Read in : English
நடுத்தர, உயர்நிலை பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றத்தின் பின்னணியில், இந்தியாவின் காற்று மின்சக்தி, சூரியவொளி மின்சக்தி ஆகியவற்றின் சாத்தியம் குறித்த விரிவான முன்மாதிரி அடிப்படையிலான ஒரு கணிப்பு வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் பெருநிலப் பரப்பில் சூரியவொளி மின்சார உற்பத்தி குறைந்துவிடும் என்றும், தமிழ்நாடு உட்பட மத்திய, தென்கிழக்கு மாநிலங்களுக்குச் சாதகமான முறையிலான காற்றின் வீச்சில் மாற்றம் ஏற்படும் என்று அந்தக் கணிப்பு சொல்கிறது.
2020ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ‘கரண்ட் சயன்ஸ்’ இதழில், டி.எஸ். ஆனந்த், தீபக் கோபாலகிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதி முகோபாத்யாய ஆகிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஓர் ஆய்வின் முக்கிய கருத்துகள் இவை: இனிவரும் நாள்களில் பெரும்பாலான இந்தியப் பெருநிலப்பரப்புகளில் சூரியவொளி ஆற்றல் குறைந்துவிடும்; தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காற்று மின்சக்திக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அரசுகளுக்கிடையிலான பருவநிலை மாற்றக் குழுவின் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைப்பில் பயன்படுத்தப்படும் நடுத்தர, உயர்நிலை பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடுகளால் உருவான பருவநிலைக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை இந்தக் கணிப்புகள்.
ஓர் ஐம்பதாண்டுக் காலவரம்பிற்குள் ஏற்பட்ட குளிர்கால, பருவகாலத்திற்கு முந்தைய, பருவகாலத்து, பருவகாலத்திற்குப் பிந்தைய வானிலை மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்பீடுகள் இவை. காற்றாலை, சூரியவொளி மின்சாரத்துக்கான இந்தக் கணிப்புகள் 55 ஆண்டுகளுக்கான வரலாற்றுப் பாவனைகளை எதிர்கால மாடல்களோடு ஒப்பீடு செய்கின்றன. வரலாற்று மதிப்பீடுகளுக்கும், எதிர்கால மதிப்பீடுகளுக்கும் இந்த ஆய்வுமுறைமை பயன்படுத்தப்படுவதால், கணிப்பு உருவாக்கத்தில் ஏற்படும் எந்தத் தவறும் கருத்தியல்ரீதியாக விலக்கப்பட்டுவிடும். இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை விலாவாரியாகப் பேசுகின்றன.
பருவநிலை மாற்றம் ஆட்டிப் படைக்கும் இந்த யுகத்தில் சாதகமான பலன்களைப் பெறும் வாய்ப்புள்ள பகுதிகளில் காற்றாலை, சூரியவொளி மின்சார உற்பத்திக்கான உட்கட்டமைப்பை உருவாக்க இந்த ஆய்வு உதவும்
“பெரும்பாலான பருவங்களில், தென்கிழக்கு இந்தியாவின் காற்று வேகம் அதிகரிக்கிறது. அதே சமயத்தில், வரலாற்றுப் பாவனைகளோடு (’ஹிஸ்டாரிக்கல் சிமுலேஷன்’ என்பது ரிஸ்கில் இருக்கும் மதிப்பை கண்டுபிடிக்க, சரித்திரத்தை மீண்டும் பாவனை செய்து ஆராயும் ஓர் ஆய்வுமுறை) ஒப்பீடு செய்யும்போது, கங்கைச் சமவெளிகளில் காற்றின் வேகம் குறைகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும், தென்பகுதியிலும், வடமேற்குப் பகுதிகளிலும் குளிர்காலத்திலும் பருவகாலங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதனால் காற்றாலை மின்சார உற்பத்திக்கான வாய்ப்பு உச்சத்தில் இருக்கும். “பருவகாலத்திற்கு முந்தைய மாதங்களைத் தவிர, வருடம் முழுவதும் வடமேற்கு இந்தியாவில் எதிர்காலத்தில் சூரியவொளி கதிரியக்கம் குறைந்து காணப்படும். அங்கேதான் சூரியவொளிப் பண்ணைகள் அதிகமாக இருக்கின்றன. எதிர்காலத்தில் அதிகமான சூரியவொளி மின்சார உற்பத்திக்கான சாத்தியம் கொண்ட பகுதிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவைதான்” என்று ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்திருக்கிறது.
மேலும் படிக்க:
சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!
இந்த ஆய்வு, நல்லவிதமாகத் திட்டமிடுவதற்குக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. பருவநிலை மாற்றம் ஆட்டிப் படைக்கும் இந்த யுகத்தில் சாதகமான பலன்களைப் பெறும் வாய்ப்புள்ள பகுதிகளில் காற்றாலை, சூரியவொளி மின்சார உற்பத்திக்கான உட்கட்டமைப்பை உருவாக்க இந்த ஆய்வு உதவும். சூரியவொளி மின்சக்தியைப் பற்றிப் பேசும் டாக்டர் முகோபாத்யாய மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள், எதிர்கால முதலீடுகளை மத்திய, தென்மத்திய இந்தியாவில் செய்வது நல்லது என்றும், அப்போதுதான் பருவகாலத்திற்கு முந்தைய காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் எழுதுகிறார்கள். அந்தப் பகுதிகளில் பெரிய அளவில் நட்டம் ஏற்பட வழியில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
“எங்களின் ஆய்வு மாவட்டங்கள் போன்ற சிறிய பகுதிகளுக்கானது அல்ல. இது பெரியதோர் ஆய்வு. சாத்தியங்களைப் பேசும் ஆய்வுதானே அன்றி அச்சத்தை ஏற்படுத்தும் ஆய்வு அல்ல”
முக்கியமான பலன்கள்
புனேயில் இருக்கும் இந்திய வெப்பமண்டல வானிலையியல் கழகத்தின் விஞ்ஞானியான டாக்டர் முகோபாத்யாய இன்மதியிடம் பகிர்ந்துகொண்ட செய்தி பின்வருமாறு: “எங்களின் ஆய்வு மாவட்டங்கள் போன்ற சிறிய அளவிலானது அல்ல. இது பெரியதோர் ஆய்வு. இது சாத்தியங்களைப் பேசும் ஆய்வுதானே அன்றி அச்சத்தை ஏற்படுத்தும் ஆய்வு அல்ல. பெரிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்போது, மாற்றத்திற்கான சாத்தியம் இருக்கும்போது, சூரியவொளி மின்கலங்களின் திறனையும், காற்றாலை மின்சக்திக் கருவிகளின் திறனையும் மேம்படுத்த ஆராய்ச்சியிலும் வளர்ச்சியிலும் தனியார் உட்பட தொடர்புடைய அனைவரும் முதலீடு செய்வதற்கான் நேரம் இதுதான்.” பாவனை முன்மாதிரிகளையும், ஆய்வின் பலமான கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தும்போது, வானிலை மாற்றத்தால் அதிக அளவிலான முதலீட்டுப் பாதிப்பு நேரிடுமோ என்னும் அச்சத்தைப் போக்கிவிட முடியும்.
மாற்றம் எப்படி நிகழ்கிறது
காற்று மின்சக்தி ஒரே நேர்கோட்டில் நிகழ்வதல்ல. ஒரு வினாடிக்கு ஐந்து மீட்டர் அளவில் காற்று வீசும்போது மின்சக்தி உற்பத்தி ஆவதில்லை. அதே வேளையில் வினாடிக்கு 13 மீட்டர் அளவில் காற்றுவீசும்போது மிக அதிகமான மின்சக்தி உற்பத்தியாகிறது. எங்கெங்கே காற்றாலை மூலம் மின்சாரம் அதிகமாக எடுக்க முடியும் என்று சில பகுதிகளை விஞ்ஞானிகள் இனங்கண்டிருக்கிறார்கள். வானத்தில் கவியும் மேகமூட்டம் சூரிய ஒளியின் வெப்பக் கதிர்வீச்சைப் பாதிக்கிறது. சூரியவொளி மின்சார உற்பத்திக்கான சாத்தியம் கொண்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு மூலம் சூரிய கதிரியக்கத்தின் நிகழ்வில் ஓர் எதிர்மறை மாற்றம் நிகழக்கூடும் என்பது தெரியவந்திருக்கிறது.
இதன் பொருள், இனிவரும் நாள்களில் சூரியவொளி மின்சார உற்பத்தி குறையலாம் என்பதுதான். இதற்குக் காரணம் மொத்த மேகக்கூட்டத்தில் ஏற்படும் அதிகரிப்பு என்று சொல்ல முடியும். இயற்கைக் காரணிகளாலும் மாசினாலும் ஏற்படும் வளிமண்டல மாசு அடுக்குகள் பற்றிக் கேட்டபோது, டாக்டர் முகோபாத்யாய, தூசுப்படலம் நிறைந்திருக்கும்போது மேகங்களின் நேரம் நீடித்திருக்கும். அதனால் பெருநிலப்பரப்பில் கிடைக்கும் சூரியவொளி கதிரியக்க நிலை பாதிக்கப்படும். இதைப் பருவநிலை மாற்றம் என்னும் பெரிய பிரச்சினையோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.
இனிவரும் நாள்களில் சூரியவொளி மின்சார உற்பத்தி குறையலாம். மொத்த மேகக்கூட்டத்தில் ஏற்படும் அதிகரிப்பே இதற்குக் காரணமாகும்
அரசுகளுக்கிடையிலான பருவநிலை மாற்றக் குழுவின் அறிக்கைகளில் அங்கம் வகிக்கும் பருவநிலை மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மாடல்கள்தான் ‘கோர்டெக்ஸ்’ என்றும், சிஎம்ஐபி5 என்றும் சிஎம்ஐபி6 என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மாடல்களைப் பயன்படுத்தித்தான் பூமியின் பல்வேறு பகுதிகளுக்கான வானிலைக் கணிப்புகள் பெறப்படுகின்றன. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 2021-22-ல் 14.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 125 சதவீதம் அதிகம். இது எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வுக் கழகம் தந்திருக்கும் தரவு. 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைவதற்கு இந்தியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 30 பில்லியன் டாலர் முதல் 40 பில்லியன் டாலர் வரை நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
Read in : English