Read in : English

உலகத் தானியங்கித் துறையில் ஒரு பெரும் திருப்பமாக, பேட்டரியால் இயங்கும் மின் வாகனங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. தமிழகம் உள்படப் பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல விபத்துகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கவுஹாத்தியைச் சேர்ந்த பல்வந்த் சிங் கடந்த மார்ச் மாதம் 26 அன்று, ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். வாங்கிய வண்டியை ஓட்டிச் சென்ற அவர் மகன், விபத்துக்குள்ளானார். அதைத் தொடர்ந்து பல்வந்த், வாகனத்தில் ஏற்பட்ட தவறால் இந்த விபத்து நடந்ததாகக் குற்றம் சாட்டினார். அதனால் சிகிச்சைக்கு வாகன நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று கோரினார். மேலும் அவர், என்ன நடந்தது என்று அறிய வாகனத்தில் இருந்து சேகரித்த இயங்குநிலைத் தகவல்களைத் (operational runtime data) தங்களுக்குத் தருமாறு கேட்டிருந்தார்.

இயங்குநிலைத் தகவல்கள் என்பது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு சேவை. எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பல்வேறு பகுதிகள் இயங்குவதைக் கண்காணித்து, தரவுகளைப் பல்வேறு மானிகளின் (Sensors) வழியாகப் பெற்று, ஸ்கூட்டர் நிறுவனம் தனது தகவல் சேமிப்பு தொகுப்புகளில் (cloud storage) சேமித்துவைக்கும். தேவைப்படும்போது நுகர்வோர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும் அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் கூறியிருந்தது.

விபத்து நடந்து ஒரு மாதம் கடந்தபின், வாகன நிறுவனம் விரிவான மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையில், தன் கூற்றுக்குச் சான்றாக அதில் பல முடிவுகளை வெளியிட்டிருந்தது. அவை அனைத்தும் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து, சேகரிக்கப்பட்ட பயன்பாட்டுத் தரவுகளின் (operational data) அடிப்படையிலானவை என்று கூறப்பட்டது.

புதிய தலைமுறை எலக்ட்ரிக் வாகனங்கள், ஸ்மார்ட் போன்களை ஒத்தவை. ஸ்மார்ட் போன்களைப் போலவே இவற்றிலும் பல்வேறு அடிப்படை வாகனச் செயல்பாடுகள், மென்பொருள் வழி நெறிப்படுத்தப்படுகின்றன. வாகனச் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள், சேமிப்புத் தொகுப்பிடத்தில் சேமிக்கப்படுகின்றன

அதைத் தொடர்ந்து இருதரப்பும் சமூக வலைத்தளங்களில் தொடுத்த வாக்குவாதங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையையும் பத்திரிக்கைகளிலும், செய்தித் தளங்களிலும் தொடர்ந்து சில வாரங்களுக்கு இடம்பெற்றன.

இதற்கு முன்பே பலமுறை வெவ்வெறு நிறுவனங்களின் வண்டியிலிருந்த பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டபோதும், வேறு நேரத்திலும் வெடித்து விடுவதும் அதில் காயங்களும், ஏன் உயிரிழப்பும் நிகழ்ந்ததும் கூட செய்திகளாகி வந்தன.

ஆனால், கவுஹாத்திப் பிரச்சினையில் வாகன நிறுவனம் அளித்த அறிக்கை வேறு சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகள், வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் தனிமனித உரிமை ஆகியவற்றுக்கான முக்கியப் பிரச்சினைகளை நம் முன் நிறுத்தியிருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள, இந்த நவீன எலக்ட்ரிக் வாகனங்களின் இயங்கு தகவல் பரிமாற்றச் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

மேலும் படிக்க: இ-ஸ்கூட்டர் பாட்டரியில் தீ பிடித்து விபத்து: கேள்விக்குறியாகும் வாகனப் பாதுகாப்பு!

அடிப்படையில், இந்தப் புதிய தலைமுறை எலக்ட்ரிக் வாகனங்கள், ஸ்மார்ட் போன்களை ஒத்தவை. ஸ்மார்ட் போன்களைப் போலவே இவற்றிலும் பல்வேறு அடிப்படை வாகனச் செயல்பாடுகள், மென்பொருள் வழி நெறிப்படுத்தப்படுகின்றன. வாகனச் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள், சேமிப்புத் தொகுப்பிடத்தில் (cloud storage) சேமிக்கப்படுகின்றன. ஆனால், இது தொடர்பான ஒரு தெளிவான விளக்கத்தை, நிறுவனங்கள் நுகர்வோருக்கு அளிப்பதில்லை. சாமானியர்களுக்கு விளங்காத வார்த்தைகளில் அவை வாகனம் தொடர்பான கையேடுகளில் இடம்பெறுகின்றன.

இவை இந்த எலக்ட்ரிக் வாகனங்களின் மீதான கவர்ச்சியைக் கூட்டி, விற்பனையை அதிகரிக்கும் உத்தியாகப் பயன்படுத்தப்படுவது போலத் தோன்றுகிறது.
ஆகவே, முதலில் இந்த சேவைக்கான கணினி வலை அமைப்பு குறித்த அடிப்படைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இதன் அடிப்படை வடிவமைப்பில் நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன.

1. எலக்ட்ரிக் வாகனம் – ஸ்மார்ட் போனைப் போலவே இதில் பொருத்தப்பட்டிருக்கும் மானிகளின் (sensor) மூலம், வாகனத்தின் வேகம், பிரேக்கிங், இன்ஜின் வெப்பநிலை, GPS பயன்பாடு, போன்ற பலவிதமான செயல்பாட்டுத் தரவுகள் கண்டறியப்பட்டு, அவை தகவல் சேமிப்புத் தொகுப்புக்கு (Cloud Storage) அனுப்பப்படும். அதைச் சாத்தியமாக்கும் வகையில், இதில் சிம் கார்டு அல்லது வேறு வகையான இணைய இணைப்பு செயல்படுத்தப்பட்டிருக்கும்.

2. வாகனம் மற்றும் அதன் இயக்கம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன் சேமிப்புக்கும் மேலாண்மைக்கும் அமைக்கப்படும் பெரும் சேமிப்புத் தொகுப்புக்கு அனுப்பப்படும். இந்தச் சேமிப்புத் தொகுப்பு, தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

3. பராமரிப்பு மேலாண்மை சர்வர் – பொதுவாக இது போன்ற மின் வாகனங்களை வாங்கும்போது, கூடவே ஒரு வருடம் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்துக்கான பராமரிப்பு ஒப்பந்தமும் சேர்த்தே விற்கப்படும். பராமரிப்பு ஒப்பந்த காலம் முடிந்தவுடன், அதை ஒவ்வொரு முறையும் வாகன உரிமையாளர் புதுப்பிக்க வேண்டும்.

அப்படித் புதுப்பிக்கும்போது, வண்டிகளின் உள்ளே இயங்கும் மென்பொருள், தானியங்கி முறையில் மேம்படுத்தப்படும். புதுப்பிக்கத் தவறினால், அந்த மேம்பாடு நிகழாது. அதாவது, பராமரிப்புத் திட்டத்தைப் புதுப்பிக்காத ஒருவரது வண்டிக்கு மேம்பாட்டை வழங்காமல் இருக்கவும், புதுப்பித்த ஒருவரது வண்டிக்கு மேம்பாட்டைத் தொடர்ந்து வழங்கவும் இந்தத் தளத்தில் இருந்து தகவல் சேமிப்புத் தொகுப்புக்கு ஆணை செல்லும்.

4. நிறுவனத்தின் பகுப்பாய்வு சர்வர் – இதுதான் இத்தொழிலின் மூளை. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் சேமிப்புத் தொகுப்பில் உள்ள தகவல் மற்றும் தரவுகளைக் கொண்டு, பல்வேறு தகவலறிக்கைகளையும், முடிவுகளையும் எழுத இந்தப் பகுப்பாய்வு சர்வர்தான் உதவும்.

இதில் இந்தக் கடைசி கட்டமைப்பின் மூலம் பெறப்பட்ட தரவுகள்தாம் கவுஹாத்தி விபத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.  பொதுவாக, வாகனத்தின் இயங்கு தகவல்கள், எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்பட்ட மானிகள் மூலம், நுகர்வோரின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் பெறப்படுகிறது.

இது போன்ற தகவல் சேகரிப்பு மேல்நாடுகளில், தனிமனித உரிமை மீறல் பிரச்சினையாக எழலாம். ஆனால், இது பற்றிய பெரும் விழிப்புணர்வு இல்லாததால், நம் நாட்டில் இன்னும் இது பெரும் பிரச்சினையாக மாறவில்லை.

அடிப்படையில் இணைய மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து பெறப்படும் தகவல்களுக்கும், இது போன்ற அடிப்படைக் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்களில் பெரிய வேறுபாடு உள்ளது

ஆப்பிள், கூகிள், அமேசான் போன்ற அடிப்படைக் கருவி மற்றும் இணைய சேவை நிறுவனங்களும், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களும் தனிப்பட்ட பயனாளிகளின் அடிப்படைத் தகவல்களையும், அவர்களின் பயன்பாட்டுத் தகவல்களையும் சேகரித்து அதை வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து, இதில் முன்னோடிகளான ஆப்பிள் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள், அந்தத் ததகவல்களைச் சேகரிக்கும் உரிமையை, பயனாளிகளின் கைகளில் கொண்டுவந்து கொடுக்கும் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

ஆனால், அடிப்படையில் இணைய மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்து பெறப்படும் தகவல்களுக்கும், இது போன்ற அடிப்படைக் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்களில் பெரிய வேறுபாடு உள்ளது.

உதாரணமாக, அமேசான், கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற அடிப்படைத் தகவல் தொகுப்பு சேவை (cloud storage and service) அளிக்கும் நிறுவனங்கள், அதைப் பெரும் நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ளச் செய்துகொள்ளும், ஒப்பந்தங்களில், எந்த வகையான தகவல்களைச் சேகரிக்க முடியும், அதற்கான செலவு எப்படி வகுக்கப்படுகிறது, எந்த விதமான பயன்பாடு அறிக்கைகைகளை அளிக்க முடியும் போன்ற விஷயங்களுக்கு, தெளிவான பகுதிகள் உண்டு.

இந்த ஒப்பந்தங்களின் அடிப்படை அமைப்பும், அவற்றை நெறிப்படுத்தும் தொழில்துறை தரநிலைகளும் (industry wide standards) தெளிவாக நிறுவப்பட்டுள்ளதால் இதில் இருதரப்புக்கும் ஏற்படும் சர்ச்சைகளுக்கோ பாதிப்புக்கோ அதிக வாய்ப்பு இல்லை. இது தனிப்பட்ட பயனாளிகளுக்குப் பொருந்தும்.

இன்னொரு உதாரணமாக, விமானப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பல்வேறு ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளும் ஆணையங்களும் (DGCA, TRAI) இருக்கின்றன. இத்துறைகளில் விபத்து நேர்ந்தாலோ வேறு சர்ச்சைகள் ஏற்பட்டாலோ, அவை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தீர்க்கப்படும் என்னும் அடிப்படை நம்பகத்தன்மையை உறுதிசெய்கின்றன.

ஆனால், புதிய தலைமுறை எலக்ட்ரிக் வாகனங்களில் நுகர்வோரின் முறையான அனுமதி இல்லாமல், எந்தவித தரநிலைகளும் இல்லாமல் பெறப்படும் இத்தகவல்கள், உற்பத்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும் என்பது, தனி மனித உரிமை மீறலைவிடப் பெரும் பிரச்சினைக்குரியது. இது நுகர்வோர் மனதில் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் பெறுவதற்கும், சேமிப்பதற்கும், விதிமுறைகளும், ஒழுங்குமுறை அமைப்புகளும் இல்லை. தானியங்கித் துறை ஆராய்ச்சிக்கென, இந்தியத் தானியங்கித் துறை ஆராய்ச்சி நிறுவனம் (Automotive Research Association of India ARAI) என ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஓட்டுநர் பாதுகாப்பு, வாகனங்களின் செயல்திறன் மேம்பாடு மற்றும் தரம் சார்ந்த விஷயங்களில் ஆய்வுகளைச் செய்து அறிக்கைகளைத் தரும் ஆலோசனை நிறுவனம்தானே ஒழிய தானியங்கித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்தும் ஒழுங்குமுறை நிறுவனமன்று.

மேலும் படிக்க: குமரி முதல் காஷ்மீர்வரை ஓர் அசுர சவாரி

இது தவிர, ஒன்றிய அரசும் மாநில அரசுகளும், வாகனங்களுக்கான தனித்தனிக் கொள்கைகள் வகுத்திருந்தாலும் அவை இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுவதில்லை. மத்திய எரிசக்தித் துறையின் கீழ் இயங்கும் எரிசக்தித் திறனுக்கான பணியகம் (Bureau of Energy Efficiency – BEE) எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டுக்கும், பரவலாக்கத்துக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. ஆனால், அதுவும் இந்தப் பிரச்சினையைப் பேசுவதில்லை. கடைசியாக அரசின் முக்கிய திட்டப் பணிகளுக்கான அடிப்படை வழிமுறைகளைச் செயல்படுத்தும் நிதி ஆயோக் (NITI AYOG) இந்தத் துறைக்குப் பலவிதமான அறிவுறுத்தல்களைச் செய்கிறது. அதிலும் இந்தப் பிரச்சினை அடையாளம் காணப்படவில்லை.

உலகம் முழுவதுமே இதைப் பற்றிய விழிப்புணர்வு சற்றுக் குறைவாகவே உள்ளது. ஆனாலும், இதைப் பற்றிய விரிவான உரையாடல்களும், நடவடிக்கைகளும் அரசு மற்றும் தொழில்துறை மட்டத்திலும், அங்கே எடுக்கப்பட்டுத்தான் வருகிறது. அங்கே இதுபோன்ற தகவல் சேகரிப்பு, நேரடி வாகன உற்பத்தியாளர்கள் கைகளில் இல்லாமல், இதற்கென்ற இயங்கும் பல நிறுவனங்கள் அளிக்கும் சேவையின் வழியே நடைபெறுகிறது.

அதனால், அந்த நிறுவனங்களை நெறிப்படுத்தும் அடிப்படை நெறிமுறைகள் அங்கே ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் அதைப் பற்றிய உரையாடல்கள் இதுவரை நடைபெறாமலே இது நேரடியாக வாகனத் தயாரிப்பாளர்களின் கைகளில், இருக்கிறது.

ஏனெனில், பல்வந்த்தின் மகனுக்கு நிகழ்ந்த விபத்து மாதிரியான சந்தர்ப்பங்களில், கம்பெனி அளிக்கும் அறிக்கையை இயங்கு தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க பயனாளிக்கோ அரசுக்கோ எந்த வழியும் இல்லை. இது நிறுவனத்தின் செயல்பாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களில் இருந்தது பெறப்படும் இயங்கு தகவல்களும், தரவுகளும், வாகன உரிமையாளரின் காப்பீட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், விபத்துக்குப் பின் நுகர்வோர் பெறும் மருத்துவ சேவையைப் பாதிக்கும் அபாயமும் உள்ளது. காப்பீட்டு இழப்புகள் பெறுவதிலும், நுகர்வோருக்கு எதிராக இத்தகவல்கள் பயன்படுத்தப்படும் சாத்தியங்களும் உள்ளன.

புதிய தலைமுறை மின் வாகனங்களில் நுகர்வோரின் முறையான அனுமதி இல்லாமல், எந்தவிதத் தரநிலைகளும் இல்லாமல்  பெறப்படும் இத்தகவல்கள், உற்பத்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பது, தனி மனித உரிமை மீறலைவிடப் பெரும் பிரச்சினைக்குரியது. இது நுகர்வோர் மனதில் பல சந்தேகங்களை எழுப்புகிறது

கவுஹாத்தி விபத்தில் பாதிக்கப்பட்ட பல்வந்த் வசதியானர். வாகன பயன்பாட்டுத் தரவுகள் பற்றி அறிந்துகொண்டு, அவற்றைப் பற்றிய கேள்விகளை எழுப்பியவர். ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான இரு சக்கர வாகன உரிமையாளர்கள், அவரைப் போல் உலக அறிவும், வசதியும் இல்லாதவர்கள். இதைப் பற்றி எந்தத் தெளிவுமற்ற கடைக்கோடி மக்களுக்கு இது போல விபத்து நடந்தால், அவர்கள் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்?

அண்மையில் எலக்ட்ரிக் வாகன விபத்துகள் தொடர்பாக, ஒன்றிய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கியமான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறார். இதை அவரது அமைச்சகம் மேலும் முன்னெடுத்து, எலக்ட்ரிக் வாகனச் செயல்பாடுகளுக்கான சரியான பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும். எலக்ட்ரிக் வாகனச் செயல்பாடுகளின் இயங்கு தகவல்களைப் பெறவும், உற்பத்தியாளர், நுகர்வோர், காப்பீட்டு நிறுவனங்கள் என அனைவருக்கும் அத்தகவல்கள் வெளிப்படையாகக் கிடைக்கும் வண்ணம் ஒரு தானியங்கித் துறை ஒழுங்கு நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.

அதுவரை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் கையில் உள்ள இந்தத் தகவல்கள், உற்பத்தி நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், நுகர்வோருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. எலக்ட்ரிக் வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வாகனங்களில் ஏற்படும் இந்த விபத்துகள் பற்றிய நம்பகமான ஆய்வை மேற்கொண்டு, அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றிய ஆராய்ச்சிகளை முழுமையாகச் செய்து நுகர்வோருக்குப் பாதுகாப்பான வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த வேண்டும்.

எலக்ட்ரிக் வாகனச் செயல்பாடுகளின் இயங்கு தகவல்களை, நம்பகத் தன்மை கொண்ட ஒரு பொது நிறுவனத்திடம் ஒப்படைத்து, விபத்துகள் ஏற்படுகையில், அவை, நுகர்வோருக்கும் மற்றவர்களுக்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும்.

தானியங்கித் துறையின் வருங்காலமாகக் கருதப்படும் இந்த எலக்ட்ரிக் வாகனத் தொழில் நிறுவனங்கள், இப்பிரச்சினைகளைத் தொடக்கத்திலேயே தீர்த்துவைப்பது அனைவரின் நலனுக்கும் இன்றியமையாதது.

(கட்டுரையாளர் பிரேம் இருபது வருடங்களுக்கு மேலாக ஆட்டோமொபைல் மற்றும் விமானப் பொறியியல் துறைகளில், பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து, அவற்றின் பொறியியல் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை கணினி மயப்படுத்தும் பொறுப்பில் இருந்தவர்.)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival