Read in : English

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இலங்கை. அரசை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. எரிபொருள், அத்தியாவசிய பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மேலும் மிகக் கடுமையாக உயர்ந்துவருகிறது. இதை எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, சர்வதேச நிதி நிறுவனமான, ஐ.எம்.எப். அமைப்பிடம் கடன் வாங்கும் முடிவுடன், இலங்கை நிதி அமைச்சரும், அதிகாரிகளும், அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். நிதி நிலையை மேம்படுத்த பல சீர்திருத்தங்களையும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலை குறித்து இலங்கையின் பிரபல பொருளாதார அறிஞரும், கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த பேராசிரியருமான கே. அமிர்தலிங்கம், ‘இன்மதி’ இணைய இதழுடன் உரையாடினார். அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…

கேள்வி: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சில மாற்றங்கள் நடந்துள்ளதாக தெரிகிறதே?

அமிர்தலிங்கம்: பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது அரசு. மற்றபடி பெரிய மாறுதல்கள் எதையும் கொண்டுவரவில்லை.

இப்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அத்தியாவசிய பொருட்களான எரிவாயு, பெட்ரோல், உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டக்காரர்களை அடக்க துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. பலர் கடும் காயம் அடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

“இலங்கையில் நிலவும் பொருளாதார நிலையை ஆராய்ந்து, ஐஎம்எஃப் அறிக்கை ஒன்றை தயார் செய்யும். அதன் அடிப்படையில் நாட்டில் பல்வேறு வகை வரிகளை உயர்த்த நிபந்தனைகளை விதிக்கும். அரசின் ஆடம்பர செலவினங்களை குறைக்கவும் ஆலோசனை கூறும். இந்த நிபந்தனைகளை ஏற்று அமல்படுத்த அரசு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான், ஐஎம்எஃப் கடன் வழங்கும். அதுவும், ஆறு மாதம் வரை கால அவகாசம் எடுக்கும். அதுவரை, இலங்கை அரசு தாக்குப் பிடிக்க வேண்டும்” என்கிறார் கொழும்புப் பல்கலைக்கழப் பேராசிரியர் அமிர்தலிங்கம்

கேள்வி: பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறதே…

அமிர்தலிங்கம்: ரேஷன் என்ற பொது விநியோக முறையை அமல்படுத்த இலங்கையில் அடிப்படைக் கட்டமைப்பு எதுவுமில்லை. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விநியோகத்தில் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதைச் சரியாகச் செய்யும் நிர்வாக அமைப்பு அரசிடம் இல்லை. பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

வரும் ஜூலை மாதத்துக்குள், ஒரு பில்லியன் டாலர் கடனை வட்டி மற்றம் அசலாக இலங்கை திருப்பி செலுத்த வேண்டும். இந்த நிதியாண்டு இறுதிக்குள் ஏழு பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

கேள்வி: உலக நாடுகளிடம் வாங்கியுள்ள கடனை திருப்பித்தர போவதில்லை என இலங்கை அரசு கூறியுள்ளதே. இது என்ன மாதிரி விளைவுகளை உருவாக்கும்?

அமிர்தலிங்கம்: வரும் ஜூலை மாதத்துக்குள், ஒரு பில்லியன் டாலர் கடனை வட்டி மற்றம் அசலாக இலங்கை திருப்பி செலுத்த வேண்டும். இந்த நிதியாண்டு இறுதிக்குள் ஏழு பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த வேண்டும். மொத்தமாக வாங்கியுள்ள கடன், 51 பில்லியன் டாலர். தற்போது இலங்கை மத்திய வங்கியின் இருப்பில், 300 மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. அதேநேரம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பெட்ரோல், எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரு மாதத்திற்கு, 1.2 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. மிக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவிட வேண்டிய தொகை இது.

இந்த நிலையில் இலங்கை அரசு வெளிநாட்டில் வாங்கிய கடன்களை இடை நிறுத்தம் (சஸ்பெண்ட்) செய்வதாக அறிவித்துள்ளது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடனை திருப்பித்தரப் போவதில்லை என்று சொல்லவில்லை இலங்கை. தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்றுதான் கூறியுள்ளது. அதாவது, இப்போது செலுத்த வேண்டிய வட்டியை, அசலுடன் சேர்த்து, கூடுதல் கடனாக ஓராண்டுக்கு பின் செலுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

கேள்வி: இது கடன் சுமையை மேலும் கூடுதலாக்கும் அல்லவா?

அமிர்தலிங்கம்: உண்மைதான். கடன் தொகையை, அதற்கான வட்டியுடன் மிகவும் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். ஓராண்டுக்குள் இலங்கையில் நிலைமை சீராகிவிடும் என்று அரசு கருதுகிறது. அந்த நம்பிக்கையில் தான் இதுபோன்ற வாக்குறுதிகளை அளிக்கிறது. ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. நெருக்கடி அதிகரித்துள்ளது. திருப்பி செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை இலங்கைப் பணமாக செலுத்த அரசு முன்வந்துள்ளது. கடன் வழங்கியுள்ள நாடுகள்தான் இதுபற்றி முடிவெடுக்கும். இது பொருளாதாரத்தில் ஒரு வகை மென்மை போக்கு என்று சொல்லலாம். திருப்பித் தரமாட்டேன் என மறுக்கும் வன்மை போக்கு அல்ல. நிலைமையை சீராக்கி விடலாம் என கருதுகிறது. ஆனால் உள்நாட்டில் போராட்டம் வலுத்து நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. சீரடையும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது.

கேள்வி: இலங்கை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி உள்ளது?

அமிர்தலிங்கம்: நாட்டின் நிலைமை சிக்கல் ஆவதால், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளன. மாற்று அரசை உருவாக்க முயன்று வருகின்றன.

கேள்வி: சர்வதேச நிதி நிறுவனத்தில் கடன் வாங்கும் இலங்கை அரசின் முயற்சி எந்த நிலையில் உள்ளது?

அமிர்தலிங்கம்: அதற்கான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நிதி அமைச்சர் உட்பட அதிகாரிகள் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். சர்வதேச நிதி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் வாங்கும் கடனுக்கு வட்டி மட்டுமே அதிகமாக இருக்கும். வேறு நிபந்தனைகள் இருக்காது. ஆனால், சர்வதேச நிதி நிறுவனத்தில் கடனுக்கு வட்டி குறைவு. ஆனால் நிபந்தனைகள் அதிகம்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நிலையை ஆராய்ந்து, சர்வதேச நிதி நிறுவனம் அறிக்கை ஒன்றை தயார் செய்யும். அதன் அடிப்படையில் நாட்டில் பல்வேறு வகை வரி இனங்களை உயர்த்த நிபந்தனைகளை விதிக்கும். அரசின் ஆடம்பர செலவினங்களை குறைக்கவும் ஆலோசனை கூறும். இந்த நிபந்தனைகளை ஏற்று அமல்படுத்த அரசு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான், சர்வதேச நிதி நிறுவனம் கடன் வழங்கும். அதுவும், ஆறு மாதம் வரை கால அவகாசம் எடுக்கும். அதுவரை, இலங்கை அரசு தாக்குப் பிடிக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது கொந்தளிப்பான நிலை உள்ளது. இந்த நிலையில், ஐஎம்எஃப் விதிக்கும் நிபந்தனைகளை அமல்படுத்த முயன்றால், நாட்டில் மேலும் விலைவாசி உயரும். மக்களின் அன்றாட செலவு அதிகரிக்கும். எதிர்ப்புக் கூடும். அரசு இதை எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி: சர்வதேச நிதி நிறுவன பரிந்துரைகளை இலங்கை ஏற்குமா?

அமிர்தலிங்கம்: ஊழல், நிர்வாக திறமையின்மை போன்ற காரணங்களால் இலங்கையில் பல நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோலியக் கூட்டு ஸ்தாபனம், விமான போக்குவரத்து நிறுவனம், மின்சார சபை போன்றவை பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இவற்றை சீரமைப்பது குறித்து முடிவு எடுக்க சர்வதேச நிதி நிறுவனம் வலியுறுத்தும். அது எங்களைப் பொருத்தவரை சாதகமான அம்சம் தான். ஆனால், அரசு அவற்றை நிறைவேற்றுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. நிறைவேற்றாவிட்டால், சர்வதேச நிதி நிறுவனம் கடன் தருவது கேள்விக்குறியாகும்.

கடன் தொகையாக 4 பில்லியன் டாலர் வரை இலங்கை எதிர்பார்க்கிறது. ஆனால், சர்வதேச நிதி நிறுவனம், 2 பில்லியன் வரை வரைதான் வழங்கும். அதுவும் ஒரே தவணையில் வழங்காது.

கேள்வி: பொருளாதார சீரமைப்புக்கு அரசு வேறுவகை நடவடிக்கைகள் எடுத்து உள்ளதா?

அமிர்தலிங்கம்: வெளிநாட்டு நாணய மாற்று நிர்வாக அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, டாலருக்கு பணமாற்று விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிச்சந்தையில் டாலருக்கான இலங்கை பணமாற்று வீதம் இன்னும் அதிகமாகி உள்ளது. ஆனாலும், இதை விரும்பத்தக்க முயற்சியாக கொள்ள வேண்டும்.

முன்பு, இலங்கை மத்திய வங்கியில் ஒரு டாலருக்கு மாற்றாக 193 இலங்கை ரூபாயாக வழங்கப்பட்டது. விற்பனை விலை டாலருக்கு, 203 ரூபாயாக இருந்தது. வெளிச்சந்தையில் அப்போது ஒரு டாலர் 240 வரை இருந்தது. அதனால் கள்ளச்சந்தை முறையிலே டாலரை மாற்றுவது அதிகரித்தது. இதனால் ஹவாலா பரிமாற்றம் தீவிரமாகியிருந்தது.

தற்போது, இலங்கை மத்திய வங்கியின் ஒரு டாலர் விலை, 340 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பெரிய மாற்றம் என்றாலும் வெளிச்சந்தையில் ஒரு டாலர், 450 ரூபாய் வரை உள்ளதாக அறிகிறேன்.

மற்றொரு சீர்திருத்தம், வங்கி வைப்பு நிதிக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, 7 சதவீதமாக இருந்த வட்டி இப்போது, 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வார் என எதிர்பார்க்கிறது அரசுக் கடனுக்கான வட்டியும் ஒன்பதிலிருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம், சிக்கலை தீர்த்து பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கிறது அரசு.

கேள்வி: சர்வதேச நிதி நிறுவனத்தில் இலங்கை எதிர்பார்க்கும் கடன் தொகை எவ்வளவு?

அமிர்தலிங்கம்: கடன் தொகையாக 4 பில்லியன் டாலர் வரை இலங்கை எதிர்பார்க்கிறது. ஆனால், ஐஎம்எஃப் , 2 பில்லியன் வரை வரைதான் வழங்கும். அதுவும் ஒரே தவணையில் வழங்காது. பல தவணைகளில் பிரித்து வழங்கும். அந்த நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்துதான் அடுத்த தவணை நிதியை விடுவிக்கும். இது போன்ற சிக்கலான சூழலை இலங்கை அரசு எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival