Read in : English
நீலகிரியில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரது முயற்சியால், அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்புவரை பயின்றுள்ளனர்; மாணவர்கள் இருவர் இஸ்ரோவுக்கு ராக்கெட் விடத் தயாராகி வருகின்றனர். ஆசிரியர் தினம் அன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அவர்.
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் நீலகிரியின் மலைப் பகுதிகள் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்விடமாக உள்ளது. அங்கு வசிக்கும் பழங்குடியினரின் பேச்சுகளும், நடவடிக்கைகளும் மற்றவர்களைக் காட்டிலும் வேறுபட்டது. பழமையான பண்பாட்டிலிருந்து இன்றளவும் மீளாமல் இருக்கும் பழங்குடியினருக்கு அவ்வளவு எளிதில் மருத்துவம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் கிடைப்பதில்லை.
அப்படிக் கல்வி கிடைக்காமல் இருக்கும் பழங்குடியின மக்களைத் தேடிச் சென்று உதவியுள்ளார் அவர். அத்துடன், குழந்தைத் திருமண முயற்சியைத் தடுத்து மாணவிகள் ஆறு பேரை 12ஆம் வகுப்பு வரை படிக்கவைத்துள்ளார். அவர், கோத்தகிரி பழங்குடியினப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன்.
கூடலூர் அருகே அமைந்துள்ள பந்தலூரைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டியன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சமுத்திர பாண்டியனை, தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்த்து அவரது தாய் வளர்த்துள்ளார். 12ஆம் வகுப்பு வரை பந்தலூரில் படித்த சமுத்திர பாண்டியனுக்கு ஆசியராகவே விருப்பம் இருந்துள்ளது.
12 ஆம் வகுப்பிற்குப் பிறகு ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்காததால் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தள்ளார். ஆனாலும், விடாமல் அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க சமுத்திர பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1999ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த சமுத்திர பாண்டியனுக்கு 2000ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் சமூக நலத்துறையின் கீழ் கார்குடி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணி கிடைத்துள்ளது. முதலில் ஒன்றாம் வகுப்பிற்குப் பாடம் நடத்தியுள்ளார்.
கல்வி கிடைக்காமல் இருக்கும் பழங்குடியின மக்களைத் தேடிச் சென்று உதவியுள்ளார் அவர். அத்துடன், குழந்தைத் திருமண முயற்சியைத் தடுத்து மாணவிகள் ஆறு பேரை 12ஆம் வகுப்பு வரை படிக்கவைத்துள்ளார். அவர், கோத்தகிரி பழங்குடியினப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன்
முதுமலை வனப்பகுதிக்கு அருகே இருந்த அந்த மலைக் கிராமத்தில் குறும்பர் பழங்குடியின மாணவர்கள் படித்து வந்துள்ளனர். தமிழ் வழியில் படித்துச் சென்ற சமுத்திர பாண்டியனுக்கு, அந்த மாணவர்களை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், குறும்பர் இன மாணவர்கள் அவர்களின் பழங்குடியின மொழியைப் பேசிப் பழகியுள்ளனர். சமுத்திர பாண்டியனோ தமிழ்வழியில் படித்துச் சென்றவர். இவரின் மொழி அவர்களுக்குப் புரியவில்லை, மாணவர்களின் பழங்குடியின மொழி ஆசிரியருக்குப் புரியவில்லை. மாணவர்களை எப்படிக் கையாள்வது என யோசித்த சமுத்திர பாண்டியன், மாணவர்களின் பழங்குடியின மொழியைக் கற்கத் தொடங்கினார்.
செல்லும் இடமெல்லாம் தன்னைச் சந்திக்கும் பழங்குடியின மக்களிடமிருந்து அடிப்படையான வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். பின்னர் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் பழங்குடியின மொழியில் பேசத் தொடங்கினார். அதுவரை படிப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்துவந்த மாணவர்கள், அவர்களது மொழியில் ஆசிரியர் பேசியதால், அவர் கூறுவதைக் கவனிக்கத் தொடங்கினர். பழங்குடியின மொழியைப் பேசி மாணவர்களைத் தன் பக்கம் இழுத்த சமுத்திர பாண்டியன் கல்வியைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.
மேலும் படிக்க: சப்தமின்றி சாதனை: கல்வி உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர முதல் தலைமுறை பட்டதாரிகளைக் கைதூக்கி விடும் ஆசிரியர்!
இதற்கிடையே மிகவும் அழிந்து வரும் காட்டுநாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பைப் பாதியில் நிறுத்துவதை அறிந்தார். இந்த இடைநிற்றல் குறித்த காரணத்தை அறிந்துகொள்ள முயன்றார். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பழங்குடியின மக்கள் தயங்கியுள்ளனர்.
சிறுவயதிலேயே மாணவிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அவர்களிடையே இருந்துள்ளது. அதை அறிந்த சமுத்திர பாண்டியன் நேரடியாக மலைக் கிராமத்திற்குச் சென்றுள்ளார். வேற்று மனிதர்களைப் பார்த்தாலே பயந்து குடிசைக்குள் தஞ்சம் அடைந்த காட்டுநாயக்கர் மக்களை வெளியே வரவழைத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு புறம்பானது என்பதைப் பொறுமையாக விளக்கிய சமத்திர பாண்டியன், மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.
தேன் எடுத்தல், தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்தல் போன்றவற்றில் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு தங்களால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை எனப் பழங்குடியின மக்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்டவுடன், மாணவ, மாணவிகளுக்குத் தேவையான செலவைத் தாங்களே பார்த்துக் கொள்வதாகவும், அவர்களைப் பள்ளிக்கு மட்டும் அனுப்பும்படியும் சமுத்திர பாண்டியன் கேட்டுக் கொண்டார்.
அவர்மீது நம்பிக்கை கொண்ட பழங்குடியின மக்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் மாணவ, மாணவிகளும் பள்ளிக்குத் தொடர்ந்து வரத் தொடங்கினர். காட்டுநாயக்கர் பழங்குடி இனத்தில் முதன் முதலாக ஜானு, துர்கா, மீனா, சந்தியா, சபிதா, சுபிதா உள்ளிட்ட மாணவிகள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர். அதோடு விட்டுவிடாமல், உயர்நிலை படிக்க மாணவிகளை பிதர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார். தொடர்ந்து அந்த மாணவிகளைக் கண்காணித்து பள்ளிப்படிப்பு தொடர்வதற்குத் தேவையான சீருடை, புத்தகம், நோட்டு போன்றவற்றை சமுத்திர பாண்டியன் வழங்கி வந்தார். இதனிடையே பதவி உயர்வும் பணி மாறுதலும் பெற்று கோத்தகிரி பழங்குடியின மேல்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக அவர் சென்றார்.
இன்று ஆசிரியர் தினம் என்பதால் அந்த மாணவிகளை மறக்காத சமுத்திர பாண்டியன், நண்பர்களின் உதவியுடன் மாணவிகளுக்குப் பயன்படும் ரூ.50,000 மதிப்பிலான சீருடை, நோட்டு உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்று நேரில் வழங்கினார். தற்போது அந்த மாணவிகள் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றிக் காட்டுப் பகுதியில் 5 கிலோ மீட்டர் வரை ஆபத்தான பாதையில் நடந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு வாகன வசதியைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தி கொடுத்தார். கல்வி என்பது அனைத்து அறிவையையும் சார்ந்தது என உணர்ந்த சமுத்திர பாண்டியன், பாட்டுப் பாடுவதில் திறமை பெற்ற சீதா என்ற பழங்குடியின மாணவி, பிரபலத் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பாட்டிப்போட்டியில் பங்கேற்க உதவியுள்ளார்.
இதோடு சமுத்திர பாண்டியன் நின்றிடவில்லை. அண்மையில் கொண்டாடப்பட்ட 75ஆவது விடுதலை நாளை ஒட்டி, மாணவி, மாணவிகள் உருவாக்கும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இஸ்ரோ விஞ்ஞானி சிவதானு பிள்ளை தலைமையில் தமிழகம் முழுவதும் 75 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் பயிற்சி பெறும் மாணவர்கள் இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விண்ணில் ராக்கெட் ஏவும் திட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அந்தத் தகவலை மாணவ, மாணவிகளிடம் சமுத்திர பாண்டியன் கூறியுள்ளார். இதற்காக இவரது பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஜி.ராஜன், மாணவி டி.ரேவதி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு ஆசிரியர் சமுத்திர பாண்டியன் பயிற்சி அளித்துவருகிறார்.
சமுத்திர பாண்டியனின் முயற்சியால், பத்தாம் ஆம் வகுப்பு மாணவர் ஜி. ராஜனும், மாணவி டி.ரேவதியும் இஸ்ரோவுக்கு ராக்கெட் அனுப்பும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்
காட்டுக்குள் சுற்றித் திரியும் பழங்குடியின மாணவர்களை இஸ்ரோ வரை கரம் பிடித்து அழைத்துச் செல்லும் சமுத்திர பாண்டியனின் பாதையில் சில இடர்பாடுகளும் உள்ளன. மாணவர்களுக்கு எதிர்காலத்தைக் காட்டுவதில் மிகுந்த பெருமை கொள்வதாகக் கூறும் சமுத்திர பாண்டியன், அவர்களுக்குக் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என வருத்தம் தெரிவித்தார். தான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கோத்தகிரி பழங்குடியினப் பள்ளியில் 100 மாணவர்கள் படிப்பதாகவும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பாடமெடுக்க தன்னுடன் சேர்ந்து 3 ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிவதாகவும் தெரிவித்தார்.
பழங்குடியினப் பள்ளிகள், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறும் சமுத்திர பாண்டியன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க: குரலற்றவர்களின் குரல்: முதுநிலைப் பட்டம் பெற்ற பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!
சமுத்திர பாண்டியனின் முயற்சியால் இஸ்ரோவுக்கு ராக்கெட் அனுப்பும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள 10ஆம் வகுப்பு மாணவர் ராஜன் பேசியது, “தலைமை ஆசிரியராக சமுத்திர பாண்டியன் வருவதற்கு முன்பு பள்ளியின் நிலை சரியாக இல்லாமல் இருந்தது. சார் வந்து எங்களுக்குப் படிப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இஸ்ரோ பற்றிக் கேட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால், நாங்களும் ராக்கெட் அனுப்பலாம் என்பது எங்களுக்குத் தெரியாது. சார் தான் இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பலாம் என்று கூறி எங்களை ஊக்கப்படுத்தினார். அதனால் நாங்களும் விண்ணப்பித்தோம். நாங்கள் மலைவாழ் பகுதியில் இருப்பதால் எங்களுக்கு செல்போன் சிக்னல் கூடக் கிடைக்காது.
இப்பொழுது கூட செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு வந்துதான் பேசுகிறோம். ஆகவே, ராக்கெட் அனுப்புவது குறித்த பயிற்சியில் எங்களால் பங்கேற்க முடியவில்லை. சமுத்திர பாண்டியன் சார் எங்களுக்குப் பதிலாக ராக்கெட் அனுப்புவது குறித்த ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்று, குறிப்புகள் எடுத்து வந்து எங்களுக்குக் கற்பிக்கிறார். அவரால் இஸ்ரோவின் பார்வை எங்கள் மீதும் விழுந்துள்ளது. வருங்காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு, அதற்கு முதல் படியாய் சமுத்திர பாண்டியன் சார் உள்ளார்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வருங்காலத் தலைமுறைகளை உருவாக்கும் உன்னதமான ஆசிரியர் பணியை, வாழ்நாள் சேவையாகக் கருதி வாழும் தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியனை ஆசிரியர் நாளில் வாழ்த்துவோம்.
Read in : English