Read in : English
ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்து உழவர் சந்தைகள் பற்றிய பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கு ரூ.15 கோடியும் தர்மபுரி, வேலூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிய உழவர் சந்தைகளைத் தொடங்குவதற்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இப்போது மதியம் வரை இயங்கும் உழவர் சந்தைகளை மாலை வரை திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
1999ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை திட்டம், தற்போது 180 உழவர் சந்தைகளாக விரிவடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் போதிய நிதி இல்லாமல் பெரிய வேலைகள் எதுவும் உழவர் சந்தைகளில் நடைபெறவில்லை என அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் திமுக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்பட செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
தற்போது 180 இடங்களில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைகள் எல்லா நகரங்களுக்கும் பேரூராட்சிகளுக்கும் விரிவாக்க படவேண்டும்.
குறுகிய கால திட்டங்கள்
எண்ணிக்கை: தற்போது 180 இடங்களில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைகள் எல்லா நகரங்களுக்கும் பேரூராட்சிகளுக்கும் விரிவாக்க படவேண்டும். இன்மதியில் உழவர் சந்தைகளை பற்றிய ஒரு கட்டுரையில், தமிழகத்தில் 22 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகளும் உள்ள நிலையில் உழவர் சந்தைகள் செயல்பட மிக பெரிய களம் தமிழ் நாட்டில் உள்ளது எனலாம்.
நிலம்: தற்பொழுதுள்ள ஏற்பாட்டில் உழவர் சந்தைகள் உள்ளாட்சி நிர்வாகத்துக்குட்பட்ட அரசு நிலங்களில் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு வரி ஏதும் செலுத்தாத நிலையில் உள்ளாட்சி நிர்வாகம் உழவர் சந்தைக்கென்று வசதிகள் செய்து தர தயக்கம் காட்டுவதும் நடக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர், உழவர் சந்தை ஒன்றுக்கு குடி தண்ணீர் வசதி செய்துதர பெரும்பாடு பட்டதாக கூறுகிறார். மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில் ஆளும் கட்சிகாரர் ஒருவர் தயவால் வேலை நடந்ததாகத் தெரிவிக்கிறார். உழவர் சந்தைகளுக்கென்று தனிப்பட்ட நிலம் நன்மை பயக்கும்.
மக்கள் அணுகுவற்கு ஏற்ற இடங்கள்: இந்த வேளாண் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள ஆறு உழவர் சந்தைகளை வசதியான வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இப்போது செயல்பட்டு வரும் 180 உழவர் சந்தைகளில், மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ளவை சிறப்பாக செயல்படுவதாகவும் ஊருக்கு வெளியே இருப்பவை ஓரளவுக்கே செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், உழவர் சந்தைகள் மக்கள் அணுகும் வசதிகள் உள்ள இடங்களுக்கு மாற்றப்படவேண்டும்.
வருமானம்: சேவை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட உழவர் சந்தைகள் உழவர்களிடமிருந்து கட்டணம் ஒன்றும் வசூலிப்பதில்லை. ஆனால் அவற்றுக்கென்று செலவினங்கள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் உழவர் சந்தையில் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் தராசுகள் முத்திரையிடப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஊதியம் தரவேண்டும். சமீபத்தில் விவசாயிகளின் நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் 1500 ரூபாய் வாடகையும், மகளிர் சுயஉதவி குழுக்கள் நடத்தும் கடைகளில் 1000 ரூபாய் வாடகையும் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான உழவர் சந்தைகளின் வருமானம் 5000 ரூபாயை தாண்டாது என்கிறார்கள் அதிகாரிகள். எனவே, உழவர் சந்தைகளுக்கென்று வருமானம் வருவதற்கான ஆதாரங்கள் வேண்டும்.
பல்வகைப் பொருள்களை விற்பனை செய்தல்: உழவர் சந்தைகள் உழவர்கள் விளைவிக்கும் எல்லாவற்றையும் விற்கவேண்டும். ஆனால் தற்பொழுது அவை பெரும்பாலும் காய்கறி சந்தைகள் மட்டுமே. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், உரங்கள், விதைகள், பழமர கன்றுகள் விற்கும் வசதிகள் 50 உழவர் சந்தைகளில் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவித்திருப்பது அனைத்து உழவர் சந்தைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
பெரிய திட்டங்கள் இல்லாமல் பத்தாண்டுகளைக் கடந்து விட்டாலும், உழவர் சந்தை ஒரு சுயசார்புள்ள திட்டமென்று சொல்லமுடியாது. அரசின் நிதிஉதவி இல்லாமல் அது செயல்படுவது கடினம். நீண்ட கால அடிப்படையில் சுயசார்புள்ள ஒன்றாக அதை மாற்ற வேண்டியது கட்டாயம்.
நீண்டகால திட்டங்கள்
சுயசார்பு: பெரிய திட்டங்கள் இல்லாமல் பத்தாண்டுகளைக் கடந்து விட்டாலும் உழவர் சந்தை ஒரு சுயசார்புள்ள திட்டமென்று சொல்லமுடியாது. அரசின் நிதிஉதவி இல்லாமல் அது செயல்படுவது கடினம். நீண்ட கால அடிப்படையில் சுயசார்புள்ள ஒன்றாக அதை மாற்ற வேண்டியது கட்டாயம். வாடகை, நிகழ்ச்சிகள் நடத்த கட்டணம், உணவுக்கூடங்கள் நடத்தி அதனால் வரும் வருமானம் என்று அதன் வருவாய் ஆதாரங்களை கூட்ட வேண்டும். அது போன்ற ஒரு உழவர் சந்தையை இலங்கையில் கண்டதாக தெரிவிக்கிறார் இயற்கை விவசாயி பாமயன் அவர்கள். சில ஆண்டுகள் முன்பு மதுரை மாவட்ட ஆட்சியாளர் சகாயம் அவர்களும் அது போன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டார். உழவர் சந்தைகளை நிர்வகிக்க தனியான ஒரு துறையை உண்டாக்குவதும் பயனுள்ள ஒன்றாக அமையும்.
நோக்கம்: உழவர் சந்தை என்றழைக்கப்பட்டாலும் விற்பனையாளர்களில் எத்தனை பேர் உண்மையில் விவசாயிகள் என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடக்கும் ஒன்று. விவசாயிகள் விளையவைத்துக் கொண்டுவரும் பொருட்களை விற்கும் வகையிலான ஒன்றல்ல, இப்போதுள்ள உழவர் சந்தைகள் என்கிறார்கள் விவசாயிகள். சுற்றுவட்டாரங்களில் விளையவைக்கும் பொருட்களை உழவர் சந்தைகளில் விற்கவேண்டுமென்றால் காரட், காலிப்ளவர் போன்ற காய்கறிகள் கிடைப்பது எவ்வாறு? மொத்தமாக மத்திய காய்கறி சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி உழவர் சந்தைகளில் விற்பது உழவர் சந்தை என்ற ஒன்றையே கேள்விக்குறியாக்குகிறது என்கிறார் இயற்கை விவசாய ஆர்வலர் பாமயன்.
சந்தையையும் தாண்டி: பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத சிறு நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உழவர் சந்தை என்பது காய்கறி விற்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. வியாபாரம் முடிந்த மாலைநேரங்களில் மக்கள் கூடும் இடமாக அதை மாற்றலாம். உணவு திருவிழாக்கள் நடத்தலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தலாம். விவசாயிகள் வாடிக்கையாளர்களுடன் உரையாடல் நடத்தும் நிகழ்ச்சிகள் வைக்கலாம். வாடிக்கையாளர்களின் தேவை என்னவென்று விவசாயிகள் உணர இது உதவும்.
இயற்கை விவசாயத்தை நோக்கி: எதிர்காலம் இயற்கை விவசாயம் என்று நகரும் இந்த காலத்தில் உழவர் சந்தைகளும் அதை நோக்கி நகர்வது நல்லது. ஆனால் அவற்றில் பல சவால்கள் உள்ளன என்கிறார் முன்னோடி விவசாயி அருள்பிரகாசம். இயற்கை விவசாயத்தில் விளைந்தது என்று சான்று பெறுவதே பெரும் சவாலாக உள்ளதாகக் கூறுகிறார் அவர். விலை அதிகம் உள்ள நிலையில் இயற்கை விவசாய விளைபொருட்களை வாங்குபவர்கள் மேல்தட்டுகாரர்களே. அவர்களை உழவர் சந்தைக்கு வரவைப்பது எவ்வாறு? அவர்கள் வீடு தேடி செல்லும் சந்தையை – வாகனங்களில் – உண்டாக்குவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்கிறார் பாமயன்.
Read in : English