Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே, இறுதிச் சுற்றை நோக்கி போட்டி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆகஸ்ட் 7, நேற்று ஒன்பதாம் சுற்று நடந்து முடிந்தது. அந்தச் சுற்றின் ஆட்டங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
செஸ் ஒலிம்பியாட்டின் ஒன்பதாம் சுற்றில், இந்திய B அணி அஜர்பைஜானுடன் டிரா செய்தது, உஸ்பெகிஸ்தான் அணி ஆர்மேனியாவுக்கு எதிராக 3 – 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது ஆகியவற்றால் போட்டி உஸ்பெகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது.
7 வெற்றிகள் மற்றும் 2 டிராவுடன் (இதுவரை இந்த ஒலிம்பியாட் போட்டியில் தோல்வியே இல்லை) 16 ஆட்டப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது உஸ்பெகிஸ்தான். இந்திய A அணியும் ஆர்மேனியாவும் தலா 7 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் தலா 15 ஆட்டப் புள்ளிகளுடன் நெருங்கி நிற்கின்றன.
இந்திய A அணி, நெதர்லாந்து, அஜர்பைஜான், துருக்கி, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் தலா 14 ஆட்டப் புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன. பிரேசிலுக்கு எதிராக ஆடிய இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தரவரிசைப் பட்டியலில் மேலும் முன்னேறியது.
மகளிர் பிரிவில், போலந்து, இந்திய A அணி, ஜார்ஜியா, கஜகஸ்தான் ஆகிய அணிகள் தலா 7 வெற்றிகள், 1 தோல்வி, 1 டிரா என 15 ஆட்டப்புள்ளிகளுடன் ஒன்றுக்கொன்று கடும்போட்டியை உருவாக்கியுள்ளது. உக்ரைன், ஆர்மேனியா, அஜர்பைஜான், ஜெர்மனி, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் 14 ஆட்டப் புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளன.
மேலும் படிக்க:
ஆர்மீனியாவைத் துரத்தும் இந்தியா
இழுபறியிலும் வென்ற தான்யா, வைஷாலி
சுவிஸ் மாடலில் விளையாடப்படும் ஒலிம்பியாட் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க, முன்னணியில் இருக்கும் அணிகள், தோல்விகளுக்கு இடம் தராது மிகக் கவனமாக ஆட வேண்டியது அவசியம்.
இந்திய A அணி 3 – 1 என்ற கணக்கில் பிரேசிலைத் தோற்கடித்தது. அர்ஜுன் எரிகைசி கிரிகோர் சேவக் மெகிதாரியனையும், கிருஷ்ணன் சசிகிரண் ஆண்ட்ரே டயமன்ட்டையும் தோற்கடித்தனர். பென்டலா ஹரிகிருஷ்ணா சுபி லூயிஸ் பாலோவுடனும் , விதித் சந்தோஷ் குஜராத்தி அலெக்சாண்டர் ஃபியருடனும் டிரா செய்தனர்.
B அணி அஜர்பைஜானுடன் டிரா செய்தது. குகேஷ் ஷக்ரியார் மாமெடிரோவுடனும் நிஹல் சரின் ரவுஃப் மாமெடோவுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர். ரவ்னக் சத்வானி நிஜாத் அபாசோவிடம் தோல்வியடைந்தார். ஆனால், பிரக்ஞானந்தா வாசிஃப் துரார்பய்லியுடன் அபாரமாக ஆடி போர்டில் வென்று ஆட்டத்தை டிராவில் முடிக்க உதவினார்.
C அணி 3 – 1 என்ற கணக்கில் பராகுவேயைத் தோற்கடித்தது. எஸ்பி சேதுராமன் நியூரிஸ் டெல்கடோ ரமிரெசையும், முரளி கார்த்திகேயன் ஜோஸ் பெர்னாண்டோ கியூபாசையும், அபிமன்யு பூராணிக் ரூபன் டி ஜக்காரியாசையும் தோற்கடித்தனர். சூர்ய சேகர் கங்குலி ஆக்சல் பேக்மேனிடம் தோற்றார்.
மகளிர் பிரிவில், இந்திய A அணி போலந்திடம் 1 ½ – 2 ½ என்ற கணக்கில் தோற்றது. கோனேரு ஹம்பி அலினா காஷ்லின்ஸ்காயாவுடனும், ஹரிகா துரோணவல்லி மோனிகா சோக்கோவுடனும் டிரா செய்தனர், டானியா சச்தேவ் மரியா மலிக்காவுடன் டிரா செய்தனர். ஆர் வைஷாலி ஒலிவியா கியோல்பாசாவிடம் தோற்றார். ஒலிவியா தான் ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றிபெற்று இந்த ஒலிம்பியாட்டின் மிகச் சிறந்த ஆட்டக்காரராக, வலம் வந்துகொண்டிருக்கிறார்.
B அணி சுவிட்சர்லாந்தை 4 – 0 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஒன்பதாவது ரவுண்டில் இத்தகைய செட் கணக்கில் வெல்வது அபாரமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. வந்திகா அகர்வால் லீனா ஜார்ஜஸ்குவையும், பத்மினி ரௌட் கஜல் ஹக்கிமிஃபார்டையும், மேரி ஆன் கோம்ஸ் குண்டுலா ஹெய்னாட்சையும், திவ்யா டெஸ்முக் காமில் டி செரோக்சையும் தோற்கடித்தனர்.
C அணி 3 – 1 என்ற கணக்கில் எஸ்டோனியாவைத் தோற்கடித்தது. பிவி நந்திதா மார்கரெட் ஓல்டேவை வென்றார். சாஹிதி வர்ஷினி அனஸ்டாசியா சினிட்சினாவை வென்றார். ஈஷா கரவாடே மாய் நர்வாவுடனும், விஸ்வா வஸ்னாவாலா சோபியா ப்ளோகினுடனும் டிரா செய்தனர்.
இந்த ஒலிம்பியாடில் இதுவரை நந்திதா ஒரு தோல்வி, ஒரு டிராவுடன், 7.5 / 9 என்ற கணக்கில் அபாரமாக ஆடி இந்தியப் பெண் வீராங்கனைகளிடையே முதலிடத்தில் இருக்கிறார். நந்திதாவுடனான ஆட்டத்தில் மார்கரெட் மூன்று முறை செய்த பிழைகள் அவருடைய ஆட்டத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் நந்திதா வெள்ளை ராஜாவுக்கு ஆடினார்.
அடுத்தடுத்து நின்ற குதிரைகளை யானைகளும் அடுத்தடுத்து நின்றன, துணைக்கு ராணியும் இருந்தது. நந்திதாவும் அதற்கு ஈடு கொடுக்க கறுப்புக் குதிரையைச் சுற்றி அவரது யானைகளையும் ராணியையும் மற்றும் மந்திரியையும் வைத்து சுற்றிவளைத்தார். பல பரிசீலனையின் முடிவில், காய்கள் கழிந்தன. இறுதியில் மார்கரெட் தனது ராணியை மட்டும் வைத்திருந்தார். நந்திதாவிடம் ராணி, யானை, மந்திரி ஆகியவை இருந்தன.
ஒரு கறுப்பு சிப்பாய் ராணியாவதற்கு இரண்டு நகர்வுகள் பாக்கியென்ற நிலையில், கறுப்பு ராஜாவுக்கு செக் மேட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ராஜாவின் சிப்பாய்க்கு முட்டுக் கொடுத்தாக வேண்டிய கட்டத்தில், மார்கரெட் ராஜாவை நகற்ற, யானை சிப்பாயை வெட்டவும் ஆட்டம் முடிவடைந்துவிட்டது. மார்கரெட்டின் தவறுகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நந்திதா அவரை எளிதில் வென்றார்.
Read in : English