Read in : English

இலங்கையில் பொருளாதார நெருக்கடி யால், பசி, பட்டினி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை இதை தீர்க்க எடுத்து வரும் நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார் இலங்கை சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கணேஷ். இலங்கையின் இன்றயை நிலவரம் குறித்து, இன்மதி.காம் இணைய இதழ் அவருடன் நடத்திய நேர்காணல்:

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நிலைமை எப்படி உள்ளது. இலங்கையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பின், ஆசிய நாடுகளான ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், பல பில்லியன் டாலர்களை தந்து உதவப்போவதாக செய்திகள் வெளிவந்தன. பல்வேறு தரப்பினரையும் இது ஓரளவு ஆறுதல்படுத்தியது.

ஆனால் புதிய அமைச்சரவை பொறுப்பேற்று பல நாட்களான பின்னும் பொருளாதார பின்னடைவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து நெருக்கடி நீடித்த வண்ணம் உள்ளது. எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் விண்ணைத் தொட்டுள்ளது. மக்கள் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து எரிவாயுவை வாங்கும் நிலை தொடர்கிறது.

கேள்வி: அரசுக்கு எதிராக போராட்டங்கள் இப்போது நடக்கிறதா?
தர்மலிங்கம் கணேஷ்: பொருளாதார சீரழிவுக்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டம் நடந்து வந்தது. கொழும்பில் நிரந்தர போராட்ட மையங்களை அமைத்துள்ளனர் மக்கள். தினசரி முற்றுகைப் போராட்டங்கள் நடக்கின்றன. காலி முகத்திடலில், ‘கோட்டா கோ கம’ என்றும், அதிபர் கோத்தபாய ராசபக்சே வசிக்கும் அலரிமாளிகை முன், ‘மைனா கோ கம’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. புதிய பிரதமராக ரணில் பதவியேற்பின், ‘கோ ரணில்’ என கோஷம் மாற்றப்பட்டு போராட்டம் தொடர்கிறது.

போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாம்கள் அகற்றப்பட்ட நிலையில் புதிய வடிவத்தில் தொடர்கிறது. பல்கலைக்கழக மாணவர்களால் தொடர்ச்சியாக முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் சாதாரண மக்கள் போராடி வருகின்றனர். எரிபொருள் நிரப்பும் மையங்களில், சண்டை, கலவரம் மற்றும் பணியாளர் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடக்கிறது. எரிபொருள் மைய உரிமையாளர் ஒருவர் இல்லம் எரித்து தரைமட்டமாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை உள்ளது. புதிய அமைச்சரவையின் நடவடிக்கையை போராட்டக்காரர்கள் கூர்ந்து அதவானிப்பது தெரிகிறது.

இலங்கை

இலங்கை சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கணேஷ்

கேள்வி: அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா?
கணேஷ்: எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை, 200 முதல், 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பணி நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நிலையத்தில் எப்போது வினியோகம் நடைபெறும் என்பதை சமூக வலைத்தளங்கள் வழி அறிய வேண்டியுள்ளது.

அரிசி, கோதுமை, பருப்பு, சீனி, தேயிலை, மீன், கோழி இறைச்சி விலை விண்ணைத் தொடும் அளவு உயர்ந்துள்ளது. கோழி இறைச்சி கிலோ, 1500 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாதாரண மீன் வகைகள் கிலோ 4000 ரூபாய் வரை விற்கிறது. அரிசி விலை 400 ரூபாய் வரை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. பால் மாவு முற்றிலுமாக கிடைக்கவில்லை.

10 மணிநேரம் வரை வரிசையில் நின்று, ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் பெறும் பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை மீன்பிடி தொழிலாளர்கள் 10 சதவீதம் பேரே தொழிலுக்கு செல்கின்றனர். தனியார் போக்குவரத்து வாகனங்களில், 20 சதவீதம் மட்டுமே இயக்கப்படுவதாக வாகன உரிமையாளர் சங்கம் தொரிவித்துள்ளது.

கேள்வி: பட்டினியால் வாடும் மக்கள் பொருட்களுக்காக காத்துக்கிடப்பதாக கூறப்படுகிறதே?
கணேஷ்: கொழும்பு மற்றும் பெரிய நகரங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். பலமடங்கு விலையேற்றம் காரணமாக, மக்கள் வாங்கும் சக்தியை இழந்து வருகின்றனர். எங்கும் நிர்கதியாக காணப்படுகின்றனர். விலை உயர்வால் மீன் வாங்க வழியின்றி, சந்தையிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்க முடிகிறது. இரவு 10:00 மணி முதல் வரிசையில் நிற்கும் 2000 பேரில், 400 பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுகிறது. ஏனையோர் கோபத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பணமிருந்தும் கைக்குழந்தையின் பசி போக்க பொருள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் பெற்றோரை அதிகம் பார்க்க முடிகிறது.

மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சகைகாக இந்தியா சென்று, அங்கு இலங்கை நாணய பணமதிப்பு குறைவு காரணமாக சிகிச்சை பெற முடியாமல் திரும்பும் குடும்பங்களையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல அவலங்கள் காணக் கிடைக்கின்றன.

நேற்றைய விலை இன்று இல்லை. நாளை வேறொரு விலை. கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்

கேள்வி: நெருக்கடி யை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதா?
கணேஷ்: நெருக்கடி யை சமாளிக்க முயல்வதற்கான சமிஞ்சைகள் துளியவும் தெரியவில்லை. மாறாக விலைகள் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. நேற்றைய விலை இன்று இல்லை. நாளை வேறொரு விலை. கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் சென்றால் கிடைக்காது எனற நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை பிரதமர், மந்திரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் வெளியிடும் செய்திகள் கலக்கமடைய செய்கிறது. குறிப்பாக நாட்டில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளனர். இருவேளை உண்பதை பழக்கமாக்க வேண்டும் என மக்களை கேட்கின்றனர். அரசு ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் வீட்டுத்தோட்டங்கள் அமைத்து உற்பத்தியை பெருக்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசு பணியாளர்கள் மற்றும் ராணுவ பணியாளர் எண்ணிக்கையை குறைக்க போவதில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். எந்த நாட்டின் கடன் வசதி மூலம் எத்தனை கப்பல்களில் எந்தந்த பொருட்கள் நாட்டிற்கு வரும் என காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாகிறது. அப்பொருட்கள், சாதாரண மக்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வியுடன் துயரம் தொடர்கிறது. நாட்டில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் அத்தியாசிய பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.

இலங்கை வடக்கு, கிழக்கு பகுதியில் சிறுவர் சிறுமியர் கடத்தல் அதிகரித்துள்ளது. இளம் வயதினர் காணாமல் போகும் துர்ப்பாக்கிய நிலை அதிகமாக உள்ளது. திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு போரால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திக்க முயலும் இலங்கை அரசு, மீளமுடியாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது

கேள்வி: பொருளாதார நெருக்கடியால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் என்ன?
கணேஷ்: தமிழர் பகுதிகளில் வருவாய் இழப்பு அதிகம். வருவாயை விட பலமடங்கு செலவு ஏற்படுவதால் செய்வதறியாது திணறும் போக்கு உள்ளது. குறிப்பாக, உள்நாட்டு போர் நடந்த போது, பல ஆண்டுகளாக உணவுப்பஞ்சத்தை அனுபவித்தவர்கள் தமிழ் மக்கள். அவர்களால் இந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும் என கூறப்பட்டாலும், வருவாய் மற்றும் விலை ஏற்ற பிரச்சினை பயங்கரமாக உருவெடுத்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பலர் உள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முன்னாள் போராளி குடும்பங்கள், காணாமல் போனவர்களை தேடும் குடும்பங்கள், கணவன் மற்றும் சகோதரர்களை போரில் இழந்த பெண்கள், குடும்ப வறுமையால் வாடும் குடும்பங்கள், இன்றைய பொருளாதார சிக்கலில் திணறி நிற்கின்றன. இந்த தாக்கம் எதிர்காலத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அதேவேளை, இலங்கை வடக்கு, கிழக்கு பகுதியில் சிறுவர் சிறுமியர் கடத்தல் அதிகரித்துள்ளது. இளம் வயதினர் காணாமல் போகும் துர்ப்பாக்கிய நிலை அதிகமாக உள்ளது. திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.உள்நாட்டு போரால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திக்க முயலும் இலங்கை அரசு, மீளமுடியாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதை எதிர்கொள்ள புலம்பெயர் மக்களிடம் கையேந்தும் நிலை கண்கூடாக உள்ளது.

கேள்வி: தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் முறையாக நடக்கிறதா?
கணேஷ்: முதல் கப்பல் ஒரு தொகுதி உணவுப் பொருட்களை கொண்டு வந்தது. இது நாட்டில் பல்வேறு பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. எனினும், இதுபற்றி மக்களுக்கு முறையான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை.

கேள்வி: இலங்கை பொருளாதார நெருக்கடியை தீர்க்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள் உதவ முன்வருவதாக கூறப்படுகிறதே?
கணேஷ்: இது போன்ற செய்திகளைக் காண முடிகிறது. ஆயினும் இது சாத்தியமாகும் என்று நான் நம்பவில்லை. காரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சமூக ரீதியாக, பிரதேச ரீதியாக, விடுதலை இயக்கங்களில் கொண்டுள்ள வாதம் காரணமாக, யாழ் மைய வாதம் மற்றும் சாதிய பிரிவினை நிலையில் பல்வேறு கட்டமைப்புகள், பெரிய எதிர் தாக்கங்களை கொண்டுள்ளன.

இவற்றை உடைத்து பொதுவான தமிழ் தேசம் எனும் நிலைப்பாடு ஏற்படுமானால், தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஈழ தேசத்தை முன்வைத்தால் மாத்திரமே இது சாத்தியம். சிங்கள போரினவாத சிந்தனை, ஈழக்கோரிக்கைக்கு எதிரானதாகவே காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதை மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival