Read in : English
மலையகத் தமிழர்கள் என உள்நாட்டில் அறியப்படும் இந்தியத் தமிழர்கள், இலங்கையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முக்கியமாகத் தோட்டத் துறையில் தொழிலாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இலங்கையில் வாழும் மக்களில் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் இழந்து வாழும் நலிவடைந்த மக்கள் என்றால் அது மலையக மக்கள்தாம்.
மலையக மக்கள் என்றால் அது தேயிலைத் தோட்டத்தில் தேயிலை உற்பத்திக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மக்களைத்தான் குறிக்கும்.அதிலும் அவர்கள் தமிழ்பேசுவோர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது ஒன்று. கிட்டத்தட்ட 500,000 பேர் தோட்டத் துறைத் தொழிலாளர்களாக உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினையால் அனைத்துப் பிரதேச அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டாலும், மலையக மக்களைத்தான் இது வெகுவாகப் பாதிக்கின்றது. பல்லாண்டு காலமாக தங்களுடைய பொருளாதார, சமூக, குடியியல், அரசியல் உரிமைகளை இழந்து வாடும் மக்களாக இவர்கள் இலங்கையில் காணப்படுகிறார்கள்.
அதே நேரம் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இந்த மலையக மக்கள்தாம். இலங்கைக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் கிட்டத்தட்ட 50 வீதத்திற்கு மேலாகப் பெற்றுக் கொடுப்பது தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தியும் அதன் வெளிநாட்டு ஏற்றுமதியும்தாம். இதைத் தவிர மலையக மக்கள் முறைசாராத் தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள்.
மலையக மக்கள் கொழும்பிலும் மத்தியப் பிரதேசங்களிலும் கடைகளில் வேலை செய்கிறார்கள். கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக வேலை வாய்ப்பு தேடி மத்திய கிழக்குக்கும் செல்கிறார்கள். அதுதவிர கொழும்பின் ஆடைத் தொழிற்சாலைகளிலும் பெருவாரியான மலையகப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
மலையகப் பிரதேசத்தில் இருக்கும் நகர்ப்புறக் கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்கிறார்கள். தேயிலைத் துறையில் உள்ள பெண்களில் 80 வீதமானவர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினையால் அனைத்துப் பிரதேச அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டாலும், மலையக மக்களைத்தான் இது வெகுவாகப் பாதிக்கின்றது
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாக மலையகத்தில் சத்துக்குறைவு 35 வீதமாகக் காணப்பட்டது. இன்றைய பொருளாதார நெருக்கடிகளால் தெற்கு ஆசியாவிலேயே சிறுவர்களின் சத்துக்குறைவு இலங்கையில் அதிகரித்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மலையகத்தில் சத்துக்குறைவானோரின் எண்ணிக்கை இப்போது கூடியிருக்கும்.
மலையகத்தின் சாலைகள் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டவை. சரியான பொதுப் போக்குவரத்து வசதி இல்லை. போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்ளவே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கால்நடையாகவே அலைய வேண்டியதிருக்கிறது.
அதே மாதிரிதான் சுகாதார வசதியும். அண்மையிலோ இலகுவில் சென்றடையக் கூடிய தூரத்திலோ வைத்தியசாலைகளோ மருந்தகங்களோ இல்லை. எனவே, கர்ப்பிணிப் பெண்கள், இதய பிரச்சினை, மாரடைப்பு ஏற்பட்டவர்கள் ஆகியோரைக் காப்பாற்றுவது என்பது மிகக் கடினம்.
தேயிலை உற்பத்தித் துறையில் வேலை செய்யும் தோட்டத்துறை மக்கள் தங்களுடைய அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தரும்படி போராட்டங்கள் நடத்தினார்கள். கடும் போராட்டத்துக்குப் பின் அந்தத் தொகையை கொடுக்கப்பட்டது ஆனால், அவர்கள் ஒரு நாளைக்குப் பறிக்க வேண்டிய கொழுந்து நிறையை அதிகரித்துவிட்டார்கள். அதாவது கொழுந்தின் நிறை 20 கிலோவாக இருக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளால் கேட்டுக்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க:
‘சீனாவின் கடன்-வலை ராஜதந்திரம்’ என்பது ஒரு மாயை
இலங்கை தேர்தல்: புது அதிபரால் மக்கள் பிரச்சினை தீருமா?
தேயிலையை உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் வழங்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்துத்தான் தேனீரை அருந்த முடிகிறது. அதே துறையில் தங்களுடைய இரத்தத்தைச் சிந்தி உழைக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகள்கூடப் பூர்த்தியாகவில்லை. அதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இப்படியாகத் தோட்டத்துறை மக்களின் உழைப்பு பல நூறு வருடங்களாகச் சுரண்டப்படுகிறது.
இலங்கையில் கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகமாக மலையகச் சமூகம் காணப்படுகின்றது இவர்களுக்கென்று தனியான எல்லா வசதி வாய்ப்புகளும் கொண்ட பாடசாலைகள் இல்லை, இருக்கும் பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. பாடசாலைகளுக்குப் போய் வருவதற்குச் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகவே, மலையகப் பிள்ளைகள் பத்தாம் வகுப்பைத் தாண்டுவதே பெரும் கேள்விக்குறி.
இலங்கையில் கல்வியில் பின்தங்கிய சமூகம் மலையகச் சமூகமே. இதனால் தான் அவர்களுக்குக் கௌரவமான ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்வதும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதும் மிகவும் சவாலாக உள்ளது. மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று சொல்லும் அரசியல் கட்சிகள் ஆண்டாண்டு காலமாகப் பல வேலைத் திட்டங்களை செய்தாலும் அரசுடன் இணைந்திருந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டாலும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் இந்த எளிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
அதேபோன்று இவர்களின் குடியிருப்புகள் இன்னமுமே லைன் குடியிருப்புகளாகவும் நீர் வசதி, மலசலக்கூட வசதி இல்லாதவையாகவுமே உள்ளன. மழை பெய்யும் வேளையில் மண் சரிவு போன்றவை வேறு பாடாய்ப்படுத்தும். இப்போதும் அது தொடர்கிறது. மழையால் மண்சரிவு ஏற்படுகிறது; பாதைகள் உடைகின்றன; வெள்ளம் சிறுவர்களை அடித்துக்கொண்டுபோகிறது.
இலங்கையில் கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகமாக மலையகச் சமூகம் காணப்படுகின்றது இவர்களுக்கென்று தனியான எல்லா வசதி வாய்ப்புகளும் கொண்ட பாடசாலைகள் இல்லை, இருக்கும் பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை
பொருளாதாரச் சுமையாலும் போதிய வருமானம் இல்லாததாலும் தொழில் வாய்ப்பு இல்லாததாலும் மலையகத்தில் பெண்கள் அதிகமான அளவில் நுண்கடன் பெறுகிறார்கள். இலங்கையில் 28 லட்சம் பேர் நுண்கடன் பெறுகிறார்கள். அதில் 84 வீதமானவர்கள் பெண்கள் அதிலும் மலையகப் பெண்கள்.
இது ஒருபுறமிருக்க, எங்கே போனாலும் மலையகத்தில் மதுபானச் சாலைகளைக் காண முடியும். மலையகத்தில் வாழும் ஆண்களில் பலர் மது போதைக்கு அடிமையானவர்கள். இதனால் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். உழைக்கும் ஊதியத்தைப் பெண்களிடம் கொடுக்காமல் அதைக் குடித்து நாசம் பண்ணுவதால் குடும்பத்துக்குப் போதுமான வருமானம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஏற்கெனவே சரியான ஊதியம் இல்லை; வேலை வாய்ப்புகள் இல்லை; கிடைக்கும் சொற்ப ஊதியத்தையும் ஆண்கள் மதுவுக்குச் செலவழிக்கிறார்கள்.
இதனால்தான் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள். மது ஆலைகளை ஒழிப்பதற்கான பல போராட்டங்களைப் பெண்கள் மேற்கொண்டார்கள். ஆனால், மது ஒழிக்கப்படவில்லை.
என்னதான் அபிவிருத்தி என்று சொல்லி அதிவேக நெடுஞ்சாலைகள், கார்பெட் வீதிகள், மேம்பாலங்கள் ஆகியவை இலங்கை முழுவதும் போடப்பட்டாலும் மலையக மக்களுக்குச் சரியான அடிப்படை வசதிகளும் தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதேபோன்று வீடமைப்புத் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம். இன்னமும் பிறப்புச் சான்றிதழ் பத்திரம், அடையாள அட்டை ஆகியவை இல்லாமல் வாழும் சமூகம் தோட்டத் தொழிலாளர் சமூகம். இவர்களில் சிலர் நவீன அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள்
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலையையே மேலே குறிப்பிட்டிருக்கிறேன். என்றால், இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையால் இவர்கள் எவ்வகையான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
தற்போது பல சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக மின்சாரத் துண்டிப்பு. மின்சாரம் சரிவரக் கிடைக்காததால் தேயிலை உற்பத்தி செய்யும் ஆலைகள் ஒழுங்காக இயங்கவில்லை; அதனால் வெளிநாட்டு, மேற்குலகத் தேவைகளுக்கான தேயிலையும் உற்பத்தியாகவில்லை. ஆகவே, தேயிலைக்கான சந்தை வாய்ப்பு நேபாளம், இந்தியா போன்ற நாடுகளுக்குப் போய்விட்டது. இது அந்நியச் செலாவணியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பாரிய பிரச்சினை. இவ்வாறு நிகழ்வதால் இதில் பாதிக்கப்படப்போவதும் மலையக மக்களே. இரண்டாவதாக, பொருளாதாரப் பிரச்சினையால் கொழும்பில் கடைகள், உணவுச் சாலைகள் மூடப்பட்டு விட்டன.
அதனால் பலர் தொழில் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தோட்டத்திலும் வேலைவாய்ப்பு இல்லை. ஏற்கெனவே மலையகத்தில் தொழில் வாய்ப்பைப் பெறுவது பெரும்பாடு. இப்போது, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் போக்குவரத்தும் வசதியும் சரிவரக் கிடைப்பதில்லை.
போக்குவரத்துப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதியின்மை கோலோச்சிய ஒரு பிரதேசத்தில் இப்போது நிலைமை எப்படியிருக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டிய தேவையில்லை. பொதுப் போக்குவரத்து, மத்தியப் போக்குவரத்து தடைபட்டதால் மலையக ஆசிரியர்களுக்கும் பாடசாலை செல்வது மிகக் கடினமாக இருக்கின்றது; கூடவே பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வது குறைந்திருக்கிறது.
முதலாவது தாய் தகப்பன்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துப் போகவும் வரவும் போக்குவரத்து வசதி இல்லை. இரண்டாவது அன்றாட உணவுக்காக அவர்கள் வேலை தேட வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், தற்போதைய விலையேற்றத்துக்கு அவர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.
ஆகவே, அவர்கள் இந்தக் குழந்தைகளைத் தங்களோடு வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள்; பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதனால், பிள்ளைகள் பாடசாலையிலிருந்து இடை நிற்கும் பிரச்சினை மீண்டும் தோன்றப் போகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்த மலையக மக்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும? ஏற்கெனவே போஷாக்கின்மை காணப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு சமூகம் மீண்டும் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறது. நுண் கடன்களைச் செலுத்தும்படி கடன் கொடுத்தவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் பல தற்கொலைகள் வேறு நடந்துள்ளது.
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடால் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனத்துக்குப் பெற்ற கடன்களைக் கட்ட முடியாமல் திண்டாடுகிறார்கள். குடும்பத்தில் முன்னைவிடப் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார்கள்?
அரசியல் கட்சிகள் என்ன மாதிரியான மாற்றுத் தீர்வை முன் வைக்கப் போகிறார்கள்? பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மலையக மக்களுக்காக இப்போது இருக்கும் இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, தமிழ் மக்களுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஊடாக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பொருள்கள் முறையாகக் கொடுக்கப்படவில்லை என்றும் சில பொருள்கள்தாம் கொடுக்கப்பட்டன என்றும் கூறுகிறார்கள். இது நான் நேரடியாக அவர்களுடன் பேசிப்பெற்ற தகவல்.
ஆகவே, இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்: அது இந்திய அரசாங்கம் என்றாலும் சரி, தமிழ்நாட்டு அரசாங்கம் என்றாலும் சரி நீங்கள் கொடுத்த பொருள்கள் சரியாகச் சென்றடைந்துள்ளனவா என்பதைக் கண்காணியுங்கள். அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் செய்த உதவி கடலில் போட்ட உப்பு போலாகிவிடும். இது எதிர்காலத்தில் நடக்கக் கூடாது.
இந்திய அரசாங்கம் என்றாலும் சரி, தமிழ்நாட்டு அரசாங்கம் என்றாலும் சரி நீங்கள் கொடுத்த பொருள்கள் சரியாகச் சென்றடைந்துள்ளனவா என்பதைக் கண்காணியுங்கள்
இன்னுமொன்றையும் அழுத்திச் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. 40 ஆண்டு கால யுத்தத்தின் போதும், கடைசி யுத்தத்திலும் அதிகமான உயிர்களை இழந்தது மலையக மக்களே. இவர்கள் எழுபதுகளில் பின் எண்பதுகளில் வன்னி பிரதேசத்தில் குடியமர்ந்த மக்கள். அதுமட்டுமல்ல; ஆயுதக் குழுக்கள் தோன்றியபின் இவர்கள் தங்களது பிள்ளைகளையும் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தனர்.
இப்போதும் வன்னியில் சென்று மக்களுடன் பேசினால் பலர் மலையக மக்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி மலையகப் பெண் என்பதை யாரும் மறக்க முடியாது, மறைக்கவும் முடியாது. அது மாத்திரமல்ல; அண்மையில் நடந்த எழுச்சிப் போராட்டத்தில்கூட மலையக மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. ஆக, இலங்கையில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் சகல அரசியல் மாற்றங்களிலும் மலையக மக்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது.
மேலே குறிப்பிட்டவாறு ஏற்கெனவே இலங்கையில் மிகவும் வறுமைப்பட்ட மக்களாக, போஷாக்கு இல்லாத மக்களாக, சரியான கல்வி, தொழில் வாய்ப்பு, குடியியல் உரிமைகள் இல்லாமல் ஒரு சமூகம் தொடர்ந்து அப்படியான நிலைமையிலே நீடித்திருக்காமல் அடிமைத்தனத்திலிருந்து வெளியில் வர வேண்டியது காலத்தின் தேவையாகும். குறிப்பாக, இலங்கைப் பொருளாதாரத்தில் ஆணிவேராக இருக்கும் ஒரு சமூகம் சுய கௌரவத்தோடு சகல உரிமைகளையும் சமமாகப் பெற்று வாழவேண்டிய ஒரு நிலைக்கு இவர்கள் வரவேண்டும் என்பதை இவர்கள் சார்பான அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உறுதிப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மலையக மக்களின் துயரம் தீரும்.
Read in : English