Read in : English
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன.இரண்டாவது சுற்றின் முடிவில், மொத்தம் நடந்த 24 ஆட்டங்களில் இந்திய அணி 16-ல் வெற்றிபெற்றுள்ளது, 8-ல் ட்ரா செய்துள்ளது.இந்தச் சுற்றில், ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்திய அணியினர் மால்டோவா, எஸ்டோனியா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, லாட்வியா, சிங்கப்பூர் அணியினரை எதிர்கொண்டனர்.
இழுபறிகள் பரவலாக இருந்த இந்தச் சுற்றில் ஓபன் பிரிவில் B அணி எஸ்டோனியாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தது மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான நல்ல வெற்றியாகும். மகளிர் பிரிவு A அணியில், வைஷாலிக்கும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த காம்பஸ் மரியா ஜோசேவுக்கும் நடந்த ஆட்டம் மிக நீண்டதாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேல் இந்த ஆட்டம் நீண்டது.
ஐந்து மணி நேர நெடிய ஆட்டத்தில், சுமார் எண்பது நகர்வுகளைத் தாண்டிய நிலையில் வைஷாலி கவனத்துடன் ஆடி ஆட்டத்தில் வெற்றியை நோக்கி நகர்ந்தார். அவருக்கு எதிராக ஆடிய எதிராளியின் சிறு பிழையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார், வெற்றிபெறுவாரா மாட்டாரா என்று இழுபறியில் இருந்த ஆட்டத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு வென்றுள்ளார்.
விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று இறுதியை எட்டிப்பிடித்தது. இறுதியில் இருவரிடமும் தலா ஒரு யானையும், வைஷாலியிடம் கூடுதலாக இரு சிப்பாய்களும் மட்டுமே இருந்தன. வைஷாலியின் சிப்பாய் ராணியாக மாறுவதற்கு இரண்டு கட்டங்களே பாக்கியிருந்தன.
ஆட்டம் நீண்ட நேரம் நீடித்ததால் ஏற்பட்ட அயர்ச்சி காரணமாக, சிறு பிழைகளும், வெல்லக்கூடிய வாய்ப்புகளும்கூட இருவருக்குமாக மாறி மாறி வலம்வந்தபடி இருந்தன. முதல்முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டார் வைஷாலி. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு மீண்டும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆகவே, வைஷாலி மரியாவை வென்றார்.
வைஷாலியின் சிப்பாயை ராஜாவை வைத்தே மடக்க வேண்டிய தருணம், மரியா தவறுதலாக, யானையைக் கொண்டு மடக்க முற்பட, ஆட்டம் தன்பக்கம் திரும்பியதை உணர்ந்த வைஷாலி, அந்தச் சந்தர்ப்பத்தை லாவகமாகப் பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டார்.
இந்தியா அர்ஜென்டினா இடையே 3-1 என்ற கணக்கில் முடியவிருந்த நிலையில் வைஷாலியின் சாமர்த்தியத்தால் 31/2 -1/2 என்றாகிப் போட்டியில் வெற்றி இந்திய அணிக்கு வசமானது. இந்த ஆட்டம் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் முக்கியமானது.
Read in : English