Read in : English

Share the Article

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு படமாக வெற்றிபெற்றிருக்கிறது. மணிரத்னம் இதுவரை தவறவிட்ட விஷயம் கதை என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

பொதுவான தமிழ்ப் படங்களைப் போலவே மணிரத்னம் இயக்கிய படங்களும் ஏதாவது ஒரு கருவைக் கதையாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவையே. கதைக்கான மெனக்கெடல்கள் பெரிதாக இருக்காது. ஒரு கருவை எடுத்துக்கொண்டு அதை விளக்கும் வகையிலான காட்சித் தொடர்களைக் கொண்ட திரைக்கதை அமைத்து அதைப் படமாக்கிவிடுவதே அவரது வழக்கம். வண்ணமயமாகக் காட்சிப்படுத்தப்பட்ட பாடல்கள், சுவாரசியமான அதே நேரத்தில் சுருக்கமான வசனங்களைக் கொண்ட ரசமான காட்சிகள், கண்ணுக்கினிய ஒளிப்பதிவு இப்படியாக ஒரு பொழுதுப்போக்குத் திரைப்படத்துக்குத் தேவைப்படும் பல அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஒரு படத்தை உருவேற்றிவிடுவதில் மணிரத்னம் சமர்த்தர். அவரது தொடக்க காலப் படங்களில் இவை அனைத்தும் ஒழுங்காக அமைந்திருக்கும். ஆகவே, படங்களும் தரமானவை என்ற பெயர் பெற்றிருந்தன. தொடர்ந்து வெற்றிகளையும் பெற்றன. ஆனால், இது அலைபாயுதே திரைப்படம் வரையான நிலைமையே. அந்தப் படத்தின் கதை அன்னக்கிளி ஆர். செல்வராஜ் எழுதியது. அதன் பின்னர் மணிரத்னம் படங்களை ஒரே மாதிரியான வார்ப்பில் எடுத்து அடுக்குகிறாரோ என்ற எண்ணத்தையே உருவாக்கின அவரது படங்கள். ஒருவகையில் தேய்வழக்கான படங்களை உருவாக்கத் தொடங்கினார் என்றே சொல்லலாம்.

ஓகே கண்மணி திரைப்படத்தை விமர்சித்தபோது, மணிரத்னம் மிகவும் காலாவதியான இயக்குநர் போன்ற படிமத்தைத் தருகிறார்; புது இயக்குநர்கள் சுவாரசியமான தமிழ்ப் படங்களை உருவாக்கத் தொடங்கிய வேளையில் மணிரத்னம் வழக்கமான பாணியிலேயே தேங்கிவிட்டார் என்று குறிப்பிட்டேன். திரையரங்குகளுக்கு இளைஞர்களது வருகை அதிகரித்தபோது, அவர்களுக்கான படங்களை அளிக்க வேண்டும் என்ற முனைப்புக் கொண்டாரே ஒழிய அதில் பெரும்பாலும் தோற்றுப்போனார். இப்போதெல்லாம் திரையரங்குகளில் பெரியவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

பொன்னியின் செல்வன் முழுக்க முழுக்க அழுத்தமான கதையால் உருவாக்கப்பட்ட படம். பிற எல்லா அம்சங்களையும்விடப் படத்தில் கதையே முன்னிற்கிறது. பெரும்சுமையையும் மிக அநாயாசமாகத் தூக்கிச் செல்லும் ஒரு பிரம்மாண்டமான யானை போல கதை படத்தை நகர்த்திச் செல்கிறது.

செக்கச் சிவந்த வானம் படத்தைப் பார்த்தபோது, மணிரத்னம் வேறொரு இடத்துக்கு நகர்கிறாரோ என்று தோன்றியது. கேங்க்ஸ்டர்கள் மோசமானவர்களாக இருந்தார்கள். மரியாதைக்குரிய பாத்திரங்களாக அவை படைக்கப்படவில்லை. நல்ல மனிதர்கள் எப்போதும் நல்லவர்களாகவே நடந்துகொண்டார்கள்; துளியும் மாறுபாடான நடத்தை அவர்களிடம் வெளிப்படவில்லை. ஆனாலும்கூட, அது மணிரத்னத்தின் பாணியிலேயே இருந்தது. அந்த சலிப்பான உணர்வே படத்தைக் குறைவானதாக மதிப்பிடவைத்தது.

ஆனால், பொன்னியின் செல்வன் முழுக்க முழுக்க அழுத்தமான கதையால் உருவாக்கப்பட்ட படம். பிற எல்லா அம்சங்களையும்விடப் படத்தில் கதையே முன்னிற்கிறது. பெரும்சுமையையும் மிக அநாயாசமாகத் தூக்கிச் செல்லும் ஒரு பிரம்மாண்டமான யானை போல கதை படத்தை நகர்த்திச் செல்கிறது. தளபதி படத்தில் இப்படியான வலுவான அம்சமாகப் பாடல்கள் இருந்தன.

சேர சோழர் பாண்டியர்களில் சோழர்களே தமிழ்ப் பெருமித உணர்வின் அடையாளமாகச் சமகாலத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது போர் வெற்றிகள், நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள் போன்றவை இந்தச் சித்தரிப்புக்கு உதவின. இலங்கையை வென்றதால் அவர்களது புலிக் கொடி என்பது சிங்களர்களுக்கு எதிரான தமிழ் அடையாளமாக ஆனது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன்: விளம்பரங்கள் வெற்றிக்கு உதவுமா?

பொன்னியின் செல்வனை முழுமையாக வாசித்திராதவர்களுக்கு முழு விவரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, இந்தப் படம் இளைஞர்களுக்குச் சுவாரசியமாக இருக்கும்.

மணிரத்னம் மிக நேரடியாக கதையைத் திரையில் சொல்லியிருக்கிறார். ஆகவே, நாவலில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றன. படம் பார்க்கும்போது, புரியாமல் போக வாய்ப்பில்லை.

கதாபாத்திரத் தேர்வும் கன கச்சிதம். வந்தியத்தேவனாக வேடமேற்றிருக்கும் கார்த்தி மிகச் சரியான தேர்வு. துடுக்கான வந்தியத்தேவன் தான் போர்வீரன்தான் என்பதை நன்கு உணர்ந்திருந்தும், அந்தஸ்தில் குறைந்தவன் என்ற புரிதல் இருந்தாலும், குந்தவையுடனும் நந்தினியுடனும் சரச உரையாடலில் ஈடுபடவும் தயங்குவதில்லை. ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அதை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி. அருண்மொழிவர்மன் ராஜ தோரணையில் படாடோபமாக இருக்கும்போது, கார்த்தி தன்னைத்தானே ஒடுக்கிகொள்கிறான். கார்த்தியிடம் வெளிப்படும் எப்போதும் விளையாட்டுப் பிள்ளைத் தனம் இந்தப் படத்தில் சரியாகப் பயன்பட்டிருக்கிறது.

அழகுப் பதுமை என்ற இடத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நகர்ந்திருக்கிறார். பிறரது மதியை மயக்கவைக்கும் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். இப்படியொரு கதாபாத்திரத்துக்காகக் காத்துக்கிடந்ததுபோல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதியில் அருண்மொழிவர்மனை ஐஸ்வர்யாராய் காப்பாற்றும் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

வழக்கமாகத் தமிழ்ப் படங்களில் உச்சகட்ட காட்சியில் கடல் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்தப் படத்தில் கடல் இடம்பெற்றிருக்கிறது. அருண்மொழிவர்மன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற வரும்போது, மயான அமைதியுடன் இறுகிப் போய்க் கடல் காட்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ என்ற திகிலுணர்வில் உறைந்துபோய்விடுகிறார்கள்.

த்ரிஷாவின் துடுக்குத்தனமான புன்னகையில் வஞ்சகம், வேட்கை ஏன் சரச நோக்கம்கூட வெளிப்படுகிறது. எல்லோருமே வேடத்துக்கு ஏற்ற பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும், பலரிடமும் வயதுக்கான ஒரு களைப்பு தென்படுகிறது. உதாரணமாக, சில காட்சிகளில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமிடம் அப்படியான களைப்பு வெளிப்படுகிறது. அவரது உடல்நலக் குறைபாடு காரணமான களைப்போ அது?

வழக்கமான மணிரத்னம் படங்களில் காணப்படும் அம்சங்கள் இந்தப் படத்தில் இல்லை. சாதுர்யமிகு வந்தியத்தேவனுக்காக கல்கிதான் பெருமைப்பட முடியும்; மணிரத்னம் அல்ல.

பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் கதைக்குத் தேவையான எல்லாவற்றையும் மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஆனால் தேவையற்ற ஆடம்பரம் தயாரிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. வழக்கமாகத் தமிழ்ப் படங்களில் உச்சகட்ட காட்சியில் கடல் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்தப் படத்தில் கடல் இடம்பெற்றிருக்கிறது. அருண்மொழிவர்மன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற வரும்போது, மயான அமைதியுடன் இறுகிப் போய்க் கடல் காட்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ என்ற திகிலுணர்வில் உறைந்துபோய்விடுகிறார்கள். அது புயலுக்கு முன்னான பெரும் அமைதி. புயல் கப்பலை நொறுக்குகிறது. சோழ இளவரசனும் அவனது படை வீரனும் உயிருக்குப் போராடுகிறார்கள்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?

படம் முழுவதிலும் தேவைப்பட்ட இடங்களில் மட்டுமே பிரம்மாண்டம் பயன்பட்டிருக்கிறது. போர்க்காட்சிகளும் அளவுக்கதிகமான பிரம்மாண்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இன்மதி இணைய இதழில் ஏற்கெனவே பாகுபலி போன்ற பிரம்மாண்டத்தைக் கட்டியெழுப்ப மணிரத்னத்தால் இயலுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பொதுவாகவே மணிரத்னம் அதிக பொருள் விரயமின்றிப் படமெடுக்க முயல்வார் என்பதைக் கோடிகாட்டியிருந்தது.

கல்கியின் நாவலுக்கு பாகுபலி போன்ற பிரம்மாண்டமான காட்சியாக்கம் தேவைப்படவில்லை. அப்படியான காட்சிகள் தேவைப்பட்டிருக்காத வகையில் கல்கி எழுதிய நாவல்தானே இது? ஆகவே, இந்தப் படம் லேசாக மலையாளப்பட சாயல் கொண்டிருக்கிறது. ஏனெனில், அவற்றில் கதையே ஆதிக்கம் செலுத்தும். இப்போது படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்கப்படுவதற்கான வரவேற்பு இருப்பதால் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு நாவல் திரைப்படமாக உருவாக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஜெயமோகன் தகுதியான முறையில் உதவியுள்ளார். நாவலின் விவரங்களும், விவரணைகளும் விடுபடாத வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துவதில் இயக்குநருக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ஜெயமோகன் என்பதைப் படம் உணர்த்துகிறது.

படத்தைப் பற்றி விமர்சகர்கள் பல்வேறு வகையான அலசல்களை எழுதித் தள்ள பொன்னியின் செல்வன் வாய்ப்பளிக்கிறது.

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமை சொல்லும் படமன்று. இது ஒரு நாவலை நல்லமுறையில் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

இந்தப் படத்தைத் தமிழ் வரலாறுக்கும் பெருமைக்குமான சான்றாகக் கொள்ள முடியுமா? சோழர்கள் கொண்டாடப்படத் தக்கவர்களா? ஆதித்ய கரிகாலன் மன்னர்களுக்குரிய கொடூரம் கொண்டவன்; அவர்களின் பகைவர்களான தமிழர்களான பாண்டியர்கள் சிங்கள மன்னன் மஹிந்தவுடன் கூட்டணி வைக்கிறார்கள் எனும் போது, இது எப்படி தமிழர் பெருமையாக முடியும்?

சோழர்கள் வரலாற்றறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள். தமிழ்ச் சமூகத்தில் இறுகிப் போன நிலப்பிரபுத்துவ சிந்தாந்தத்தைப் பலப்படுத்தியதில் சோழர்களுக்கு முதன்மையான பங்குண்டு என்பதே அவர்கள் மீதான விமர்சனம். சோழர்கள் காலத்தில் வட நாட்டிலிருந்து பிராமணர்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களுக்கு நிலபுலன்கள் அளித்தனர். ஆகவே, மத நூல்கள், சமுதாயத்தின் சாதியக் கட்டமைப்பு, பொருளாதார பலம் ஆகியவையே இணைந்து பிராமணர்களின் சமூக அந்தஸ்துக்கு வழிவகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சீர்கேட்டுக்கும் இதுவே வழிவகுத்தது. தமிழ்நாட்டில் கோலோச்சும் நிலபிரபுத்துவ ஆதிக்கத்துக்கு அனைத்துவகையிலும் உதவியாக இருந்தவர்கள் சோழர்கள்; அதிலும் அதற்கு வித்திட்டவர் சாட்சாத் ராஜராஜசோழன் தான்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வேத மதமே மன்னர்களின் மதமாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவர்களது அன்றாட வாழ்க்கையில் ருத்ர சுலோகங்கள் முழங்குகின்றன. பொழுதுபோக, கிருஷ்ணன் கம்சன் நாடகத்தைப் பார்க்கிறார்கள்.

Ponniyin selvan movie

சோழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள் கொற்றவையை வழிபடுகிறார்கள். ரத்ததாகம் கொண்ட சங்க காலத்து தெய்வம் கொற்றவை. உயிர் பலி கேட்கும் தெய்வமாக கொற்றவை முன்வைக்கப்படுகிறது. படத்தில், கொற்றவை வில்லன்களின் பழங்குடி தெய்வமாகியுள்ளார். அதே நேரத்தில் சோழர்களுக்குரியது வேதமாக காட்டப்படுகிறது. பிராமணனான ஆழ்வார்க்கடியான், கல்கியின் நினைவுகூரத்தக்க பாத்திரம், இந்த முதல் பாகத்தில் அந்தப் பாத்திரம் முழுமையாகப் பரிமளிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர்கள் மனிதர்களோடு மனிதர்களாக ஊடுருவியுள்ள சமூக மாறுதலை மிக இயல்பானதெனக் காட்டப் பயன்பட்டுள்ளார்.

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமை சொல்லும் படமன்று. இது ஒரு நாவலை நல்லமுறையில் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். தமிழ் இயக்குநர்களுக்கு மணிரத்னம் ஒரு வழியைக் காண்பித்துள்ளார். தமிழின் செழுமையான நாவல்களை உரிய முறையில் திரைப்படமாக்கினால் அழுத்தமான கதை கொண்ட பல படங்களைத் திரையில் பார்க்க முடியும் என்பதற்கு பொன்னியின் செல்வன் சான்றாகியுள்ளது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles