Read in : English
ஒரு திரைப்படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வெளியாகும். புகைப்படங்கள், செய்திகள் தினசரிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறும். சில வாரங்கள் முன்பாக பத்திரிகைகளிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வரும். இவ்வளவு ஏன், சுவர்களில் வண்ணம் தெரியாத அளவுக்குச் சுவரொட்டிகளும் கைகளால் வரைந்த விளம்பரங்களும் ஆக்கிரமிக்கும்.
அதேநேரத்தில், அத்திரைப்படம் வெற்றிபெற்றுவிட்டால் பல மாதங்களுக்கு அது பற்றியே பேச்சாக இருக்கும். ஒரு படம் உருவாவது முதல் வெளியாவதுவரை, படக்குழுவினரோடு ரசிகர்களும் பயணித்த காலமொன்று இருந்தது. அது ஒரு கனாக்காலம்!
இன்றோ, ஒரு படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ மற்றும் திரைப்பட வெளியீடு என்று எல்லாமே மிகச்சில நாள்களுக்குள் நிகழ்ந்தால் மட்டுமே மக்களின் நினைவலைகளில் தங்கிக் கவனம் ஈர்க்கும் என்றாகிவிட்டது. அதனால், அதிகத் திரையரங்குகள் அதீதக் காட்சிகள் என்ற வழியில் சில நாள்களில் பல நூறு கோடிகளை அள்ளுவதென்பது பிரம்மாண்ட படங்களுக்கான இலக்கணமாகிவிட்டது. அதையே பல மொழிகளில் வெளியிட்டு ‘கல்லா’கட்டினால் அது ’பான் இந்தியா’வெற்றியாகக் கருதப்படும்.
ஆனால், அது எப்போதும் நிகழாது. எப்போதாவது சில முறை தானாக வாய்க்கும். ஒருகாலத்தில் அதனை மிகச் சாதாரணமாக நிகழ்த்தியவர் மணிரத்னம். அவரது ‘பொன்னியின் செல்வன்’திரைப்படம் அப்படியொரு வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருப்பது தவிர்க்க முடியாத கால மாற்றம்!
‘பொன்னியின் செல்வன்’ எனும் சுமார் இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு கதையைப் படித்துச் சிலாகிப்பதும், அதனைத் திரையில் காண விரும்புவதும் அரிதான விஷயம் தான்
எதிர்பார்ப்பு இருக்கிறதா?
ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட இதழ்களில் தொடர்கதைகளைத் தேடி ஓடிப் படித்த அனுபவம் சிலருக்கு இருக்கலாம். அந்த எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டினால் அதிசயம். ஒருவேளை புத்தகமாக வெளிவந்து தொடர்ச்சியாகச் சிலாகிக்கப்பட்டால் இன்னும் சில ஆயிரம் பேர் அதனை ரசித்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை நிலவிய யதார்த்தம் இது. இன்றோ, நாலைந்து பத்தி வாசிப்பதற்குப் பதிலாக இரண்டு நிமிடத்தில் அதையே காணொளியாகக் காணவோ கேட்கவோ செய்திடலாமே என்பவர்களே அநேகர்.
இந்தச் சூழலில், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ எனும் சுமார் இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு கதையைப் படித்துச் சிலாகிப்பதும், அதனைத் திரையில் காண விரும்புவதும் அரிதான விஷயம் தான். நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தையே இன்னும் கொஞ்சம் சுருக்கலாமா என்று யோசிக்கும் காலகட்டத்தில் மாராத்தான் வீரர்கள் பற்றியோ, அந்த அனுபவம் பற்றியோ ஆனந்தப்படுவது சரியானதாக இருக்காது. அப்படி கல்கியின் எழுத்தாற்றலைச் சுவைத்து ரசித்தவர்கள், மணிரத்னத்தின் காட்சியமைப்பைச் சரிபார்க்கத் திரையரங்குகளுக்கு நிச்சயமாக வருவார்கள். பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்துகொண்டு சிறப்பித்ததைப் போலவே அவர்களது வருகையும் இருக்கும். அதாகப்பட்டது, அவர்களது சராசரி வயது 30க்கு மேல்தான் இருக்குமென்று நிச்சயமாகச் சொல்லலாம்.
இலக்கியப் புனைவுகளை வாசிக்கும் ஜெயமோகனின் ரசிகர்கள் நிச்சயமாக பொன்னியின் செல்வனைத் திரையில் காண வருவார்கள் என்ற வாதம் கூட ஏற்கக்கூடியதுதான். ஆனால், சமகால இலக்கியங்களைப் படிப்பவர்கள் அனைவருமே ஜெயமோகனை வாசிக்கத் தயாராக இருக்கிறார்களா என்பதும், அவரை ஆதர்சமாகக் கொண்டவர்களும் கூட ஒரு வசனகர்த்தாவாக அவரது பணியை ஏற்றுக்கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியே.
மேலும் படிக்க: பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?
சரி, கல்கியையோ பொன்னியின் செல்வனையோ அறியாதவர்கள் மணி ரத்னம் தரும் காட்சி விருந்தில் சொக்குவார்களே என்ற கேள்வி அடுத்து எழலாம். பாகுபலியையோ கேஜிஎஃப்பையோ ரசிப்பவர்கள் ஏன் இப்படத்தை ஏற்க மாட்டார்கள் என்று பதிலளிக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் கூட குறைவு என்பது என் எண்ணம். காரணம், கண்மூடித்தனமாகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்துத் திரையில் பிரம்மாண்டத்தைக் காட்ட மணிரத்னம் ஒருபோதும் முயல மாட்டார் என்பதே.
கச்சிதமான திட்டமிடல்!
‘ஒரு கல்லில் பல மாங்காய்’ என்பதே திரையுலகில் கோலோச்சிய வெற்றிகரமான தயாரிப்பாளர்களின் தாரக மந்திரம். கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகில் வெற்றிபெற்ற தயாரிப்பாளர்களின் வரிசையை எடுத்துப் பார்த்தால் இதனை அறியலாம். அதில் முதன்மை பெறும் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் போன்றவர்களைத் தரிசிப்பது மிக அரிது.
கனகச்சிதமான திட்டமிடலுடன் சுமாரான அல்லது நடுத்தரமான பட்ஜெட்டில் படமெடுத்து, அவற்றைச் சரியாக விநியோகம் செய்து, புத்திசாலித்தனமான முறையில் மக்களின் கவனத்திற்குக் கொண்டுசென்று வெற்றிக்கனியைப் பறித்தவர்களே அநேகர். வாசன் காலத்திலேயே, அவருடன் போட்டியிட்ட பல பட அதிபர்கள் அப்படித்தான் இருந்தார்கள். முன்னதிலும் திட்டமிடல் முதல் கணக்குப் பார்ப்பதுவரை இருக்குமென்றாலும், பின்னதில் இருப்பதுபோல நூலிழை பிசகினாலே பதற்றப்படும் சூழல் இராது. மணிரத்னத்தின் இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான படங்கள் இரண்டாவது ரகம்.
‘மௌனராகம்’காலம் முதல் ‘திருடா திருடா’வரையிலான படங்களில்கூட இந்தக் கணக்கு வழக்கு கொஞ்சம் பிசகியிருக்கும். அதன்பின் வந்த ‘பம்பாய்’ முதல் கடைசியாக வெளியான ‘காற்று வெளியிடை’வரை எல்லாமே மிகத் துல்லியமான திட்டமிடலும் அளந்துவைத்தாற் போன்ற பட்ஜெட்டும் கலந்து தயாரானவை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். ‘இருவர்’ தவிர்த்து வேறெந்தப் படமும் தோல்விப் பட்டியலில் இடம்பெறாது. இந்தப் பார்வையோடு நோக்கினால், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படத்தின் பிரம்மாண்டம் எத்தகையதாக இருக்கும் என்பதை எளிதாகச் சொல்லிவிடலாம்.
யானையைப் பருந்துப் பார்வையில் ஒரு புள்ளியாகக் காட்டுவதற்குப் பதிலாகப் பிரமிப்பூட்டும் வகையில் எப்படியெல்லாம் காட்டலாம் என்று பாடம் நடத்துவதிலும் மணிரத்னம் நிபுணர்
அதே நேரத்தில் யானையைப் பருந்துப் பார்வையில் ஒரு புள்ளியாகக் காட்டுவதற்குப் பதிலாகப் பிரமிப்பூட்டும் வகையில் எப்படியெல்லாம் காட்டலாம் என்று பாடம் நடத்துவதிலும் மணிரத்னம் நிபுணர்.
தோட்டா தரணியின் கலை வடிவமைப்பில் தாராவி செட்டை ‘நாயகனில்’ தாராவி என்று முன்வைத்திருப்பார். ‘ரோஜா’வில் ஊட்டியையே காஷ்மீர் ஆகக் காட்டியிருப்பார் மணி ரத்னம். ’ஆயுத எழுத்து’வில் மெரினா கடற்கரையையும் வங்காள விரிகுடாவையும் தலைகீழாகக் காணச் செய்திருப்பார்.
ரவிவர்மன் போன்ற ஒளிப்பதிவாளரோடு, தோட்டா தரணி போன்ற தயாரிப்பு வடிவமைப்பாளரோடு, ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட இதரத் தொழில்நுட்பக் கலைஞர்களோடு, ரசிகரின் மனதைத் தைக்கும் கால நிர்ணயத்தைத் துல்லியமாக முடிவுசெய்யும் ஸ்ரீகர் பிரசாத் போன்ற படத்தொகுப்பாளரோடு சேர்ந்து ஒரு நேர்த்தியான புனைவை மணி ரத்னத்தால் தர முடியும். பல்வேறு திருப்பங்களுடன் கூடிய ஒரு அரச கதை அதற்குத் துணையாகவும் நிற்கக் கூடும்.
அபாரமான வண்ணக் கூடுகையும், கணினி வரைகலையாக்கமும் மணி ரத்னத்தின் கற்பனைக்குச் செம்மையான உரு தரக்கூடும். ஆனால், அவர் திரையில் காட்டும் பிரம்மாண்டம் இன்றிருக்கும் தலைமுறையின் ரசனைக்குத் தீனியாகுமா என்பதை முன்னரே கணிப்பது முயல் கொம்புதான். அபாரமான, அபரிமிதமான விஎஃப்எக்ஸ் மட்டுமே அதற்கான வாய்ப்பை அதிகமாக்கும்.
இளமைக் கணக்கு!
‘அக்னி நட்சத்திரம்’ வந்தபோது கார்த்திக்கும் பிரபுவும் இளமையின் திருவுருவமாகத் திகழ்ந்தார்கள். அப்படத்தில் இடம்பெற்ற அமலாவும் நிரோஷாவும் இன்றும் பலருக்கு ஆதர்சம். ’நாயகன்’ நடித்தபோது, கமர்ஷியலும் கலையம்சமும் கலந்த ராஜபாட்டையைத் தேர்ந்தெடுத்திருந்தார் கமல். ‘தளபதி’யோ ரஜினியைக் கறுப்பு வெள்ளையான மனிதராகக் காட்டியது. ’ரோஜா’வைப் பார்த்துவிட்டு அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டுமென்று ஆசைப்பட்ட பெண்களைவிட, அதேபோல கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக நினைத்த ஆண்களும் பெண்களும் அதிகம். ’பம்பாய்’ படம் வெளியானபோது 1993 குண்டுவெடிப்பின் தாக்கம் இந்தியா எங்கும் நிரம்பியிருந்தது.
’இருவர்’ படமோ திராவிட அரசியலைத் தமிழ்நாட்டில் வேரூன்ற வைத்த இரண்டு தலைவர்களின் காதல்களையும் ஈகோ மோதலையும் காட்டியது. ‘அலைபாயுதே’ 2கே யுக தலைமுறையின் காதல் கண்ணோட்டத்தைச் சொன்னது. அதன்பின் வெளியான படங்கள் எல்லாமே அவரது முந்தைய படங்களின் மறுசுழற்சி வடிவமே.
மணிரத்னத்தின் கணக்குகளோ, இளமை உரையாடல்களோ நீர்த்துப் போனதன் அடையாளமாகவே 2000க்குப் பின்னர் அவர் இயக்கிய படங்கள் அமைந்திருக்கின்றன
ரிலையன்ஸை நிறுவிய திருபாய் அம்பானி வாழ்வின் ஒரு கீற்றாக வெளிப்பட்ட ‘குரு’2007 ஜனவரியில் வெளியானது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் திருமணம் நிகழ்ந்தது. அக்காலகட்டத்தில், குரு வெளியீட்டுக்காகவே இவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாகத் தகவலொன்று வெளியானது. அதேநேரத்தில், அதனை வதந்தி என்றும் புறந்தள்ள முடியவில்லை.
போலவே நகரத்துவாசிகளை, உயர் நடுத்தர வர்க்க மனிதர்களை, கட்டட வெட்கையினுள் நசுங்கும் மனங்களின் உணர்வுக் கொந்தளிப்புகளைக் காட்டுவதில் மணி ரத்னம் கை தேர்ந்தவர். அதனாலேயே வனத்துக்குள் பதுங்கிவாழ்ந்த ‘ராவண’னோ, கடல்புரத்து தகிப்பைச் சொன்ன ‘கடலோ’ பெரிதாகக் கவரவில்லை. மேலே சொன்ன மணிரத்னத்தின் கணக்குகளோ, இளமை உரையாடல்களோ நீர்த்துப் போனதன் அடையாளமாகவே 2000க்குப் பின்னர் அவர் இயக்கிய படங்கள் அமைந்திருக்கின்றன. ‘மேத்ஸ்னா எனக்கு அலர்ஜி’ என்பவர்களே இன்றைய தலைமுறையின் பெரும்பகுதி என்பதால், ’பொன்னியின் செல்வ’னில் இந்தக் கணக்கு வழக்குகளுக்கு வாய்ப்பே இல்லை.
ஒரு வெப்சீரிஸ் ஆக முயன்றிருக்க வேண்டிய எழுத்தாக்கத்தை அதே தொனியில் பெரிய திரையில் தர முயன்றிருந்தால், நிச்சயம் மணிரத்னம் பெருவெற்றியைப் பெறுவார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதீதம் எனும் எல்லையைத் தொட்டுவிடாமல் இருப்பதிலும் அது அடங்கியிருக்கிறது.
Read in : English