Read in : English
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தீவிரமான பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்து வெற்றிபெற்றது திமுக. அரியணையில் ஏறினார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குப் பின் பாஜக எதிர்ப்பு என்பதைப் பெயரளவில் மட்டுமே ஸ்டாலின் கைக்கொள்கிறார் என்ற கண்ணோட்டம் பரவலாக ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணி உரசல்களையும் விரிசல்களையும் கொண்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் பல இடங்களில் நடத்தத் திட்டமிட்ட அணிவகுப்பு திமுக கூட்டணியின் விரிசல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்துவதற்குத் திமுக அணியில் இடம்பெற்றுள்ள தீவிரக் காவி எதிர்ப்புக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகளும் இடதுசாரிகளும் திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழகமும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அந்த அணி வகுப்புக்குத் தடைகோரி திமுக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், அணி வகுப்புக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சிலோ உச்சநீதிமன்றத்திலோ வழக்குத் தொடருமாறு விடுதலைச் சிறுத்தைகளும் இடதுசாரிகளும் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை முதல்வர் கண்டுகொள்ளவில்லை. திமுகவைக் கடுமையாக விமர்சித்துவரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யத் தயங்குவது ஏன் என்ற கேள்வியை உரக்க எழுப்பினார்.
கூட்டணிக் கட்சிகளும் திராவிடர் கழகமும் கடுமையான நெருக்கடி கொடுத்த பின்னர்தான் திமுக அரசு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தது என்பது காவி எதிர்ப்பு குறித்து வாய்ச்சொற்களை அள்ளிவீசும் ஸ்டாலின் செயலளவில் களத்தில் பதுங்குகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறுத்தைகளும் கம்யூனிஸ்ட்களும். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்தத் திட்டமிட்ட அதே காந்தி ஜெயந்தி நாளில் ‘சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி’ நிகழ்வை நடத்தப்போவதாக அறிவித்தனர். முதலில் திமுக அமைதியாகவே வேடிக்கை பார்த்தது. ஆனால், மனித சங்கிலிக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. மறுமலர்ச்சி திமுகவின் தலைவர் வைகோ தனது கட்சியும் மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ளும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவை உறுதியாக ஆதரித்து வரும் தாய்க்கழகமாக விளங்கும் திராவிடர் கழகமும் மனிதச் சங்கிலிக்கு ஆதரவை அறிவித்தது.
இதனால், தமிழ்நாட்டின் காவி எதிர்ப்பு அணியில், அதாவது திமுக கூட்டணியில் திமுக மட்டும் தனித்து விடப்படும் நிலை உருவாகும் என்பதால் ஸ்டாலினுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி தரத் தமிழ்நாடு அரசு மறுத்தது. அதே வேளையில் கூட்டணிக் கட்சிகளின் மனிதச் சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், வேறொரு நாளில் நடத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளும் திராவிடர் கழகமும் கடுமையான நெருக்கடி கொடுத்த பின்னர்தான் திமுக அரசு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தது என்பது காவி எதிர்ப்பு குறித்து வாய்ச்சொற்களை அள்ளிவீசும் ஸ்டாலின் செயலளவில் களத்தில் பதுங்குகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திமுக கூட்டணி மத்தியிலும் ஸ்டாலினின் தயக்கம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
மேலும் படிக்க: ஆர்எஸ்எஸ் பேரணி, அரசு தடுக்குமா?
தமிழ்நாடு அரசு கடுமையான மின் கட்டண உயர்வை அறிவித்தபோதே திமுக கூட்டணியில் விரிசல்கள் தெரியத் தொடங்கின. ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளில் மின் கட்டண உயர்வுதான் மக்களின் மிகக் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பல விளக்கங்களை அளித்தாலும் ஒவ்வோர் இரண்டு மாதமும் மின் கட்டணம் செலுத்தும்போதெல்லாம் மக்களுக்கு இந்தக் கட்டண உயர்வு நினைவுக்கும் வரும். கடும் கோபமும் அடுத்த தேர்தல்வரை வளரும் என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டன. தமிழ்நாட்டின் பல இடங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுப்பதற்குப் பதில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கும் நிலையும் இருக்கிறது.
கட்டண உயர்வை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. கூட்டணி உடையும் என்று எச்சரிக்கை விடுக்கும் அளவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் திமுக காட்டியபோதும் மார்க்ஸிஸ்ட் கட்சி பணியவில்லை. மின் கட்டண உயர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்களையும் நடத்தியது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எவையும் ஆட்சியில் பங்கெடுக்காத நிலையில் மின் கட்டண உயர்வு போன்ற பரவலாக மக்களின் எதிர்ப்பை உருவாக்கியுள்ள நடவடிக்கையைத் தமது தலையில் தாங்கிக்கொள்ளும் கட்டாயம் அந்தக் கட்சிகளுக்கு இல்லை என்பது வெளிப்படையானது. கம்யூனிஸ்ட்கள் வளைந்துகொடுக்காத நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த மின் கட்டண உயர்வைக் கடுமையாகக் கண்டித்தார்.
அந்த நேரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மனு ஸ்மிருதி குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டபோது திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அது பரவலான வரவேற்பைப் பெற்றது. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ராசாவுக்கு ஆதரவாகக் களமிறங்கின. திமுக அணி சித்தாந்தக் களத்தில் மீண்டும் ஒன்றுபட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.
கம்யூனிஸ்ட்கள் வளைந்துகொடுக்காத நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனும் மின் கட்டண உயர்வைக் கடுமையாகக் கண்டித்தார்.
ராசாவின் கருத்துக்கு பாஜகவும் சங் பரிவார் அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. மனு ஸ்மிருதியில் ராசா எடுத்துக்காட்டிய கருத்துகள் இல்லை என்று மறுக்காத பரிவார் அமைப்புகள் மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசியதால் இந்துக்களை ராசா இழிவுபடுத்திவிட்டதாகக் குற்றம்சாட்டினர். அதிமுக தலைவர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்துகொண்ட நிலையில் கட்சித் தலைமையிடம் இருந்தோ வேறு முக்கியத் தலைவர்களிடம் இருந்தோ திமுகவை ஆதரிக்கும் ஊடகங்களிடம் இருந்தோ ராசாவுக்கு ஆதரவாக எந்தக் கருத்தும் கூறப்படவில்லை. திமுக தொண்டர்களிடம் ராசாவுக்கு ஆதரவாக அலைவீசியபோதும் கட்சியில் அவர் தனித்துவிடப்பட்டார்.
கடைசியில் இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் மறைமுகமாக ‘மதவாத நச்சு சக்திகளை’க் கண்டித்தாலும் நடைமுறையில் ராசாவுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு முன்னதாக திமுகவில் இருந்து விலகிய திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “திமுகவில் இருந்துகொண்டு பாஜகவை விமர்சித்தால் ஆளும் ஒன்றிய அரசுக்கும் திமுக அரசுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். எனவேதான் திமுகவில் இருந்து விலகியிருக்கிறேன்.
பாஜகவின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுவேன்’ என்று கூறியிருந்தார். திமுகவில் இருந்துகொண்டு பாஜகவை விமர்சிக்க முடியாது என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வியை சுப்புலட்சுமி ஜெகதீசனின் பேட்டி எழுப்பியது. இதற்கு அடுத்த நாள் மதவாத நச்சு சக்திகளுக்கு இடம் தரவேண்டாம் என்று வெளிப்படையாகவே இந்த நிலையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னதை உறுதிப்படுத்தும் வகையில் திமுக தலைவரின் அறிக்கை அமைந்துள்ளது.
மேலும் படிக்க: இந்து என்பது தமிழர்களின் மதமா? பூசப்பட்ட சாயமா?
கடைசியாக, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தாலும் முதல்வர் ஸ்டாலின் காவி அணிக்கு எதிரான போரில் சொல்லளவில் எதிர்ப்பு காட்டிக்கொண்டே செயலளவில் மென்மையான அணுகுமுறைக்கு மாறியுள்ளாரா என்ற கேள்வி திமுக கூட்டணிக் கட்சியினரிடம் மட்டுமின்றி பாஜக எதிர்ப்பு வாக்காளர்களிடமும் ஏற்பட்டுள்ளது.
பாஜகவை எதிர்த்துத் திமுகவினர் பேச வேண்டியதில்லை. மக்களே பதிலடி கொடுப்பார்கள் என்று பாஜகவை எதிர்க்கும் பொறுப்பை மக்களிடம் தள்ளிவிட்டுள்ளார் முதல்வர். அரிசியும் பருப்பும் இருக்கும் அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று ஆட்சிப் பொறுப்பை அகப்பைக்கு ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார். திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியும் ஆட்சிப்பொறுப்பை உளுந்துள்ள கரண்டி என்றும் வேகமாக ஆட்ட முடியாது என்றும் பேசியுள்ளார். ஆனால் ‘ஆட்சி என்பது தோளில் இருக்கும் துண்டு போன்றது. கொள்கை என்பது இடுப்பில் இருக்கும் வேட்டி போன்றது” என்று திமுகவின் நிறுவனர் அண்ணா கூறியுள்ளார் என்பதையும் பலரும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
Read in : English