Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. ஐந்தாம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 2 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற ஐந்தாம் சுற்றில் இந்திய அணிகளுக்குச் சவாலாக இருக்கப்போகும் அணிகளை இனம்காண முடிந்தது. மகளிர் பிரிவில், ஜார்ஜியா அணியினரிடம் சௌம்யாவும் திவ்யாவும் தத்தம் ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினர்; வந்திகாவும் பத்மினியும் ஆட்டங்களை டிரா செய்தனர்; ஜார்ஜியாவிடம் மீண்டும் இந்திய அணி தோல்விபெற்றது.
இளம் இந்தியர்களின் அணியான B அணி ஸ்பெயினை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் தோற்கடித்தது. ஜெய்மி சாண்டோஸிடம் பிரஞானந்தா தோல்வியடைந்தாலும், பாஸ்கர் அதிபனும் குகேஷும் பெற்ற வெற்றியால் இந்திய அணி வெல்ல முடிந்தது. நிஹல் சரின் அந்தோன் குஜாரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். குகேஷிடம் தோற்ற அலெக்சை ஷிரோவ், மிகச்சிறந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் என்பதும், பாஸ்கரிடம் தோற்ற எடுவர்டோ இத்தூரி சாகா, வெனிஸுவேலாவின் முதல் கிராண்ட்மாஸ்டர், மேலும் அந்நாட்டின் நான்கு முறை தேசிய சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஸ்கர் அதிபனின் ஆட்டம் மிகப் பரபரப்பானதாக இருந்தது.
ஸ்பெயினின் இத்துரி ஜாகாவுடன் பாஸ்கர் அதிபனின் ஆட்டம் அதன் 34ஆம் நகர்வினை எட்டிய போது, மந்திரி மற்றும் குதிரைகள் கைகளில் வெற்றி தோல்வி இருப்பதை இருவரும் அறிந்துகொண்டனர். இத்தூரி தனது ராணியையும் குதிரையையும் அதிபரின் வெள்ளை ராஜாவை செக் மேட் செய்ய முற்பட்டார். அதே வேளையில், அதிபன் குதிரையும் மந்திரியையும் கொண்டு சிப்பாயை ராணியாக்க முற்பட்டார்.
தனித்தனியாகக் காரியம் சாதிக்க இடமில்லாத இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், இத்தூரி குதிரையைக் காவு கொடுத்தார், அதிபன் சிப்பாயுடன் முன்னேறினார். தோல்வியை உத்தேசித்து, ஒப்புக்கொண்டு இத்தூரி ஆட்டம் விலகினார்.
பாஸ்கர் அதிபனின் ஆட்டம் மிகப் பரபரப்பானதாக இருந்தது
ஓபன் பிரிவில், A அணி ரோமானியாவை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில், பெண்டாலா ஹரி டேனியலிடமும் நாராயணன் கான்ஸ்டாண்டின் லுபுலேசுக்கிடமும், விதித் குஜராத்தி விளாட் கிறிஸ்டியனிடமும் டிரா செய்தனர். அர்ஜுன் எரிகைசி பார்லிக்ராஸ் மிர்சியாவைத் தோற்கடித்து இழுபறிக்குச் சென்ற ஆட்டத்தை மீட்டு அணிக்கு வெற்றியை உறுதிப்படுத்தினார். பெரும் இழுபறியை ஏற்படுத்தி சவால் அளித்த ரோமானியா அணி இந்த செஸ் ஒலிம்பியாட்டில் 20 ஆம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
இத்தாலியை அதிரவிடும் இளசுகள்: விட்டுக்கொடுத்து வென்ற குகேஷ்
நாள் 1: எதிராளியைக் குழப்பி வென்ற ஹம்பி
C அணி சிலியை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் தோற்கடித்தது. முரளி கார்த்திகேயன் பப்லோ சலினாஸ் ஹெரேராவிடம் ஆட்டம் இழந்தார். மேலும் கங்குலி கிறிஸ்டோபலுடன் டிரா செய்தார். சேதுராமன் மற்றும் அபிமன்ய புராணிக் திறமையாக ஆடி முறையே இவான் மோரோவிச் மற்றும் ஹியூகோ லோபஸை வென்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
மகளிர் பிரிவில் A அணி பிரான்ஸை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் தோற்கடித்தது. ஒலிம்பியாட்டில் வரும் நாள்களின் கவனத்தை ஈர்க்கும் அணி என்ற வகையில், ஹரிகா த்ரோணவல்லி, வைஷாலி மற்றும் கோனேரூ ஹம்பி என மூன்று ஆட்டக்காரர்களும் டிரா செய்ய, தானியா சச்தேவ் திறம்பட ஆடி ஆண்ட்ரியாவைத் தோற்கடித்தார். 2399 ரேட்டிங் பெற்றுள்ள தானியா இந்த ஒலிம்பியாட்டில், இதுவரை தோல்வியடையாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஜார்ஜியாவிடம் தோல்வியடைந்த B அணியின் ஆட்டங்களில், வந்திகா அகர்வால், பத்மினி ராவத் முறையே நானா டிசங்கித்தே, நினோ பாட்ஸேஸ்வில்லி உடன் டிரா செய்தனர்; சௌம்யா ஸ்வாமிநாதன் லீலா ஜவாகிஷிவில்லியிடமும், திவ்யா தேஷ்முக் மேரி அராபிஸ்த்தேயிடமும் தோல்வியடைந்தனர்.
பிரேசிலுடன் மோதிய C அணி, டிரா செய்தது. ஈஷா கரவாதேவும் விஷ்வாவும் அவர்கள் ஆட்டங்களை டிரா செய்தனர். ப்ரதுஷா போதே ஜூலியானாவிடம் தனது ஆட்டத்தை இழந்தார்.
மேலும், நந்திதா கேத்தி கெலார்டை வென்று அணியின் ஆட்டத்தைத் தோல்வியிலிருந்து காப்பாற்றி ட்ராவுக்கு இழுத்துவந்தார். இந்த ஒலிம்பியாட்டில் நந்திதா இதுவரையான தனது ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Read in : English