Read in : English
தமிழ்நாட்டில் 1994, 1995ஆம் ஆண்´களில் சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது, அவரது தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து, ஆளுநர் சென்னாரெட்டி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. மாநில அரசு அனுப்பிய நீட் மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்களை கிடப்பில் போட்டி வைத்திருப்பதைக் கண்டிக்கும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுகவும் அதன் கட்டணிக் கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
“வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான காலம் நெருங்குகிறது. ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து பிறகு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும். எனவே, முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நானும், அமைச்சர் மா.சுப்ரமணியனும் ஆளுரை சந்தித்து, இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறிப்புப் பேசினோம். ஆனால், இதனை குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்புவது குறித்து அவர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை, சட்டமன்றத்தின் மாண்மை பாதிப்பதால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம். முதல்வர் பங்கேற்கமாட்டார்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதை செய்வதற்கு காலவரம்பு ஏதும் இல்லை என்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு அதனை இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆளுநர் ரவி, அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றதிலிருந்தே., 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் சப்தமில்லாமல் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அதன் முதல் கட்டம், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிய மசோதாவை அவர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதுகுறித்த கடும் கோரிக்கைகளும் போராட்டங்களும் வெடித்த சூழ்நிலையில், அதனை, ஏற்க முடியாததற்கான காரணங்களைக் கூறி திருப்பி அனுப்பினார். அதையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி அதே மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இரண்டாவது முறை மாநில அரசு அனுப்பும் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அனுப்ப அதிகாரம் இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இதை செய்வதற்கு காலவரம்பு ஏதும் இல்லை என்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு அதனை இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆளுநர் ரவி, அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில், இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்து வலியுறுத்துவதற்காக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். அதன் பிறகும், மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டபாடில்லை.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான மசோதா, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து 5 உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான சட்டத்திருத்த மசோதா-, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்டத் திருத்த மசோதா. ஆகிய மூன்று மசோதாக்களும் திமுக ஆட்சியில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளவை.
மீன்வள பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வழிசெய்யும் மசோதா-, கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வழிசெய்யும் மசோதா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் பொதுத்தமிழை சேர்க்க வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட மசோதா, மாநில சட்ட ஆணைய பரிந்துரைப்படி சில சட்டங்களை ரத்து செய்யும் மசோதா-, சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கக் கூடிய தேர்வு கமிட்டியை தேர்வு செய்வது தொடர்பான சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழகத்தைப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான சட்டத்திருத்த மசோதா உள்பட அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான மூவர் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை ஆளுநர் ரவி நிராகதித்துவிட்டார். பதவிக்காலம் முடிந்துள்ள தற்போதைய துணைவேந்தர் சுதா சேஷய்யனின் பதவிக் காலத்தை இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளார். அத்துடன், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு குழு அமைக்கவும், அந்த குழுவின் மூலம் புதிய விண்ணப்பங்களை பெற்று துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவும் தமிழக அரசை, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை அடுத்து வரும் மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் தொடரலாம்.
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்வதன் வாயிலாக, இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத வேண்டியது வரும். ஆளுநர் அனுப்பி வைத்தாலும், குடியரசுத் தலைவர் உடனே அனுமதி தந்துவிடுவாரா என்பது வேறு விஷயம்.
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்வதன் வாயிலாக, இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத வேண்டியது வரும். ஆளுநர் அனுப்பி வைத்தாலும், குடியரசுத் தலைவர் உடனே அனுமதி தந்துவிடுவாரா என்பது வேறு விஷயம்.
இதற்கிடையே, மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை (கியூட்) ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.
இதற்கிடையே, மாநில அரசு நிறைவேற்றும் மசோதாவை முடிவெடுப்பதற்கான காலவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். தமிழக ஆளுநர் ரவியைத் திரும்ப பெற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
மேற்கு வங்கம், தில்லி போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோதும் ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு கொடுத்த குடைச்சல்களையும் அதற்கு மாநில அரசுகளின் எதிர்வினைகளையும் பார்த்தோம்.
2019ஆம் ஆண்டில் தெலங்கானாவில் குடியரசு தினவிழாவையொட்டி அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடியேற்ற நிகழ்வை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். சட்டப்பேரவையில் அரசு தயாரித்துத் தந்தை உரையை வாசிக்காமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து தானாக சேர்த்துப் பேசினார். இதையடுத்து, தெலங்கானாவில் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரை இன்றி நடத்தி ஆளுநருக்கு பதிலடி கொடுத்தது தெலுங்கானா அரசு.
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பை பொது வெளியில் தெரிவிக்க திமுக பயன்படுத்திய புதிய ஆயுதம்தான் திராவிட மாடல் பாணியில் தேநீர் விருந்து புறக்கணிப்பு. ஏப்ரல் 14ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன. பிரச்சினையைப் பொதுவெளியில் கொண்டு வருவதற்காக திமுக செய்துள்ள முயற்சி இது.
“மாநில மக்களின் நலனை முன்னிருத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும்பொழுது மக்களும் மாநிலமும் வளம் பெறும் என்றும் உங்களுக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமுகமாகவும் இருக்குமென்றும் நான் உறுதியாக நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின், ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதற்கெல்லாம் தமிழக ஆளுநர் மசிந்துவிடுவதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. மத்திய அரசின் கண்ணசைவு கிடைக்கும் வரை அவரிடமிருந்து சாதகமாக எதையும் தமிழக அரசு எதிர்பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. வருங்காலத்தில் தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே உள்ள மோதல் மேலும் அதிகரிக்கக்கூடும்.
Read in : English