Read in : English
கர்நாடகத்தில் பெய்த கனத்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து வினாடிக்கு 25,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்பு நதியின் கீழ்ப்படுகைப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருந்தால் நீர்வளம் செழுமை பெற்றிருக்கும்.
இப்போது, நீர்வரத்து அபரிமிதமாக இருந்தபோதிலும், காவிரியிலிருந்தும், பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய நதிகளிலிருந்தும்கூட நீர்வரத்து இருந்தும், நீர்வளத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள தமிழகத்தால் முடியவில்லை. மேட்டூர் அணையிலிருந்து நீர் பாய்ந்துவருவதால், வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
காலங்காலமான பொதுஜன அறிவிப்புக் கருவியான தண்டோராவை அடித்தபடி அறிவிப்பாளர்கள் தாழ்வான பகுதிகள் முழுவதும் சுற்றியலைந்து மக்களை வெளியேறச் சொல்கிறார்கள்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகிவிட்டது; அதுதான் அணையின் அதிகபட்ச மட்டம். ஆனால், மிக அவசியமான நிலையில்கூடத் தமிழகத்தால் அணையிலிருந்து 93.47 டிஎம்சி நீரை மட்டுமே பயன்பாட்டுக்கென எடுக்க முடியும். பாக்கி நீர் பயன்பாட்டுக்கு உரியதல்ல; சும்மா சேமிப்பில் இருப்பதுதான். ஆங்கிலேயர்களால் 88 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேட்டூர் அணை இப்போது 42-ஆவது தடவையாக நிரம்பிவழிகிறது.
காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்பு நதியின் கீழ்ப்படுகைப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருந்தால் நீர்வளம் செழுமை பெற்றிருக்கும்
கர்நாடகத்தில் அளவுக்கதிகமாக மழைபெய்தால் அது தமிழகத்தின் நீர் நிலைமையின்மீது என்னவொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி இன்மதி ஒரு விரிவான கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தது.
ஜூன் 30 முதல் ஸ்டான்லி அணைக்குள் வினாடிக்கு 25,000 கன அடி நீர்வரத்து இருப்பதால் இதுவோர் அபரிமிதமான நீர்வரத்து என்று மேட்டூர் அணையின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட இதே அளவு நீர் கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது என்று எல்லைப்பகுதியிலிருக்கும் பிலிகொண்டுலு அளவுமானி மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்துடனான நீர்ப்பங்கீடு விவகாரத்தில் நிறைய அரசியல் இருப்பதால், கிருஷ்ணசாகர் அணை அதிகாரிகள் இதைப் பற்றிப் பேசாமல் மெளனமாக இருக்கிறார்கள்.
2017-ல் தமிழகம் 100-க்கும் மேற்பட்ட டிஎம்சி நீரை வெளியேற்றியது என்றும் அது டெல்டா மாவட்டங்கள் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலந்தது என்றும் நீர் வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க:
தமிழகம் நீர்மிகை மாநிலமாகும் சாத்தியம் அதிகம்
மாநிலங்களின் சுயநலனில் சிக்கித் தவிக்கும் முல்லைப் பெரியார் பிரச்சினை!
நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையைப் பேரளவில் ஒழுங்குபடுத்த வேண்டும், இப்படிச் செய்யும் போது, பருவகாலத்து மழை நீர் நேரடியாகக் கடலில் சென்று கலக்கும், இதனால் கடலின் உப்புநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் மேலும் கடலார் சூழலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கோவாவில் இருக்கும் தேசிய கடல்சார் கழக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
நிலத்தடி நீரை அதிகரிக்கும் எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அதிகாரிகள் காவிரி நீரை எந்தக் கட்டுப்பாடுமின்றித் தமிழ்நாட்டின் பெரும்பகுதிக்குப் பாய விடுகிறார்கள் போலும்! இந்த ஆண்டும் 2017-ல் நிகழ்ந்தது போன்று மீண்டும் நிகழ்ந்துவிடுமோ? ஆனால், அப்படி நிகழாது என்று மேட்டூர் அணைப் பொறியியல் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஏனென்றால், இந்த ஆண்டைப் போன்ற ஓர் அசாதாரணமான ஆண்டில், மிகைநீரை ஒழுங்குபடுத்தி மற்ற சேமிப்பு நிலையங்களுக்கு மடைமாற்றம் செய்யமுடியும். ஆகவே, நாம் பெறும் மிகைநீரில் 30 சதவீதத்தை நம்மால் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Read in : English