Read in : English
கோத்தபய ராஜபக்ச அரசை பதவி விலக கோரி தொடங்கிய அறவழிப் போராட்டத்தில், மஹிந்த ராஜபக்சவினால் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதையடுத்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மே 11ஆம் தேதி ஜனாதிபதி ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாகப் பேச்சு நடத்த தயார் என்பதும், நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க 19வது பிரிவு மீள அமல்படுத்துவேன் என்பதும், புதிய அரசு இவ்வாரத்துக்குள் அமைக்கப்படும் என்பதும் அவரது உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்.
ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்த பின்னர், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்த அகிம்சா வழி போராட்டத்திற்கு கிடைத்த ஒரு சிறிய வெற்றி இது என்றே கூற வேண்டும். இந்தப் போராட்டத்தை இளைஞர்கள் தொடங்காமல் இருந்திருந்தால், இது நடந்திருக்க வாய்ப்பில்லை.
இவர் இங்கே கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவாரா இல்லையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . ஜனாதிபதி பதவியிலிருந்து விலகாமல் காலத்தை இழுத்து அடிப்பதற்கும் நாட்டு மக்களை சமாதானப் படுத்துவதற்கும் இவ்வாறு சொல்லி இருக்கக் கூடும். காலத்தை இழுத்தடிப்பு செய்வதன் மூலம் தான் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்குரிய திட்டங்களையும் வகுக்கலாம்.
இனவாதத்தை தூண்டும் முகமாக ராஜபக்சே அரசு நாடு பூராவும் தமிழ்–முஸ்லீம், தமிழ்–சிங்கள, சிங்கள–முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிகளை செய்து கொண்டிருப்பதையும் நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது
அதே மாதிரி இனவாதத்தை தூண்டும் முகமாக ராஜபக்சே அரசு நாடு பூராவும் தமிழ்–முஸ்லீம், தமிழ்–சிங்கள, சிங்கள–முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிகளை செய்து கொண்டிருப்பதையும் நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது. அதேபோன்று கலகக்காரர்களை பொது உடமைகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் சேதம் விளைவிப்பவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் நாடு பூராவும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றன. மக்களும் ஊடகங்களும் பல்வேறு கருத்துகளைச் சொன்ன வண்ணமே இருக்கின்றார்கள் ஆனால் இதன் பின் இருக்கும் சாதக பாதகங்களை அலசி பார்ப்போம்.
பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு சகல சமூக ஆர்வலர்களுக்கும் மனிதநேயத்தை, சாந்தியை, சமாதானத்தை, நல்லிணக்கத்தை உருவாக்கும் மக்களின் கடமையாகும். அறவழிப் போராட்டம் செய்யும் காலிமுகத்திடலில் இருக்கும் இளைஞர்களுக்கும் இப்போது நாடு பூராவும் வன்முறையை உண்டு பண்ணியிருக்கும் மக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது உலகம் புரிந்து கொள்ள வேண்டும். காலிமுகத் திடலில் போராடுபவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். அரசியல் யாப்பின் மூலமே இந்த நாட்டில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இவர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள். நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டும், அரசியல் சாசன ரீதியாக அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், ஊழல்கள் நடைபெறக் கூடாது, அமைப்பில் மாற்றம் வர வேண்டும் என்பதே இவர்களுடைய கோரிக்கை.
இவர்கள் ஒரு நாளும் வன்முறையைக் கையில் எடுக்க மாட்டார்கள். இவர்களுக்குள் இனவாதம் இல்லை மதவாதம் இல்லை. ஆனால் இந்த போராட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர், சில ஊடகங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இப்போது தனிநபர் ரீதியாக காழ்ப்பு உடையவர்கள், பழைய கோபத்தை வைத்திருப்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் என்று பலரும் இந்த வன்முறையில் இறங்கி உள்ளனர். கூடவே, அரசியல் லாபங்களுக்காக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தங்களுடைய சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்த கூடும்
ஆனால், இவர்களின் மேல் தாக்குதல் நடந்தபின் பொதுமக்கள் மிகவும் ஆவேசப்பட்டு தாக்குதல்களை நடந்த தொடங்கினார்கள். இப்போது தனிநபர் ரீதியாக காழ்ப்பு உடையவர்கள், பழைய கோபத்தை வைத்திருப்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் என்று பலரும் இந்த வன்முறையில் இறங்கி உள்ளனர். கூடவே, அரசியல் லாபங்களுக்காக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தங்களுடைய சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்த கூடும். இப்படி செய்வதன் மூலம் ஆளும் கட்சியின் மேல் அனுதாபத்தை உண்டு பண்ண கூடிய ஒரு உத்தியையும் இவர்கள் கையாள்வார்கள் என்பதே பொது மக்களின் நம்பிக்கையாகும்.
ராணுவ ஆட்சி வருமா? இலங்கையில் ராணுவம் 24 படை அணிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக கஜபாகு மிகவும் நெருங்கிய படையணியாக காணப்படுகின்றது, காரணம், ஜனாதிபதி இந்த படையணியை சேர்ந்தவர். ராணுவ ஆட்சி வரவேண்டுமென்றால் இந்தப் படை அணிகள் ஒன்றாக போராட வேண்டிய அல்லது அரசியல் நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அது மிகவும் கஷ்டமான ஒரு நிலைப்பாடாகும். ஆனால் நாம் சிந்திக்கலாம், விடுதலைப் புலிகளைத் தாக்குவதற்கு எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் போரை செய்தார்கள் என.
விடுதலைப்புலிகளைத் தாக்கும்போது பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதும் விடுதலைப்புலிகளை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதும் இலக்காக இருந்தது. எல்லா படை அணிகளுக்கும் இனவாதம் என்பது அவர்களுடைய நாடி நரம்பெல்லாம் ஊறிப் போயிருந்தது. வெறித்தனமாகப் போராடினார்கள். ஆனால் இப்போது இலங்கையில் நிலவும் சூழல் அப்படியான ஒரு வெறித்தனத்தை ராணுவத்துக்கு கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டாது.
தங்களைக் கொடூரமாக தாக்கிய விடுதலைப் புலிகளின் மேலிருந்த ஆவேசம் இப்போது இருக்கும் அகிம்சை வழியை போராட்டக்காரர்கள் மீது இவர்களுக்கு இல்லை. அதை அவர்களுடைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. இன்னும் ஒன்று இந்தப் போர் வீரர்களின் குடும்பங்களும் இன்று அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலைக்கு வந்து இருக்கின்றார்கள். பொருளாதாரப் பிரச்சினை என்பது எல்லோரது வாசல் கதவுகளை ஆக்ரோஷமாக தட்டிக் கொண்டிருக்கும் ஒரு காலம். இன்னுமொன்றையும் ஞாபகப்படுத்த வேண்டும்.
இலங்கையில் அல்லது மற்றைய நாடுகளிலும் கடைநிலை சிப்பாயாக இருப்பது மிகவும் பின்தங்கிய வறிய குடும்பத்துப் பிள்ளைகள். இவர்களுக்கு இவர்கள் ராணுவத்தில் இணைந்து கொள்வது அந்த மாதாந்த கொடுப்பனவுகளுக்கும் சம்பளத்துக்குமே ஆகும். இந்த வீடுகளை இன்றையப் பொருளாதாரப் பிரச்சினை கடுமையாகத் தாக்கக்கூடியது. தாக்கும் என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. ஆகவே, சகல படையணிகளும் கருத்தொருமித்து நாட்டை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்களா என்பது கேள்விக்குறி.
இன்னும் ஒன்று. இப்போது இருக்கும் முப்படை தளபதி, ராணுவ தளபதி முன்பிருந்த ராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் தங்களுக்குள்ளும் அரசியல்ரீதியாக முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளும் திரிபுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் ராணுவ ஆட்சிக்கு ஒருபோதும் வழி சமைத்துக் கொடுக்காது.
மூன்றாவது மிகவும் முக்கியமான ஒரு காரணம் இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக சகல ஆட்சியாளர்களும் செய்யும் அரசியல் இனவாதத்தையும் மதவாதத்தையும் பிரதேச வாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இவைகள்தான் இவர்களுடைய பிரச்சார யுக்திகள் ஆக இருக்கின்றது. இதை தொடர்ந்தும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. தேர்தல் காலம் வந்தாலே இனவாத பேச்சும், மதவாத பேச்சும், பிரதேசவாத பேச்சும் தான் அவர்களுடைய முதலீடாக இருக்கின்றது. இவற்றை பேசாவிட்டால் யாராயினும் அரசியலில் வெற்றி பெற முடியாது. இதை எங்களுடைய கடந்த கால அனுபவங்களும் வரலாறும் பறைசாற்றுகின்றன.
மனித உரிமை பற்றிப் பேசினாலும், நல்லிணக்கம் பற்றி பேசினாலும், சமாதானம் பற்றிப் பேசினாலும் அந்த வேட்பாளர் கடைசி வரையில் தேர்தலில் வெற்றிபெற முடியாது. இதற்கு தமிழ்-முஸ்லீம் கட்சிகளும் விதிவிலக்கல்ல. ஆகவே, இப்போது இருக்கும் நிலையில் ராஜபக்ச அரசு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் விதமாக சில திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துகின்றது.
இப்போது இருக்கும் முப்படை தளபதி, ராணுவ தளபதி முன்பிருந்த ராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் தங்களுக்குள்ளும் அரசியல்ரீதியாக முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளும் திரிபுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் ராணுவ ஆட்சிக்கு ஒருபோதும் வழி சமைத்துக் கொடுக்காது
ஆனால், சமூக வலைத்தள உதவியுடனும் இப்போது இருக்கும் விழிப்புணர்வின் காரணமாகவும் மக்கள் அவர்களுடைய திட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுத்தும் வருகின்றார்கள். குறிப்பாக பத்தாம் தேதி நீர்கொழும்பில் கட்டுவாப்பிட்டிய என்ற இடத்தில் (ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட இடம்) சிங்களவர்களின் வீடுகளை எரித்து விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போடும் ஒரு நிலை தோன்ற இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. அதன்படியே சம்பவமும் நடந்தது. ஆனால் மக்கள் இவர்களுடைய கபட நாடகத்தை அறிந்த காரணத்தினால் அந்த மதவாத பிரச்சினையும், வன்முறையும் தோன்றாமல் பார்த்துக்கொண்டனர்.
இதற்கு விசேட அதிரடிப்படையின் உதவியும் ஆதரவும்கூட இருந்தது என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதேபோல் நாடுபூராகவும் இனவாதத்தை தோற்றுவித்து இதை ஒரு இனக் கலவரமாக மாற்றுவதிலும் ராஜபக்சே அரசு முனைப்புடன் நடப்பதை எல்லோரும் அறிவர், அவர்களுடைய முயற்சி பயனளிக்காது. இப்படியான நிலை இருப்பது காவல் துறைக்கும் ராணுவத்துக்கும் நன்றாக தெரியும்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அல்லது பொது உடமைகளுக்கு சேதம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்தும் முகமாக அதிக அளவான ராணுவம் இலங்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது அவர்களும் மக்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கும் நிலையை காண முடியவில்லை. ஆனால் ராணுவத்தை, ராணுவ வாகனத்தை பார்ப்பது உளவியல் ரீதியாக எல்லோருக்கும் பீதியை உருவாக்குகின்றது. குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு. ஏனென்றால், எங்களுடைய அனுபவம் மிக கொடூரமானது. இருந்தபோதும், மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக, ராணுவம் இலகுவில் மக்களை தாக்க மாட்டார்கள் என்பது உண்மையாக இருக்கின்றது. இன்னும் ஒரு முக்கிய காரணம் சர்வதேச அரங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் மனித உரிமை சபையிலும் ஏற்கனவே இலங்கைக்கு நல்ல பெயர் இல்லை. ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இந்த நாடு ராணுவம் வன்முறையை கையில் எடுத்தால் சர்வதேச நாணய நிதி, உலக வங்கி போன்றவை இலங்கைக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள் .
அதனால் ஜனாதிபதி கூட மக்களை தாக்கும் படி ராணுவத்தைச் சொல்வது கஷ்டம். இன்றுடன் எரிபொருள் விநியோகம் தடைப்படுகின்றது. இது நாட்டில் மிகப்பெரிய சீரழிவை கொண்டு வரப் போகின்றது. பணம் இருந்தாலும் உணவை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை செல்லப்படுகின்றது. இந்த நிலையில் ராணுவம் இலங்கையைக் கைப்பற்றுவது அல்லது மக்களை வீதிகளில் சுடுவது நடக்காது. நடக்க முடியாது என்பது என் நம்பிக்கை.
ஆகவே கடந்த கால அனுபவங்களை வைத்துக்கொண்டு எங்கள் கற்பனையை திரும்பிய பக்கமெல்லாம் சிதறி ஓட விடமுடியாது. குறிப்பாக, இன்றைக்கு எதிர்பார்ப்பை இழந்து கஷ்டப்பட்டு கண்ணீரோடு இருக்கும் மக்களுக்கு அதாவது இலங்கையில் வாழும் மக்களுக்கு நீங்கள் ஆறுதல் தராவிட்டாலும் பரவாயில்லை வதந்திகளை பரப்பாதீர்கள். அவர்களை பயம் காட்டாதீர்கள். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உங்களுடைய ஆறுதலையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் சமூக அக்கறை கொண்ட அனைவரதும் தலையாய கடமையாகும்.
இதை எல்லோரும் புரிந்து கொண்டு உங்களுடைய கருத்துகளை கவனமாகப் பதிவிடுவது இலங்கையில் வாழும் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதை இங்கே நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மக்கள் பலம் சர்வாதிகாரியின் பலத்தை விட வலிமையானது என்று வரலாறில் பதியப்படும்.
Read in : English