Read in : English
சென்னையில் நீங்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் சர்வதேச சதுரங்க போட்டி தொடர்பான விளம்பரங்களைப் பார்க்கலாம். இந்தப் போட்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது?
ரஷ்யாவில் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அங்கே நடைபெறும் சூழல் இல்லை. அதனால் இந்தப் போட்டி இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளும் இந்த சதுரங்கப் போட்டியைக் கவனித்துப் பார்க்கும். ஆகவே, தமிழ்நாட்டில் இதற்குச் சிறப்புக் கவனம் கொடுக்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்), உலக சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபிடே) ஆகியவற்றுடன் இணைந்து தமிழக அரசு சிறப்பான முறையில் நடத்திவருகிறது.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று மாலையில் நடைபெற்ற கோலாகல விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்திய அணியினருக்குக் கறுப்புக் காய்களை பிரதமர் தேர்வு செய்து கொடுத்தார். ஆகவே, இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தச் சதுரங்க ஆட்டங்களில் கறுப்புக் காய்களையே பயன்படுத்துகிறார்கள்.
மேலும் படிக்க:
சதுரங்கம் ஒரு வழிகாட்டி: ‘குயின் ஆஃப் காட்வே’ உணர்த்தும் உண்மை!
பிரக்ஞானந்தா: தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதிய செஸ் சாம்பியன் உருவாகிறார்!
இந்தச் சர்வதேச சதுரங்கப் போட்டி மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்டது. கிளாசிக்கல் ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டக்காரரின் திறனைப் பொறுத்து அடுத்து எதிர்கொள்ள வேண்டிய ஆட்டக்காரர் அமர்த்தப்படுவார். அநேக நாடுகள் கலந்துகொள்வதால் காலிறுதி, அரையிறுதி போன்ற முறையில் ஆட்டங்களை நடத்த இயலாது.
ஒரு டீமில் நான்கு பேர் ஆட்டக்காரர்கள், அத்துடன் மேலும் ஒருவர் பதிலாட்டக்காரர். நாள்தோறும் மாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. வீரர்களுக்கான நேர அட்டவணையைப் பார்த்தால், ஒரு வீரருக்கு 90 நிமிடங்கள் கிடைக்கும். 40 நகர்த்துதலுக்குப் பிறகு 30 நிமிடங்கள் கிடைக்கும். அதன் பிறகு 30 விநாடிகள் கிடைக்கும்.
இந்தச் சதுரங்க போட்டியில் சீனாவும் ரஷ்யாவும் கலந்துகொள்ளவில்லை. ஆண்கள் பிரிவில் நாடுகளின் பலத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பெண்கள் பிரிவில் இந்தியா முதலிடம் எனலாம். ஆகவே, இந்தியா பதக்கங்கள் வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. ஜூலை 29 அன்று முதல் சுற்று நடைபெற்றது. இதில், ஓபன் பிரிவில் ஆண்கள் ‘ஏ’ டீமில் விதித் சந்தோஷ் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், கே. சசிகரன் ஆகிய நால்வர் விளையாடினார்கள். ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடி 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்கள்.
அதேபோல் டீம் ‘பி’யில், ரானக் சத்வானி, டி குகேஷ், நிஹால் சரின், பாஸ்கரன் அதிபன் ஆகிய நால்வரும் ஐக்கிய அரபு நாடுகள் அணிக்கெதிராக 4-0 என்னும் கணக்கில் வெற்றிபெற்றனர்.
டீம் ‘சி’, பி சேதுராமன் அபிஜிக் குப்தா, முரளி கார்த்திகேயன், அபிமன்யூ புரானிக் ஆகிய நால்வரும் தெற்கு சூடானுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வென்றனர்.
ஹம்பி ரெகுலரான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையே பெற்றவர். மேலும், ஹம்பி உலகின் முதல் பத்து சிறந்த ஆட்டக்காரரில் ஒருவர்.
பெண்கள் பிரிவில் ‘ஏ’ டீமில் கொனேரு ஹம்பி, ஆர் வைசாலி, தனியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகிய நால்வரும் தஜ்கிஸ்தான் அணிக்கு எதிராக 4-0 என்னும் கணக்கில் வெற்றிபெற்றனர். ‘பி’ டீமில் வந்திகா அஹர்வால், சௌம்யா சுவாமிநாதன், மேர் அன் கோமஸ், திவ்யா தேஷ்முக் ஆகிய நால்வருக்கு வேல்ஸ் அணிக்கெதிராக 4-0 என்ற கணக்கில் வெற்றி கிடைத்தது. ‘சி’ டீமில் இஷா கர்வாடே, பிவி நந்திதா, வர்ஷினி சஹிதி, பிரத்யுஷா போட்டா ஆகியோர் ஹாங்காங் எதிராக ஆடி 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளனர்.
ஆகவே, இன்று ஆண்கள், பெண்கள் இரு டீம்களுமே சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளன.
இன்றைய ஆட்டங்களின் மகத்தான வெற்றி என்று கொனேரு ஹம்பி பெற்ற வெற்றியைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில், அவர் மேற்கொண்ட ஆட்டம் திடீர் திருப்பத்தைக் கொண்டிருந்தது. கொனோரு ஹம்பி ஒரு கிராண்ட் மாஸ்டர். பெண்களுக்கு விமன் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உண்டு. ஆனால், ஹம்பி ரெகுலரான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையே பெற்றவர். மேலும், ஹம்பி உலகின் முதல் பத்து சிறந்த ஆட்டக்காரரில் ஒருவர்.
இவர் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கஜிகிஸ்தானைச் சேர்ந்த ஆண்டனோவா நடேஷ்தாவை எதிர்கொண்டார். ஹம்பியின் ரேட்டிங் 2586, நடேஷ்தாவின் ரேட்டிங் 1836. இந்த ரேட்டிங் என்பது சதுரங்க விளையாட்டில் ஆட்டக்காரரின் திறமையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
நடேஷ்தா திறமையாக விளையாடி அவரைவிட அதிக ரேட்டிங் கொண்ட ஹம்பியைத் தோல்வியின் விளிம்புக்கே நகர்த்தினார். அந்த நேரத்தில் ஹம்பி மேற்கொண்ட புத்திசாலித்தனமான நகர்வால் தோல்வியைத் தவிர்த்ததுடன் வெற்றியையும் பெற்றார். ஹம்பியின் குதிரைக் காய் பலியாகும் சூழலில் இருந்தபோது, அதைக் காப்பாற்ற முனையாமல் வேறொரு நகர்வை மேற்கொண்டார். அந்த நகர்வால் நடேஷ்தா குழம்பியிருப்பார் என்றே தோன்றுகிறது.
இப்படி எதிராளியைக் குழப்பி எதிர்பாராத நகர்வுகளைச் சாத்தியமாக்கி ஆட்டத்தில் வென்றிருக்கிறார் கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி. ஹம்பியின் இந்த ஆட்டம் நமது நினைவுகளில் வெகுநாள்களுக்கு நீடித்து நிற்கும். சதுரங்க விளையாட்டில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் எவ்வளவு முக்கியத்துவம் மிக்கது என்பதை இன்றைய ஹம்பிக்கும் நடேஷ்தாவுக்குமான ஆட்டம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. இப்படிப்பட்ட சுவாரசியமான பல ஆட்டங்கள் தொடர்ந்து வர இருக்கின்றன என்பதே சர்வதேச சதுரங்கப் போட்டியின் மீதான நமது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.
Read in : English