Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஏழு சுற்றுகள் நிறைவுபெற்றுள்ளன.
ஆகஸ்ட் 5, நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் ஏழாம் சுற்றில் அமெரிக்காவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையேயான போட்டியில், ஆர்மீனியா அடித்து மேலேறி, முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அடுத்த இடத்தில், இந்திய அணிகள் A, B, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி, கஜகஸ்தான் ஆகியவை உள்ளன. இந்த அணிகள் ஒன்றை ஒன்று மிகவும் நெருங்கியிருக்கின்றன. எனவே, அதிலொரு இழுபறியே உள்ளது.
தவறுதலாக விட்டாலும் தவறியதுதான் என்ற வகையில், அடுத்து வரும் சுற்றுகள் சூடு பிடிக்கத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் வெற்றி, அதிரடி நாயகர்களான குகேஷ், பெண்டாலா, பிரஞ்ஞானந்தா, அதிபன், ஆகியோரின் ஆட்டங்களைப் பொறுத்தே அமையும் என்றும் அடுத்த சுற்றுகளில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்றும் தெரிகிறது.
அமெரிக்காவின் சாம் ஷாங்க்லாண்டுக்கும், ஆர்மீனியாவின் ராபர்ட் ஹொவ்ஹாநிஸ்ஸியனுக்கும் இடையேயான ஆட்டத்தில், சாம் செய்த பெரும்பிழை அவரது அணிக்கு ஆபத்தாக முடிந்தது. ஆறு மணி நேரங்கடந்த ஆட்டத்தை, சாம் டிராவில் முடிக்க முயன்றுகொண்டிருந்தார். ஒருபுறம் சாம் அவசரங்காட்ட, ராபர்ட்டோ மிகுந்த யோசனையுடன் மிகவும் மெதுவாகக் காய்களை நகர்த்தி ஆடிக்கொண்டிருந்தார். ராபர்ட் ராணியை நகர்த்தினார்.
ராணி நிறுத்திய கட்டத்தைச் சரிவரக் கவனிக்காது, ராஜாவுக்கு செக் வைத்ததாக எண்ணி சாம் ராஜாவை முன் நகர்த்திவிட்டார். ஆனால், முன் நகர்ந்தால்தான் செக். ஏனெனில், ராணி எதிர்ப்புறமிருந்தது. பிழையான இடத்தில் ராஜாவை வைப்பது இல்லீகல் மூவ் ஆகும். வேறு வழியின்றி, சாம் ராஜாவை இன்னொரு இடத்துக்கு நகர்த்தினார். கவனப்பிழையால் ஆட்டத்தை எளிதில் இழந்த அதிர்ச்சியில் சாம் சோகமாக எழுந்து சென்றார்.
ஆட்டம் இழுபறியில் முடிந்திருந்தால்கூட, அமெரிக்கா முன்னணிக்கு வந்திருக்கக்கூடும். சாமின் தோல்வியால் அமெரிக்கா, ஆர்மீனியா இடையிலான போட்டி ட்ராவில் போய் முடிந்தது. ஆட்டங்களின் புள்ளிக் கணக்கில் ஆர்மீனியா முன்னணிக்கு வந்தது.
மேலும் படிக்க:
செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்குச் சவாலாகுமா ஜார்ஜியா?
குகேஷின் தந்திரங்கள், வலையில் வீழ்ந்த கேப்ரியல்
அடுத்ததாக, இந்தியாவின் A மற்றும் C அணிகளுக்கான கடும்போட்டியில், இந்திய A அணி 3 – 1 என்ற கணக்கில் C அணியைத் தோற்கடித்தது. அர்ஜுன் எரிகைசி அபிஜித் குப்தாவையும், எஸ் எல் நாராயணன் அபிமன்யு புராணிக்கையும் தமது ஆட்டங்களில் வென்று அணியின் வெற்றிவாய்ப்பை உறுதிசெய்தனர். பெண்டாலா ஹரிகிருஷ்ணா சூர்யா சேகர் கங்குலியுடனான ஆட்டம், விதித் சந்தோஷ் குஜராத்தி எஸ்பி சேதுராமானுடனான ஆட்டம் ஆகியவை டிராவில் முடிந்தன.
இந்திய B அணி கியூபாவுடனான ஆட்டத்தில் 3 ½ – ½ என்ற கணக்கில் வெற்றிபெற்றது. குகேஷ் கார்லோஸ் டேனியேலை வென்றார். நிஹால் சரின் லூயி எர்னெஸ்டோவினை வென்றார். பிரஞ்ஞானந்தா ஈசன் ரெனால்டோவினை வென்றார். அதிபன் ஒமர் அல்மெய்தா குவிண்டானாவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
மகளிர் பிரிவில், இந்திய A அணி, அசார்பெய்ஜன் அணியை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் வென்றது. தானியா சச்தேவ் உல்வியா ஃபடாலியேவாவையும், வைஷாலி கோவ்ஹார் பெய்துள்ளயேவாவையும் தமது ஆட்டங்களில் வென்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். கொனேரு ஹம்பி, இந்த செஸ் ஒலிம்பியாட்டின், முதல் தோல்வியாக குனேய் மம்மட்ஸாடாவிடம் ஆட்டம் இழந்தார்.
ஹரிகா த்ரோணவல்லி காரிம் பாலாஜயேவாவுடனான ஆட்டத்தை ட்ரா செய்தார்.தான்யாவுக்கும் உல்வியாவுக்கும் இடையேயான போட்டியில், தான்யா டிராவிலிருந்த ஆட்டத்தைத் திறமையாக வென்றதால் A அணிக்கு வெற்றி உறுதியானது. கிட்டத்தட்ட எல்லா சக்திகளையும் இழந்து, வெறும் சிப்பாய்களை மட்டுமே கொண்டு தானியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தான்யா சிப்பாய்களை ஒன்றன்பின் ஒன்றாக, நகர்த்தி ராணியாக்க முயன்றார், ஒவ்வொரு முறை சிப்பாய் எதிரி கோட்டையை நெருங்கும்போதும் ஒரு குதிரையோ, மந்திரியோ இல்லை யானையோ இருபுறங்களிலும் காவுவாங்கப்பட்டது. இறுதியில், இருபுறங்களிலும் எஞ்சியது ராஜாவும் மும்மூன்று சிப்பாய்களும்தான்.
மகளிர் பிரிவில், இந்திய A அணி, அசார்பெய்ஜன் அணியை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் வென்றது. தானியா சச்தேவ் உல்வியா ஃபடாலியேவாவையும், வைஷாலி கோவ்ஹார் பெய்துள்ளயேவாவையும் தமது ஆட்டங்களில் வென்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்
ஆனால், தான்யாவின் ராஜா ஓரிரு நகர்வுகள் முன்னிலையில் இருந்ததால், அவரது சிப்பாய்களுக்கு ஆதரவாகவும், உல்வியாவின் சிப்பாய்களை வெட்ட ஏதுவாகவும் இருந்தது. ஆட்டம் கை மீறியதை உணர்ந்த உல்வியா தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இந்தியா B அணி கிரீஸிடம் 1 ½ – 2 ½ என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. திவ்யா தேஷ்முக் ஹரிடோமெனி மார்கன்டோநக்கியை வென்றார். மேரி ஆன் கோம்ஸ் ஏகாடேரினி பவில்டுவுடன் ஆட்டத்தை டிரா செய்தார். வந்திகா அகர்வால் ஸ்டாவ்ரூலா ட்சோலகிடவிடமும், சௌம்யா சாமிநாதன் அனஸ்டேசியா அவ்ராமிதவிடமும் தமது ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினர். இதன் மூலம் B அணியின் தங்கம் வெல்லும் வாய்ப்பிலிருந்து நழுவியுள்ளது.
இந்திய c அணி சுவிட்சர்லாந்து அணியினை 3 – 1 என்ற கணக்கில் வென்றது. ஈஷா கரவாதே, லேனா ஜார்ஜெஸ்க்கையும், நந்திதா கஜல் ஹகீமி ஃபார்டினையும் வென்று அணியின் வெற்றியினை உறுதிசெய்தனர். மேலும், பிரத்யுஷா குண்டுலா ஹெய்நாட்சிடமும், விஷ்வா லாரா ஸ்டோரியிடமும் தமது ஆட்டங்களை டிரா செய்தனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட்டின் அடுத்தடுத்த சுற்றுகள் சுவாரசியங்களையும் பரபரப்புகளையும் கொண்டிருக்கும் என்பதை நிரூபிப்பதைப் போல் ஏழாம் சுற்று நடந்துமுடிந்திருக்கிறது.
Read in : English