Read in : English
பழங்கள் ஆரோக்கியமானதோர் உணவுப்பழக்கத்தில் முக்கியபங்கு வகிக்கின்றன. அதனால் அவற்றை நமது உணவில் பயன்படுத்திக்கொள்வது மிகமிக முக்கியம். பொதுவாகவே பழங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. வானவில் பழங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் பல வண்ணப் பழங்கள் ஆரோக்கியமான பலன்களைத் தருபவை. வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் கனிகளும் காய்கறிகளும் ஓர் ஆரோக்கியமான உலகத்தைச் சிருஷ்டிக்கின்றன;
ஏனென்றால் அவற்றில் தாவர ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன; அவைதான் தாவரங்களுக்கு செழுமையான நிறங்களையும் தனித்துவமான சுவைகளையும் வாசனைகளையும் தருகின்றன. தாவர ஊட்டச்சத்துக்கள் தாவரத்தின் நோயெதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகின்றன. நோய்களிலிருந்தும், அளவுக்குமீறிய சூரிய வெளிச்சத்திலுமிருந்தும் இன்னும் பிற சுற்றுப்புற அச்சுறுத்தல்களிலிருந்தும் தாவரத்தைக் காப்பாற்றுகின்றன.
மனிதர்களாகிய நாம் தாவர உணவை எடுத்துக் கொள்ளும்போது இந்தத் தாவர ஊட்டச்சத்துகள் நம்மை தொடர் நோய்களிலிருந்து காப்பாற்றுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் புற்றுநோய், மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டவை.
ஸ்ட்ராபெரிஸ், கிரான்பெரிஸ், ராஸ்பெரிஸ், செரிப்பழம், ஆப்பிள், தர்ப்பூசணிப்பழம், சிகப்பு திராட்சை ஆகிய சிகப்பு நிறப் பழங்களில் காரடெனாய்டு லைக்கோபீன் என்னும் நிறமி இருக்கிறது. அதுதான் மரபணுக்களைச் சிதைக்கும் அணுமூலக்கூறுகளைச் சுத்தப்படுத்தி விதைப்பைப் புற்றுநோய் மற்றும் இதய, நுரையீரல் நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
மனிதர்களாகிய நாம் தாவர உணவை எடுத்துக் கொள்ளும்போது இந்தத் தாவர ஊட்டச்சத்துகள் நம்மை தொடர் நோய்களிலிருந்து காப்பாற்றுகின்றன.
கிவிப்பழம் போன்ற பச்சைநிறப்பழங்களில் சல்ஃபோரபேன், ஐசோசயனைட், இண்டோல்ஸ் போன்ற புற்றுநோயைத் தடுக்கும் இரசாயனங்கள் இருக்கின்றன. இந்த இரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் என்னும் சேர்மத்தை வலுயிழக்கச் செய்கின்றன.
ஊதா மற்றும் நீலப்பழங்களுக்கான நிறத்தைக் கொடுப்பது அந்தோசியனின் என்னும் ஆன்டிஆக்ஸிடாண்ட்தான். மூட்டுவலியின் கொடுமையைக் குறைப்பதோடு நில்லாமல், இந்த அந்தோசியனின் புற்றுநோய், இதயநோய்க்கான வாய்ப்புகளை மிகவும் குறைக்கக்கூடியது.
ஆரஞ்சுநிறப் பழங்கள் வீக்கத்தைத் தடுக்கும் குணாம்சத்தைக் கொண்டவை. அவற்றில் பீட்டா-கிரிப்டோசாந்தின், பீட்டா-கரோட்டின், மற்றும் ஆல்ஃபா-கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன; இந்த ஊட்டச்சத்துகளை வைட்டமின்- ஏவாக மாற்றிக்கொள்ள முடியும். சில ஆரஞ்சுப் பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் பீட்டா-கரோட்டின் நுரையீரல், உணவுக்குழாய், வயிறு ஆகியவற்றைத் தாக்கக்கூடிய புற்றுநோயின் வாய்ப்பைக் குறைக்கக்கூடியது.
பழங்களை உண்ணத் தலைப்படும்போது, அந்தந்தப் பருவத்துப் பழங்களை உண்ணுவது நல்லது. ஒவ்வொரு பருவத்திலும் நம்முடலுக்குக் குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் தேவைப்படுகின்றன. அவற்றை அந்தந்தப் பருவத்துப் பழங்களால்தான் கொடுக்கமுடியும். அதனால் பருவங்களுக்கேற்ற பழங்களையும், காய்கறிகளையும் உண்பது விவேகமானது. ஒவ்வொரு பருவத்திலும் குறிப்பிட்ட பழங்கள் நிறையவே கிடைக்கும் என்பதால் நம்மால் வாங்கமுடிகிற விலைகளிலே அவை நமக்குக் கிடைக்கலாம். மொத்தமாய் வாங்கிக்கூட நாம் சேமித்துவைக்கலாம்.
சூரிய வெளிச்சத்தில் இயல்பாகவே கனியக்கூடிய பருவகாலத்துக் காய்கறிகளும், பழங்களும் புத்தம் புதிதாக, சுவையாக, நிறைய ஊட்டச்சத்துக்களோடும், ஆன்டி-ஆக்ஸிடாண்டுகளோடும் இருக்கின்றன. அவை அறுவடைக்காலத்திலே உண்ணப்படுகின்றன. ஆனால் நீண்ட நாளாகச் சேமித்துவைக்கப்படும் அல்லது நீண்ட தொலைவிற்குக் கொண்டுசெல்லப்படும் காய்கறிகளும், பழங்களும் ஊட்டச்சத்தை இழந்துவிடுகின்றன. ஃபோலேட், வைட்டமின் சி, கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்டுகளும் சீக்கிரமே காணாமல் போய்விடுகின்றன.
- இந்தியாவில் கிடைக்கும் கோடைப்பருவத்துப் பழங்களில் மாம்பழம், தர்ப்பூணி, பப்பாளி, கறும்பெரிஸ் ஆகியவை முக்கியமானவை.
- மழைக்காலத்துப் பழங்களில் வாழை, பீச், ஜமூன், ஆப்பிள், சீதாப்பழம் ஆகியவை பிரதானம்.
- வசந்தகாலப் பழங்களில் செர்ரி, பலாப்பழம், பைன்ஆப்பிள், லிச்சி, ஸ்ட்ராபெரி ஆகியவை முக்கியமானவை.
- இலையுதிர்காலத்துப் பழங்களில் அத்திப்பழம், பிளம், எலுமிச்சம்பழம், மாதுளம்பழம், பாசிப்பழம் ஆகியவை பிரதானம்.
- குளிர்காலத்திற்குப் பேரீச்சம்பழம், கிவி, ஆரஞ்சு, திராட்சை, சிக்கூ ஆகிய பழங்கள் இருக்கின்றன.
பருவத்திற்குப் பொருந்தாத பழங்களையும், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களையும் உண்ணும் சபலத்திற்கு நாம் ஆளாகிறோம். அந்தப் பட்டியல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது.
நம்நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்போது, நமது உணவுப்பழக்கமும் மாறுகிறது. பருவத்திற்குப் பொருந்தாத பழங்களையும், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களையும் உண்ணும் சபலத்திற்கு நாம் ஆளாகிறோம். அந்தப் பட்டியல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் நமக்கு கிவிப்பழம், வெண்ணெய்ப்பழம், டிராகன்பழம், புளூபெரிஸ் போன்ற பழங்கள் மிகவும் பரிச்சயமாகிவிட்டன. தென்னாப்ரிக்கா மாம்பழங்கள்கூட குளிர்காலத்தில் சில சமயங்களில் இந்தியச் சந்தைகள் சிலவற்றில் கிடைக்கின்றன. நமக்குக் கட்டுப்படியாகும் விலைகளில் அவை கிடைப்பதால், இறக்குமதிப் பழச்சந்தை மேலும்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பழங்களை உண்பதால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கத்தான் செய்கின்றன.
ஒவ்வொருநாளும் சரியான நேரத்தில் உண்ணும் பழம் உடலுக்கு நன்மை செய்கிறது. உணவருந்தும்போதோ அல்லது உணவருந்திய உடனோ சாப்பிடுவதைவிட பகல் நேரத்தில் சரியான வேளையில் உண்ணும் பழத்தின் ஊட்டச்சத்து உடலுக்குள் சரியாகச் சென்று சேர்கிறது.
பழத்தோடு தோலை உண்ணும் பழக்கத்தில் சில விரும்பத்தகாத அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிளின் கூடுதல் ஆயுளுக்காகவும், அதன் கவர்ச்சித் தோற்றத்திற்காகவும் அது மெழுகேற்றப்பட்டு விற்பனை அதிகரிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து திராட்சைகளில் தெளிக்கப்படுகிறது. சிலபழங்களின் தோல்களும் நல்லதுதான் என்றாலும், செயற்கையான தோற்றம்கொண்ட பழங்களைத் தோல்நீக்கி அல்லது தோல்கழுவி உண்பது நல்லது.
உணவு உண்டபின் சாப்பிடும், கலோரி அதிகமான பழங்களில் மிளகை அல்லது உப்பைச் சேர்த்துக்கொள்ளும் நவீனபழக்கம் பழமுண்ணுவதில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான பலன்களையே பலவீனப்படுத்திவிடுகிறது.
(கட்டுரையாளர், உணவுத் தொழில் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். வேளாண் உணவு பதனீட்டுத் துறையிலும் உடல் நல விஷயங்களிலும் அக்கறை கொண்டவர்.)
Read in : English