Read in : English

லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் 27ஆம் தேதி நடந்த ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்ற வில் ஸ்மித் மேடையேறி தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை அறைந்த சம்பவம் சில வினாடிகளிலே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. காணொளிகளும், கருத்துகளும் நிறைந்து வழிந்தன. விருது பெற்ற சிறந்த படமான ‘கோடா’வைப் பற்றியோ, பரிசுகள் பெற்ற ஆளுமைகளான ஜெஸிகா சாஸ்டெயின், ஜேன் காம்பியன் ஆகியோரைப் பற்றியோ எந்தவிதமான உரையாடல்களும் இல்லை.

வில் ஸ்மித் ஏன் கிரிஸ் ராக்கை அறைந்தார்? இந்தக் கேள்விதான் ஊடகங்களைத் துளைத்தெடுத்தது. ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலையைப் பற்றி தொகுப்பாளர் அடித்த ஒரு கிண்டல்தான் இந்தக் களேபரத்திற்குக் காரணம்.

‘கிங் ரிச்சர்ட’ படத்தில் நடித்ததற்காக விருது பெற்ற வில் ஸ்மித் பொதுமேடையில் நிகழ்த்திய அந்த வன்முறை நிகழ்வு, அவருக்கு அவர் நடித்த திரைப்படம் கொடுக்காத உலகப்புகழை ஒரே இரவில் பெற்றுத் தந்தது.

பொதுவெளி வன்முறை விரும்பத்தக்கது அல்ல என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் அதேசமயம், ஒருவரின் உருவத்தைக் கேலி செய்து கிண்டலடிப்பதை கிண்டலடித்து அதைத் தூண்டியதை யாரும் மன்னிக்கமுடியாது. அலோபேசியா நோயால் தலைமுடி இழந்த ஜடா பிங்கெட்டைப் பற்றி விளையாட்டுக்காகக்கூட அந்தத் தொகுப்பாளர் கிண்டலடித்து இருக்கக்கூடாது.

உருவத்தைக் கேலி செய்வது என்பது நிச்சயமாக சமூக நன்னடத்தை அல்ல. ஆனால், தமிழ் திரைப்படத்தில் நீண்டகாலமாகவே காமெடி என்ற பெயரில் சில பிரபலமான நடிகர்களே ஆடும் கூத்து அது.

உருவத்தைக் கேலி செய்வது என்பது நிச்சயமாக சமூக நன்னடத்தை அல்ல. ஆனால் தமிழ் திரைப்படத்தில் நீண்டகாலமாகவே காமெடி என்ற பெயரில் சில பிரபலமான நடிகர்களே ஆடும் கூத்து அது. திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்கள் ஒருவரின் உருவத்தை கேலி செய்து மக்களைச் சிரிக்க வைக்கிறார்கள் என்றால் பட்டிமன்றங்களில் தமிழ் அறிந்த பேச்சாளர்களும் அதை அப்படியே நகலெடுக்கிறார்கள் என்பது அவலம்.

தமிழ் சினிமாவில் சில பாத்திரங்கள் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, தமிழாசிரியர் பாத்திரம். யாருக்கும் பொருந்தக்கூடிய ஒரு சிரிப்பு அட்சய பாத்திரம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட வேட்டி சட்டை அணிந்து நெற்றி நிறைய திருநீறு இட்டு ஒரு தமிழ்ப் பேராசிரியராக நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் பெரும்பாலும் அவர் காமெடி பண்ணியிருக்கிறார். கதர்வேட்டி, கதர்ச்சட்டை, திருநீறு, தமிழறிவு ஆகியவை எல்லாம் உருவத்தைக் கேலி செய்வதற்கான குறியீடுகளாக மாறி நீண்ட காலமாயிற்று. ஞாபக மறதியில் வேட்டி அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் தெருவில் வலம் வந்து சிரிப்பு மூட்டியிருக்கிறார் (’தர்மத்தின் தலைவன்’-1988).

’ஈரமான ரோஜாவே’ (1991) படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி கல்லூரி தமிழ்ப் பேராசிரியராக நிறையவே சிரிக்க வைப்பார். ஒரு மாணவன் அவருக்குத் தெரியாமல் எரியும் சிகரெட்டை அவர் விரலில் செருகிவிட்டு ஓடிவிட பிரின்ஸிபால் பார்த்து அவரை அறைக்குள் கூப்பிட்டுத் திட்டும் காட்சியை வடிவமைத்த இயக்குநர், ஒரு தமிழாசிரியர் அவ்வளவு மடையராக இருப்பாரா என்ற அறிவுப்பூர்வமான கேள்வியைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பாத்திரங்கள் நேரடியாக விசித்திர உருவம் கொண்டோரைக் கேலி செய்வது ஒரு ரகம்; பார்வையாளர்கள் கேலி செய்து சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை உருவத்தை கட்டமைப்பது இன்னொரு ரகம். இரண்டாவது ரகத்தைச் சார்ந்ததுதான், ’திருவிளையாடல்’ (1965) படத்தில் நாகேஷ் நடித்த தருமிப் பாத்திரம். சிவபெருமான் தான் எழுதிய கவிதையைத் கொடுத்து தருமி எழுதியது போல அரசவையில் படிக்கச்செய்து ஆடிய திருவிளையாடலைப் பார்க்கும் ஒருவருக்கு, புலவர் தருமி சங்க காலத்தில் இப்படித்தான் கிறுக்குத்தனமாக வாழ்ந்திருப்பாரா என்றொரு சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது. ‘போங்கப்பா அரசருக்கே புரிந்துவிட்டது; இடையில் நீ வேறு”; “அரசரிடம் சொல்லிவிடுங்கள்; பரிசு வேண்டாம்,” என்றெல்லாம் வசனம் பேசிவிட்டு தருமி அரசவைவை விட்டு கிறுக்கன் போல ஓடிப்போகும் காட்சிக்குள் ஒளிந்திருப்பது இரண்டு வக்கிரங்கள். 1. தமிழ் திரைப்பட உலகின் நனவிலி மனதில் உறைந்துபோயிருக்கும், தமிழ்ப் புலவன் என்பவன் நகைச்சுவைக்குரிய ஒரு கேலிச்சித்திரம் என்ற படிமம். 2. மெலிந்த உருவமும், ஒட்டிய வயிறும், குடுமித்தலையும் கொண்ட ஓர் ஆணின் உருவம் நகைச்சுவைக்குரியது என்ற சிந்தனை.

இந்த உருவக்கேலி நகைச்சுவைக் கருத்து மரபின் தொடர்ச்சியாகத்தான் எம்.எஸ். பாஸ்கர், ‘சந்தோஷ் சுப்ரமணியன்’ (2008) படத்தில் ஒரு தமிழ்ப் பேராசிரியராக கூத்தபெருமான் என்ற பெயரில் வருவார். சந்தானமும் மற்ற மாணவர்களும் அவரின் வழுக்கைத் தலையை வைத்து அவரை ‘சறுக்குமரம்’ என்றழைப்பார்கள். ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலையைப் பார்த்து ஜோக் அடித்த அந்த ஆஸ்கார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்தான் நினைவுக்கு வருகிறார். அந்தப் படத்தில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பேராசிரியரான பாஸ்கர் கதாநாயனுக்காகக் கதாநாயகி வீட்டுக்குத் தூதுபோவார் என்பதுதான்.

தமிழ் சினிமா கொச்சைப்படுத்திய இன்னொரு கௌரவமான இனம் போலீஸ்காரர்கள். ‘சிரிப்பு போலீஸ்’ என்னும் நகைச்சுவைக் கருத்தாக்கத்தைப் பெற்றெடுத்த பெருமை கொண்டது சினிமா.

தமிழ்சினிமா கொச்சைப்படுத்திய இன்னொரு கௌரவமான இனம் போலீஸ்காரர்கள். ‘சிரிப்பு போலீஸ்’ என்னும் நகைச்சுவைக் கருத்தாக்கத்தைப் பெற்றெடுத்த பெருமை கொண்டது சினிமா. கேட்டால் எல்லாம் நகைச்சுவைக்காகத்தானே என்று பதில்வரும். கடுமையான பணிச்சுமையும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட போலீஸ்காரர்களை நையாண்டி செய்து ஏகப்பட்ட தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன. காய்கறிக் கடைக்காரனிடம் மாமூல் கேட்கும் போலீஸ்காரனிடம் காசைத் தூக்கிப்போடும் போது, “இதைக்கூட உங்களாலே கேட்ச் பண்ணமுடியல. போலீஸ் டிரெயிங்கில் என்னதான் கத்துக்கொடுத்தாங்க,” என்று சொல்வான் கடைக்காரன். மருதமலை (2007) படத்தில் வரும் இந்த வசனம் எந்தப் போலீஸ்காரரின் மனதையும் நல்ல வேளையாகப் பாதிக்கவில்லை! அதைவிடக் கொடுமை, “ஒரு பிச்சைக்காரன் எப்படி நான் தூக்கியெறிந்த காசைப் பிடிக்கிறான், பாரு,” என்ற வசனம் ’சிரிப்புப் போலீஸ்’ நகைச்சுவையின் உச்சம். வித்தியாசமான மீசையுடன் உருவக்கேலிக்கு ஆளாகும் வடிவேலு சிரிப்புப் போலீஸ் கருத்தாக்க மரபிற்கு உயிர்கொடுத்து உயர்மதிப்பு கொண்ட ஒரு விழுமியத்தின் உயிரைப் போக்கியிருப்பார்.

உருவத்தைக் கேலி செய்து கிண்டலடிக்கும் நகைச்சுவையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த பெருமை கவுண்டமணியைச் சாரும். 1980-களில் ஆரம்பமான டிரெண்ட் அது. ’வைதேகி காத்திருந்தாள்’ (1984) படத்தில் செந்திலைப் பார்த்து அடிக்கடி கவுண்டமணி ‘கோமுட்டி தலையா’ என்று சொல்வார். குள்ளமான, கறுப்பான செந்தில் கவுண்டமணியின் உருவக்கேலிக்கு ஆளாகி மக்களைச் சிரிக்க வைத்தார். உருவக்கேலியின் வெற்றியைத் தொடர்ந்து அந்த இரட்டையர்கள் பல படங்களில் அதே உத்தியைப் பின்பற்றி வெற்றிக்கொடி நாட்டினார்கள். தயாரிப்பாளர்களும் நன்றாகவே கல்லாக்கட்டினார்கள்.

‘சங்கு ஊதும் வயசில உனக்கு சங்கீதான்னு பேரு’ என்று ஒரு மூதாட்டியைப் பார்த்து கவுண்டமணி பேசியதும், ’அடேய் தகப்பா” என்று கவுண்டமணி செந்திலை அழைத்ததும், கறுப்பான தகப்பனை ‘அண்டங்காக்கை’ என்று விவேக் சொன்னதும், ’தாயிற்சிறந்த கோயிலுமில்லை; தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ என்று காலங்காலமாகக் காத்திரமான தமிழ்க் கலாச்சாரம் உயிரெனப் போதித்த விழுமியங்களின் வீழ்ச்சிதான்.

நகைச்சுவை விருந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊன்றுகோலால் நடக்கும் ஒரு விஞ்ஞானியின் கட்டையைப் பார்த்து ‘சைடு ஸ்டாண்ட்’ என்று சந்தானம் அடித்த ஒரு ஜோக் மாற்றுத்திறனாளிகளைக் கோபப்படுத்தியது

இந்த மரபின் தொடர்ச்சியாகத்தான் சந்தானமும், சூரியும், யோகிபாபுவும் இப்போது நகைச்சுவை விருந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊன்றுகோலால் நடக்கும் ஒரு விஞ்ஞானியின் கட்டையைப் பார்த்து ‘சைடு ஸ்டாண்ட்’ என்று சந்தானம் அடித்த ஒரு ஜோக் மாற்றுத்திறனாளிகளைக் கோபப்படுத்தியது. (டிக்கிலோனா -2021)..

சற்று குள்ளமான உருவம், அடர்ந்த சுருசுருளான முடி – இவை யோகி பாபுவின் உருவத்தை வித்தியாசமாகக் காட்டி அவரைப் பிரதானமான காமெடியன் ஆக்கின. ஒரு படத்தில் கரடிப்பொம்மை என்று அவர் அழைக்கப்படுவார். இயக்குநரும் நடிகருமான மனோபாலா பல்லி மூஞ்சி என்று நையாண்டி செய்யப்படுவார்.

இயற்கையிலே சில கோளாறுகளைக் கொண்ட உருவங்களை வைத்து காமெடி பண்ணுவது தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத ஒரு மரபு. தவக்களை, குண்டுமணி, போண்டாமணி, உசிலைமணி போன்றோர்கள் நிறைந்த ஒரு நடிகர்ப்பட்டாளமே இருந்திருக்கிறது, இந்த நகைச்சுவை மரபை முன்னெடுத்துச் செல்ல.

‘பேரழகன்’ (2004) படத்தில் கூனல்முதுகோடு குனிந்துகொண்டே வரும் சூர்யா மிகவும் குள்ளமான ஒரு பெண்ணைப் பார்த்து ’இந்தப் பெண் வேண்டாம்’ என்று வெறுத்து ஓடிப்போகும் காட்சி உருவக்கேலியின் உச்சம். சூர்யாவின் தோற்றத்தைப் பார்த்து விவேக் அடிக்கும் ஜோக்குகள் நாட்டில் மாறுபாடான உருவத்தோற்றம் கொண்டோர்களின் மனதைப் பாதிக்காதா என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

”அஞ்சு இருபதுக்கு நான் போவேன்” என்று ஒரு பெண் சொல்வார்; அவர் சொன்னது அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரத்தைப் பற்றி. உடனே சந்தானம், “ஏன் 500, 1000-க்குப் போக வேண்டியதுதானே,” என்று ஜோக் அடிப்பார். பெண்களை ஒருவர் இதைவிட கேவலமாக மட்டந்தட்ட முடியாது.

இப்படி இரட்டை அர்த்தம், உருவக்கேலி, ஆபாசமான வசனம் என்று சீரழிந்துகிடக்கிறது தமிழ்த் திரைப்பட நகைச்சுவை. சிறப்பான நகைச்சுவைக் காட்சி என்று காலங்காலமாக நினைக்கப்படும் காட்சி என்று ஒன்றைக்கூட தற்போதைய திரைப்படங்களால் தரமுடியவில்லை.

ஆனால் மன்னார் அண்ட் கம்பெனி நகைச்சுவை காட்சிகளுக்காக (கல்யாணப்பரிசு- 1959) ’டணால்’ தங்கவேலு அறுபது ஆண்டுகள் கழித்து இன்றும் நினைக்கப்படுகிறார். ’சிரிப்பு, இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பது நமது பொறுப்பு” என்று பாடிய என்.எஸ். கிருஷ்ணன் (ராஜா ராணி – 1959), ‘சரிதாம்பா’ என்று கெஞ்சும் குரலில் பேசிய காளி என் ரத்தினம் (சபாபதி – 1941), ‘அதான் எனக்குத் தெரியுமே’ (அறிவாளி – 1963) என்று அடிக்கடி சொன்ன டி. பி.முத்துலட்சுமி, ‘அடடா இன்று வெள்ளிக்கிழமையா; நான் வாளைத் தூக்க மாட்டேனே!” என்று ஜகா வாங்கும் டி.எஸ் பாலையா (மதுரைவீரன் – 1956), ‘கடவுள் செக்ரட்டரி மாதிரிபே பேசுவான்,” என்று கிண்டலடித்த எம்.ஆர். ராதா (ரத்தக்கண்ணீர் – 1954), ”நீங்க என்னோட பழைய பேஷண்டா; இருக்க முடியாதே” என்று நுட்பமாக ஜோக் அடித்த நாகேஷ் (ஊட்டிவரை உறவு – 1967), ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்க்ககூடாது’ (போலீஸ்காரன் மகள் 1962) என்று நளினமான நடன அசைவுகளுடன் பாடிய சந்திரபாபு, ஜில்ஜில் ரமாமணியாய் சிவகங்கை மொழி பேசிய மனோரமா (தில்லானா மோகனாம்பாள்-1968) ஆகிய முந்தைய தலைமுறை நகைச்சுவை நடிகர்கள் செவ்வியல் தன்மை பெற்று இன்றும் தமிழ்ப் பொதுப்புத்தியில் நிலைத்து நிற்கிறார்கள். அவர்களின் காமெடியில் ஆபாசமில்லை; உருவத்தைக் கேலி செய்யும் கிண்டல் இல்லை. ஏனென்றால் அன்றய தலைமுறை விழுமியங்களை விட்டுக்கொடுக்காத தலைமுறை. இப்போதைய தமிழ்த்திரைப்படம் கல்லாக்கட்டும் பிரதானமான நோக்கத்தில் தரங்கெட்ட நகைச்சுவையை மட்டுமே அள்ளித் தெளிக்கிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival