Read in : English
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மூன்று மாதங்களாகவே இலங்கைப் போராட்டம் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் பதவியை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்பதுதான் போராடும் மக்களின் ஆரம்பக்கட்ட கோரிக்கையாக இருந்தது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவோ அவர் நாட்டை ஓடிப்போனதுதான். தற்போது அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். ஆனால் அவர்க்கெதிரான கிளர்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததுதான். அவர் எங்கே சென்றாலும் அவருக்குப் பின்னே ஒலித்துக் கொண்டே செல்கின்றன அவருக்கெதிராகக் கோஷம் போடும் கும்பல்களும் வான்கிழிக்கும் புரட்சி முழக்கங்களும்.
2009—ஆம் ஆண்டு யுத்தத்தின்போது, கோத்தபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சகத்தில் செயலராகப் பணிபுரிந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடுத்த அந்த யுத்தத்தின் வெற்றிக்கு பிரதான காரணமே அவர்தான். அதனால் அவர் பெரும்பான்மை சிங்களர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.
விடுதலைப் புலிகளை அழித்து இலங்கைக்கு வெற்றியையும் அமைதியையும் கொண்டுவந்தவர்கள் ராஜபக்ச சகோதரர்கள்தான் என்று சிங்களப் பெளத்தர்கள் நம்பினார்கள். கோத்தபய ராஜபக்சவைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, அவரை 2018 ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகள் பெற்று ஜெயிக்க வைத்தது இதே சிங்களப் பெளத்தர்கள் என்ற நிஜத்தை நுண்மையாக ஆராய வேண்டும்.
அவருக்கு வாக்களித்து அரியணையில் ஏற்றிய அதே ஜனங்கள்தான் அகிம்சா வழியில் போராடி இன்று அவரைப் பதவியில் இருந்து இறக்கி ஓட விட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் சட்டத்தையும் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஊழல்களில் திளைக்கும் ஆட்சியாளர்களை இறுதியில் அலற அலற விரட்டியடித்துவிடும் மகத்தான சக்தி மக்கள் சக்தி என்பதற்கு இலங்கை நிகழ்வு ஓர் அற்புதமான உதாரணம்.
கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது, குடியேற்ற அதிகாரிகள் முதலில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால் அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு எங்கே வேண்டுமாலும் செல்லும் உரிமை உண்டு என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட பின்புதான் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரிகள் கூறினார்கள். பலநாட்களாக இழுத்தடித்த பின்பு ஜுலை 15-ஆம் தேதி அன்றுதான் நாடாளுமன்ற சபாநாயகர், கோத்தபய ராஜபக்சவின் ராஜினாமாவை உறுதி செய்தார்.
கோத்தபய ராஜபக்ச ஓடிப்போனபின்பு ரணில் விக்ரமசிங்கே அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்காலிக ஜனாதிபதி ஆகியிருக்கிறார். எனினும் அவரையும் பதவி விலகும்படி மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது, குடியேற்ற அதிகாரிகள் முதலில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால் அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு எங்கே வேண்டுமாலும் செல்லும் உரிமை உண்டு என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட பின்புதான் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டார்
புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும்வரை ஓர் இடைக்கால அரசை உருவாக்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்தார். அதே சமயம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி 30 நாட்களுக்கு மட்டுமே அவர் தற்காலிக ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வரும் ஜூலை 20-ஆம் தேதி அன்று தேர்தல் நடக்கவிருக்கிறது.
பெரும்பான்மையான சிங்களர்கள் ஏன் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக திரும்பினார்கள்? ஏனிந்த போராட்டம்? எங்கே இது ஆரம்பமானது? நுட்பமாக இதைப் பார்ப்போம்.
மேலும் படிக்க :
இலங்கையின் நிலைமை: ‘ஏதாவது ஒரு வல்லரசுக்கு இலங்கை பணிந்து போகலாம்
பசில் ராஜபக்ச: இலங்கையைக் குத்தி இரத்தமெடுக்கும் நெருஞ்சிமுள்
2021-ல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உர இறக்குமதியை நிறுத்தியதைக் கண்டித்து விவசாயிகள் போராடினார்கள். ஆனால் அது வெறும் உழைக்கும் மக்களின் பிரச்சினை என்பதால் அதிகார மையத்தில் இருப்பவர்கள் அந்தப் போராட்டத்தை அலட்சியம் செய்தனர். பின்பு பால் பவுடர் இறக்குமதியும் நிறுத்தப்பட்டது. இப்போது தாய்மார்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்குப் போதுமான உணவில்லை என்னுமொரு கொடிய நிலைமை எல்லோரையும் பாதித்தது. வீதிக்கு வந்து தாய்மார்கள் போராடினர்; கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராகக் குரலெழுப்பினர். அதன்பின் சமையல் வாயு இறக்குமதியும் நிறுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டால் மக்கள் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காகக் காத்திருந்தனர்.
அதன் விளைவாக ஆண்களும் பெண்களும் ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். புரட்சி வெடித்தது. அதன்பின் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மின்னுற்பத்தி குறைந்தது. ஒரு சங்கிலித் தொடர் விளைவாக, நாடு முழுவதும் மணிக்கணக்கான மின்தடை உருவானது, இரவில் நாடு இருட்டில் மூழ்கியது. அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தால் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை; தேசம் இருட்டில் தத்தளிக்கிறது. வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்ச குடும்பத்திற்கெதிராக உரக்கக் குரலெழுப்பி போராட ஆரம்பித்தனர்.
2021-ல் மோசமான நிர்வாகத்தாலும், சர்வாதிகார இயல்பினாலும் இலங்கை அரசு, இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டுக் கடனை அடைப்பதற்காக அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் கணிசமாக காலி செய்தது. அதிகமான கடன்களை இலங்கை சீனாவிடம் வாங்கியிருந்தது. பன்னாட்டு உலக நிதிச் சந்தைகள், ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் ஆகியவற்றிற்கு அடுத்து நான்காவதாக இலங்கைக்கு அதிகம் கடன் கொடுத்தது சீனாதான்.
சீனாவிடமிருந்து இலங்கை பல பில்லியன் டாலர்களில் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தது. ஆனால் அந்தத் தீவுத்தேசம் கடுமையானதோர் அந்நியச் செலவாணிச் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டது. அதனால்தான் வாங்கிய கடனைக் கட்டமுடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 30 நாட்களுக்கு மட்டுமே ரணில் விக்ரமசிங்கே தற்காலிக ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வரும் ஜூலை 20-ஆம் தேதி அன்று தேர்தல் நடக்கவிருக்கிறது.
2021-ல் இரண்டு பில்லியன் டாலர் கடனை அடைக்க இலங்கை அரசு அந்நியச் செலவாணி கையிருப்பைக் கரைத்தது. 2022 ஜனவரியில் 500 மில்லியன் டாலர் கடனும், ஜூனில் 1 பில்லியன் டாலர் கடனும் அடைக்க வேண்டியிருந்தன. இலங்கை கட்ட வேண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் மொத்தம் 7.3 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் 2021 நவம்பர் நிலவரப்படி, இலங்கையிடம் இருந்த அந்நியச் செலவாணிக் கையிருப்பு வெறும் 1.6 பில்லியன் டாலர் மட்டுமே.
இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதாரச் சிக்கல்களுக்கு எல்லாம் ஒரேவொரு குடும்பம் மட்டுமே காரணம் என்பதைப் பெரும்பான்மைச் சிங்களர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். நாட்டை முன்னெடுத்துச் செல்ல இனி இந்தக் குடும்பத்தால் இயலாது என்பதும் அவர்களுக்குப் புரிந்து போனது. எங்கும் ஊழல்மயம். இலங்கையின் அரசியல் அதிகாரச் சரித்திரத்தில் ராஜபக்ச குடும்பமே இனி இடம்பெறக்கூடாது என்று தீர்மானித்து விட்டனர் அந்தக் குடும்பத்தினருக்கு வாக்களித்த 69 இலட்சம் வாக்களார்களும்.
கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. அது இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் வசிக்கும் தமிழர்கள் ஆரம்பித்துவைத்த போராட்டம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தப் போரின் போதும், போருக்குப் பின்பும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் அரசின் அராஜகத்தால் காணாமல் போனவர்களின் உறவுகளும் இன்று ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.
2019 ஈஸ்டர் நாளில் பல்வேறு மாநகரங்களில் எட்டு குண்டுகள் வெடித்தன. மூன்று கிறித்துவ தேவாலயங்கள், உயர்ரக உணவகங்கள் உட்பட பல்வேறு இடங்கள் சேதமாயின. 250-க்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர்; சுமார் 500 பேர் காயம்பட்டனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்பு கோத்தபய இஸ்லாமியர்களைத் தாக்க ஏற்பாடு செய்தார். கோவிட்டின் போது இறந்த இஸ்லாமியர்களின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக அவர் எரித்தார். அதனால் இஸ்லாமியர்களின் வெறுப்பையும் கோத்தபய சம்பாதித்தார். மொத்தத்தில் ராஜபக்சவின் குடும்பத்திற்கு எதிரான போராட்டத்திற்குக் காரணம் அந்தக் குடும்பம்தான் காரணம்.
செயல் ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும். 1978-லிருந்து நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு வரம்பற்ற அதிகாரங்களை ராஜபக்ச குடும்பத்தினருக்கும் அவர்களுக்கு முந்தி ஆட்சி செய்தவர்களுக்கும் வழங்கியது இந்தப் பதவிதான்
இனி அதிகாரத்திற்கு வருபவர்களுக்கென்று மக்கள் சில கோரிக்கைகளைத் தயாராகவே வைத்திருக்கிறார்கள். அவற்றில் சில பின்வருமாறு:
செயல் ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும். 1978-லிருந்து நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு வரம்பற்ற அதிகாரங்களை ராஜபக்ச குடும்பத்தினருக்கும் அவர்களுக்கு முந்தி ஆட்சி செய்தவர்களுக்கும் வழங்கியது இந்தப் பதவிதான். காவல்துறை உட்பட நீதித்துறையினரை மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குக் கொண்டுவரும் அளவுக்கு, மக்கள் சார்பான அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பையும் அதிகாரங்களையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இறுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் மந்திரிகள், நீதி அதிகாரிகள் எல்லோரையும் மக்களை ஆளும் அதே சட்டத்திற்குக் கட்டுப்பட வைக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கும் ஓர் ஆட்சிமுறைக்கு முன்னுரிமை கொடுத்து அதை அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமர் மற்றும் மந்திரிகளையும், நீதி அதிகாரிகளையும் மக்களை ஆளும் அதே சட்டத்திற்குக் கட்டுப்பட வைத்து, மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளவர்களாக உருவாக்க வேண்டும்.
சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல், கொடுங்கோன்மை, சர்வாதிகாரம், ஊழல், அடக்குமுறை, வேண்டுதல் வேண்டாமை ஆட்சிமுறை ஆகிய ஜனநாயகமற்ற தன்மைகளோடு யாரும் ஒரு நாட்டை நீண்டகாலம் ஆள முடியாது என்பதற்கு இலங்கையில் இப்போது பற்றி எரியும் கிளர்ச்சியே ஆகக்சிறந்த உதாரணம். மக்கள் சக்தி அலையென பொங்கி எழுந்தால் சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும் அந்தப் பேரலையில் மூழ்கிக் காணாமல் போய்விடுவார்கள் என்பதைச் சரித்திரம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. ராஜபக்சக்கள் உலகில் எந்த மூலையிலும், எந்தவடிவிலும், மீண்டு(ம்) வந்தாலும் நாம் அவர்களை வீழ்த்தியாகத்தான் வேண்டும்!
Read in : English