்து சதவீதம்; அருந்ததியார்கள் இரண்டு சதவீதம் என மதிப்பிடப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் திருமாவளவனின் மிக நெருங்கிய தோழர்.ஒரு நாளேட்டு நேர்காணலில் அவர் இப்படிச் சொன்னார்: “2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பட்டியலினத்தார் பட்டியலில் 76 சாதிகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு சாதிகளில் உறுப்பினர்கள் இல்லை; 14 சாதிகள் ஏற்கனவே தனியே பிரிந்து போய்விட்டன. அவற்றில் ஏழு சாதிகளைச் சார்ந்தவர்கள் தங்களை ‘அருந்ததியர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் தலித்துகள். திருமாவளவன் சார்ந்த பறையர் பிரிவு 13 சதவீதம்; பள்ளர்கள் ஐந்து சதவீதம்; அருந்ததியார்கள் இரண்டு சதவீதம் என மதிப்பிடப்படுகிறது
மீதி ஏழு சாதிகளைச் சார்ந்தவர்கள் தங்களை ‘தேவேந்திரகுல வேளாளர்கள்’ என்று அங்கீகரிக்க வேண்டும் என்றும், தங்களைப் பட்டியலினத்தார் பிரிவிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மிச்சமிருக்கும் 60 சாதிகளில், ஆதி திராவிடர்கள், பறையர்கள் என்று 90 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த 60 சாதிகளையும் சார்ந்தவர்களை ஆதித்திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தினால், இந்த மக்கள்தொகை ஒரு கோடியைத் தாண்டும். அவர்கள் மொத்த தலித் மக்கள்தொகையில் 65 சதவீதமாக இருப்பார்கள்.”
இப்போது விசிக கிட்டத்தட்ட முழுக்கப் பறையர் பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டது. மற்றத் தலித் பிரிவினர்கள் கட்சியின் நிர்வாக மட்டங்களில் இருப்பது மிகமிக அபூர்வம். ஒட்டுமொத்தப் பட்டியலினத்தார் மக்கள்தொகையில் 65 சதவீதம் பறையர்கள் என்று ரவிக்குமார் சொல்கிறார். தேர்தல்களில் இந்த வாக்குவங்கியின் தாக்கம் என்ன? எத்தனைத் தொகுதிகளில் அவர்கள் பிரதானமான பங்கு வகிக்கிறார்கள்?
மேலும் படிக்க: காவி எதிர்ப்பு: முன்னணியில் திருமா
தமிழகத்தின் வடக்கு, மத்திய மாவட்டங்களில்தான் அவர்கள் பெரும்பாலான அளவில் குவிந்திருக்கிறார்கள். மற்ற இடங்களிலும் நெருக்கமாக இல்லாவிடினும் பரவலாக அவர்கள் வாழ்வதைக் காணமுடிகிறது.தமிழ்நாட்டில் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள சட்ட மன்றத்தொகுதிகள் மொத்தம் 46. அவற்றில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பறையரின இருப்பு பெருவாரியாக இருக்கலாம். அதே நேரம் அவ்வினத்தார் ஒட்டுமொத்தமாக விசிக-வுக்கு அல்லது அக் கட்சியின் ஆணைப்படி வாக்களிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் மறக்கக் கூடாது
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக விசிக-வுக்கு ஆறு தொகுதிகளை, (வெறும் ஆறு தொகுதிகளை மட்டுமே, ஞாபகமிருக்கட்டும்) ஒதுக்கியது. அவற்றில் நான்கு தொகுதிகளில் விசிக வென்றது, அதுவும் திமுகவுக்குச் சாதகமாக எழுந்த அலையின் உபயத்தால்.
முன்பு 2011 தேர்தலின்போதும் திமுக அணியில் இருந்த விசிக 10 தொகுதிகளில் தான் போட்டியிட்டது. அப்போது அனைத்து தொகுதிகளிலும் தோற்றுப் போனது. அப்போது அ இ அதிமுக அலை.ஆக விசிக வெற்றியே அது கைகோர்க்கும் பெரிய கட்சியின் செல்வாக்கில்தான் என்பது தெளிவாகிறது. 2016 தேர்தலில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்து, 25 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலுமே விசிக தோல்வியைதான் தழுவியது.
இங்கே அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில், என்னதான் திராவிடக் கட்சிகளுக்கு விசிக-வின் ஆதரவு தேவை என்றாலும், அவை அந்தக் கட்சிக்கு பத்துக்கு மேலான தொகுதிகளை ஒதுக்கித் தருவதில்லை. அதுதான் விசிக-வின் வாக்குவங்கியைப் பற்றிய திராவிடக் கட்சிகளின் மதிப்பீடு.
ஒரு தலித் கட்சி வலிமையானதென திராவிடக் கட்சிகள் நினைத்தாலும் அந்தக் கட்சிக்கு அளவுக்கு மீறி இடங்கொடுப்பதில்லை. காரணம் பயம்; உயர்சாதியினர்களையும், இடைநிலை சாதியினர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டிவருமோ என்ற பயம். நிஜத்தில் திமுகவும் சரி, அஇதிமுகவும் சரி, இரண்டுமே இடைநிலை சாதிகளின் பிடியில்தான் இருக்கின்றன. ஆதலால் தாழ்த்தப்பட்ட தலித்துகளுக்கு அந்தக் கட்சிகள் அளவுக்கதிகமாக இடம்கொடுக்க ஆர்வம் காட்டுவதில்லை.
இப்போது விசிக கிட்டத்தட்ட முழுக்க பறையர் பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டது. மற்ற தலித் பிரிவினர்கள் கட்சியின் நிர்வாக மட்டங்களில் இருப்பது மிகமிக அபூர்வம்
இதுதான் கசப்பான கள யதார்த்தம். இந்நிலையில் மதவாதத்திற்கெதிரான யுத்தத்தில் திருமாவளவன் முன்னணியில் நிற்கிறார் என்றெல்லாம் இறுமாந்து புளகாங்கிதப் புகழுரைகளை அள்ளித் தெளிப்பதில் அர்த்தமில்லை. அவர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டதில் இடதுசாரிக் கட்சிகளே கலந்துகொண்டன. திமுக நாசூக்காக விலகிக் கொண்டது. மதச்சார்பின்மை ஸ்டாலினுக்கும் பிடித்தமான சித்தாந்தமாகத்தான் தெரிகிறது. ஆனால் அதற்காக அவர் ஒன்றிய அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார் – அதுவும் இந்துமத உணர்வுகளை அவர் நிச்சயமாகக் காயப்படுத்த விரும்பமாட்டார். மேலும், சகோதரக் கட்சிகளை ஸ்டாலின் பெரிதாக வளரவிட மாட்டார் (சகோதரனையே வளரவிட வில்லையே!).
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்று விசிக-வுக்கு நன்றாகவே தெரியும். 2019ல் நடந்ததைப் போலத்தான். தேர்தல் அரசியலின் சாதக பாதகங்களை, இரகசியங்களை, உணர உணர திருமாவின் தொடக்க காலத் தீவிரம் மழுங்கிப்போனது.
மேலும் படிக்க: அனைத்து தலித் மக்களையும் ஒருங்கிணைக்கும் தலைமை உருவாவது சாத்தியமா?
ஆனாலும் நான் முற்றிலுமாக மனம் தளரவில்லை. கொள்கைப் பிடிப்பு, தொண்டர்களிடம் காட்டும் அன்பு, மென்மை, யதார்த்தங்களை உணர்தல் உள்ளிட்டவற்றில் நிச்சயம் மற்ற தலித் தலைவர்களைவிட மேம்பட்டவராகவே காணப்படுகிறார்.அவர் மீண்டும் அறச்சீற்றத்துடன் தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்வது அவர் சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்ல அவருக்குமே நன்மை பயக்கும்.
Read in : English