Read in : English
வேலூரில் மார்ச் 26ஆம் தேதி புத்தம் புதிய ஒகினாவா மின்சார ஸ்கூட்டர் இரவு முழுவதும் மின்னேற்றம் செய்யப்பட்டதால் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த ஒரு தந்தையும் அவரது மகளும் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள். இதுசம்பந்தமாக, ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை காவல்துறை விசாரணைக்காக அழைத்திருக்கிறது. இதுமாதிரியான சம்பவம் நடந்த புனேவுக்கும் வேலூருக்கும் நிபுணர்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது.
புனே வீதிகளில் மிகவும் ஸ்டைலாக ஓலா எஸ்–1 ப்ரோ கவர்ச்சி காட்டியது; ஆனால் அது மக்கள் விரும்பும்படியான முறையில் இல்லை. எளிமையான ஒரு மின்சார இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்தக் காணொளிக் காட்சி காட்டுத் தீயாகப் பரவியது. இந்த விபத்தில் யாரும் காயப்படவில்லை. என்றாலும் வண்டி உரிமையாளர் எந்த தவறும் செய்யாத நிலையில் ஒரு மின்சார இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது என்பது பெருங்கவலையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. அதைப்பற்றிய புலனாய்வு நடந்து கொண்டிருக்கிறது. விடைகளைத் தேடிய சமூக வலைத்தளவாசிகள் மின்சார வாகனம் என்ற கருத்தியலை அதன் நம்பகத்தன்மையைக் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைமை செயல் அதிகாரியான சஹர்ஷ் தமானி, டிவிட்டரில் ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறார்: வெப்ப ஓட்டக் கோளாறு, விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.
மின்சார இரு சக்கர வாகனங்களில் கோளாறு ஏற்பட்ட நிகழ்வுகளைக் கணக்கெடுக்கும்போது இப்போது அபகீர்த்தியான இந்த ஓலா எஸ்-1 ப்ரோ தீ விபத்தும் சேர்ந்துவிடுகிறது.
வண்டிக்குள் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி சேதாரம் அடைந்தாலோ அல்லது மின் கசிவாலோ பேட்டரிக்குள் அளவுக்கு அதிகமான வெப்ப எதிர்வினை நிகழும். அப்போது வெப்பம் அளவுக்கு அதிகமாகி பேட்டரி தீப்பிடித்து எரியலாம்.
மின்சார இரு சக்கர வாகனங்களில் கோளாறு ஏற்பட்ட நிகழ்வுகளைக் கணக்கெடுக்கும்போது இப்போது அபகீர்த்தியான இந்த ஓலா எஸ்-1 ப்ரோ தீ விபத்தும் சேர்ந்துவிடுகிறது. பல வாகனங்களில் ரிவர்ஸ் கியர் சரியாக வேலை செய்வதில்லை என்றும், ரிவர்ஸ் கியரில் செல்லும்போது வேகமானி ஒருமணிக்கு 102 கிமீ என்று காட்டுகிறது என்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
ஒடிஷாவைச் சேர்ந்த மலே மோகபத்ரா தன்னுடைய ஓலா எஸ்-1 ப்ரோ வண்டியை ஓட்டும்போது தனக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்.
ஒரு சரிவில் இறங்கும்போது அவர் பார்வர்டு கியரைப் போடவில்லை. ஆனால் எஞ்சின் வேகத்தை அவர் மட்டுப்படுத்தியபோது அந்தச் சரிவில் வண்டி பின்னோக்கிச் சென்றது. சமநிலை தவறி அவர் கீழே விழுந்துவிட்டார். இதில் பயங்கரம் என்னவென்றால் பின்னோக்கிப் போகும் வண்டியின் பின்சக்கரம் மணிக்கு 102 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது.
நல்லவேளையாக, சக்கரம் சாலையின் தொடர்பில் இல்லை. அப்படி இருந்திருந்தால், வண்டி கடுமையான சேதாரத்திற்கு ஆளாகியிருந்திருக்கும். ஓர் ஓலா எஸ்-1 வாகனம் ரிவர்ஸில் செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 4 கிமீ மட்டுமே என்ற உண்மை இங்கே அடிபட்டுப் போய்விட்டது.
பார்வர்டு கியரிலிருந்து ரிவர்ஸ் கியருக்கும், ரிவர்ஸிலிருந்து பார்வர்டுக்கும் ஓலா எஸ்-1 வகையறா வண்டி மாறுவதில்லை என்று சிலர் பயனாளிகள் புகார் சொல்கிறார்கள். எஞ்சினை அணைத்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யலாம் என்று சிலர் சொல்கிறார்கள். கோளாறான ஸ்மார்ட் போனைச் சரிசெய்வது போல.
இந்த மாதிரியான நிகழ்வுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன; ஓட்டுபவர்களின் மனதைத் தெளிவில்லாமல் ஆக்கிவிடுகின்றன. ஓட்டுபவரின் மனம் கொஞ்சம்கூட எதிர்பாராத வகையில் தேவையற்ற சில சூழல்கள் ஏற்படலாம். ஒன்று நிச்சயம்: இப்படிப் பிரச்சினைகள் கொண்ட வண்டியை ஓட்டுபவர்களுக்கு அச்சம்தான் மிச்சம்.
மின்சார இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிவது என்பதே ஒரு வழக்குதான். ஏனென்றால் உயிர்ப்பலி ஆகும் சாத்தியம் கொண்டது அந்நிகழ்வு. ஆஸ்திரியாவில் நடந்த ஒரு விபத்தில் டெஸ்லா மாடல்–எஸ் ஒரு கான்கிரீட் தடையின்மீது மோதி தீப்பிடித்து எரிந்துபோனது. அந்தத் தீயை அணைப்பதற்கு ஐந்து தீயணைப்பு வண்டிகள் தேவைப்பட்டன; 35 வீரர்கள் தேவைப்பட்டார்கள்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, மின்வாகனத் தொழில்நுட்பம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் தெலங்கானா மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப்பேருந்து பணி மனையில் மின்னேற்றம் செய்யப்படும்போது தீப்பிடித்து எரிந்தது.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, மின்வாகனத் தொழில்நுட்பம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
ஆம். கோளாறுகள் நிகழ்கின்றன; அவை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் சரிசெய்யப்படுகின்றன. மின்வாகனத் தொழில்நுட்பம் இன்னும் வித்தியாசமாக வளர்த்தெடுக்கப்பட்டு பாதுகாப்பான பேட்டரிகளை உருவாக்கலாம்; அல்லது இருக்கும் பேட்டரிகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உருவாக்கலாம்.
புதைபடிம எரிசக்தி (பெட்ரோல், டீசல்) மூலம் ஓடும் வண்டிகள் தீப்பிடித்து எரியாது என்பதல்ல. உண்மையைச் சொன்னால், அவையும் எரிகின்றன. ஆனால் பெட்ரோல், டீசல் வண்டிகள் ரோஹிட் ஷெட்டி படங்களில் காண்பிப்பதுபோல தீப்பிடித்து எரிவதில்லை. அந்த வண்டிகள் தீப்பிடித்து எரிவதற்கு பிரேக்கிங் கோளாறு, எரிபொருள் கசிவு அல்லது மின்கசிவு ஆகியவையே காரணங்கள்.
உண்மையில் புதைபடிம எரிசக்தியில் ஓடும் வாகனங்கள் மின்சார இரு சக்கர வாகனங்களைவிட அதிகம் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் கொண்டவை.
தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழுவிடமிருந்தும், போக்குவரத்துப் புள்ளியியல் அமைப்பிடமிருந்தும், ரீக்கால்ஸ்.கவ் என்ற டாட்காம் இணையத் தளத்திலிருந்தும் பெற்ற தரவுகளின் அடிப்படையில் ஆட்டோ இன்சூரன்ஸ் ஈஇஜட் இணையதளம் நடத்திய ஆய்வின்படி பின்வரும் முடிவுகள் கிடைத்திருக்கின்றன:
புதைபடிம எரிசக்தி மூலம் ஓடும் 1 லட்சம் வண்டிகளில் 1,529 வண்டிகள் தீ விபத்தைச் சந்தித்திருக்கின்றன.
கலப்பின வண்டிகளில் 1 லட்சத்தில் 3,474 வண்டிகள் தீ விபத்தைச் சந்தித்திருக்கின்றன
1 லட்சம் மின்சார வண்டிகளில் 25 வண்டிகள் மட்டுமே தீ விபத்தைச் சந்தித்திருக்கின்றன
இந்த ஆய்வு மின்சாரவண்டிகள் சந்திக்கும் தீ விபத்துகள் குறைவானது என்று சொல்கிறது. ஆனால் வெளியே தெரிந்த சில தீ விபத்துகள் அதிகமான கவனத்தைப் பெற்றுவிட்டன. காரணம் இந்தத் தொழில்நுட்பம் புதியது; மேலும் மின்சார ஸ்கூட்டர்கள் பற்றிய பரபரப்பு தற்போது அதிகமாகவே இருக்கிறது.
இந்த விபத்துகள் தமிழ்நாட்டிலும், பிறபகுதிகளிலும் வளர்ந்துகொண்டிருக்கும் மின்சார வாகனச் சந்தைக்குப் பலத்த அடிகள்தான். இந்த பின்னடைவை எளிதாக மூடிமறைக்கலாம். ஆனால் மின்சார வாகன ஆர்வலர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
மின்மயப் பரிணாம் ஓங்கி ஒலிக்கும் இந்தப் புதிய காலகட்டத்தில், பேட்டரி கட்டமைப்பையும், பாதுகாப்பையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது சம்பந்தமாக கடுமையான கொள்கைகளை வடிவமைத்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
தென்மாநில அரசுகள் ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கணிசமான நிதியை ஒதுக்கி இருந்தபோதிலும், அவற்றின் கொள்கைகள் பாதுகாப்பு விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை.
ஆந்திரபிரதேசத்தின் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பாலிசி 2018-23, தெலங்கானா எலெக்ட்ரிக் வீகிக்கிள் அண்ட் எனர்ஜி ஸ்டோரேஜ் பாலிசி 2020-30, கேரளாவின் மின்சார வாகனக் கொள்கை, கர்நாடகத்தின் எலெக்ட்ரிக் வீகிக்கிள் அண்ட் எனர்ஜி ஸ்டோரேஜ் பாலிசி 2017, மேலும் தமிழ்நாட்டின் மின்சார வாகனக் கொள்கை 2019 ஆகிய அரசுக்கொள்கைகள் பாதுகாப்பு அம்சத்தைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த மாநில அரசுகள், ஆரம்பநிலை ஆதரவைத் தருவதற்கான திட்டங்களைத் தங்கள் கொள்கைகளில் தீட்டியிருக்கின்றன. பேட்டரி பாதுகாப்பை அதிகப்படுத்தக்கூடிய புத்தாகம் பல அப்போது தோன்றலாம்.
தமிழ்நாட்டின் மின்சார வாகனக் கொள்கை 2019இல், ’சிறப்பு நிபுணத்துவ மையம்’ (சென்டர் ஆ ப் எக்ஸலென்ஸ்) பிரதானமான இடம் வகிக்கிறது.
அரசு வெளியிட்ட மின்சார வாகனக் கொள்கையின் ஒருபகுதி பின்வருமாறு சொல்கிறது: ”பேட்டரி தொழில்நுட்பங்களில், பேட்டரி மேலாண்மையில், மின்சார வாகன மோட்டார்களில் சந்தை மையமான ஆராய்ச்சிகளை நடத்துவதற்கு சிறப்பு நிபுணத்துவ மையங்களை (சென்டர்ஸ் ஆ ப் எக்ஸலென்ஸ்) உருவாக்கும் நோக்கத்தோடு, மாநிலத்தில் பிரதானமான தொழில்நுட்பக் கழகங்களோடும், ஆராய்ச்சி நிறுவனங்களோடும் மாநில அரசு கூட்டுசேர்ந்துச் செயலாற்றும்.”
”மின்சாரவாகனத் தொழில்நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் பேட்டரி புதுமைப்படுத்தலை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிப் படிப்புகள் பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்,” என்று அந்தக் கொள்கை மேலும் சொல்கிறது.
2019இல் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை எற்கனவே அமலில் இருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அல்லது புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை அந்தக் கொள்கை நடைமுறையில் இருக்கும். மின்சார வாகனங்களுக்கான நவீனக் கொள்கை அறிவிக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தமிழகஅரசு தெரிவித்தது.
பேட்டரி மேலாண்மைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை புதிய கொள்கையில் அரசு அறிவித்தால், இந்த விஷயத்தில் தமிழகம் தன்மக்களுக்காக தரத்தை மேம்படுத்திவிடும்.
இந்த விபத்துகள் தமிழ்நாட்டிலும், பிறபகுதிகளிலும் வளர்ந்துகொண்டிருக்கும் மின்சார வாகனச் சந்தைக்குப் பலத்த அடிகள்தான். இந்த பின்னடைவை எளிதாக மூடிமறைக்கலாம். ஆனால் மின்சார வாகன ஆர்வலர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
புதைபடிம எரிசக்தியில் ஓடும் வாகனங்களுக்கு ஒரு மாற்று வாகனத்தை, அதாவது சுற்றுப்புறச்சூழலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இணக்கமான மாற்று வாகனத்தைக் கொண்டுவரக் காத்திருக்கும் இந்தியாவில் மின்சார வாகனங்களின் தீ விபத்து செய்திகள் பெரும் கவனத்தைப் பெற்றதில் ஆச்சரியமில்லை. இனிவரும் ஆண்டுகளில் அதிக பாதுகாப்பான, அதிசக்தி வாய்ந்த, கோளாறு வாய்ப்புகள் குறைவான, எல்லாவற்றிற்கும் மேலாக, எளிதில் தீப்பிடிக்காத மின்சார வாகனங்களை தொழில்நுட்ப முன்னேற்றம் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Read in : English