Read in : English

தகவல் தொழில்நுட்ப நிறுவனம் விப்ரோ சமீபத்தில் செய்திகளில் அடிபட்டிருக்கிறது. அதன் 300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சேர்மன் ரிஷாட் பிரேம்ஜி அறிவித்திருக்கிறார். காரணம் அவர்கள் ‘மூன்லைட்டிங்’ என்னும் தவறைச் செய்தார்கள். அதாவது விப்ரோவில் இருந்துகொண்டே வேறொரு நிறுவனத்தில் பணிசெய்திருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. பிரேம்ஜிக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. என்றாலும் விப்ரோவைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் உட்பட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இதுபோன்ற பணிநீக்க எச்சரிக்கை வழங்கியிருக்கின்றன.

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அளவுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கோபப்பட வைத்த இந்த ‘மூன்லைட்டிங் என்றால் என்ன?

இரட்டை வேலை என்ற அர்த்தம் கொண்ட ஆங்கிலப் பதம் ‘மூன்லைட்டிங்’. இதில் ’அறமற்றது’ என்ற உள்ளர்த்தமும் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரே சமயத்தில் இன்னொரு நிறுவனத்திலும் பணிசெய்து இரட்டைச் சம்பளம் பெறும் சூழலைக் குறிக்கிறது அந்த வார்த்தை. அந்த மற்றொரு நிறுவனம் முதல் நிறுவனத்திற்குப் போட்டியாகக் கூட இருக்கலாம்.

வியாபார இலக்குகளை  அடைவதற்கும், வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதற்கும் திறன்கொண்ட ஊழியர்கள் தேவை என்பதால் ஆளெடுக்கும் விசயத்தில் ஐடி நிறுவனங்கள் கறார் காட்டாமல் நடந்துகொண்டன

விப்ரோவில் இந்தப் பிரச்சினை எப்படி வெளியே வந்தது? ஓர் ஊழியர் தான் பணிசெய்யும் இரண்டாவது நிறுவனத்தில் தனது சேமநிதிக் கணக்கு எண்ணைத் தந்திருக்கிறார். இரண்டு ஊழியர்கள் ஒரே கணக்கை வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால் சேமநிதி அலுவலகம் இதுசம்பந்தமான கேள்வி ஒன்றை எழுப்பியபோதுதான் விப்ரோ நிர்வாகத்திற்கு அந்த இரண்டு ஊழியர்களும் ஒரே ஆள்தான்; அதுவும் தனது ஊழியர் என்பது தெரியவந்தது.

இந்தப் பிரச்சினை ஊழியர்களின் நேர்மையின்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அமைப்பியல்ரீதியான அடிப்படை செய்பாடுகளில் ஏற்பட்ட தோல்வியை வெளியே கொண்டுவந்திருக்கிறது.

மேலும் படிக்க: அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?

ஓர் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதற்கு முன்பு அவர்களின் பின்புலம் பற்றிய முன்சோதனையை புறத்தே இருக்கும் ஆலோசனை நிறுவனங்கள் மூலம் செய்துவிடும் வழக்கம் சிலகாலமாக இருக்கிறது.

வேலைக்கு விண்ணப்பித்தவர் கடந்த காலத்தில் செய்த குறைந்தபட்சம் மூன்று பணிகளைப் பற்றியும், அவர் அந்த வேலைகளிலிருந்து ஏன் விலகினார் என்பது பற்றியும் விசாரிக்கப் படுவதுண்டு. இந்த வழக்கம் கிட்டத்தட்ட எல்லாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இருப்பதுதான்.

பின் எப்படி பல ஊழியர்கள் தாங்கள் கடந்துவந்த பாதைகளை மறைத்துக் கொண்டார்கள்?

பெருந்தொற்று விளைவு
இந்த மெத்தனத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்தான் பொறுப்பு. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பல ஊரடங்குகளினாலும், பொருளாதார மந்தங்களினாலும் நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த முயன்றன. அப்படி எடுக்கப்பட்ட முனைப்புகளில் ஒன்றுதான் வீட்டிலிருந்து அலுவலகப் பணிசெய்வதற்காக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி. மேலும் பெருந்தொற்றைக் காரணம்காட்டி பல நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றின. அப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட திறன்மிக்க ஊழியர்களை போட்டி நிறுவனங்கள் வேகமாகவே சுவீகரித்துக் கொண்டன. பெருந்தொற்றுச் சோதனையில் கஷ்டப்பட்ட ஊழியர்களும் போட்டி நிறுவங்களில் வேலைக்குச் சேர தயாராகவே இருந்தார்கள்.

அதனால் நிறுவனங்களில் ஏற்கனவே இருந்த பணித்திட்டங்களிலும் இயக்கங்களிலும் தாறுமாறான நிலை ஏற்பட்டது. இதில் ஆச்சரியமில்லை. அதனால் தங்களின் வியாபார இலக்குகளை அடைவதற்கும், வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதற்கும் திறன்கொண்ட ஊழியர்கள் தேவை என்பதால் ஆளெடுக்கும் விசயத்தில் அந்த நிறுவனங்கள் கறார் காட்டாமல் நடந்துகொண்டன.

பெருந்தொற்றைக் காரணம்காட்டி பல நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றின. அப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட திறன்மிக்க ஊழியர்களை போட்டி நிறுவனங்கள் வேகமாகவே சுவீகரித்துக் கொண்டன

நிறுவனங்களின் இந்த மறுசீரமைப்பு முனைப்புகளுக்கு மத்தியில் கணிசமான அளவுக்கு அநிச்சயத்தை எதிர்கொண்ட திறன்படைத்த ஊழியர்கள், வேலைக்கு ஆளெடுக்கும் முறைகளில் இருந்த பலகீனங்களைப் பயன்படுத்தி மாற்று வேலைகளையும் தேடிக் கொண்டார்கள். ஒருவேளை இருக்கும் நிறுவனம் தங்களைத் திடீரென்று வெளியேற்றிவிட்டால் இந்த மாற்றுவேலை காப்பாற்றும் என்ற பாதுகாப்பை ஊழியர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். இது இரண்டு பக்கமும் நன்மையைத் தருகின்ற சூழல்தான். அவர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் ஊழியர்களின் பின்புலம் பற்றிச் சோதிக்க அக்கறை கொள்ளவில்லை. ஏனென்றால் இடையூறுகள் இல்லாமல் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் நிர்வாகங்களின் கவலை.

மேலும் படிக்க: மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்

ஆனால் ‘மூன்லைட்டிங்’ என்ற இரட்டைவேலைக் கலாச்சாரத்தை சேமநல நிதி அலுவலகம் காட்டிக் கொடுத்தவுடன், ’ஆ ஊ’ என்று கத்திய நிறுவனங்கள் தங்களின் அசட்டைக்கு நேர்மையற்ற ஊழியர்களைக் குறைகூறின.

இந்த ஊழலில் இரட்டைப் பில்லிங், நிழல் மூலதனம் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நீண்ட காலமாகவே இருக்கும் பிரச்சினைகளும் வெளிவந்தன. இந்தப் பிரச்சினைகளை ஒரு சின்ன தவறு கூடக் காட்டிக் கொடுத்துவிடும். அப்படி யாராவது ஒரு வாடிக்கையாளர் அதைச் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணமாக ஊழியர்களையோ அல்லது கணினியையோ குற்றம் சொல்லிவிடும் நிறுவனங்கள்.

நிறுவன ஆளுமை பற்றி கடந்தகாலத்தில் இந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் நல்லவர்கள் போல போதனை செய்தன. ஆனால் அதே நிறுவனங்களில்தான் நேர்மையின்மை தலைவிரித்தாடுகிறது. இதற்கு நல்லதொரு உதாரணம் சத்யம். ஒரு காலத்தில் அந்த நிறுவனம் நிறுவன ஆளுமையைப் பற்றி உரக்கப் பேசியது. ஆனால் தன்னுடைய வரவு-செலவு கணக்குகளைப் போலியாகத் தயாரித்து மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டது அந்த நிறுவனம்.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், அதன் மூல அமைப்பான நாஸ்காமும் இந்தப் பிரச்சினைகளில் படுசுத்தமாகச் செயற்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் மூன்லைட்டிங் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குச் சும்மா ஊழியர்கள்மீது பழிபோடுவது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கபடநாடக வேசத்தைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival