Read in : English
சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் முயற்சிகளும் அவற்றின் பலன்களும் களநிலவரங்களையும், மக்களின் போராட்டங்களையும் பிரதிபலிக்க வேண்டும்; பின்னர் அவை பொதுக்கொள்கை விவாதங்களாக வேண்டும்; இதன் மூலம் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த நம் முன்னோர் கண்ட கனவு.
தேசிய, பிராந்திய மற்றும் கிராம அல்லது நகர மட்டங்களில் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்குப் பொருத்தமான ஆய்வு முயற்சிகளைச் சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களே முன்னெடுக்கின்றன.
சுதந்திரம் பெற்றபின்பு தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்த அரசுகள், பொதுக் கொள்கைகளை வடிவமைப்பதில் தங்களுக்கு உதவுவதற்காகப் பல்வேறு தேசிய நிறுவனங்களை உருவாக்கின. 1971இல் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ஐசிஎஸ்எஸ்ஆர்) பங்கை, பொறுப்பை, பணியை, கட்டமைப்பை வரைவு செய்த உறுப்பினரும் செயலருமான ஜே.பி. நாயக் சொன்னது போல, “நமது சமூகத்தைத் திட்டமிட்டபடி மீளுருவாக்கம் செய்கின்ற பணி, நம் சமூகப் பிரச்சினைகளையும், தீர்வுகளையும் பற்றிய சிறந்த ஆழமான பார்வைகளை வழங்கும் பணி” புதிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1969இல் உதயமான இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ஐசிஎஸ்எஸ ஆர்). ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு மையங்களின் கல்வித்துறை ஆராய்ச்சிக்காக நிதிவழங்கும் காமதேனுவாகச் செயல்படுகிறது; மேலும் அதன் ஆறு பிராந்திய மையங்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு அதுதான் நிதி தருகிறது
அந்த மாதிரியான முன்னணி நிறுவனம்தான் 1969இல் உதயமான இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ஐசிஎஸ்எஸ்ஆர்). ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு மையங்களின் கல்வித்துறை ஆராய்ச்சிக்காக நிதிவழங்கும் காமதேனுவாகச் செயல்படுகிறது; மேலும் அதன் ஆறு பிராந்திய மையங்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கு அதுதான் நிதி தருகிறது. அறிவைப் பகிர்தல், பரப்புதல், பரவலாக்கல் என்ற மிகப்பெரிய இலட்சியத்திற்காக, சமூக அறிவியல் பிரிவுகள் எடுத்துக்கொள்ளும் ஆய்வு விஷயங்களும் விரிவடைந்திருக்கின்றன.
நாட்டின் வளர்ச்சியில் ஓரங்கமாகச் செயல்படுவதற்கும், குடிமக்களின் வாழ்க்கையில் கொள்கை மாற்றங்கள் மூலம் அடிப்படை வசதிகளோடு கூடிய கணிசமான மாறுதல்களை உருவாக்குவதற்கும் இந்த உயர்நிலை நிறுவனங்கள் வரிகட்டுவோர்களின் பணத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
‘ஸ்கோபஸ்’ தரவுக் கட்டமைப்பின்படி, “உலக அளவில் சமூக அறிவியல் வெளியீடுகளில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, உலகப் புத்தகப் பதிப்புகளில் இந்தியாவின் பங்கு, 4.25 சதவீதம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புத்தகப் பதிப்புகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்து 7 சதவீதப் பங்களிப்பைச் செய்கிறது.” இந்தியாவில் சமூக அறிவியல்களைவிட, அடிப்படை விஞ்ஞானத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்துவது தரம்சார்ந்த அம்சங்கள்தாம்.
மேலும் படிக்க: எம்ஐடிஎஸ்: நெருக்கடியிலிருந்து மீளுமா ஆராய்ச்சி நிறுவனங்கள்?
ஆனாலும், பொதுக் கொள்கை மற்றும் கல்விசார் பார்வைகளில் நோக்கினால், ஐசிஎஸ்எஸ்ஆரின் நிதி ஆதரவோடு செய்யப்படும் ஆராய்ச்சிகளிலும், ஆய்வுத் திட்டங்களிலும் இருக்கும் தரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்ள வேண்டியதிருக்கிறது. பொதுவாக, ஒரு வருடத்திற்குக் குறைவான ஆய்வுத் திட்டங்களுக்கும், ஒன்று முதல் இரண்டு ஆண்டு வரையிலான திட்டங்களுக்கும் என்று இருவிதமான நிதியை அளிக்கிறது இந்த நிறுவனம். பல்கலைக்கழக மானியக் குழு, மாநில அரசுகள், ஒன்றிய அமைச்சகங்கள் போன்ற மற்ற அமைப்புகளும் சமூக அறிவியல் ஆராய்ச்சிக்காக மானியங்கள் அளிக்கின்றன.
கடந்த 52 ஆண்டுகளில், “ஐசிஎஸ்எஸ்ஆர் 6,793 பெரிய, சிறிய மற்றும் கூட்டுமுயற்சி ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியளித்திருக்கிறது. 1,853 அறிஞர்களுக்கு அவர்களுடைய முனைவர்பட்ட ஆராய்ச்சிகளை அல்லது திட்டங்களை அல்லது ஃபெலோஷிப் அறிக்கைகளை அல்லது மாநாட்டு அறிக்கைகளைப் புத்தகங்களாக வெளியிடுவதற்கு நிதியளித்திருக்கிறது. மேலும் 1,008 சமூக அறிவியல் பத்திரிகைகளுக்கும், சமூக அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் 374 தொழில்முறை அமைப்புகளுக்கும் அது நிதி ஆதரவு தந்திருக்கிறது” என்கிறது ஐசிஎஸ்எஸ்ஆரின் 2020-21 ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஐசிஎஸ்எஸ்ஆர் ஆய்வுத் திட்டங்களை “அனுமதித்திருக்கிறதே” தவிர அவற்றை ‘நிறைவுசெய்வதில்லை’ என்று அந்த நிறுவனம் சொல்லியிருப்பதுதான். ஏனென்றால் நிதி ஆதரவு பெற்ற திட்டங்களில் 20 சதவீதம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படவில்லை; அவற்றில் 7 சதவீதம் (451) கைவிடப்பட்டன. 2016-17இல், 23 சதவீதத் திட்டங்களும், அதாவது 108 திட்டங்களும், 2017-18இல் 31 சதவீதம் அல்லது 112 திட்டங்களும் முடிக்கப்படவில்லை.
ஓர் உச்ச நிறுவனமாக, ஐசிஎஸ்எஸ்ஆரின் செயற்பாடுகள் கல்வித்துறை மற்றும் நடப்புக்காலப் பொதுக்கொள்கைக் கோணங்களிலிருந்து கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. ஆராய்ச்சிகளின் பொருத்தம், அவை நடத்தப்படும் சூழல், கையாளப்படும் ஆய்வு முறைமைகள், ஆய்வுக்கான சாம்பிள் வடிவம், ஆரம்பநிலைக் கள ஆய்வுகளின் உண்மைத்தன்மை ஆகியவை கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.
“உலக அளவில் சமூக அறிவியல் வெளியீடுகளில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, உலகப் புத்தகப் பதிப்புகளில் இந்தியாவின் பங்கு, 4.25 சதவீதம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புத்தகப் பதிப்புகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்து 7 சதவீதப் பங்களிப்பைச் செய்கிறது.”
ஐசிஎஸ்எஸ்ஆரில் வெளிப்படைத் தன்மையும் பதில் சொல்லும் பொறுப்புணர்வும் இல்லை என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. அவை ஐசிஎஸ்எஸ்ஆரின் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை பல ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான் வினோதம். உதாரணமாக, ஐசிஎஸ்எஸ்ஆரின் 2017-18 ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் கொடுக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் காணப்பட்ட நிதிநிலைக் குளறுபடிகளை இந்தியாவின் கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) சாடியிருக்கிறது. பல நிதி வழங்கல்களில் வெளிப்படைத் தன்மை இல்லை.
மேலும், 2009-10இலிருந்து ஐசிஎஸ்எஸ்ஆரின் தில்லி மற்றும் பிராந்திய அலுவலகங்களில் நடைபெற்ற எல்லா நிதிப் பரிவர்த்தனைகளையும் பற்றி ஒரு முழுமையான கணக்கெடுப்பு நடத்தும்படி சிஏஜி அந்த நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால் “எந்தவிதமான சீர்திருத்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” ஆதலால், 2017-18 நிதியாண்டிற்கான முழுக் கணக்கெடுப்பு செய்யப்படவில்லை. அந்த நிறுவனத்தின் ஆட்சிக் கட்டமைப்பையும், ஆய்வு முடிவுகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்; கொள்கைகளில் தாக்கம் ஏற்படுத்தும் முற்றுப்பெற்ற ஆய்வறிக்கைகளைச் சுயாதீனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஐசிஎஸ்எஸ்ஆரை ஆய்வு செய்த குழுக்கள் பல பரிந்துரைத்தன; ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன.
உதாரணமாக, ஐசிஎஸ்எஸ்ஆரைப் பற்றிய நான்காம் ஆய்வுக் குழு அறிக்கை 2007இல் சமர்ப்பிக்கப்பட்டது. “சமூக அறிவியல் ஆய்வு வெளிப்பாடுகளின் தரமும், சமூக, பொருளாதாரச் செயற்பாடுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதில் மற்றும் பொதுக் கொள்கை வடிவமைப்பில் அந்த ஆய்வு செய்த பங்களிப்பும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை” என்று அந்த அறிக்கை சொன்னது. அதைப் போல, 2011இல் மற்றுமோர் ஆய்வுக் குழு ஐசிஎஸ்எஸ்ஆரின் நிர்வாகக் கட்டமைப்பு, ஆராய்ச்சி அறிக்கைகளின் தரம் ஆகியவற்றை மேம்படுத்த வலியுறுத்தியது.
மேலும் படிக்க: சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராகிறார் பேட்டரி தொழில்நுட்ப விஞ்ஞானி
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இடைநிலை மற்றும் உயர்கல்வித் துறை ஐசிஎஸ்எஸ்ஆர்க்கு அளித்த மானியங்கள் பின்வருமாறு: 2020-21 – 109.90 கோடி; 2019-20 – 133.06 கோடி; 2018-19 – 124.58 கோடி; 2016-17 – 189.2 கோடி; 2015-16 – 171.72 கோடி; 2014-15 – 164.97 கோடி.
மொத்த மானியங்கள் குறைந்துகொண்டே வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஐசிஎஸ்எஸ்ஆர், 2018இல் ஒரு புதிய ஆராய்ச்சி நிதித் திட்டத்தைத் தொடங்கியது. “சமூக அறிவியலில் தாக்கம் ஏற்படுத்தும் கொள்கை ஆராய்ச்சி” (இம்ப்ரெஸ்) என்று அதற்குப் பெயரிடப்பட்டது. சமூகத்தின் கொள்கைச் சவால்களைச் சமாளிக்கவும், பின்பு சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்யவும் தேவையான ஆராய்ச்சிப் பின்புலத்துடன் கூடிய ஒரு வரைவுத்திட்டத்தை அளிக்க வேண்டும் என்பதுதான் ஐசிஎஸ்எஸ்ஆரின் புதிய திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தின்படி செயற்படுத்தப்படும் முக்கிய ஆய்வுக் கருப்பொருள் அம்சங்கள் ஐசிஎஸ்எஸ்ஆரின் நிதிபெறும் வழக்கமான ஆய்வுகளிலிருந்து வேறுபட்டவை. இதுவரை, இரண்டுவிதமான ஆய்வுத் தொகுப்புகளுக்கு நிதி ஆதரவு கொடுக்கப்பட்டன. நாட்டில் இந்த இரண்டு ஆய்வுத்திட்டத் தொகுப்புகளில் அதிகமான ஆய்வுத் திட்டங்களைப் பெற்றது தமிழ்நாடுதான். இரண்டாவது தொகுப்பில் பெறப்பட்ட ஆய்வு விண்ணப்பங்களில் 20 சதவீதம் (677) தமிழகத்திலிருந்து வந்திருக்கின்றன. பிற மாநிலங்களைவிட இது அதிகமானது.
அழுத்தமான பொதுக் கொள்கைகளுக்கான சமூக அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களின் தரத்தை மேம்படுத்தத் தேவையான புதுவித அணுகுமுறை என்ற கோணத்தில், ‘இம்பெரஸ்’ என்ற இந்தப் புதிய திட்டத்தின்கீழ் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் (1,500) இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. நடைமுறைச் சமூக அறிவியல் ஆராய்ச்சி அம்சங்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றன. பல தொடக்கட்ட ஆய்வுக்கான மாதிரிகள் திரிபுகள் கொண்டவையாகத்தான் இருக்கின்றன.
சமூக அறிவியல் ஆராய்ச்சிக்காக நிதியளிக்கும் ஐசிஎஸ்எஸ்ஆர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) அல்லது விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தோடு (சிஎஸ்ஐஆர்) ஒப்பிடப்படுகிறது. ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர் ஆகிய அமைப்புகள் அரசிடமிருந்து அதிக நிதியைப் பெறுகின்றன. புதுமையான பரிசோதனைகளும், கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்ற ஏராளமான சிறப்புப் பரிசோதனைக் கூடங்கள் அந்த அமைப்புகளிடம் இருக்கின்றன. தங்கள் கண்டுபிடிப்புகளுக்கான சிறப்புரிமையைப் பெறுவதற்கு அவை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விண்ணப்பிக்கின்றன.
ஓர் உச்ச நிறுவனமாக, ஐசிஎஸ்எஸ்ஆரின் செயற்பாடுகள் கல்வித்துறை மற்றும் நடப்புக்காலப் பொதுக்கொள்கைக் கோணங்களிலிருந்து கேள்விக்குள்ளாகி இருக்கின்றன
சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்னவென்றால், ஒன்று அவர்கள் கல்விசார் கவனக்குவிப்பில் பின்தங்கியிருக்கிறார்கள்; அடுத்து, கள நிலவரங்களோடு தொடர்புடைய பொதுக்கொள்கை ஆராய்ச்சி உணர்வு அவர்களிடம் இல்லை.
இந்தப் போக்குகளின் காரணமாக, ஐசிஎஸ்எஸ்ஆர் நிதியில் செய்யப்பட்ட திட்ட ஆராய்ச்சி அறிக்கைகள் முன்வைக்கும் முடிபுகளிலிருந்து அரசு அதிகாரிகள் மெதுவாக, ஆனால் உறுதியாக விலகிப் போகிறார்கள்.
மேலும், இறுதியாக, ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளாக இருந்தாலும் சரி, பொதுவாக அரசுகள் என்பவை ஐசிஎஸ்எஸ்ஆர், யூஜிசி, சுயாதீன நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி முடிபுகளை நம்புவதில்லை. ஏனென்றால், இந்த அமைப்புகள் சித்தாந்தப் பாரபட்சங்களுடன் அல்லது சுயநல எண்ணங்களுடன் ‘சமூக நிஜங்க’ளைத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ மதிப்பீடு செய்கின்றன. பாரபட்சமற்ற சுயாதீன ஆய்வுகள் என்று எவற்றையும் சொல்ல முடியாது. சில ஆய்வுகள் நேர்மையானவைதாம்; ஆனால் அவை மைய நீரோடைக் கல்வியாளர்களாலும், ஊடகங்களாலும், கொள்கை வடிவமைக்கும் நிறுவனங்களாலும் புறக்கணிக்கப்படுகின்றன.
மொத்தத்தில், 1990-களிலும் அதன் பின்பும் கொண்டுவரப்பட்ட பெரிய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கேற்ப ஐசிஎஸ்எஸ்ஆர் உட்படப் பல உச்ச நிறுவனங்கள் இன்னும் சீர்திருத்தப்படவில்லை. இந்த நிறுவனங்கள் இன்னும் பழைய சமத்துவ வடிவமைப்பிலே செயல்படுகின்றன. நாட்டு மக்களின் தேவைகளுக்கேற்ப மாறாமல் இன்னும் அவை அதிகாரம் செலுத்தும் ராஜாங்க அமைப்புகளாகவே இயங்குகின்றன.
தர்க்கரீதியான முடிபுகளைத் தருகின்ற தரவுகளோடு பொதுக்கொள்கை மாற்றங்களைத் தைரியமாகப் பரிந்துரைப்பதற்கு, இந்த நிறுவனங்கள் சுயாட்சியோடு இயங்க வேண்டும். ஐசிஎஸ்எஸ்ஆர் போன்ற நிறுவனங்கள், சமூகத்தில் நிலவும் சவால்களையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக மக்களும், அரசும் எடுக்கும் முயற்சிகளுக்குக் கைகொடுக்க வேண்டும்.
(கட்டுரையாளர், பொருளாதார அறிஞர், பொதுக்கொள்கை நிபுணர்).
Read in : English