Read in : English

Share the Article

‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பல விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. திரையுலகைச் சார்ந்தவர் என்பதையும் தாண்டி, இந்தியாவிலுள்ள மாபெரும் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்பவர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே அவரது செயல்பாடுகளை அச்சாகக் கொண்டு சுழன்று வருகிறது என்றால் அது மிகையல்ல. அதனாலேயே, அவர் குறித்த எந்தச் செய்தியும் உற்றுநோக்கப்படுகிறது.

அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. பல நேரங்களில், தான் இதைத்தான் சொல்ல வந்தேன் என்று அவரே விளக்கம் தர வேண்டிய சூழல்களும் கூட உருவாகியிருக்கின்றன. அப்படிப்பட்ட ரஜினி, ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பல விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக, எதிராளிக்குச் சவால் விடும் வகையில் அவரது பேச்சு இருந்தது.

அது மட்டுமல்லாமல், ‘அடுத்த சூப்பர்ஸ்டார் யார்’ எனும் சர்ச்சை பூதாகரமாகிவரும் சூழலில் ’கழுகு – காக்கை’ கதையொன்றைக் கூறியிருக்கிறார். அதுதான் அந்த சர்ச்சைக்கான பதில் எனும்போது, ரஜினி யாரை ‘காக்கை’ என்கிறார் என்ற கேள்வி எழுவது இயல்பு. இது போன்ற கேள்விகளே, அந்த விழாவில் ரஜினி பேசியது என்ன? தன் உரையில் யாரைப் பற்றியெல்லாம் அவர் குறிப்பிட்டார் என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.

‘நான் என்னங்க பேசறது.. எனக்கொண்ணும் பேசத் தெரியாதுங்க’ என்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’ காலகட்டத்தில் ரசிகர்களிடம் பேசுவதென்றாலே தயக்கத்தை கிலோ கணக்கில் சுமந்தவர் ரஜினிகாந்த். சக நடிகரான சிவகுமாரின் மேடைப்பேச்சு பார்த்து மிரண்டு நின்றவர். எப்படி நடித்தால் ரசிகர்களை ஈர்க்கலாம் என்பதை மட்டுமே யோசித்தவருக்கு, அவர்களை வசியப்படுத்தும் வகையில் உரையாற்றுவது எப்படி எனத் தெரியவில்லை.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்’ எனும் சர்ச்சை பூதாகரமாகிவரும் சூழலில் ’கழுகு – காக்கை’ கதையொன்றைக் கூறியிருக்கிறார். அதுதான் அந்த சர்ச்சைக்கான பதில் எனும்போது, ரஜினி யாரை ‘காக்கை’ என்கிறார் என்ற கேள்வி எழுவது இயல்பு

ஆனால், திரையுலகில் நுழைந்தபிறகு பலவற்றைக் கற்றுக்கொண்டதுபோல, பிற்காலத்தில் அந்தக் கலையிலும் தான் ‘ஜித்தன்’ என்று நிரூபித்தார் ரஜினி. அதனால் பல சர்ச்சைகள் எழுந்ததும், விவாதங்கள் அரங்கேறியதும் வரலாறு. இவ்வளவு ஏன், சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘கமல் 50’ நிகழ்ச்சி நடந்தபோது அரங்கில் கூடியிருந்த கமல் ரசிகர்களையும் தன் பேச்சால் கட்டிப் போட்டவர் ரஜினி.

ரஜினியின் பேச்சுகளில், வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து மேலாண்மைத் திறத்திற்கான பாடங்களை நம்மால் உருவாக்கிட முடியும். அப்படிப்பட்டவர், இதுநாள்வரை தனது பேச்சில் தேவையற்ற அவதூறுகள் இடம்பெறாமல் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். தான் சந்தித்த அவமானங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டபோதும் கூட, சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளங்களை அவர் குறிப்பிட்டதே இல்லை.

மேலும் படிக்க: அன்று தோற்ற ஆளவந்தான், இன்று..?

அப்படிப்பட்ட ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ ஆடியோ விழாவில் புதுமாதிரியாகத் தெரிந்தார். ‘இனிமேலும் நான் வளருவேன்’ என்று தன்னை வெறுப்பவர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசினார். நிச்சயம் இது சாதாரண நிகழ்வு அல்ல.
சரி, முதலில் அவர் என்னென்ன பேசினார் என்ற விஷயத்திற்கு வருவோம்.

‘ஒரு படத்தோட தலையெழுத்து டைரக்டர்கிட்டதான் இருக்கு’ என்று உரையைத் தொடங்கினார் ரஜினிகாந்த். இந்த ஒரு வரிக்கு மட்டும், பல விளக்கங்களைச் சிந்திக்க முடியும். தான் பெ ற்ற கமர்ஷியல் வெற்றிகளுக்கு இயக்குநர்களே காரணம் என்று அவர் சொல்ல வந்தாரா? ஆம். எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், ராஜசேகர் தொடங்கி நெல்சன் வரை குறிப்பிட்ட சில இயக்குநர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களால் தான் இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறேன் என்று கூறினார்.

எம்ஜிஆர், சிவாஜியின் வெற்றிகளுக்கும் கூட அவர்களது படங்களை இயக்கிய இயக்குநர்களே காரணம் என்றார். இந்தப் பேச்சில் இருந்து, தனது சமகால நாயகர்களின் அபாரமான வெற்றிகளுக்கும் கூட அந்தந்தப் படங்களின் இயக்குநர்களே காரணம் என்று ரஜினி ‘சூசகமாக’ குறிப்பிடுவதாகச் சொல்லலாம்.  அப்படிப் பார்த்தால் கமல் நடித்த ‘விக்ரம்’, விஜய் நடித்த ‘வாரிசு’, அஜித் நடித்த ‘துணிவு’ படங்களை மனதில் வைத்தே ரஜினி பேசினார் என்றும் சொல்லலாம். அந்தப் படங்களின் வெற்றிகளுக்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், வம்சி பைடிபல்லி, ஹெச்.வினோத் ஆகியோரே காரணம் என்ற நோக்கில் அவர் பேசியிருக்கலாம். இதுவே, அப்படங்களின் வெற்றிகளுக்குச் சம்பந்தப்பட்ட நாயகர்கள் மட்டுமே காரணமல்ல என்பது போன்ற பிம்பத்தைக் காணச் செய்கிறது.

அந்தப் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலோடு, ரஜினியின் முந்தைய படங்களை ஒப்பிட்டது கூட ரஜினியின் பேச்சுக்குக் காரணமாக இருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நிலைமை மாறி கமல், விஜய், அஜித் என்ற புதிய வரிசை உருவாகியுள்ளதாக வெளியான செய்திகளுக்கான பதிலடியாகவும் இதனைக் கொள்ளலாம்.

’பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பே, ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், ‘பீஸ்ட்’ வசூல் குறைவு என்று தகவல்கள் வெளியானதும் நெல்சன் உடன் இணைவதில் ரஜினி தயக்கம் காட்டுவதாகச் செய்திகள் வெளியாகின. அது பற்றியும் கூட, ரஜினி மேடையில் பகிரங்கமாகப் பேசியதுதான் ஆச்சர்யம்.

ஏனென்றால், எப்போதும் இன்னொரு நாயகரின் திரைப்பட வியாபாரம் குறித்து விமர்சித்துப் பேசியதே இல்லை. ஆனால், ‘பீஸ்ட்’ பற்றி அவர் குறிப்பிட்டது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. திரையுலகில் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து ஆராதனைகள் பாயும் திசை மாறும் என்று ரஜினி குறிப்பிட்டதாகவே இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.போலவே, ஒரு படத்தின் தோல்விக்கு இயக்குநர் தேர்ந்தெடுக்கும் கதை மட்டுமல்லாமல் காஸ்ட்டிங் கூட காரணமாக இருக்கும் என்று தெரிவித்தார் ரஜினி. இது நேரடியாக ‘பீஸ்ட்’ படம் பற்றிப் பேசியதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

1977இல் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டபிறகு உருவான பெரும் எதிர்ப்பிலும் வெறுப்பிலும் நெருப்பிலும் முளைத்த செடி இந்த ரஜினி என்று தன்னைக் குறிப்பிட்டார். அந்த நெருப்பு இன்றும் தொடர்கிறது என்றார்

ஒருநாள் ’ஜெயிலர்’ படப்பிடிப்புக்கு இடையே, ‘உங்க காதல் அனுபவங்களை சொல்லுங்க’ என்று ரஜினியிடம் இயக்குநர் நெல்சன் கேட்டாராம். இதையும் மேடையில் சொல்லிவிட்டார் ரஜினி. இது போன்ற பாணி பேச்சுகள் எல்லாமே, இன்றைய தலைமுறையினரான நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் போன்றவர்களிடம் நாம் வழக்கமாகக் காணக் கூடியது. ஆனால், அவர்களது பாணியைப் பின்பற்றி அன்றையதினம் தன் பேச்சின் ஒரு பகுதியை ரஜினி வடிவமைத்திருந்தது எந்த அளவுக்கு ட்ரெண்ட் மீது அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்பதை உணர்த்தியது.

விழாவுக்கு வந்த தனது சகோதரர் சத்யநாராயணா பற்றிக் குறிப்பிடுகையில், ‘எனது அண்ணா, அம்மா, அப்பா, வாழும் தெய்வம்’ என்றார் ரஜினி. அந்த வார்த்தைகள் உண்மையானவை என்பது போல, அதனை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினார் சத்யநாராயணா. பணம், புகழ், அந்தஸ்துக்கு அப்பாற்பட்டு இரு வேறு பீடங்களில் இருப்பவர்களைச் சகோதர பாசம் பிணைத்த தருணம் அது.  இதே போன்ற அன்பினைத் தனது ரசிகர்களும் தங்களது சொந்தங்களிடம் வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புபவர் ரஜினி. இன்று நேற்றல்ல, பிரபு – ராம்குமார் பாசம் பற்றி ‘சந்திரமுகி’ விழாவில் குறிப்பிட்டதற்கு முன்னிருந்தே இது போன்று அவர் பேசி வருகிறார்.

நான் எப்படி நடிகன் ஆனேன் என்பதைப் பல பேட்டிகளில் ரஜினி சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம், தனது நண்பர் ராவ் பகதூர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். மிகச்சமீபத்தில் என்.டி.ஆர் குடும்பத்தினர் நடத்திய விழாவொன்றில் கலந்துகொண்டபோது, தான் நடித்த ’குருஷேத்திரா’ நாடகத்தில் என்.டி.ஆரின் நடிப்பை காப்பி அடித்ததாகக் கூறியிருந்தார். அந்த நாடகம் எங்கு நடத்தப்பட்டது? அதனை வேடிக்கை பார்க்க ஏன் சென்றேன்? ஜராசந்தன் என்ற சிறு வேடம் தொடங்கி துரியோதனன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று விலாவாரியாக விளக்கிப் பேசினார் ரஜினிகாந்த்.

மேலும் படிக்க: பாபா: புதிய வரலாறு படைக்குமா?

அவர் கடந்து வந்த வரலாற்றின் சில பக்கங்கள் அவை. அதைச் சொல்லி முடிக்கும்போது, சகோதரரும் அவரது துணைவியாரும் தனது நாடக நடிப்பைப் புகழ்ந்ததையும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுமாறு கெஞ்சியதையும் கூறினார் ரஜினி. அதன் தொடர்ச்சியாக, மதுப்பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதெல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருந்தால், அவர் பேசியதெல்லாம் அரசியல் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும்.

வாரிசு பட ஆடியோ வெளியீட்டின்போது, ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று சரத்குமார் பேசியது, அந்த பட்டம் தொடர்பான சர்ச்சையைப் பூதாகரமாக்கியது. விஜய் தான் தமிழில் நம்பர் 1 நடிகர் என்ற விவாதத்திற்கும் அது வழி வகுத்தது. அது ரஜினியின் மனதைக் காயப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், அது பற்றி வெளிப்படையாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார் ரஜினி.

’ஹுக்கும்’ பாடலில் இடம்பெற்ற ‘சூப்பர் ஸ்டார்’ என்ற வார்த்தை பற்றிப் பேசுகையில், ’அது எப்பவுமே தொல்லை’ என்று தெரிவித்தார். அந்த பட்டம் வழங்கப்பட்டபோதே, பெரிய நடிகர்களாக சிவாஜியும் கமலும் இருந்த காரணத்தால் அதனை ஏற்கத் தயங்கியதாகக் கூறினார். 1977இல் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டபிறகு உருவான பெரும் எதிர்ப்பிலும் வெறுப்பிலும் நெருப்பிலும் முளைத்த செடி இந்த ரஜினி என்று தன்னைக் குறிப்பிட்டார். அந்த நெருப்பு இன்றும் தொடர்கிறது என்றார்.

இந்த இடம்தான் இன்னும் சர்ச்சையைக் கிளப்பக்கூடியது. ஏனென்றால், அப்போது தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து ரஜினி வெளிப்படையாகப் பேசினாலொழிய, இதுவரை உலாவரும் அனைத்துச் செய்திகளும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களாகவே நீடிக்கும். அப்போது பல படங்களில் இருந்து ரஜினியை நீக்கப் பெரும் பிரயத்தனங்கள் நடந்தன என்பதைச் சில திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகளில் இருந்து அறிய முடிகிறது.

அன்றும் இன்றும் ரஜினியின் போட்டியாளராக இருந்து வருபவர் கமல் மட்டுமே. விஜய், அஜித் இருவருமே 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு உச்சாணிக்கொம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவர்கள். அதனால், இந்த மூவரில் யாரை ரஜினி குறிப்பிடுகிறார் என்பது அவரவர் யூகங்களைச் சார்ந்தது. அஜித் ஊடகங்களைச் சந்திப்பதே இல்லை; ‘லியோ’ ஆடியோ விழாவில் ஏதாவது குட்டிக்கதை சொல்வதன் மூலமாக, ரஜினியின் பேச்சுக்கு விஜய் பதில் சொல்லும் வாய்ப்புகள் உண்டு; அது நிகழாமலும் கூட போகலாம். ஆக, இந்த வரிசையில் மீதமிருப்பது கமல் மட்டுமே. இதுவரை அவர் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து குறித்து வெளிப்படையாகத் தன் எண்ணங்களை வெளியிட்டதே இல்லை; அவ்வளவு ஏன், ரஜினி இல்லாத மேடைகளில் அவரைக் குறிப்பிட்டதும் கிடையாது. ஆனால், ‘ஜெயிலர்’ மேடையில் கூட ரஜினி அவரது பெயரை உச்சரித்தார்.

இந்த வித்தியாசமே, ’சூப்பர் ஸ்டார்’ பட்ட விவகாரத்தில் கமலின் பதில் என்னவென்று தெரிந்துகொள்வதில் ஆர்வத்தை உருவாக்குகிறது; உண்மையைச் சொன்னால், 70’ஸ் கிட்ஸ் இதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். ‘ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள்’ என்று சொல்லி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வோரும் உண்டு. ஆனாலும், அவர்களது சமாளிப்புகளில் ‘பொத்தல்’ விழச் செய்திருக்கிறது ரஜினியின் பேச்சு. உண்மையைச் சொன்னால், தன் பேச்சு பல மட்டங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது ரஜினிக்கும் தெரியும். அதையும், அவரே அந்த மேடையில் சொல்லிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், தற்போது ‘காவாலா’ பாடல் வரிகள் குறித்து இயக்குனர் ராசி.அழகப்பன் ஒரு மேடையில் விமர்சித்துப் பேசியிருக்கிறார். இப்போது வரும் பல பாடல்கள் சங்கத்தமிழ் காலத்து தரத்தைப் பிரதிபலிக்கின்றன என்றால், விதிவிலக்காக இருக்கும் ஒரே பாடல் என்று அதனை மட்டும் விமர்சிக்கலாம். ஆனால், பெரும்பான்மையான பாடல்கள் அந்த வகையில் இருக்கும்போது ’காவாலா’ பாடலை மட்டும் குறிப்பிட்டு விமர்சித்தது ஏன் எனும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

ராசி.அழகப்பன் ஜெயிலர் படத்தைக் குறிவைத்துப் பேசினார் என்று கருதினால், ரஜினியின் பேச்சும் கமலை மையப்படுத்தியதா என்ற கேள்வி தானாக எழும். சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகப் பேசாதவரை சில உண்மைகளும் பொய்களும் யூகங்களாகவே முகம் காட்டும். தங்களது பட வியாபாரத்திற்கு அதுவே நல்லது என்று கருதினால், ரஜினியின் பேச்சுக்கு எந்த தரப்பில் இருந்தும் விளக்கம் வெளிவராது. ஒருவேளை அது தனிப்பட்ட தாக்குதலாக உள்வாங்கப்பட்டால் பின்விளைவுகள் நிச்சயம் தெரியவரும்.

சரி, நீங்கள் சொல்லுங்கள்! ’சூப்பர் ஸ்டார்’ யாரைப் பற்றிப் பேசினார்?


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles