Read in : English

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கலைச்செல்வி நல்லதம்பி. இவர் தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண் விஞ்ஞானி ஒருவருக்குப் பதவி உயர்வளித்து, அவரை இந்திய அளவில் முதன்மையான ஓர் அறிவியல் அமைப்பின் தலைவராக அமர்த்தியிருப்பது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. அரசுத் துறையில் விஞ்ஞானியாகத் தொடங்கிய பணி வாழ்க்கையில் தலைமை இயக்குநராக இவர் உயர்ந்திருக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உட்பட அரசு நிறுவனங்களில் அதிநவீனத் தொழில்நுட்ப பணிகளில் பணிபுரிந்துவரும் பெண் விஞ்ஞானிகளது பங்களிப்பு அதிகரித்துள்ளதன் அடையாளமாகியுள்ளார் கலைச்செல்வி.

ஒரு விஞ்ஞானி மற்றும் மேலாளராக, அவர் இந்தியாவின் லித்தியம் பேட்டரி ஆய்வுகளுக்கு வழிகாட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள ஆற்றல் அமைப்புகள் ஆய்வுசெய்து மேம்படுத்த முனைந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் லித்தியம் பேட்டரித் தொழில்நுட்பம் ஆகும்.

சனிக்கிழமையன்று புதிய தலைமை இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள கலைச்செல்வி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளர் பொறுப்பையும் கவனிப்பார்; சிஎஸ்ஐஆரை இரண்டு ஆண்டுகள் வழிநடத்துவார்.

ஒரு விஞ்ஞானி மற்றும் மேலாளராக, அவர் இந்தியாவின் லித்தியம் பேட்டரி ஆய்வுகளுக்கு வழிகாட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது

கலைச்செல்வி, தான் விஞ்ஞானியானதற்கும், தலைமைப் பதவிகளில் செயல்படுவதற்கும், பெற்றோரிடமிருந்து கிடைத்த எல்லையற்ற சுதந்திரமே காரணம் என்கிறார். தலைமைத்துவப் பண்புகள் கொண்ட, தலைமைப் பதவிகளுக்கான பெண்களை அடையாளம் காணும் கூட்டமொன்றில் அவர் இவ்வாறு பேசிய காணொலி யூடியூபில் காணக்கிடைக்கிறது.

கலைச்செல்வி, மின் வேதியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். 2019 இல் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

மேலும் படிக்க:

புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் யார்?

பிளஸ் டூ தேர்வில் 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு: அன்று தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவி, இன்று டாக்டர்!

மின் வாகனத் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்று வரும் இந்தத் தருணத்தில், புதிய தலைமை இயக்குநராக ஒரு பெண் அதுவும் வேதியியல் மின்சாரத் துறைப் பின்புலத்தில் இருபத்தைந்து ஆண்டு அனுபவம் கொண்ட ஒருவர் பதவி ஏற்பதைக் குறிப்பிடத்தக்க ஒன்றாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அரசு நிர்வாக இயந்திரத்திற்கும் அறிவியல் ஆராய்ச்சி வட்டத்துக்குமிடையேயான மல்லுக்கட்டு நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஆராய்ச்சிகளுக்கான நிதி ஆதரவின்மை, உபகரண, ஆய்வுகூட வசதிகளுக்கு போதிய உறுதுணையின்மை ஆகியவற்றால் அவதிப்படும் இளம் ஆய்வாளர்கள், ஆராய்ச்சிகளுக்கான நல்வாய்ப்புள்ள வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.

சீதா சோமசுந்தரம், நிகழ்ச்சி இயக்குநர், மினால் ரோஹித், திட்ட மேலாளர் – செவ்வாய் கிரகம் தொடர்பான ஐஎஸ்ஆர்ஓ பணியின்போது. அரசின் அறிவியல் தொழில்நுட்பப் பணிகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க வேண்டியதிருக்கிறது. (Photo credit: Screengrab: Breakthrough snapshots from afar)

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறித்து எழுதும் மூத்த பத்திரிகையாளர் சுஜோய் சக்ரபர்த்தி இது குறித்து கூறியபோது, “சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு பெண்மணி நியமிக்கப்பட்டது நல்ல முன்னுதாரணம் ஆகும். இதனால் இந்தியாவை விட்டு வெளியேறும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைசார் ஆய்வாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

போதுமான ஆய்வக வசதி கிடைக்காததாலும், உபகரணங்களுக்கான நிதியுதவி கிடைக்காததாலுமே ஆராய்ச்சியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் உருவாகிவிடுகிறது. அவர்கள் தங்கள் ஆய்வகங்களில் அதிக நேரத்தை, ஒரு நாளைக்குச் சுமார் 14 மணிநேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையானவை அதிநவீன ஆய்வகங்கள், உபகரணங்கள், பண உதவி ஆகியவையே. கெட்டிதட்டிப்போன நிர்வாக அமைப்பே அவர்களை அடிப்படை அறிவியல் ஆராய்ச்சித்துறையைக் கைவிட்டுவிட்டு மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரச் செய்துவிடுகிறது.

“ஆய்வுக்கான ஆதரவு இல்லாத காரணத்தால் அவர்கள் ஆராய்ச்சிக்காக வெளிநாடு செல்கிறார்கள். ஆய்வு முடிந்த பிறகும் பழைய சூழ்நிலையே தொடர்ந்து நிலவுவதால் அவர்களால் திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகிறது” என்று அவர் கூறினார்.

ஆற்றல் சேமிப்பு கொள்கலன்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான லித்தியம் பேட்டரிகள், சூப்பர் கேபாசிட்டர்கள் மற்றும் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் மின்முனைகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மின் வேதியியல் பிரிவில் இவரது நிபுணத்துவம் மூலம், காற்று மாசுபடா போக்குவரத்துக்கு இவரால் முக்கியப் பங்களிக்க இயலும். தேசிய மின் இயக்கத்திற்கான (NMEM) தொழில்நுட்ப அறிக்கையைக் கலைச்செல்வி தயாரித்துள்ளார், இவரது பேரில் ஆறு காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன, 125 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார் என்பன இவரது திறமைக்கான சான்றுகள்.

கண்ணாடி மற்றும் மட்பாண்டத் துறையில் பணிபுரியும், பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது, “தொழில்நுட்ப மேலாளராக இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். நிக்கல் ஹைட்ரேட்டை விட்டுவிட்டு லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாறிவிட்டோம். மொபைல்கள் மற்றும் டிரிம்மர்கள் முதல் வாகனங்கள் வரை லித்தியம் அயன் பேட்டரிகளால் சூழப்பட்டுள்ளோம், அடுத்தகட்டமாக ராக்கெட்டுகளின் உந்துவிசைக்கு பேட்டரிகள் பயன்படுத்தப்படும் என்று சொன்னால் அது மிகையாகாது” என்று அவர் கூறினார்.

கலைச்செல்வி நல்லதம்பி, லித்தியம் அயன் பேட்டரிகள், மின் வாகனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றதால் சுற்றுச்சூழலுக்கும் உதவுவார்

ஆட்டோமொபைல் தொழில்துறைகளை மின்சாரமயமாக்குவதற்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும், காப்புரிமைகளை வாங்குவதற்கும், அவற்றின் ஆயத்தநிலை எரிபொருள் ஆதார அமைப்புகளை, அதாவது பாட்டரி போன்ற சாதனங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் முனைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

லித்தியம் கோபால்ட் ஆக்சைடு அல்லது லித்தியம் அயர்ன் ஆக்சைடை இறக்குமதி செய்வதிலும், மூலப்பொருள்களைக் கொண்டுவருவதிலும், சந்தைக்கு விநியோகம் செய்வதிலும் இந்தத் தொழிற்சாலைகள் சிக்கல்களை எதிர்கொள்ளும். தேவைகள் அதிவேகமாக வளரும். குவிந்துவரும் இ-கழிவுகள் ஒரு புறம் சிக்கலாக உள்ளது. தாதுக்களை உகந்த முறையில் மறுசுழற்சிசெய்வது முக்கியத்துவம் பெறும். மின்முனைகளில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல் இது போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரும்.

“மின் வாகனம் மற்றும் மாற்று எரிபொருள் ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறும் வேளையில் அவற்றின் செயல்திறன், நிலைத்தன்மைச் சிக்கல்களும் உள்ளன. மேலும், நிலக்கரி மற்றும் திரவ எரிபொருள் நுகர்விலிருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நேரத்தில், இந்த ஆற்றல் தொழில்களுக்கு ஏற்ற வகையில் அதிநவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்.

சிஎஸ்ஐஆர் இயக்குநரின் பங்கு ஆராய்ச்சியைவிட நிர்வாகரீதியானது. ஆனால், இயக்குநர் ஒரு விஞ்ஞானியும் ஆவார். அவரது நிபுணத்துவம் ஆய்வு மற்றும் சோதனை அறிவியலில் பரந்த அளவில் உள்ளது. சிஎஸ்ஐஆரில் உள்ள 38 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள விஞ்ஞானிகளுடன் இயல்பாகவே அவரால் தொடர்புகொள்ள முடியும்.

கலைச்செல்வி நல்லதம்பி, லித்தியம் அயன் பேட்டரிகள், மின் வாகனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றதால் சுற்றுச்சூழலுக்கும் உதவுவார். தமிழ் இலக்கிய ஆர்வலரான இவர், மேடைகளில் நல்ல தமிழ் உரைநடை மற்றும் கவிதைகளை மேற்கோள் காட்டும் செந்தமிழ்ப் பேச்சாளரும்கூட.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival