Read in : English
தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், வேடந்தாங்கல் அருகே அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் பெற்ற சதுப்புநிலப் பகுதிகளாகப் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ராம்சார் விதிகள்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகியுள்ளன.
இதற்கு முன், தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை காடு மட்டுமே இந்தச் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருந்தது. அது சர்வதேச விதிகளின்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் சதுப்புநிலத்தைப் பாதுகாத்து, பல்லுயிரினப் பண்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ராம்சார் ஒப்பந்த விதிகள் (Ramsar Convention) உருவாக்கப்பட்டன. மத்திய கிழக்கு நாடான ஈரான், ராம்சார்நகரில், 1971 பிப்ரவரி 2 அன்று நடந்த சர்வதேச சதுப்புநிலப் பாதுகாப்பு மாநாட்டில், இதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இதை உலக அளவில், 172 நாடுகள் ஏற்று, சூழல் பாதுகாப்பை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்த விதிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சதுப்புநிலம் கொண்ட பகுதி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படும். அதைப் பாதுகாத்துப் பல்லுயிரினப் பெருக்கத்தை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்குச் சர்வதேச உதவி கிடைக்கும்.
மத்திய கிழக்கு நாடான ஈரான், ராம்சார்நகரில், 1971 பிப்ரவரி 2 அன்று நடந்த சர்வதேச சதுப்புநிலப் பாதுகாப்பு மாநாட்டில், ராம்சார் ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பட்டன. இதை உலக அளவில், 172 நாடுகள் ஏற்று, சூழல் பாதுகாப்பை நடைமுறைப்படுத்தியுள்ளன
அந்த வகையில், தமிழகத்தில் புதிதாக மூன்று சதுப்புநிலக்காடுகள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவற்றில், பிச்சாவரம், கரிக்கிலி ஆகிய பகுதியில் இயற்கை முழுமையாக அழிக்கப்படவில்லை. அவற்றை மேம்படுத்தினால் போதுமானது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்புநிலம், நகர்மயமாதலில் முற்றாக அழிவுக்குள்ளாகியுள்ளது. அதன் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அப்படிச் சுருங்கியுள்ளதில் ஒரு பகுதி, சென்னை நகரில் உற்பத்தியாகும் குப்பை குவிக்குமிடமாக மாறியுள்ளது. குப்பை குவிப்பால் சதுப்புநிலம் கொண்டிருந்த சூழல் முற்றாகச் சிதைந்துள்ளது.
இந்த நிலையில் அது, சர்வதேச முக்கியத்துவம் பெறும் வகையில், சிறப்பு அந்தஸ்து பெற்ற சதுப்புநிலப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்புநிலம், பல்லுயிரினப் பாதுகாப்புக்கு உரியதாக மேம்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழலில் இது, முறைப்படி நிறைவேறுமா என்பது கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க: பருவநிலை நடவடிக்கை-2030: நம்பிக்கைதரும் தமிழகத்தின் செயற்பாடுகள் சிங்காரச் சென்னையை உருவாக்க செய்ய வேண்டிய ஐம்பெரும் பணிகள்!
பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்திருக்கும் பெருங்குடியில் குவிந்துள்ள குப்பைக் கழிவைக் கையாளும் நடவடிக்கை எப்போது முழுமை பெறும் என்பது தெரியவில்லை. சென்னை மாநகராட்சியாக உருவானபோது, முதலில் குப்பைக்குத்தான் வரி விதிக்கப்பட்டது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரிவிதித்த நிர்வாகம், திடக் கழிவைக் கையாள்வதற்குத் தனி நிர்வாகத்துறையை இன்னும் உருவாக்கவில்லை. அது பல துறைகளில் ஒன்றாக உபரியாக நிர்வகிக்கப்படுகிறது. இதற்குத் தனித்துறை உருவாக்கி நிர்வகிக்க வேண்டியது அவசியம்.
தற்போது சென்னை நகரில் நாள்தோறும் 5,500 மெட்ரிக் டன்னுக்கு மேல் திடக்கழிவு சேருகிறது. அனைத்தும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஒட்டிய பெருங்குடியிலும், வட சென்னைப் பகுதியில் உள்ள கொடுங்கையூரிலும் கொட்டப்படுகிறது.
குப்பையிலிருந்து வெளிப்படும் கசிவுநீரைத் தனியாகச் சேமித்துச் சுத்திகரிக்க ஏற்பாடு ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உரிய கருவிகள் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, மண்ணைப் போட்டுக் குப்பையை மூடுவது போன்ற நடவடிக்கை எதுவும் இல்லை.
சென்னை நகரில் நாள்தோறும் 5,500 மெட்ரிக் டன்னுக்கு மேல் திடக்கழிவு சேருகிறது. அனைத்தும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஒட்டிய பெருங்குடியிலும், வட சென்னைப் பகுதியில் உள்ள கொடுங்கையூரிலும் கொட்டப்படுகிறது
தற்போது பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் திடக்கழிவு மேலாண்மை வளாகம் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. அங்கே பல்லுயிரின வளம் அழிந்துவருகிறது.
தொழிற்சாலைக் கழிவு, மருத்துவக் கழிவு, ரசாயனக் கழிவு, பசுமைக் கழிவு எனப் பிரித்துக் கையாள்வதற்கான நடைமுறைகள் தொடக்க நிலையில் உள்ளன. குப்பையை மறுசுழற்சி செய்யும் முறையிலும் பெரிய முன்னேற்றம் தெரியவில்லை.
மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மக்கும் குப்பையை அங்கேயே பராமரித்துப் பயன்படுத்தும் சட்ட விதிகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். மறு சுழற்சிக்கு உட்படும் பிளாஸ்டிக் பொருள்களை, உற்பத்தி செய்யும் நிறுவனங்களே திரும்பப் பெறும் நடைமுறைகள் உருவாக்கப்படவில்லை. இவற்றை ஏற்படுத்தினால்தான் குப்பை குவிவதைத் தடுக்க முடியும்.
சதுப்புநிலப் பகுதிகளுக்கு முறையாக எல்லை வகுத்து, அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து தடுத்தால், பல்லுயிர்ச் சூழல் பாதுகாக்கப்படும். அப்போதுதான் ராம்சார் சர்வதேச விதிப்படி பள்ளிக்கரணை சதுப்புநிலம், உயிரினங்களுக்கு உகந்த பகுதியாகச் சர்வதேச அளவில் உயரும்
சென்னையில் ஆவின் பால் நிறுவனம், பிளாஸ்டிக் பால் உறைகளைத் திரும்பப் பெற்று வந்தது. இது மறுசுழற்சியை மேம்படுத்துகிறது. இதற்கு உள்ளது போல் பொதுவான விதிமுறைகளை அரசு உருவாக்கி அமல்படுத்த வேண்டும்.
வீடுகளில் குப்பையை வகை பிரித்து வாங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் தற்போதுதான் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, பகுதி வாரியாக விழிப்புணர்வு நிகழ்வும், பயிற்சியும் கடந்த வாரம் நடந்தன. இது, குப்பை மேலாண்மையில் நம்பிக்கை தரும் செயல்பாடாகத் தெரிகிறது. இந்தச் செயல் பாராட்டுக்குரியது.
திடக்கழிவு தொடர்பான சட்ட விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். பொது மக்களுக்கு மட்டுமின்றிப் பெரு நிறுவனங்களிலும் இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளம் உட்படச் சில மாநிலங்களில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழக அரசும் அந்தப் பட்டியலில் இணைய தீவிரம் காட்ட வேண்டும். சதுப்புநிலப் பகுதிகளுக்கு முறையாக எல்லை வகுத்து, அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து தடுத்தால், பல்லுயிர்ச் சூழல் பாதுகாக்கப்படும். அப்போதுதான் ராம்சார் சர்வதேச விதிப்படி பள்ளிக்கரணை சதுப்புநிலம், உயிரினங்களுக்கு உகந்த பகுதியாகச் சர்வதேச அளவில் உயரும்.
Read in : English