Read in : English
தற்போது அதிகாரப்பூர்வமாகத் திவாலாகிவிட்ட இலங்கையின் அரசியல் நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. பொது மக்களிடமிருந்த புகழைக் கெடுத்துக் கொண்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் அவரது குடும்பமும் அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரக்தியும் கோபமும் கொண்ட இளைய தலைமுறையினரின் கோரிக்கையின் சத்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கோத்தபய ராஜபக்சவும் அவரது குடும்பமும் நாடுகடத்தப்பட வேண்டும்; அவ்வளவுதான்! அதுவரை தங்களது போராட்டக் குரல்கள் முடியப்போவதில்லை என்று போராடுபவர்கள் போராளிகள் உரக்கச் சொல்கிறார்கள்.
இந்த மாதிரியான பொதுமக்கள் எழுச்சி இலங்கை இதுவரை காணாதது. ஆட்சியாளர்கள் தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு வேகமாகத் தீர்வுகளைக் கொடுக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். இல்லை என்றால் மூட்டைமுடிச்சுகளோடு அவர்கள் வெளியேற வேண்டியதுதான்.
இது போதாது என்று, இப்போது நாட்டிலிருக்கும் மகாநாயகர்களின் ஒருமித்த குரல் வேறு ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இலங்கையிலிருக்கும் நிகாயாக்கள் என்றழைக்கப்படும் மூத்த புத்த மதகுருக்கள்தான் அந்த மகாநாயகர்கள்.
தங்களுக்குப் பிடித்த அரசியல்வாதிகளுக்குச் சார்பாக பெரும்பான்மை சிங்கள புத்தசமயத்தினரின் அரசியல் கண்ணோட்டத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவது இந்தப் புத்த பிட்சுகள் என்று இலங்கைச் சரித்திரம் சொல்கிறது. இலங்கை ராணுவத்தில் பணிசெய்து லெஃப்டினெண்ட் கர்னலாக ஓய்வுபெற்றவர் கோத்தபய ராஜபக்ச. அரசியலிலும் ஆட்சியிலும் அனுபவம் இல்லாத அவரை இலங்கையின் செயல் ஜனாதிபதியாக ஏற்றிவைத்ததில் புத்தபிட்சுகளுக்கு பெரும்பங்கு உண்டு.
தங்களுக்குப் பிடித்த அரசியல்வாதிகளுக்குச் சார்பாக பெரும்பான்மை சிங்கள புத்தசமயத்தினரின் அரசியல் கண்ணோட்டத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவது இந்தப் புத்த பிட்சுகள் என்று இலங்கைச் சரித்திரம் சொல்கிறது.
தற்போதைய அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் எல்லாத் தரப்பினரும், குறிப்பாக படித்த இளைஞர்களும், தொழில்முறை ஊழியர்களும், ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்கட்சி எதையும் சாராத அவர்களின் போராட்டத்தில் தற்போது அரசுக்கெதிரான புத்தபிட்சுகளும் குதித்துவிட்டதால் ஆட்சியாளர்களுக்குப் பிரச்சினை மேலும் தீவிரமாகிவிட்டது.
தாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமம் என்று புத்த பிட்சுகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். புதிய அரசையும், புதிய பிரதமரையும் நியமிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று. ஆனாலும் தேசத்தின் வெறுப்புக்கு ஆளான ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு அவர்கள் கேட்கவில்லை.
1948இல் பிரிட்டனிமிருந்து இலங்கை விடுதலை பெற்றபின்பு, புத்தபிட்சுகள் இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தேசத்தின் ஒன்றுபட்ட நிலை, புத்தமதத்தின் உயர்வு ஆகிய பிரச்சினைகளில் அவர்களின் குரல் ஓங்கியே ஒலிக்கிறது. பெரும்பான்மை சிங்களவர்கள், தேரவாதப் புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
Ðபல ஆண்டுகளாகப் புத்தபிட்சுகள் அரசியலில் ஈடுபடுவது மிதவாத சிங்களப் புத்தபிட்சுகளுக்குக் கவலை அளிக்கிறது. ஏனென்றால் மரபார்ந்த புத்தமதக் கோட்பாடு உலகப்பற்றுகளையும் கவலைகளையும் துறந்திடச் சொல்கிறது.
எனினும் அரசியலில் தாங்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டை புத்தபிட்சுகள் நியாயப்படுத்துவதற்கு மதத்தின் தத்துவ, இறையியல் கோட்பாட்டில் வழியும் இருக்கிறது. சமுதாயத்தை நல்லதோர் அறவழியில் கொண்டு செல்வது தங்கள் கடமை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் இலங்கையின் பௌத்தத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தேசியவாதம் எப்போதுமே படுபயங்கரமான அழிவை உண்டாக்கியிருக்கிறது. தேசியவாத ‘சிங்கள பௌத்த’ பேரினவாதம் மற்றவர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை, சுவிஷேச கிறித்துவர்களை, அச்சுறுத்தம் ஆயுதமாக மாறியிருக்கிறது.
இலங்கையில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து சிங்களப் பௌத்தம் நவீன அரசியலுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் புத்தபிட்சுகள் தேர்தல்களில் போட்டியிடவில்லை என்றாலும், தேர்தல் அரசியலில் ஈடுபட அவர்கள் தவறியதில்லை. தேர்தல் பரப்புரைகளின் ஓரங்கமாகவே அவர்கள் செயல்பட்டார்கள்.
சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பு 1947-இல் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் புத்தபிட்சுகளின் பெரிய படையொன்று ‘லங்கா சம சமாஜ பார்ட்டி (எல்எஸ்எஸ்பி) என்னும் பெரிய ட்ராட்ஸ்கியிஸ்ட் (மார்க்ஸிசத்தின் ஒருபிரிவு) கட்சிக்குக் கடுமையாகப் பரப்புரை செய்தது. மற்றொரு புத்த பிட்சுகளின் குழு ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) என்னும் மத்திய வலதுசாரிக் கட்சியை ஆதரித்தது.
சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய முக்கிய புள்ளிகள் டி.எஸ். சேனநாயக்கே தலைமையிலான வலதுசாரிக் கட்சியான யூஎன்பியின் உறுப்பினர்கள். அவர்கள் அந்த முதல் தேர்தலில் போட்டியிட்டார்கள். எதிர்முகாமில் இருந்தவை எல்எஸ்எஸ்பி, போல்ஷிவிக் லெனினிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் சிலோன், சிலோன் இந்தியன் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் மற்றும் சில தனி வேட்பாளர்கள் கூட்டமும்.
தேர்தலில் சேனநாயகாவின் யூஎன்பியால் பெரும்பான்மை அடைய முடியவில்லை. ஆனால் தமிழ்ப் பிரதேசங்களில் பெரும்பாலான தொகுதிகளை வென்ற ஆல் சிலோன் தமிழ் காங்கிரஸின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்தது யூஎன்பி.
1956-இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் அரசியல் ரீதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். ஆட்சியிலிருந்த யூஎன்பிக்கு சவால்விட்ட தேர்தல் இது. அந்தச் சவாலை விடுத்தவர் யூஎன்பியில் முன்பு இருந்தவரும், பாராளுமன்றத் தலைவராக செயல்பட்டவருமான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக தான்.
பல்வேறு கருத்து வேற்றுமைகளின் காரணமாக பண்டாரநாயக யூஎன்பி அரசிலிருந்து விலகித் தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியை (எஸ்எல்எஃப்பி) 1951இல் நிறுவியிருந்தார்.
ஏற்கனவே மேட்டுக்குடி பூர்ஷ்வாக் கட்சியான யூஎன்பியால் ஒதுக்கப்பட்டு விட்டோம் என்று உணர்வு கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தினருக்கு சுதந்திரக் கட்சியின் தேசியவாதக் கொள்கை பிடித்துப்போனதால், அந்தக் கட்சி இலங்கையின் அரசியல் அரங்கில் இரண்டாவது புகழ்பெற்ற கட்சியாக வளர்ந்தது.

(Photo credit: Gotabaya Twitter page)
பண்டாரநாயக, மார்க்ஸிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றுதிரட்டி ஓர் அதிகாரமிக்க கூட்டணியை உருவாக்கினார்; அந்தக் கூட்டணிக்கு ‘மகாஜன ஏக்சத் பெரமுனா’ (எம்ஈபி) என்று பெயரிடப்பட்டது. பிறப்பால் ஞானஸ்நானம் பெற்ற கிறித்துவராக இருந்த போதிலும், 1956-ஆம் ஆண்டுத் தேர்தலில் பண்டாரநாயக, சிங்கள பௌத்த தேசிய பேரினவாதம், சமதர்மம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பரப்புரை செய்து பிரதமராக முயன்றார்.
புத்தபிட்சுகள் திரட்டிய அரசியல் சக்திகளின் துணையோடு, பண்டாரநாயக அந்தத் தேர்தலில் யூஎன்பியைத் தோற்கடித்துப் பெரும்வெற்றி அடைந்து, சுதந்திர இலங்கையில் நான்காவது பிரதமரானார்.
அன்றிலிருந்து இலங்கைச் சுதந்திரக் கட்சி தன்னை புத்தமதத்தின் புரவலராக அறிவித்துக் கொண்டது. அதற்கு இப்போது சிங்கள பௌத்தம் என்று பெயர். அடிமட்டத்து சிங்கள புத்தமதத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கு அந்தக் கட்சி சமூக, அரசியல் செல்வாக்கு கொண்ட புத்தபிட்சுகளையே நம்பியிருக்கிறது.
20-ஆம் நூற்றாண்டின் மத்திம காலத்திற்குள், புத்தபிட்சுகள் இலங்கையின் மையநீரோட்ட அரசியலில் ஆழமாக வேரூன்றி விட்டனர்.
இலங்கையில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கினால் அவர்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் விருப்பப்படுவது தவிர்க்க முடியாதது. இன்று இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் அவர்கள் பிரிக்க முடியாத ஓரங்கமாகத் திகழ்கின்றனர்.
1987ஆம் ஆண்டு ஜுலையில் கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர் புத்தபிட்சுகள். இதுதான் இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் புத்தபிட்சுகள் கொண்ட தீவிரமான ஈடுபாட்டின் விடியல்காலம்.
பின்பு 2004-இல் ஜதிகா ஹேலா உறுமயா கட்சி (ஜேஎச்யூ) தொடங்கப்பட்டது. நடுத்தர வகுப்பு பாரம்பரியவாதிகளாலும், புத்தமத இளைஞர்களாலும் ஆதரிக்கப்பட்ட கட்சி இது. கொலன்னாவே சுமங்கலா, உடுவே தம்மலோகா, எல்லவாலா மேதனந்தா, ஓமல்பே சோபிதா, மற்றும் அதுரலியே ரதனா தெரோஸ் ஆகியோர் கட்சியின் நிறுவன உறுப்பினர்கள்.
ஆல் ஐலண்ட் ஆர்கனைசேஷன் உட்பட இலங்கை மிதவாத புத்தபிட்சுகள் பாராளுமன்ற அரசியலில் புத்தபிட்சுகள் ஈடுபடுவதைக் கண்டித்தனர். ஆனால் ஜேஎச்யூ கட்சியின் கண்டனத்தையும் கவலையையும் புறந்தள்ளிவிட்டு 2004ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் புத்தபிட்சுகளை வேட்பாளர்களாக நிறுத்தியது. மொத்தம் 225 தொகுதிகளில் ஜேஎச்யூ ஒன்பதை வென்றது.
அன்றிலிருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஜேஎச்யூ ஈடுபட்டது. அவற்றில் ஒன்றுதான் அதிதீவிரமான, அறநெறி மீறிய, தந்திரமான மதமாற்றங்களைத் தடைசெய்த மசோதா. சுவிஷேச கிறித்துவக் குழுக்கள் ஈடுபட்டிருந்த மதமாற்ற முனைப்புக்கு எதிரான முயற்சியாக இது கருதப்பட்டது. கிறித்துவக் குழுக்களில் சிலர், இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களோடு தொடர்புடைய வெளிநாட்டார்கள்.
இப்போது பிரதமராக இருக்கும் மஹிந்த ராஜபக்சவை 2005-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேஎச்யூ ஆதரித்து வெற்றிபெற வைத்தது. அதைத் தொடர்ந்து 2007-இல் ஜேஎச்யூ அதிகாரப்பூர்வமாக ராஜபக்ச அரசில் அங்கம் வகித்தது. ஜேஎச்யூவில் இருந்த ஒரு புத்தபிட்சு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சாமான்யரான சம்பிக்கா ரணவாகா என்பவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், மந்திரி ஆகவும் வழிசெய்தார். அந்த ரணவாகா இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்.
புத்தபிட்சுகளின் அரசியல் ஈடுபாட்டால் மஹிந்தா ராஜபக்சவின் அரசியல் பாசறை பெரிதும் பயனடைந்தது. பிட்சுகள் ராஜபக்ச தொண்டர்கள் ஆயினர்; அதனால் நாட்டிலுள்ள விகார்கள் எல்லாம் ‘ராஜபக்ச அரசியலின்’ மேடைகள் ஆயின.
புத்தபிட்சுகளின் அரசியல் ஈடுபாட்டால் மஹிந்தா ராஜபக்சவின் அரசியல் பாசறை பெரிதும் பயனடைந்தது. பிட்சுகள் ராஜபக்ச தொண்டர்கள் ஆயினர்; அதனால் நாட்டிலுள்ள விகார்கள் எல்லாம் ‘ராஜபக்ச அரசியலின்’ மேடைகள் ஆயின; இன்னும் அப்படித்தான் செயல்படுகின்றன.
2012-இல் போடு பாலா சேனா (பிபிஎஸ்) என்ற கட்சி வலதுசாரிக் கட்சியான ஜேஎச்யூ-விலிருந்து பிரிந்து உருவானது. அதிதீவிரமான சிங்கள பௌத்தத் தேசிய பேரினவாதத்தை தன்கொள்கையாக பிபிஎஸ் தூக்கிப் பிடித்தது. சர்ச்சைக்குரிய புத்தபிட்சு கலகோடா அத்தே ஞானசாரா அந்தக் கட்சியின் தலைவர். தீவிர மதவாதம் பேசிய பர்மா புத்தபிட்சு விராதுவைப் போல தன்னை உருவாக்கிக் கொண்டவர் இந்த ஞானசாரா.
பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக சித்தாந்தங்களை எதிர்த்தது ஞானசாராவின் தலைமையிலான பிபிஎஸ். தன் கொள்கையோடு ஒத்துப்போகாத, அரசியல் ஆர்வமில்லாத, மிதவாத புத்தபிட்சுகளை அவர் கடுமையாக நிந்தித்தார்.
தங்களை இலங்கைப் புத்தமதத்தின் காவலர்கள் என்று அறிவித்துக்கொண்ட சுயபாணியிலான பிபிஎஸ் கட்சியினர் ‘நிஜமான’ சிங்கள அடையாள சித்தாந்தத்தை மற்றவர்கள் மீது திணிப்பதிலே குறியாக இருக்கிறார்கள். ஞானசாராவின் வெளிப்படையான தொல்லை நாட்டிலுள்ள இனம், மதம் சார்ந்த சிறுபான்மையர்களை, குறிப்பாக முஸ்லீம்களையும், சுவிஷேச கிறித்துவர்களையும், துன்பப்படுத்தியது.
தேசத்திற்கும் மக்களுக்கும் செய்யும் சேவையாக அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதலும் புத்தபிட்சுகள் தரவேண்டும். அத்துடன் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2013-இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிபிஎஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அதன்பின் தீவிரவான மதக்கொள்கை கொண்ட புத்தபிட்சுகளும், பிபிஎஸ் கட்சியினரும் மற்ற மதத்தினரோடு தகராறு வைத்துக் கொள்வதைத் தவிர்க்குமாறு ஓர் அறிக்கை ஜனாதிபதி அலுவலத்திலிருந்து வந்தது. ஆனால் இந்த அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பிபிஎஸ் ஆதரவாளர்களின் மொழியான சிங்களத்தில் வெளியாகவில்லை.
ஆங்கிலம் பேசும் மக்களுக்கும், உலக ஊடகங்களுக்கும் வெற்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் தொல்லைப்படுத்தும் ஞானசாராவிற்கு ரகசியமான உதவியை ராஜபக்ச கொடுக்கிறார் என்ற கருத்து பின்பு உருவானது.
இலங்கையின் ஜீவத்துடிப்புள்ள ஜனநாயக அரசியல் அமைப்பு பிபிஎஸ் போன்ற தீவிரவாத விளிம்புநிலைக் குழுக்களை அனுமதிக்காது என்றும், அதனால் அவர்களின் அதிதீவிர நோக்கங்களும் தாக்குப்பிடிக்காது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
முன்னாள் ஜேஎச்யூ உறுப்பினரான வென்.டாக்டர்.ஓமல்பே சோபிதா தேரா, புத்தபிட்சுகள் பாராளுமன்றத்தில் நுழைவதற்கான நேரம் வந்துவிட்டது என்று 2004இ-ல் சொன்னார். இன்று அவரே சொல்கிறார், புத்தபிட்சுகள் தேசத்திற்குச் சேவை செய்ய தவறிவிட்டதால், அவர்கள் அரசியலை விட்டு விலகவேண்டும் என்று. அரசியலில் தலையிடும் புத்தபிட்சுகளின் மீது தடைகள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தேசத்திற்கும் மக்களுக்கும் செய்யும் சேவையாக அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதலும் புத்தபிட்சுகள் தரவேண்டும். அத்துடன் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் அவர்கள் பொறுப்பாக நடந்துகொண்டதால் இந்த மாதிரியான தடைகள் அப்போது தேவையில்லாமல் இருந்தன.
அரசியலில் ஈடுபட்ட புத்தபிட்சுகளுக்கு கடும் எதிர்ப்பு புத்தபிட்சு ஞானசாராவின் வடிவில் வந்துவிட்டது. அவரது மத உணர்வற்ற போக்கும் நடத்தையும் மிதவாத, சாதாரண புத்தமதத்தினருக்கும், சங்கா சகோதர இனத்தினருக்கும் பெரியதோர் தர்மசங்கடத்தைக் கொடுத்துவிட்டன. ஆதலால் பாராளுமன்ற அரசியலில் புத்தபிட்சுகள் வகித்த பங்கு பெரிதும் சரிந்துவிட்டது. இப்போது பாராளுமன்றத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக அதுரலியே ரதனா தேரா என்னும் ஒரே ஒரு புத்தபிட்சு மட்டுமே இருக்கிறார்.
Read in : English