Read in : English
இலங்கையில் முழுமையானதோர் ஆட்சிமாற்றம் களநிஜமாகிவிட்ட வேளையில் ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகிய இரண்டு கல்வியாளர்களிடமும் இன்மதி ஒரு நேர்காணல் செய்திருக்கிறது. இலங்கையில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அந்த நிகழ்வுகளை இலங்கைத் தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் பேசினார்கள்.
இன உறவுகள் என்ற விசயத்தில் உண்மை என்பதே அபூர்வமான சரக்காகிவிட்ட ஒரு தேசத்தில் அவர்கள் விடுதலைப் புலிகளையும் பற்றியும் இலங்கை அரசாட்சியைப் பற்றியும் உண்மையான, அச்சமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் என்ற அமைப்பின் உறுப்பினர்களான அவர்கள் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் நிகழக்கூடிய ஓர் இணக்கமான உறவுக்கான சாத்தியத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
நேர்காணைலில் கேட்கப்பட்ட வினாக்களும் விடைகளும் பின்வருவன:
இலங்கையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது? இந்தச் சூழலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? மக்கள் ஏன் ரணிலுக்கும் எதிராகத் திரும்பிவிட்டார்கள்?
ராஜபக்சக்கள் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று சிங்களப் பேரினவாதிகள் உட்பட எல்லோரும் ஒருகட்டத்தில் ஒன்றுசேர்ந்து விட்டார்கள். கடுமையான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. எங்கள் நாட்டின் அரசியலை அளவுக்கு அதிகமாகத் தீர்மானித்த இனம்சார்ந்த, மதம்சார்ந்த தீய சக்திகள் பொருளாதாரத்தின அடிப்படைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின. அவை இப்போது ஓரளவுக்கு ஓரங்கட்டுப் பட்டுவிட்டன. ஜனாதிபதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராளிகள் போராடிக் கொண்டிருந்த போதிலும், நாட்டின் கட்டமைப்பிலே மாற்றம் வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மேல்தட்டு அரசியல்வாதிகள் ஊழல்மிக்கவர்கள் என்றும், ஆளும் திறன் அற்றவர்கள் என்றும் வெறுப்படைந்த அடித்தட்டு மக்களிடையே உருவாகி வரும் அரசியல் பிரக்ஞையை மேலை உலகமும் இந்தியாவும் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை.
தன் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கேதான் ஆகச்சிறந்த பணையம் என்று கோத்தபய ராஜபக்ச நினைக்கிறார். இலங்கையை சீனாவிடமிருந்து விலக்கி வைப்பதற்கு ரணில்தான் நல்லதொரு பணையம் என்று மேலை உலகமும் இந்தியாவும் நினைக்கின்றன. ஆனால் இலங்கை மக்கள், மேட்டுக்குடிகளின் நலனை மட்டுமே சார்ந்த ஓர் அரசியல்வாதியென்று ரணிலை நிராகரித்து விட்டார்கள்.
இலங்கைத் தமிழர் போராட்டத்தின் அழிவுத்தன்மையையும், தற்கொலைக்கு ஒப்பான போக்கையும் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளாமல் அந்தப் போராட்டத்தை தமிழ்நாட்டில் மிகையாகச் சித்தரிப்பதும், புகழ்பாடுவதும் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யும் உபத்திரவம்தான்
சுருக்கமாகச் சொன்னால், கடந்த 50-க்கும் மேலான ஆண்டுகளாக உருவான சட்ட ஒழுங்கின்மை, மக்களைத் திருப்திப் படுத்திய வெளிநாட்டு வருமானம் என்ற திரையை கிழித்தெறிந்துவிட்டது. கடந்த 20 அல்லது அதற்கும் மேலான வருடங்களில், ரூபாய்க்கு எதிரான அமெரிக்காவின் டாலர் மதிப்பு ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற கணக்கில் சரிந்துபோனது. சம்பாதிக்கும் மக்களைப் பாதுகாக்க முதியோர்களிடமும், பணிஓய்வு பெற்றவர்களிடம் பிடுங்கும் ஒரு மிதமான திருட்டு இது. ஆனால் இன்று விலைவாசிகள் திடீரென்று ஒரே நாளில் 100 சதவீதம் ஏறிவிட்டன. இதுவரை கண்ணுக்குப் புலனாகாமல் இருந்த மிதமான ஊழல்களை அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.
செல்வாக்கானவர்களும் வேண்டியவர்களும் வரிச் சலுகைகள் அனுபவித்தார்கள். அவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது; கரோனாவும், உக்ரையின் போரும் ஆகப்பெரும் பாதிப்புகளை உருவாக்கின. இவற்றால் மொத்தத்தில் இலங்கை பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டது.
மேட்டுக்குடிகளின் காவலனாக ரணில் பார்க்கப்பட்டார். ஆனால் இந்தப் படிமத்திற்கு இணையாக அவரது செயற்பாடுகள் இல்லை. 1970-களில் எம்பியாக இருந்த ரணில் களனியில் சிரில் மாத்தேயூவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர் என்று சொல்லப்பட்ட கோனவாலா சுனில் போன்ற ரெளடிகளைக் கையாண்டவர். 1987-1990 காலகட்டத்தில் நிகழ்ந்த ஜேவிபி தீவிரவாத கலகத்தின்போது அரசு எடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் அவர் பெரும்பங்கு வகித்தார்.
அவரது சாதனைகள் என்பது பெரும்பாலும் அவரது அல்லக்கைகள் பத்திரிக்கைகளில் அவரை வீரன் என்றும் சூரன் என்றும் புகழ்பாடிய எழுத்துக்கள்தான். அவற்றில் ஒரு சரக்கும் இல்லை. அவரது அரசும் சரி, அவரது எதிரிகளின் அரசும் சரி, அவை ஒடுக்குமுறைகளில் ஆகச்சிறந்தவை. ரணில் பிரச்சினைக்குத் தீர்வல்ல; பிரச்சினையின் ஓரங்கம் அவர்.
காட்டுமிராண்டித்தனமான அமைப்புதான் இருக்கப்போகிறதா? ஒழுங்கும் சமச்சீர்வும் உருவாகுமா? போராளிகள் என்னதான் கேட்கிறார்கள்?
காட்டுமிராண்டித்தனமான அமைப்பு உருவாவதைத் தவிர்க்கவே போராளிகள் விரும்புகிறார்கள். வெளிப்புறச் சக்திகள் மக்கள் நலன் என்ற பேரில் நாட்டைக் கைப்பற்றும் விதத்தில் செயல்படக்கூடாது என்பதில் போராட்டக்காரர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதீதமான அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி என்ற அரசியல் கட்டமைப்பை நீக்கிவிட்டு சமூகநலன் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். ஐஎம்எஃப் பற்றி மக்களுக்கு அவநம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஐஎம்எஃப் –தான் இரட்சகன் என்று மேட்டுக்குடி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கோத்தபய ராஜபக்ச அரசு இந்தச் சிக்கலை எதிர்பார்க்கவும், அதைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கவும் தவறிவிட்டதால் ஏற்பட்ட பெரிய நெருக்கடி இது. இப்போது சில வழிகள் மட்டுமே இருக்கின்றன.
இப்போது அதிகாரம் குவிந்திருப்பது எஸ்எல்பிபி, யூஎன்பி, எஸ்ஜேபி, ஜேவிபி ஆகிய கட்சிகளில்தான். இவையெல்லாம் ஆதியிலிருந்த சிலோன் தேசிய காங்கிரஸ், 1940-களின் இடதுசாரி இயக்கமான எல்எஸ்எஸ்பி ஆகிய கட்சிகளிலிருந்து பிரிந்துவந்தவைதான். பாராளுமன்றத்தில் இருப்பதனால் இந்தக் கட்சிகள் பேசிக் கொள்கின்றன. அதனால்தான் நாட்டில் நடந்த நாடகப்பாணியிலான வன்முறை மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. மேலும் பாதுகாப்புப் படைகள் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
காட்டுமிராண்டித்தனமான அமைப்பு உருவாகும் சாத்தியத்தைத் தவிர்ப்பதில் பாராளுமன்றம் கவனமாக இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம்.
மேலும் படிக்க: இலங்கை, எரிசக்தி, அதானி, மோடி: வெடிக்கும் ஓர் அரசியல் பிழைச் சர்ச்சை பசில் ராஜபக்ச: இலங்கையைக் குத்தி இரத்தமெடுக்கும் நெருஞ்சிமுள்
ஐஎம்எஃப் கடன்கள் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்பட்டிருக்கும். ஆனால் ஐஎம்எஃப் சொன்ன நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதால் அந்தக் கடன்கள் கிடைக்கவில்லை. இப்போது நிலைமையைச் சீராக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?
ஐஎம்எஃப்-ஐ சமாளிக்கும் திறனோடு ஒரு புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். ஆம். சாமான்ய மக்கள்மீது பாரத்தை ஏற்றும் முழுமையான சீர்திருத்தங்களை ஐஎம்எஃப் திணிக்காதவாறு பார்த்துக்கொள்ளும் ஒரு திட்டத்தோடு புதிய அரசு ஐஎம்எஃப்-புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஒரு நல்ல உடன்படிக்கையை ஐஎம்எஃப்-புடன் மேற்கொள்வதற்கான உந்துசக்தியை ஜனங்களின் போராட்டங்களும், திரட்சியும் கொடுக்கும்.
இது வெறும் பொருளாதார வீழ்ச்சியா? இல்லை, நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பேரினவாதத்தைப் பற்றிய ஒரு மறுபார்வையா? மகிந்தாவின் மனித உரிமை மீறல்கள் இப்போதைய போராட்டங்களில் கேள்விக்குள்ளாக்கப் பட்டனவா?
சிங்களப் பேரினவாதம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் ஒரு பெரிய காரணிதான். ஏனென்றால் பெரும்பான்மை சிங்களர்களும், மேட்டுக்குடித் தமிழர்களும்தான் பிளாண்டேஷன் மாடல் பொருளாதார அமைப்புக்கு காரணம். பண்ணைகளில் வேலைசெய்யும் தமிழர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு சிங்கள மேட்டுக்குடியினரின் ஆதரவும், அவர்களின் அடிவருடிகளான தமிழர்களின் ஆதரவும் தேவைப்பட்டன. உள்நாட்டுக் கலகத்தில் வர்ஜீனியா காலனியின் அடிமைப் பொருளாதார அமைப்பு, அமெரிக்கர்கள் தூக்கியெறிந்து வீசும் அளவுக்கு மிகவும் பலகீனமாக இருந்தது. அடக்கு முறையில் வலிந்து திணிக்கப்பட்ட பொருளாதார அமைப்பு அது.
செயல் தீவிரம் கொண்ட கருப்பர்களுக்கு அது தப்பிக்கும் வழியைத் தருவதில்லை. அங்கே இன்னும் அந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால் வழிகள் திறந்து கிடக்கின்றன.
இலங்கையின் இப்போதைய நிலைமை எந்தத் திசையில் செல்லும் என்பது கணிப்பது சிரமம். ஆனால் உலகத்திலுள்ள எதேச்சதிகார நாடுகளும், பிராந்திய தேசங்களும் தங்களின் சுயநலத்திற்காக இலங்கைச் சிக்கலை துஷ்பிரயோகம் செய்து இலங்கை மக்களை நாசமாக்காதப் பட்சத்தில், இலங்கையின் எல்லா இனமக்களும் ஒன்றுபட்டு நல்லதொரு எதிர்காலத்திற்காக கடுமையாக உழைப்பதற்கான சாத்தியம் நிஜமாகவே இருக்கிறது. கடந்துசெல்ல தடைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் நிஜமானதோர் அரசியல் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது: என்னவிதமான ஜனநாயகம் வேண்டும்? யார் நம் தலைவர்கள்? அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான கலாச்சாரச் சீரழிவைத் தடுக்கும்வண்ணம் எந்தவிதமான பொறுப்பானதொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்?
பெரும்பான்மை இனத்தவர்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து செயற்பட்டு தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் இலங்கையில் வாழும் தமிழர்கள்
இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது அரசியல் விவாதங்கள். இதுவொரு நல்ல அறிகுறி. ஆனல் இது முதிர்ச்சி அடைய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. ஆனால் இப்போது பிணித்திருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வெளியுதவி தேவை. தெளிவோடும் மன உறுதியோடும் பிராந்திய மற்றும் பன்னாட்டு முகமைகளோடு உறவாடுவதற்கான முதிர்ச்சியும் மனப்பான்மையும் இப்போது இலங்கையில் உருவாகிக் கொண்டிருக்கும் தலைமைக்கு இருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இப்போதைய போராட்டம் தற்காலிகமானது அல்ல என்பதில் போராளிகள் தெளிவாகவே இருக்கிறார்கள்.தங்கள் தலைவர்களைத் தொடர்ந்துக் கண்காணித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் இருக்கிறார்கள்.
ஓரளவுக்கு அவர்கள் கட்டுப்படுத்தலாம். ஆனால் மேட்டுக்குடி மக்கள் இந்த அடிமட்டத்து மக்களின் கோரிக்கையைப் பொறுத்துக் கொள்வார்களா? நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு எவ்வளவு உத்வேகம் இருக்கிறது இந்தப் போராட்ட இயக்கங்களுக்கு? இந்த வினாக்களுக்கு விடை சொல்வது சிரமம்.
ஒரு முக்கியமான விசயம் விவாதிக்கப்படவே இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் அசிரத்தையான மனப்பான்மைதான் அது. ஏனிந்த இந்த அலட்சியம்? அவர்கள் நிலைமை நன்றாக இருக்கிறதா?
இல்லை. அவர்கள் நிலைமையும் நன்றாக இல்லை. அவர்களும் நடந்து முடிந்த ஒரு யுத்தத்திலிருந்து இப்போதுதான் மீண்டு எழுந்து கொண்டிருக்கிறார்கள். அந்த யுத்தம் முடிந்த பின்பு சிங்களப் பேரினவாதத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதையும், வடக்கிலும் தெற்கிலும் நிலங்கள் காலனிமயமாக்கப் பட்டதையும், பொதுவெளியில் தமிழ் பெயர்களும் பலகைகளும் அகற்றப்பட்டதையும் இலங்கைத் தமிழர்கள் பார்த்துவிட்டனர்.
நீதித்துறையும் சித்தாந்த ரீதியாக கிட்டத்தட்ட சிங்களமயமாகி விட்டது. இந்தச் சிங்களமயமான சூழலில் தாங்கள் விரும்பத்தகாத வெறும் தொல்லைதான் என்பது போன்ற உணர்வு இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. 1990-ல் ஜனாதிபதி பிரேமதாசா சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சமமரியாதை அளிக்கும் கொள்கையை வகுத்தார். ஆனால் 2020-க்குள் அந்தச் சலுகை ஒழிந்துவிட்டது போலத் தெரிகிறது.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இன்றைய போராளிகள் இனரீதியிலான சமநீதியையும், சமத்துவமின்மைகளை ஒழிக்கும் சமூகத்தையும் பற்றிப் பேசுகிறார்கள். மாறாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஓர் அவநம்பிக்கை நிலவுகிறது. அது ஆரோக்கியமானதல்ல. சிங்களப் பேரினவாதமும் சரி, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் தேசியமும் சரி, அவை கடந்து வந்த கடந்தகால பாதைகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குச் சொல்லவொண்ணா துயரம் தந்த இறந்தகாலத்தை அந்தச் சித்தாந்தங்கள் மீள்பார்வை செய்ய வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தின் அழிவுத்தன்மையையும், தற்கொலைக்கு ஒப்பான போக்கையும் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளாமல் அந்தப் போராட்டத்தை தமிழ்நாட்டில் மிகையாகச் சித்தரிப்பதும், புகழ்பாடுவதும் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யும் உபத்திரவம்தான். பெரும்பான்மை இனத்தவர்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து செயற்பட்டு தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் இலங்கையில் வாழும் தமிழர்கள்.
ராஜபக்சகளுக்கு எதிரான இந்த எழுச்சியில், ஆளும் சிங்களவர்க்கத்தின் மீதான நாடுமுழுக்க எழுந்த அவநம்பிக்கை அலையில், தமிழர்களுக்கு நேர்ந்தவற்றைப் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டதா? தேசிய ஒத்திசைவு பற்றி பேச்சு எழுந்திருக்கிறதா? இல்லை, இரண்டு இனங்களும் இன்னும் தங்களை இரண்டு தேசங்களாகத்தான் பார்க்கின்றதா?
ராஜபக்சக்களின் ஆட்சியில் இரண்டு இனங்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்குப் பாதிகாரணம், விடுதலைப் புலிகள் ஒழித்த ஏராளமான தமிழர்களின் மனித உரிமைகளைத் தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளாமல் இருந்ததுதான். விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ராஜினி திராணகமவின் நினைவு நாளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுசரிப்பது இன்னும் சிரமமாகத்தான் இருக்கிறது. வாஸ்தவம்தான். சிங்கள இராணுவமும் அரசும் தமிழர்கள் பலரைக் கொன்றன.
விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ராஜினி திராணகமவின் நினைவு நாளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுசரிப்பது இன்னும் சிரமமாகத்தான் இருக்கிறது
பலரைக் காணாமல் போகச் செய்திருக்கின்றன. ஆனால் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் தர்மசங்கடத்துடன்தான் தமிழர் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். 2018-ல் ஜூட் ரத்னம் எடுத்த ’சொர்க்கத்தில் அசுரர்கள்’ (டெமன்ஸ் இன் பாரடைஸ்) என்ற திரைப்படம் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பேசியது. ஆனால் அது யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அதிகார வர்க்கம்தான் அதைத் தடை செய்தது. அந்தப் போராட்டம் இன்னும் அந்தப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விதமான பிரச்சினைகள் தீரும்வரை சிங்களப் பேரினவாதம் எளிதாக வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்.
பொருளாதாரம் சீர்படுவதற்காக, இலங்கை முன்பு நடந்தவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுமா? சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
கடந்த காலத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டுமானால், தமிழர்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆரக்லயா (போராட்டம்) நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. அதனுடன் இணைந்து தமிழர்கள் செயல்பட வேண்டிய நேரம் இது; இல்லாவிட்டால் அவர்கள் தங்களையே ஓரங்கட்டிக் கொள்ளலாம். ராஜபக்சக்களின் அரசாட்சியின் இறுதிக் காலகட்டத்தில் இதுதான் நடந்தது. அப்போது தமிழ்க் கல்வியாளார்கள் இரட்டை வேசம் போட்டனர். ஒருபுறம், தமிழர்கள் கைகளைக் கட்டிப்போட வேண்டும் என்று நம்பிய கொழும்பு யூஜிசி சிங்கள உணர்வுகளை அவர்கள் மதித்து நடந்தனர்; இன்னொரு புறம், யாழ்ப்பாணத்தில் இந்தத் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்த் தேசியத்தை உரக்கக்கூவினர். அதன் விளைவாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சரித்திரப் பாடப்புத்தகங்கள் தமிழர்களை கிபி முதல் புத்தாயிரத்தில் சோழர்களுடன் இலங்கைமீது படையெடுத்து வந்தவர்கள் என்ற கருத்தாக்கத்தைப் பரப்பின. சர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் ‘ஆய்வுகளும் மொழிபெயர்ப்புகளும்’ என்ற புத்தகமும், ஹான்ஸ்- ஜோச்சிம் வெய்சார் நடத்திய தொல்பொருள் ஆய்வுகளும், இலங்கைத் தீவின் தென்கிழக்குக் கடைக்கோடியில் பலமானதொரு முருகக் கடவுள் வழிபாட்டுக் கலாச்சாரம் இருந்ததையும், வியாபாரப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததையும் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கின்றன. பல நூற்றாண்டுகளாகவே இனக்கலப்பு நிகழ்ந்திருக்கிறது.
இனப்பற்றின் அடிப்படையில் நடக்கும் அரசியலின் ஆதாரச் சுருதியை நீக்கிவிட்டால், அதுவோர் உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருப்பது நின்றுபோய்விட்டால், இந்தியாவில் நிகழ்வது போல, சேர்ந்து வாழும் அல்லது ஒன்றாக இருக்கும் வாழ்க்கை சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பணிகளில் நாம் கவனம் செலுத்தத் தொடங்கி விடுவோம்.
Read in : English