Read in : English

நீண்டகாலமாக விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டில் உச்சத்தில் இருந்தார், தனியாக. ஆனால் அவரது உச்சநிலைதான் செஸ் விளையாட்டை ஓர் உணர்ச்சியாகவும், தொழிலாகவும் பலர் எடுத்துக்கொள்வதற்கு எழுச்சியைத் தந்தது. பல ஆண்டுகளில் அவரால் உந்துதல் பெற்ற பலர் படிகள் பல தாண்டி அவருக்கே சவால்விடும் அளவுக்கு உயர்ந்தனர்.

இந்தியாவில் இன்று நிறைய கிராண்ட் மாஸ்டர்களும், மிகப்பெரிய செஸ் ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள் என்றால் அதன்பெருமை பெருமளவில் ஆனந்தையே சாரும். ஆனால் இன்றுவரை இந்தியாவின் ஒரே செஸ்  சாம்பியன் என்னும் அவரது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு யாரும் இன்னும் பெரிதாகவில்லை போலத் தோன்றுகிறது. உலகச்சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்னை ஜெயித்து தன்னை வெறும் பையனாக அல்ல, வளர்ந்த ஓர் இளைஞனானக் காட்டி உள்ளார் பதின்மவயது பிரக்ஞானந்தா. ஆனந்திற்கு அடுத்து அவர்தான் வர வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை.

ஆனந்த் இளமைக் காலத்தைக் கடந்துவிட்டார். அவரிடம் வயது தெரிகிறது. அமைதியும் கிட்டத்தட்ட அசைவற்ற தன்மையும் மனதளவில் செய்யும் காட்டுப் பாய்ச்சலால் ஈடுகட்டப்படும் ஒரு விளையாட்டில் ஆனந்த் சற்று அதிகமாகவே தன்னைக் காத்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்.  பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த இணையவழி செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா மந்தமான மாக்னஸ் கார்ல்சென்னிடம் விடாப்பிடியான மூர்க்கத்தனத்துடன் மோதியது போலத் தோன்றியது.

பிரக்ஞானந்தா, உலகத்திலே மிக இளமையான ஒரு கிராண்ட்மாஸ்டர் ஆகியிருப்பார், ஆனால் சில நாள் வித்தியாசத்தில் அந்தச் சிறப்பை அவர் தவறவிட்டுவிட்டார். உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்னை அவர்  தோற்கடித்திருக்கிறார்; அதைப்போல கார்ல்சென் பையனாக இருந்தபோது முன்னாள் உலகச்சாம்பியன் அனடோலி கார்ப்போவ்வை அவர் முறியடித்து உலகத்தை அதிரச் செய்தார்.

கிரிக்கெட் ஒப்புமையைப் பயன்படுத்தினால், ஆனந்த், சச்சினைப் போன்றவர்; ஆனால் பிரக்ஞானந்தா தோனியைப் போன்றவர் என்று சொல்லலாம்.

கிரிக்கெட் ஒப்புமையைப் பயன்படுத்தினால், ஆனந்த், சச்சினைப் போன்றவர்; ஆனால் பிரக்ஞானந்தா தோனியைப் போன்றவர் என்று சொல்லலாம். அவர்களின் ஆளுமைகள் வெவ்வேறானவை; அவர்கள் இருவரும் வெவ்வேறான பின்புலங்களிலிருந்து வந்தவர்கள். ஆனந்த் ஃபிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவில் வேலை செய்த இந்தியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்; தன் தாயாரிடமிருந்து செஸ் விளையாட்டைக் கற்றார். பிரக்ஞானந்தா நடுத்தரவர்க்கத்துச் சென்னையில் மிகவும் அடக்கமானதோர் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.

பிரக்ஞானந்தாவின் எல்லை மேதமையைத் தொடுகிறது. ஒரு ஞானியின் பெயரைப் போல ஒலிக்கும் அவரது இயற்பெயர் ஞானத்தின், பிரக்ஞையின் அரசன் என்று பொருள் தருகிறது. வினோதமான எழுத்துகளைக் கொண்ட அவரது பெயர் அநேகமாக எண்கணிதம் மூலம் வந்திருக்கலாம்; ஓர் ஆழமான மதப்பற்று அதில் எதிரொலிக்கிறது; அந்த உணர்வு அவரைப் போற்றிப் பேணிப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் அவரது தாயாரிடமிருந்து வாரிசுக் குணாம்சமாக வந்திருக்கலாம். தனது வினோதமான அழகான தேற்றங்களுக்கு ஆதிமூலமாக நாமக்கல் பெண் தெய்வத்தைக் காட்டிய சீனிவாச ராமானுஜன் என்னும் மனக்கணக்குகளின் மேதையின் பிரிவைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா என்பதன் குறியீடுதான் அவரது நெற்றியில் பூசிய பிரகாசமான திருநீற்றுப்பட்டை.

சதுரங்க ஆட்டக்காரர்களுக்கே உரிய எச்சரிக்கைக் குணாம்சம் பிரக்ஞானந்தாவிடம் இருப்பதுபோலத் தெரிகிறது. மனதளவில் தனிமையிலும் பாதுகாப்பாகவும் இருக்கும் செஸ் வீரர்களின் முகத்தில் எந்த பாவமும் இருக்காது; எந்த உணர்ச்சியையும் அவர்கள் காட்டுவதில்லை,  குறைந்தபட்சம் பொதுவெளியில். பிரக்ஞானந்தாவும் அப்படித்தான்; ஆனந்த்தும் அப்படித்தான். சராசரி மனித இயல்பு அவர்களிடமும் இருக்கிறது என்று ஒரு சின்ன சமிக்ஞை கிடைத்துவிட்டால் போதும், அதை எதிராளி கவ்விப் பிடித்துக்கொண்டு துவம்சம் செய்துவிடுவான். செஸ் விளையாட்டில் வெளிப்படும் போர்க்குணத்தில் வெளிப்படையான உள்ளம் சார்ந்த பலகீனத்திற்கு கொஞ்சம்கூட இடம்கிடையாது.

ஆனந்து பொதுவெளியில் தோன்றியபோது, காரி காஸ்பரோவ், அவரை ஆழமற்றவர் என்று புறந்தள்ளினார். அந்த மட்டம் தட்டுதல் வழமையான சோவியத் பாணி உளவியல் யுத்தம். அது ஆனந்த்தைச் சற்று நிலைகுலைய வைத்தது. ஆனாலும் சுதாகரித்துக்கொண்ட ஆனந்த், அந்தக் கருத்தில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கிறது என்று சிந்தித்தார்.

என்றாலும் பிரக்ஞானந்தாவின் அமைதி என்பது பயிற்சியின் மூலம் உண்டானது போலத் தோன்றுகிறது. வீட்டில் சேட்டைக்காரராய் இருப்பார் போல. அதனால்தான் குறும்புத்தனம் கொப்பளிக்கும் புன்னகையோடு வலம்வரும் ஒரு சிறுபையனாகத் தோன்றுகிறார் அவர். கணக்குப்பாடத்தில் புத்திசாலியான, ஆனால் குறும்புத்தனமான ஒரு பையனாக அவர் இருக்கலாம். தனது ரகசிய குறும்பு கண்டுபிடிக்கப்பட்டால் சிரித்து மழுப்பிவிடும் பையனாகவும் அவர் இருக்கக்கூடும்.

பிரக்ஞானந்தா, கார்ல்சென்னைத் தோற்கடித்தது காலத்தின் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம்.

பிரக்ஞானந்தா, கார்ல்சென்னைத் தோற்கடித்தது காலத்தின் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் செஸ் விளையாட்டே மெய்நிகர் உலகத்திற்குப் புலம்பெயர்ந்துவிட்டது. மற்ற விளையாட்டுகளை அப்படி இணையம் சார்ந்து நம்மால் நினைக்க முடியாது. ஆனால் செஸ் காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டது. பௌதீக அம்சம் இல்லாததால் பிரக்ஞானந்தாவுக்கு அழுத்தம் குறைவாக இருக்கக்கூடும். கார்ல்சென்னை நேருக்கு நேர் சந்தித்து மோதுவது என்பது வேறு; அவரோடு இணையவழி மோதுவது என்பது வேறு. பிரக்ஞானந்தா இன்றைய யுகத்தின் பதின்மவயதுப் பையன்; வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும், வீட்டிலிருந்து விளையாடுவதற்கும் அனேகமாக மிகமிக பொருந்திவருபவர் பிரக்ஞானந்தா. தொடர்ந்து முன்னேறுங்கள், உலகம் முழுவதும். போய்வாருங்கள் ஆனந்த்! தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதிய செஸ் சாம்பியனுக்கான காலம் வந்துவிட்டது.

(கட்டுரையாளர், விளையாட்டு விமர்சகர்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival