Read in : English

Share the Article

சித்திரை ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 13 அன்று தமிழ்த் திரையை ஆக்கிரமிக்கவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் வரவிருக்கும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் பேரளவில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். படம் வெளியாகும் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுவருகின்றன. அஜித் நடித்த வலிமை படத்தின் ஒரு நாள் வசூலை பீஸ்ட் படம் முறியடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வலிமை வசூலை முறியடித்துவிடுமோ பீஸ்ட் என்ற பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பீஸ்ட் படத்தை விநியோகிக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வலிமை படத்தையும் விநியோகித்திருக்கிறது என்பதை மறந்துவிடலாகாது.  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை மாறன் சகோதரர்கள் நடத்துகிறார்கள்; ரெட் ஜெயிண்டை நடத்திவருபவர் உதயநிதி ஸ்டாலின். தமிழில் உருவாகும் பெரிய படங்களில் பலவற்றை இவையே தயாரிக்கின்றன; வெளியிடுகின்றன. பீஸ்ட் படத்துடன் மோதும் கே.ஜி.எஃப்.2 படம் தமிழ்நாட்டில் ஒருநாள் கழித்து ஏப்ரல் 14 அன்றுதான் வெளியாகிறது.

பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு பெரிய அளவில் நடத்தப்படவில்லை. பொதுவாக, தனது படத்தின் ஆடியோ வெளியீட்டில் தான் நினைப்பதைப் பேசி அதன் வழியே தனது ரசிகர்களைக் கவர்ந்து படத்தை வெற்றிபெற வைக்கும் உத்தியை நடிகர் விஜய் கையாண்டுவருகிறார். இது ஒன்றும் இது உத்தியன்று. ஏற்கெனவே இந்த உத்தியைப் பயன்படுத்திப் பல வெற்றிகளைப் பெற்ற முன்னுதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். இப்படியொரு சூழலில் பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறாததற்கான காரணம் குறித்துச் சமூக வலைத்தள ரசிகர்கள் முணுமுணுத்தார்கள். உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சிக்காக பீஸ்ட் படம் தொடர்பான செய்திகள்  அடக்கிவாசிக்கப்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இத்தகைய விமர்சனத்தில் எந்த முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், என்னதான் அரசின் ஆதரவும் தந்தையின் ஆதரவும் இருந்தாலும் ஒரு நடிகர் நட்சத்திரமாக மாறுவது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. மேலும், பீஸ்ட் பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதனால் லாபமீட்ட உள்ளவை இந்நிறுவனங்கள் தாமே.

Photo Credit : Udhayanidhi Twitter page.

பல பழைய சம்பவங்களை நினைத்துப் பார்ப்பது இப்போதைய சூழலைப் புரிந்துகொள்ள உதவும். கருணாநிதி திரைத் துறையில் கோலோச்சிய காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் தனது மகன் மு.க.முத்துவை நடிகராக்க முயன்றார். பிள்ளையோ பிள்ளை என்னும் படத்தில் அறிமுகமானார் முத்து. அதன் கதை வசனத்தை கருணாநிதி எழுத, படத்தை கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர் இயக்குநர்கள்;  தயாரித்தவர் முரசொலி மாறன். கருணாநிதி முதல்வராக இருந்த 1972 முதல் 1977 வரையான ஆண்டுகளில் சில படங்களில் நடித்தார் முத்து. ஆனால், அவரால் பெரிய நடிகராக உருவாக இயலவில்லை. அதன் பின்னர் தற்போதைய முதலமைச்சரும் கருணாநிதியின் இன்னொரு புதல்வருமான மு.க.ஸ்டாலினும் திரையில் நடிகராகத் தோன்றினார். இப்போது அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகத் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரும் ஒரு பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கவில்லை என்பதே உண்மை.

விஜய் தொடர்பான செய்திகள் அடக்கிவாசிக்கப்படுகின்றன என்ற விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சன் பிக்சர்ஸ்  நிறுவனம் விஜய்யின் நேர்காணலைத் தனது சன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஏப்ரல் 10 அன்று ஒளிபரப்பி படத்தின் புரோமோஷனை அட்டகாசமாக முன்னெடுத்திருக்கிறது.

இத்தகைய திரைச் சூழலில், விஜய் தொடர்பான செய்திகள் அடக்கிவாசிக்கப்படுகின்றன என்ற விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சன் பிக்சர்ஸ்  நிறுவனம் விஜய்யின் நேர்காணலைத் தனது சன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஏப்ரல் 10 அன்று ஒளிபரப்பி படத்தின் புரோமோஷனை அட்டகாசமாக முன்னெடுத்திருக்கிறது. இந்த நேர்காணலில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார் விஜய். இவ்விடத்தில், மு.கருணாநிதி தைத் திங்களின் முதல் நாளான பொங்கல் நாளையே  தமிழ்ப் புத்தாண்டு என்று தொடர்ந்து முன்னிருத்தி வந்தார்  என்பதை நினைவூட்ட வேண்டியதிருக்கிறது. கருணாநிதி திரைத் துறையையும் தனது கொள்கைகளைப் பரப்புவதற்கான கருவியாகவே பயன்படுத்தினார். அதனால்தான் 1977இல் எம்ஜி ஆரிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பின்னர் 13 ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு உரையாடல் எழுதி, தன் இருப்பையும் அரசியல் கொள்கையையும் வலுப்படுத்திக்கொண்டார். ஆனால், அவரது வழித் தோன்றல்கள் திரைத்துறையைக் கொள்கைக் களமாகக் கொள்ளாமல், ஒரு வணிகக் களமாகவே கருதுகின்றன என்றே தோன்றுகிறது.

பீஸ்ட் படத்தைத் தயாரித்திருக்கும் மாறன் சகோதரர்களின் சன் பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்துக்காக நிஜமாகவே ஒரு வணிக வளாகத்தையே உருவாக்கிப் படமாக்கியிருக்கிறது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படம், தனுஷின் நடிப்பில் ஒரு படம், விஜய் சேதுபதியின் நடிப்பில் மற்றொரு படம் என இதன் தயாரிப்பில் இருக்கும் படங்கள் எல்லாமே பெரிய நடிகர்கள் நடிப்பவையே. இதுவரை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் படங்களின் பட்டியலைப் பார்த்தாலே இதன் பெருமை புலப்படும். இதுவரை 29 படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழகத்தின் உச்சநட்சத்திரமாகக் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. பீஸ்ட் தவிர்த்து விஜய் நடிப்பில் வேட்டைக்காரன், சுறா, சர்கார் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை, ஆடுகளம் ஆகிய படங்களும் இந்நிறுவனத்தின் தயாரிப்பே. அண்மையில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட அஜித், விஷால், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் பலரது படங்களைத் தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

எந்த ஒரு துறையிலும் குறிப்பிட்ட ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே முன்னணியில் நின்று பெரிய வளர்ச்சி பெற்றால் பிற நிறுவனங்களது வளர்ச்சி கேள்விக்குறியாகும். எனவே, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய திரைப்பட நிறுவனங்கள் தங்களது ஆதிக்கம் குறித்து சுயபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

ஒரு புறம் விண்ணை முட்டும் வளர்ச்சி சன் பிக்சர்ஸுக்கு என்றால், மற்றொரு புறம் அபார வளர்ச்சியடைந்து வருகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இவரது நிறுவனம் முதலில் தயாரித்த படம் விஜய் நடித்த குருவி. 150 நாள்களுக்கு மேல் ஓடிய இந்தப் படத்தின் வெற்றிவிழா காலஞ்சென்ற இயக்குநர் கே.பாலசந்தரின் தலைமையில் நடைபெற்றது. அடுத்து இந்நிறுவனம் தயாரித்த ஆதவன் படமும் 100 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது. இதன் வெற்றிவிழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் 15 படங்களில் பாதிக்கும் மேலானவை உதயநிதி நடித்தவையே.

தற்போதுகூட, பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படமான மாமன்னன் படத்தை இந்த நிறுவனம் தயாரித்துவருகிறது. இதில் நாயகன் உதயநிதி என்பதையும் படத்தின்  தலைப்புமாமன்னன் என்பதையும் உற்று நோக்குங்கள். 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் திரைப்படத் தயாரிப்பிலும், திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டு வருகிறது. நடிகர் கமல் ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படத்தை விநியோகிக்க இருப்பது இந்த நிறுவனமே. அண்மையில் வெளியான ராதே ஷ்யாம், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்களையும் இந்நிறுவனமே விநியோகித்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டான் படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே விநியோகிக்க இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டில் வெளியான, வெளியாகும் பெரிய படங்கள் பலவற்றின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமே பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பவை வெறும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களல்ல. அவை அதற்கும் மேல். அவை விரும்பினால் தமிழின் முன்னணி நடிகர்களை வைத்துப் படத்தை உடனே தயாரித்துவிட முடியும். அந்த அளவுக்கு செல்வாக்கு உள்ள நிறுவனங்கள் அவை. எந்த ஒரு துறையிலும் குறிப்பிட்ட ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே முன்னணியில் நின்று பெரிய வளர்ச்சி  பெற்றால் பிற நிறுவனங்களது வளர்ச்சி கேள்விக்குறியாகும். எனவே, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய திரைப்பட நிறுவனங்கள் தங்களது ஆதிக்கம் குறித்து சுயபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles