Read in : English
தமிழ்நாட்டின் காவி எதிர்ப்பு அரசியல் களம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை மையமாகக்கொண்டே தற்போது சுழல்கிறது. அவருக்கு மதிமுக தலைவர் வைகோவும் இடதுசாரிகளும் திமுகவின் தாய்க்கழகமான திராவிடர் கழகமும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள்.
அக்டோபர் 11இல் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை எதிர்த்து 500 இடங்களில் நடத்தப்பட்ட சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்குக் கிடைத்த ஆதரவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னையில் இந்த நிகழ்ச்சியில் “ஆர்எஸ்எஸ் ஒரு ஜனநாயக இயக்கமல்ல. தமிழ்நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் இங்கே காலூன்ற அந்த இயக்கம் முயல்கிறது. ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு முன்னோட்டம்” என்று பேசிய திருமாவளவன் தமிழ்நாடு அரசு அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கைவைத்தார்.
அண்மையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானபிறகு சோழப் பேரரசன் ராஜராஜனை மையமாகவைத்துப் புயல்வீசிய கருத்துமோதலில் தொடக்கம் முதல் திருமாவளவன் இருந்தார். ராஜராஜன் இந்து அரசனாகக் காட்டப்படுவதை எதிர்த்துத் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் முதல் குரல் கொடுத்தபோது மேடையில் அவர் இருந்தார். வெற்றிமாறனுக்கு எதிராக பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் பேசியபோது வெற்றிமாறனுக்கு ஆதரவாக “இந்து என்னும் மதம் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம் என்ற சமயங்களே இருந்தன” என்று என்று களத்தை அதிரவைத்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த கடும் கருத்துமோதலில் பலர் வெற்றிமாறனை ஆதரித்தபோதும் பாஜகவின் கடும்கோபம் திருமாவை நோக்கித் திரும்பியது. விடுதலைச் சிறுத்தைகளைத் தடைசெய்வோம் என்று இந்துத்துவா அமைப்புகள் மிரட்டியபோதும் அதை எதிர்கொள்வோம் என்றார் சிறுத்தைகளின் தலைவர். அத்துடன் நிறுத்தாமல் இந்துசமய அறநிலையத்துறையை சைவம் என்றும் வைணவம் என்றும் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்து காவி அரசியலின் அஸ்திவாரத்தில் குண்டுவீசினார். இந்து மக்களைப் பிரிக்க திருமாவளவன் முயல்கிறார் என்று பாஜக ஆதரவு அமைப்புகள் பேசினாலும் களத்தில் அது பெரிதாக எதிரொலிக்கவில்லை.
மணிவிழா நிகழ்ச்சியில் பாஜகவை விளாசித் தள்ளிய திருமா தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துக் களத்தில் இறங்கும்படி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டார். திமுக என்றும் பெரியார் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் கோட்டையில் இருந்தாலும் கொள்கை மாறாது என்று ஸ்டாலின் உறுதிகூறினார்
இரண்டு மாதங்களுக்கு முன் அவர் மணிவிழா கொண்டாடிய நாளில் இருந்தே இந்துத்துவா எதிர்ப்பு அரசியல் மையத்தை நோக்கி அவர் நகர்ந்துவிட்டார். மணிவிழா நிகழ்ச்சியில் பாஜகவை விளாசித் தள்ளிய திருமா தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துக் களத்தில் இறங்கும்படி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டார். திமுக என்றும் பெரியார் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் கோட்டையில் இருந்தாலும் கொள்கை மாறாது என்று ஸ்டாலின் உறுதிகூறினார். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் காவி எதிர்ப்பு அரசியல் தேரின் அச்சாணியாக திருமாவளவனே முன்னணியில் இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோதும் பாஜகவுக்கு எதிராக அவர் களத்தில் நின்றார். நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை மையமாக வைத்து பாஜகவுக்கும் விசிகவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டபோது கறுப்புக்கொடி போராட்டம் என்ற பெயரில் தன்னை விடுதலைச் சிறுத்தைகள் தாக்க முயல்வதாக அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை குற்றம்சாட்டும் அளவுக்கும் மோதல் முற்றியது.
தனிப்பட்ட முறையில் திருமாவளவனை விமர்சித்தும் தமிழிசை பேசினார். ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பாஜகவை எதிர்த்துப் பலமுனைகளில் போராட்டம் நடத்திவந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் காவி எதிர்ப்புக் களத்தில் முக்கியக் கவனம் பெறவில்லை.
மேலும் படிக்க: அனைத்து தலித் மக்களையும் ஒருங்கிணைக்கும் தலைமை உருவாவது சாத்தியமா?
திருமாவளவன் 1999ஆம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தல் அரசியலில் குதித்தார். முதல் முறையே 2.25 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-திமுக அணியில் இடம்பிடித்தார். திருமாவளவன் பாஜக அணியில் இருந்தது அந்த ஒருமுறை மட்டுமே. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் 2009இல் முதல்முதலாக நாடாளுமன்றத் தேர்தலில் வென்றார்.
இந்திய தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக அரசியல் அரங்கில் நுழைந்தாலும் அவரது வேர் தமிழ் தேசியத்தில் இருந்துதான் புறப்படுகிறது. அவர் மாணவராக இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையமாகக்கொண்டு அன்று திமுகவில் இருந்த வைகோவை அழைத்துப் போராட்டம் நடத்தினார்.
ஆனால், 2009இல் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்சகட்டத்தில் இருந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் அவர் இடம்பெற்றது இன்றளவும் தமிழ் தேசிய அமைப்புகளால் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், எந்தக் கூட்டணியில் இருந்தாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனை எப்போதும் வெளிப்படையாக ஆதரிக்கும் தலைவர்களில் திருவாவும் ஒருவர்.
தற்போது அதிமுக நெருக்கடியில் சிக்கித் தத்தளித்துவரும் சூழலில் தலித் வாக்குகளைத் தம்பக்கம் திருப்ப விடுதலைச் சிறுத்தைகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன
ஆனால், அவரின் உறுதியான கொள்கை நிலைப்பாடுகள் அவரது கட்சிக்கு வலுவான பரவலான வாக்கு வங்கியை இதுவரை ஏற்படுத்தவில்லை. 2016இல் ஆட்சியில் பங்கு என்னும் முழக்கத்துடன் அவர் இடம்பெற்ற மக்கள் நலக்கூட்டணி இரட்டை இலக்க ஓட்டுகளைக் கூட எட்டவில்லை. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடம்பிடிக்க வேண்டுமென்றால் திமுக அல்லது அதிமுக கூட்டணியை நம்பியே அவரது கட்சி இருக்கிறது.

(Picture credit: Thirumavalavan Twitter page)
தலித் என்ற சொல்லை நீக்கிவிட்டுத் தமிழ்த் தேசியக் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அவர் அறிவித்தபோதும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தாலும் ஒரு தலித் தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். இதுதான் மாநில அரசியல் களத்தில் அவர் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக இருக்கிறது, அரசியல் மைய நீராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இணைவதற்குத் தடையாகவும் இந்தக் கோணத்தில் திருமா பார்க்கப்படுவது பெரும் தடையாக இருக்கிறது.
ஆனால், தலித் வாக்குவங்கியில் பாதிக்கு மேல் அவர் பெற்றாலே பல மாவட்டங்களில் அவரது கட்சி இரட்டை இலக்க வாக்குகளைப் பெறும் நிலை ஏற்படும். 1972இல் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய நாளில் இருந்தே தாழ்த்தப்பட்ட மக்களின் நாயகனாக அவர் இருந்தார். தொடர்ந்து ஜெ.ஜெயலலிதா தலைவியான பின்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும்பங்கு ஓட்டுகளை அதிமுகவே அள்ளிவந்திருக்கிறது. ஆனால், தற்போது அதிமுக நெருக்கடியில் சிக்கித் தத்தளித்துவரும் சூழலில் தலித் வாக்குகளைத் தம்பக்கம் திருப்ப விடுதலைச் சிறுத்தைகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வனும் வெற்றிமாறன் அரசியலும்
கடலூர், விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இப்போது வலுவான வாக்குவங்கி இருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஏனைய வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் வலுவான அடர்த்தியான வாக்குவங்கியையும் வலுவான கட்டமைப்பையும் திருமாவளவன் உருவாக்கினால் வெற்றிபெறும் கூட்டணியில் கணிசமான இடங்களைப் பெற வாய்ப்பு அதிகம்.
குறிப்பிட்ட தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகளால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை பாஜகவை எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் பொதுவாக்காளர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் உருவானால் அவர்களது ஆதரவைப்பெறும் வாய்ப்பும் அதிகமாகும். வட தமிழ்நாட்டில் மட்டும் இரட்டை இலக்க வாக்கு வங்கியை உருவாக்கினாலே ஆட்சியில் பங்கு என்ற நெடுநாள் கனவை நோக்கி அவரது கட்சி நகரும். அதற்கு, இன்னும் சவாலான நெருக்கடியான பாதையில் நெடுந்தூரம் போகவேண்டும்.
Read in : English