Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட் இறுதிச் சுற்றுகளை நோக்கிப் பரபரபாக நகர்கிறது. ஆகஸ்ட் 6, நேற்று நடைபெற்ற எட்டாம் சுற்றிலும் விறுவிறுப்பான பல ஆட்டங்களைக் காண முடிந்தது. அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்திய A அணி ஆர்மீனியாவிடம் 2 ½ -1 ½ என்ற கணக்கில் தோல்வியடைந்தது. நான்கில் மூன்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இரு அணிகளுக்கிடையே போட்டியே அநேகமாக டிராவில் முடிய வாய்ப்பிருந்த நிலையில், பெண்டாலா ஹரிகிருஷ்ணா சர்கிஸியன் கேப்ரியலிடம் தோல்வியடைந்ததால், ஆர்மீனியா வெல்லும் வாய்ப்பு உறுதியானது. அத்துடன் மட்டுமல்லாமல், அதனால் ஆர்மீனியா முன்னணி என்னும் நிலையைத் தக்கவைத்துக்கொண்டது.
விதித் சந்தோஷ் குஜராத்தி ஹ்ராந்த் மேல்கும்யானுடனும், அர்ஜுன் எரிகைசி சாம்வேல் தெர் சஹாக்யெனுடனும், எஸ்எல் நாராயணன் ராபர்ட் ஹொவ்ஹானீசியனுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
அமெரிக்க அணியுடன் மோதிய ஆட்டத்தில் இந்திய B அணி 3 – 1 என்ற கணக்கில் அபார வெற்றியடைந்தது. தர வரிசையில், மற்ற அணிகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. குகேஷ் ஃபாபியானோ கருவானாவையும், ரவ்னக் சத்வானி லெய்னர் டொமிங்க்வேஸையும் வெற்றிகொண்டனர்.
நிஹல் சரின் லெவோன் ஆரோனியனுடனும், பிரக்ஞானந்தா சோ வெஸ்லியுடனும் தமது ஆட்டங்களை ட்ரா செய்தனர்.
நேற்று நடந்த ஆட்டத்தில், ரவ்னக்கின் வெற்றி வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது. தர வரிசையில் அமெரிக்க லெய்னியரைவிட 150 புள்ளிகள் குறைந்தவர் ரவ்னக். இருந்தபோதிலும், புத்திக்கூர்மையுடன் ஆட்டத்தை நடத்தியுள்ளார்.
ஆட்டம் முழுவதும், சக்திகள் ஒன்றோடு ஒன்று குழுமின, வலுவான சோதனையைச் செய்தன, பிறகு திசைக்கு ஒன்றாக விலகிச் சென்றன. இப்படியே ஆட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. ரவ்னக் சத்வானி வெள்ளை ராஜாவுக்கு ஆடினார். கறுப்பு ராஜாவின் கோட்டையை முற்றுகையிட்டது ஒரு முக்கியக் கட்டம். செக் மேட்டைத் தவிர்க்க, ஒரு குதிரையும், குதிரைக்குத் துணையாக யானையும் குறுக்கே வந்தன. செக் மேட்டுக்காக வந்த வெள்ளை ராணி, நிராசையுடன் யானை, இரண்டு மந்திரிகளோடு வெளியேறி நடுக் களத்தில் சேர்ந்துகொண்டது. ஆட்டம் மறுபடி வெள்ளை ராஜாவை முற்றுகையிட்டது.
ஆனால், சரியான தருணம் அமையவில்லை. குதிரையைக் கொண்டு ஒரே நேரத்தில் ராணிக்கும் யானைக்கும் செக் கொடுத்தார் லெய்னியர். நாற்பதாம் நிமிடத்தில், அவசரத்தில் மேற்கொண்ட ஒரு நகர்வு, ஆபத்தாக அமைந்தது. ராணிக்கு அரணின்றிப் போனது. அதே நேரம் ராஜாவுக்கு ஆபத்தாகும் வகையில் குதிரை நின்றது. தக்க சமயமாகக் கருதி, பலங்கொண்ட மட்டும், ரவ்னக் சத்வானி தனது ராணி, யானைகளைக் கொண்டு வளைத்துவிட்டார். ஆட்டம் கை நழுவியதை உணர்ந்த லெய்னியர், தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இந்திய C அணி பெருவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. சூர்யசேகர் கங்குலி எமிலியோ கார்டோவாவிடமும், அபிஜித் குப்தா ரெனாட்டோ டெரியிடமும் தோல்வியடைந்தனர். சேதுராமன் கிறிஸ்தியன் க்ரூஸுடனும், முரளி கார்த்திகேயன் டெய்வி வேரா சிகுவேனாஸுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
மேலும் படிக்க:
இழுபறியிலும் வென்ற தான்யா, வைஷாலி
குகேஷின் தந்திரங்கள், வலையில் வீழ்ந்த கேப்ரியல்
மகளிர் பிரிவில், இந்திய A அணி பதினைந்து ஆட்டப் புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இந்தியாவுக்கு மிக நெருக்கமாக, இரண்டாம் இடத்தில் உள்ளது ஜார்ஜியா. அதன் ஆட்டப் புள்ளிகள் 14. இரண்டுக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். ஜார்ஜியாவுடனான இந்தியாவின் வெற்றி, அதன் முன்னிலைக்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
இந்திய A அணி உக்ரைனுடனான ஆட்டத்தில், நான்கு போர்டுகளிலும் ஆட்டம் டிராவானது. கொனேரு ஹம்பி மரியா முஸிசுக்குடனும், ஹரிகா த்ரோணவல்லி ஆனா முஸிசுக்குடனும், வைஷாலி ஆனா உஷேநினாவுடனும், தானியா சச்தேவ் நடாலியா புக்சாவுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
இந்திய B அணி குரோஷியாவை 3 ½ -½ என்ற கணக்கில் தோற்கடித்தது. வந்திகா அகர்வால் மிர்ஜானா மெடிக்கையும், பத்மினி ராவத் அனாமரியா ராடிகோவிக்கையும், திவ்யா தேஷ்முக் தெரேசா தேஜாநோவிக்கையும் தமது ஆட்டங்களில் வென்றனர். மேரி ஆன் கோம்ஸ் திகானா இவைநோவிகுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
இந்திய C அணி போலந்து அணியிடம் 1 – 3 என்ற கணக்கில் ஆட்டமிழந்தது. நந்திதா ஒலிவியா கியோல்பாஸாவிடமும் பிரதியுஷா பொடா மரியா மலிக்காவிடமும் தோல்வியடைந்தனர். ஈஷா கரவாதே அலீனா காஷ்லின்ஸ்கயாவுடனும் விஷ்வா வஷ்னவாளா மிகைலினா ருட்சின்ஸ்காவுடனும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
அடுத்தடுத்த சுற்றுகள் இன்னும் விறுவிறுபாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியபடி எட்டாம் சுற்று நிறைவடைந்தது.
Read in : English