Read in : English
உலகில் மதிப்பு மிக்கது சந்தன மரம். இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. நன்கு வளர்ந்த மரம் வாசனை நிறைந்தது. அதன் வைரம் பாய்ந்த கட்டை, எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்ற எண்ணெய், மருத்துவப் பண்பு கொண்டது. தோலுக்குக் குளிர்ச்சி தரக் கூடியது.
தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாரம்பரிய, கோயில் வழிபாடுகளில் சந்தனம் முக்கிய இடம் பெறுகிறது. நெற்றியிலும், மார்பிலும் மட்டுமல்ல உடல் முழுக்க பூசி மகிழும் வழக்கம் உள்ளது. சோப்பு, மாலை என பல விதங்களில் பயன் தருகிறது. கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இதன் தேவை அதிகம்.
அளவுக்கு அதிகமாக தேவை இருக்கும் போதும், பயன்மிக்க சந்தன மரத்தை, விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்தது. தப்பித்தவறி தனியார் நிலத்தில் வளர்ந்திருந்தாலும் அதை வெட்ட முடியாது. காரணம், அது அரசுக்கு தான் சொந்தம் என்று சட்டம் இருந்தது.
சந்தன மரக் கடத்தைத் தடுக்கும் நோக்கில் 2008ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக அரசு, ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் விவசாயிகள் கவனத்துக்கு முறையாக எடுத்துச் செல்லப்படவில்லை.
இந்தக் கட்டுப்பாட்டால் காட்டில் வளர்ந்த சந்தன மரத்தை வெட்டி கடத்துவது தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் தாராளமாக நடந்தது. இப்போதும் சந்தன மரம், தேக்கு, கருங்காலி மரங்கள் வெட்டிக் கடத்துவது குறையவில்லை.
ஜவ்வாது மலை வனப்பகுதியில் ஒரு காலத்தில் சந்தன மரம் நிறைந்திருந்தது. இன்று ஒன்றைக் கூட பார்க்கமுடியாத அளவில் முற்றாக அழிந்துவிட்டது. சந்தனக் கடத்தால், அங்கு அந்த மரமே காணாமல் போய்விட்டது.
சந்தன மரத்தை விவசாயிகள் பரவலாக பயிரிட்டால், அதன் தேவையை சமாளிக்கலாம். பொருளாதார வளமும் பெருகும். இந்த மரச்சாகுபடி பெருகினால் கிராக்கி குறையும். அதனால், சந்தன மரக் கடத்தைத் தடுக்கும் நோக்கில் 2008ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக அரசு, ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் விவசாயிகள் கவனத்துக்கு முறையாக எடுத்துச் செல்லப்படவில்லை.
எல்லா வகை விவசாயிகளுக்கும் பலன் தரும் இந்தச் சட்டம், சந்தன மரங்களை, தனியார் நிலத்தில் வளர்க்க அனுமதிக்கிறது. சந்தன மரங்களை வளர்க்க விரும்பும் விவசாயி பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.
அதன்படி, சந்தன மரக்கன்றுகளை வாங்கி விவசாயிகள் சொந்த நிலத்தில் நடலாம். சிறிதளவு நிலம் இருந்தாலும் முயற்சி செய்யலாம். நட்டபின், குறிப்பிட்ட நிலத்தின் அளவு, நிலவுரிமை ஏடான பட்டா எண், அதில் எத்தனை கன்றுகள் நடப்பட்டுள்ளன போன்ற விவரங்களை, வருவாய் கிராம அடங்கலில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
அந்தச் சான்றிதழை மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மரங்கள் வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும்போது, மாவட்ட வன அலுவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து, மரங்களை வெட்ட ஏற்பாடு செய்வார் வன அதிகாரி.
வெட்டிய மரங்களை, அரசு மரக்கிடங்குக்கு எடுத்து வந்து வைரம் பாய்ந்த பகுதியை பிரிப்பர். பின், மரக்கட்டையை தர அடிப்படையில், 19 வகைகளாகப் பிரித்து விற்பனை செய்வர். விற்பனைத் தொகையில், 80 சதவீதம் விவசாயிக்குச் சேரும். மீதமுள்ள தொகையில் வெட்டுக்கூலி, சுத்தம் செய்த கூலி, தரம் பிரித்த கூலி, ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மரத்தை வெட்டிய 90 நாட்களில் விவசாயிக்கு பணம் கிடைக்கும்.
சந்தன மரத்தை, வணிகப் பயிராகச் சாகுபடி செய்யும் திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது. பல விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை விவசாயிகளுக்கு அறிவிக்கும் வகையில் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். காட்டின் ஓரத்தில் தரிசாகக கிடக்கும் நிலங்களில் சந்தன மரங்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தலாம். அதற்கான செயல் முறைகளை அரசு.வகுக்க வேண்டும்.
சந்தனமரம் பரவலாக வளர, வால்காக்கை என்ற பறவையினம் இயற்கையாக உதவி வருகிறது. அந்த பறவையினத்தை பாதுகாப்பதன் மூலம், சந்தனமரம் வளர்வதை இயற்கை முறையில் நிறைவேற்றலாம்.
அதே நேரத்தில், இயற்கையின் அரிய ஒழுங்கமைப்பு ஒன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தனமரம் பரவலாக வளர, வால்காக்கை என்ற பறவையினம் இயற்கையாக உதவி வருகிறது. அந்த பறவையினத்தை பாதுகாப்பதன் மூலம், சந்தனமரம் வளர்வதை இயற்கை முறையில் நிறைவேற்றலாம்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் கண்கூடாக இது நடந்து வருகிறது. எந்த செலவும் இன்றி, இயற்கையாக சந்தனமரக்காடு பல்கி பெருக உதவிவருகிறது இந்தப் பறவை.
காக்கைக் குடும்ப பறவைகளுள் ஒன்று வால் காக்கை. தமிழகத்தில், அரிகாடை, முக்குறுணி, மாம்பழத்தான், கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட வாலுடன் காணப்படும். உரத்த குரலில் இசை பாடும். பல குரலில் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டது. குறுங்காடுகளிலும், நகர்ப்புறத் தோட்டங்களிலும் தென்படும்.
அனைத்துண்ணி வகையான இதன் அறிவியல் பெயர் டென்ரோசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda). இதன் பொருள், மரங்கள் இடையே அலையும் பறவை என்பதாகும். இதன் பண்புகளை கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படும். இந்த பறவையின் முக்கிய உணவுகளில் ஒன்று, சந்தனமரப்பழம். பெரும்பாலும் கோடையில் விளையும். இந்த பழத்தை விதையுடன் உண்கிறது வால் காக்கை.
அதன் எச்சத்துடன் விழுந்து முளைக்கிறது. இப்படி பல்கி பெருகும் மரங்களை பாதுகாக்க அரசு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். இதனால் குறுஞ்காடுகளிலும் சந்தன மரம் வளர வாய்ப்பு ஏற்படும்.
மரங்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இடையே சூழலியல் உறவு இருப்பதை அறிவியல் அறிஞர்கள் பலமுறை நிரூபித்துள்ளனர். அதில் ஒன்று சரக்கொன்றை மரப்பரவலில், கரடிக்கு உள்ள உறவு.
சரக்கொன்றை பழத்தை விரும்பி உண்கிறது கரடி இனம். அது உண்டு எச்சமிடும் சரக்கொன்றை விதைக்கு, அதிக முளைப்பு திறன் உள்ளதாக, கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல், வால்காக்கை பறவை உண்ணும் சந்தன விதையின் முளைப்பு திறன் பற்றியும் அறிஞர்கள் ஆராய வேண்டும். வால் காக்கை பறவையினத்தைக் காப்பதன் மூலம் சந்தன மரக்காட்டை பெருக செய்யலாம். அதற்கான ஆய்வுகளை தமிழக வனத்துறை முன்னெடுத்தால், சந்தன மர வளம் பெருக வாய்ப்பு ஏற்படும்.
Read in : English