Read in : English

கோத்தபய, ராஜபக்ச குடும்பங்களை இலங்கை அரசியலில் இருந்து விரட்டியடிக்க செய்யப்பட்டு வரும் போராட்டமானது வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தற்போது நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சான்று. தாங்கள் தோற்றுப் போய் விட்டோம், தாங்கள் நம்பியிருந்த தங்களுடைய மக்களால் தாங்கள் தூக்கி வீசி எறிய படுகின்றோம் என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜீரணிக்க முடியவில்லை. சர்வாதிகாரிகள், அடக்குமுறையாளர்கள், ஜனநாயக விரோத போக்குள்ள ஆட்சியாளர்கள் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கையிலெடுக்கும் ஒரே ஒரு ஆயுதம் வன்முறை. இந்த வன்முறை ராஜபக்ச குடும்பத்தாருக்கு ஒன்றும் புதிதல்ல. பலமுறை வன்முறைகளைக் கையாண்டவர்கள்.

வன்முறையை உருவாக்குவதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டலாம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் அது ஒவ்வொரு முறையும் பயனளிக்காது என்பது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதற்கு இன்று நடந்த தாக்குதலும் அதன் பின்னர் மாணவர்களின் எழுச்சியும் இலங்கை முழுவதும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்களால் தரப்படும் ஆதரவும் சான்று பகர்கின்றது.

சர்வாதிகாரிகள், அடக்குமுறையாளர்கள், ஜனநாயக விரோத போக்குள்ள ஆட்சியாளர்கள் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கையிலெடுக்கும் ஒரே ஒரு ஆயுதம் வன்முறை. இந்த வன்முறை ராஜபக்ச குடும்பத்தாருக்கு ஒன்றும் புதிதல்ல

வன்முறை என்ற ஆயுதத்தை இலங்கை வரலாற்றில் மாறிமாறி வந்த அரசுகள் பல தடவைகள் பிரயோகித்துள்ளனர். 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது அதன்பின் பல வன்முறைகள் நிகழ்ந்தாலும் 1958ஆம் ஆண்டு மிகப் பெரிய இனக்கலவரம் ஆரம்பித்தது. அன்றும்கூட காடையர்கள் மிலேச்சத்தனமாக தமிழர்களை தாக்கினார்கள். பலரைக் கொன்றொழித்தார்கள். பலரது உடமைகள் அழித்தொழிக்கப்பட்டன அதன்பின் 1983ஆம் ஆண்டு ஜூலையில் மீண்டும் கலவரம் நடைபெற்றது. அதே முறையில் அதே பாணியில் இன்றும் அஹிம்சா வழியில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு எதிராக மிலேச்சத்தனமான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. இளைஞர்களைத் தாக்குவதற்காக திட்டம் போட்டு பணம் கொடுத்து மதுபானம் கொடுத்து தங்களுடைய ஆதரவாளர்களை கட்டாயப்படுத்தி ராஜபக்ச சகோதரர்கள் தாக்குதல் நடத்த சொன்னதாக இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சாட்சி சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் வறுமையில் வாடும் மக்கள். இவர்களுக்கு முடியாது, இல்லை என்று சொல்லக்கூடிய நிலையில் உள்ளவர்கள் இல்லை. சர்வாதிகாரிகளுக்கும் அடக்குமுறையாளர்களுக்கும் சேவகம் செய்யப் போனால் அல்லது ஆதரவு தெரிவித்தால் இவ்வாறு தான் நடக்கும். இது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல.

இன்று நடந்த தாக்குதலால் இலங்கையில் போராடும் மக்களுக்காக இருந்த ஆதரவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதையும் ராஜபக்ச ஆதரவாளர்கள் பொதுமக்களைத் தாக்குவதையும் அவர்களுடைய உடமைகளை தீயிட்டு கொழுத்துவதையும் காண முடிகிறது. இதை செய்பவர்கள் இந்தப் போராட்டத்தை தொடங்கிய மாணவர்கள் இல்லை.

எரித்து சின்னாபின்னப்படுத்தப்பட்ட போராட்ட கிராமம், சில மணித்தியாலங்களுக்குள் மீள முன்னைவிட வலுவாக உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான பண உதவிகளையும் மற்ற உதவிகளையும் பெருந்திரளான பொதுமக்கள் வழங்கி கொண்டிருக்கின்றார்கள். கோத்தபய அரசை வீட்டுக்கு போ என்று சொல்லும் கோஷம் வலுப்பெற்றிருக்கின்றது. வரலாற்றில் அவரே கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்றைக்கு ராஜபக்ச குடும்பத்தின் மேல் வெறுப்பும் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இது சிங்கள மக்களிடம் இருந்து வருவதுதான் முக்கியமான செய்தி . ஏன் இப்படி நிகழ்கின்றது என்பதை நாங்கள் கொஞ்சம் மீட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது யாராக இருந்தாலும் அநியாயம் செய்தால் அதற்கு உரிய விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் . இதை இலங்கை வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் நாங்கள் கண்கூடாக பார்க்க கிடைத்திருக்கின்றது.

‘Gotta Go Home’ போராட்டம் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக சிங்கள பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டமானது கோத்தபய வீட்டுக்குப் போ என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்தாலும் இப்போது அது வெவ்வேறு வடிவங்களை எடுத்து இருக்கின்றது.

இந்த நிலையில், வட கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்த போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதை காணமுடியவில்லை. கொழும்பில் இருக்கும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வடக்குப் பகுதித் தமிழர்கள் குறிப்பிட்ட அளவில் கொழும்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும் அதேபோல் வடகிழக்கில் உள்ள பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் ஒருநாள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டாலும் இப்போது தனியார், அரசு சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்பவர்களும் அரசு ஊழியர்களும் இதில் கலந்து இருக்கின்றார்கள். பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் தாய்மார்கள், டாக்டர்கள், தொழிற்சங்கங்கங்களைச் சேர்ந்தவர்கள் போன்ற எல்லோருமே தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள். போராட்டமும் உக்கிரம் அடைந்து நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு இருக்கின்றது. சகல மாவட்டங்களிலும் இதே மாதிரியான வீட்டுக்குப் போ கோத்தபய ன்ற கோஷம் உருவாகிக்கொண்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சாராரும் இதில் தமிழர்கள் கலந்து கொள்ளவே கூடாது என்று இன்னொரு சாராரும் தங்களுடைய கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சாராரும் இதில் தமிழர்கள் கலந்து கொள்ளவே கூடாது என்று இன்னொரு சாராரும் தங்களுடைய கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சிலர் சொல்லுகின்றார்கள் எங்களுக்குத் துன்பம் நடக்கும் போது , எங்களுக்கு அநீதி நடக்கும் போது சிங்களவர்கள் கைகட்டி வாய் பொத்தி இருந்தார்கள். ஆகவே இவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறுகின்றார்கள். அதுமட்டுமல்ல இதில் கலந்து கொண்டால் தமிழர்களுக்கு ஆபத்து வருமே அன்றி பலன் இல்லை என்பது சிலருடைய கருத்தாக இருக்கின்றது. இன்னும் சிலர் நாங்கள் இதை விட மோசமான அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு இருந்தோம். இதைவிட மோசமான பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுத்து இருந்தோம். மின்சாரம் இல்லாமல், உணவில்லாமல், சவக்காரம் இல்லாமல், வாழ்ந்து பழக்கப்பட்டு இருக்கின்றோம். இதெல்லாம் எங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அது உண்மைதான். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் தள்ளி இருப்பது புத்திசாலித்தனமான நிலைப்பாடு அல்ல

ஏனென்றால் இந்தப் போராட்டம் பொருளாதாரப் பிரச்சினையையும் உணவையும் மையப்படுத்திய போராட்டமாக இருக்கின்றது என்பதுதான். அத்துடன், கடந்த கால கசப்பான அனுபவங்களை வைத்துக்கொண்டு தீர்மானம் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது.

இலங்கைத் தமிழர்கள்

கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நீதி கோரி போராட்டம் நடத்திய தமிழர்கள். கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் பங்கேற்பதன் மூலம் அரசியல் யாப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பை உருவாக்குவதற்கான திருத்தத்தைக் கொண்டுவர முடியும். (Photo Credit: Twitter handle @Thusi_Kumar, Dr. Thusiyan Nandakumar)

40 ஆண்டு காலமாக அடக்குமுறைக்கும் உளவுத்துறையின் கண்காணிப்புக்கும் கைதுகளுக்கும் பழக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு ஆள் மனதில் இந்த அரச இயந்திரம் பற்றிய பயம் இருக்கின்றது. நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் புலனாய்வுத் துறையினர் நமது வீட்டுக்கு வந்து நமது பிள்ளைகளை கைது செய்வார்கள் என்ற பயமும் தமிழர்களுக்கு இருக்கின்றது. முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. இது சாதாரணமாக பயம்தான். கடந்த கால கசப்பான அனுபவத்தின் மூலம் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போன பயம்.

புலம்பெயர் தேசத்து தமிழர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் தங்களுடைய ஆதரவை தருகின்றார்கள் கூடவே ராஜபக்ச அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டும் படியும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. உண்மையில் இந்தப் போராட்டம் ஏன் ஆரம்பித்தது என்பதை நாங்கள் சற்று உற்று நோக்க வேண்டும் 2021ஆம் ஆண்டு அசேதனப் பசளை (ரசாயன உரம்) இறக்குமதியை ஜனாதிபதி நிறுத்திவிட்டார். ரசாயன உரம் தாவரத்துக்கும் மண்ணுக்கும் நல்லதல்ல என்ற காரணத்தால் கூறப்பட்டது. ஆனாலும் உண்மையில் இதற்கான காரணம் ரசாயன உரம் இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் பணம் இல்லை என்ற விஷயம் மக்களுக்கு தெரிய வந்தது . அது மட்டுமல்ல விவசாயிகள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியானது சேதனப் பசளைகளின் (இயற்கை உரம்) உற்பத்தி தேவைக்கு ஏற்ப இருக்கவில்லை. புதிதாக சேதனப் பசளைகளுக்கு மண் பதப்படுத்தப்படவில்லை. ஆகவே பயங்கரமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு விவசாயிகள் முகம் கொடுத்தார்கள் ஆகவே, அவர்கள் போராடத் தொடங்கினார்கள்

ரிசர்வ் வங்கியில் பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இல்லாததால் பால்மா இறக்குமதி தடைபட்டு, தட்டுப்பாடு ஏற்பட்டது. தாய்மார்கள் வீதிக்கு வர ஆரம்பித்தார்கள். அடுத்ததாக எரிபொருட்கள் இறக்குமதி செய்ய பணம் இல்லாமல் போனது போக்குவரத்து தடைபட்டது சமையல் எரிவாயு இல்லாமல் போனது. பெட்ரோல் டீசல் இல்லாததால் மின்உற்பத்தி தடைப்பட்டது. அதிக நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் உற்பத்திகளை செய்யும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை பொருளாதார மென்மேலும் பாதிக்கப்பட்டது. மக்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டனர். தேயிலை ஏற்றுமதி ஆடை ஏற்றுமதியில் போன்றவற்றை செய்து கொண்டிருந்த இது துறைகளும் கல்விக்கு ஏற்ப உற்பத்திகளை கொடுக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மின்வெட்டு காரணமாக உற்பத்தி செய்வதில் தடங்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக இலங்கையில் தேயிலையை கொள்வனவு செய்த நாடுகள் நேபாளத்துக்கு இந்தியாவுக்கும் திரும்பியுள்ளனர். ஆகவே அந்நியச் செலாவணியை பெற்றுத் தந்த ஆடை ஏற்றுமதி தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை நாம் இழக்க நேரிடுகின்றது. இதனால் குறிப்பாக வட கிழக்கு மற்றும் மலையகப் பெண்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாக போகின்றது இந்தப் பெண்களை நம்பியே அவரின் அவர்களின் குடும்பங்கள் வாழ்கின்றது.

இவைகள் ஒரு புறமிருக்க உணவு விலையேற்றம் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தட்டுப்பாடு தொடர் சங்கிலியாக உருவாகத் தொடங்கியது. 30 ஆண்டு காலமாக தமிழர்களை அடக்கிய அதே அரச இயந்திரம், போராடும் சிங்கள இளைஞர்களை அடக்க முயற்சி செய்கின்றது. இதை சிங்களவர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக இன்று நடந்த தாக்குதல், அவர்களுக்கு இலங்கை அரசு இயந்திரம் எவ்வளவு மிலேச்சத்தனமானது என்பதை படம் போட்டுக் காட்டி இருக்கின்றது. பட்டப்பகலில் கொழும்பின் மையப் பகுதியில் இப்படி தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்றால் 40 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் தாக்குதலில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை சிங்களவர்களுக்கு எடுத்துச்சொல்ல நமக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும் . சிங்களவர்களுக்கு 40 ஆண்டு காலமாக தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது எளிதாக தெரியாது அதை அவர்கள் அனுபவிக்கவும் இல்லை. காரணம் இவ்வளவு காலமும் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு, இனவாதம் மதவாதம் போன்றவற்றை முதலீடாக வைத்து அரசியல் லாபத்தை சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் பெற்று வந்தார்கள்.

அதேநேரம் சட்டத்தின் ஆட்சியை ஒழுங்காக நடக்கவில்லை உண்மையான ஜனநாயகம் இருக்கவில்லை குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள் நல்லாட்சி நடக்கவில்லை இவைகளை எல்லாம் சிங்கள மக்கள் கேள்வி கேட்காத வண்ணம் இனவாதமும் மதவாதமும் இலங்கையில் சிங்களவர்களின் கண்ணை இவ்வளவு காலமும் கட்டி வைத்திருந்தது இப்போதுதான் அவர்களுடைய கண் திறந்திருக்கின்றது.

இலங்கை அரசியல் யாப்பு (அரசியலமைப்புச் சட்டம்) சிங்கள புத்த மேலாதிக்கம் உடையதாக இருக்கின்றது. அரசியல் யாப்பின்படி, ஜனாதிபதியாக, பிரதம மந்திரியாக சிறுபான்மையினர் வரமுடியாது

சுதந்திரம் இலங்கை சுதந்திரமடைந்த பின் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கட்டமைக்கப்பட்ட ரீதியில் அவர்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசியல் யாப்பு (அரசியலமைப்புச் சட்டம்) சிங்கள புத்த மேலாதிக்கம் உடையதாக இருக்கின்றது. அரசியல் யாப்பின்படி, ஜனாதிபதியாக, பிரதம மந்திரியாக சிறுபான்மையினர் வரமுடியாது. ஜனாதிபதியாக அல்லது பிரதம மந்திரியாக வருபவர் சிங்கள பௌத்தராக இருக்கவேண்டும் என்பதுதான் அரசியல் யாப்பில் இருக்கும் பொதுவான நியதி . அரசியல் யாப்பில் அடிப்படை உரிமை சரத்து அனைவரும் சமம் என்று சொல்லி இருந்தாலும் அரசியல் அதிகாரம் என்று வரும்போது சிறுபான்மை மக்களுக்கும் அரசியல் அதிகாரம் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை.

இதுவரைகாலமும் தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கபடுவதற்கு அரசியல் யாப்பு பிரதான காரணமாக இருக்கின்றது. இந்த முறை மாற்றியமைக்கப்பட்டு அல்லது திருத்தி அமைக்கப்பட்டு இலங்கையில் வாழும் சகலரும் தங்களுடைய தனித்துவமான அடையாளங்களுடன் உரிமைகளுடன் சகல வசதிகளையும் பெற்று சமமான பிரஜைகளாக கௌரவமாக வாழ வேண்டும் என்பதை அரசியல் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து வளங்களும் அனைத்து வசதிகளும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களும் சம அந்தஸ்துடைய கௌரவம் உடைய பிரஜைகளாக நடத்தப்பட வேண்டும். இப்படியொரு நிலை தோன்றினால் மட்டுமே தமிழர்களின் பிரச்சினை இலங்கையில் தீரும். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் மனித குலத்துக்கு எதிராக நடந்த குற்றங்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறை காரணமாக, ஒரு குடும்பமே நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கு ஏதுவாக இருந்தது. அதுமட்டுமல்ல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கேள்வி கேட்க முடியாத நிலைக்கு அரசியல் யாப்பு இருக்கின்றது. அதேபோல் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங்கையில் அகற்றப்பட வேண்டும். அரசியல் யாப்பின் ஊடாக இலங்கையில் வாழும் சகல மக்களும் உரிமைகளுடன் சமத்துவமாக பாதுகாப்பாக பயமில்லாமல் வாழும் ஒரு நிலை இன்றைக்கு தேவையாக இருக்கின்றது. அதை சிங்களவர்களும் உணர்ந்திருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைதான், நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதே இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கின்றது. ஆனால் இந்தத் தருவாயில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் கட்சிகள், தமிழர் தலைவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வார்களா எதிர்த்து ஏற்பார்களா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும் ஆனாலும் அவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ராஜபக்சேவுக்கு நடந்தது அவருடன் கூட இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நடக்க வாய்ப்புண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கைப் பிரஜைகள் யாராயினும் இலங்கை அரசியலில் ஈடுபடலாம் என்ற நிலை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் யாப்பில் திருத்தத்தை செய்யவேண்டும் என்று சிங்களவர்கள் கோஷம் எழுப்பும் இந்த தருணத்தில் தமிழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும்

அரசியல் யாப்பில் திருத்தத்தை செய்யவேண்டும் என்று சிங்களவர்கள் கோஷம் எழுப்பும் இந்த தருணத்தில் தமிழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் யாப்பின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சரியானதை நாங்கள் தவற விட்டால் இனி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம் இப்போது போராடும் இந்த இளைஞர்கள் தான் நாளைக்கு அரசியல்வாதிகளாகவும் அரசியல் கட்சி தலைவர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகவும் பரிணமிக்க போகின்றனர்.

ஆகவே இன்றைக்கு நடக்கும் இந்த பொருளாதார அரசியல் பிரச்சினை ஆனது தமிழர்கள் இவ்வளவு காலமும் முகம் கொடுத்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரவும் நடந்த அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்கால சந்ததி சமமாக சந்தர்ப்பத்தையும் சம வாய்ப்பைப் பெற்று சிங்கள பௌத்தர்களுக்கு சமனான பிரஜைகளாக வாழ்வதற்கு வழியை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய அரசியல் யாப்பை உருவாக்கும் சந்தர்ப்பமாக அமைந்து இருக்கின்றது.

இதை தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழர்களும் முஸ்லிம்களும் தவற விடக்கூடாது. இந்தப் போராட்டத்தில் நாங்களும் இணைந்து கொள்ள வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. பழிக்குப் பழி வாங்கும் தருணம் இதுவல்ல. இனியாவது மூவின மக்களும் இலங்கையில் சமமாக வாழவேண்டும். எதிர்கால சந்ததியும் சமத்துவமும் கௌரவத்துடனும் இலங்கையில் வாழ வேண்டும் . அந்த நிலையை அரசியல் யாப்பின் ஊடாக உறுதிப்படுத்தி உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

அநீதியை எதிர்த்து நிற்க இலங்கையர் பழக வேண்டும். அப்படி இல்லாமல் நமக்கு பிடித்தவர்கள் அநியாயம் செய்தால் அதை நியாயப்படுத்தும் மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இன, மத, மொழி, பிரதேச, அரசியல் கட்சி போன்ற அடையாளங்களுக்கு முன் நாங்கள் மனிதர்கள் என்ற அடையாளத்துடன் வாழ தொடங்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival