Read in : English
இந்தியாவின் 75ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இந்தச் சூழலில், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகக் கட்டமைப்பு குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலத்தில் இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கண்ணோட்டத்தைச் சுயபரிசோதனை செய்வது அவசியமானது. நமது மாநிலத்தில் ஜனநாயக செயல்முறையின் மூலம் கிராம நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருகின்ற போதிலும், இந்த சுய பரிசோதனை தேவை.
நாட்டிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு உள்ளது. கடந்த 1991இல் 34 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வாழ்ந்த நிலையில், இப்போது சுமார் 54 சதவீதம் மக்களுடன் நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. கடந்த 2002இல், தமிழ்நாட்டில் 6 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள் மற்றும் 611 நகரப் பஞ்சாயத்துகள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது, மாநிலத்தில் 21 மாநகராட்சிகள் (இதில் 6 மாநகராட்சிகள் 2021இல் உருவாக்கப்பட்டன), 138 நகராட்சிகள் மற்றும் 489 நகரப் பஞ்சாயத்துகள் உள்ளன. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 19இல் மொத்தம் 2.79 கோடி வாக்காளர்கள் சேர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 12,607 பேரை மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
73வது மற்றும் 74வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் (1992) மேற்கொள்ளப்பட்டு 3 தலைமுறைகள் கடந்துவிட்டன. இது இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளான கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்குத் தேவையான நிர்வாக மற்றும் நிதி அதிகாரத்தில் மிகவும் தேவையான சுயாட்சியை வழங்குகிறது. மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர்களின் பங்கேற்ற உடனேயே பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவதையே இந்தச் சட்டத் திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டு இருந்தன.
இந்த அரசியலமைப்புத் திருத்தங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994ஐ மாநில அரசு இயற்றியது. இதற்கு முன்பு இருந்த தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1958ஐ மாற்றும் வகையிலும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகவும் இந்தப் புதிய சட்டம் கொண்டு இருந்தது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட திட்டக்குழு, மாநில நிதி ஆணையம் போன்றவற்றை உருவாக்கச் சட்டம் வழி வகுத்தது. 1919இல் உருவாக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்கள், இப்போது 21 நகரங்களை உள்ளடக்கும் வகையில் பல சட்டங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், இத்தனை ஆண்டுகளாகச் சுயாட்சி நிறுவனங்களாக உள்ளாட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என்ற கருத்து கேலிக்கூத்தாக்கப்படுகின்றன.
அரசியலமைப்பின் பிரிவு 243 (ஏ)இன் படி, கிராம நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் மாநில சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபைக்கு (கிராம பஞ்சாயத்து) உள்ளது. ஆனால் மாநில அரசு கிராம பஞ்சாயத்துக் கூட்டங்கள் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே கூட வேண்டும் என தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
அரசியலமைப்பின் 243 (டபிள்யூ)இன் அட்டவணை 12இன் படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 18 பொறுப்புகள் உள்ளன. இதில் வெறும் 8 பிரச்சினைகள் மீது மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி ஆணையர்களுக்குக் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் இருந்தது. ஆனால் இப்போது அது நகரத் திட்டமிடல் அதிகாரிகளுக்கும், நகரங்களின் வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்ட்டீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் (2011), “இந்தியாவில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் வரலாற்றில் 74வது அரசியலமைப்புத் திருத்தம் என்பது ஒரு மைல்கல்லாகக் கருதப்பட்டாலும், அதன் விதிகளை அமல்படுத்துவதில் இன்னும்கூட சிக்கல் தொடர்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு என்பது இப்போதும் கூட ஒரு பெரிய சவாலாகத் தொடர்கிறது. மூன்று மாநில நிதி ஆணையங்கள் மற்றும் மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இருந்த போதிலும், பல மானியங்கள் மற்றும் வருவாய்கள் இன்னும் கூட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்படவில்லை அல்லது போதுமான அளவு மாற்றப்படவில்லை.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தேசிய அளவில் கலவையான முடிவுகளைத் தந்த போதிலும், அவை தமிழ்நாட்டில் பலன் அளிக்கவில்லை என்பதையே பல ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் காட்டுகின்றன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திராவிட கட்சிகள், கூட்டாட்சி என்ற பெயரில் மத்திய அரசிடம் இருந்து தடையில்லா அதிகாரத்தை கோரி மாநில சுயாட்சிக்காக அடிக்கடி குரல் எழுப்புகின்றன. ஆனால் அவை மீண்டும் மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சுயாட்சி வழங்க மறுக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இப்போதும் கூட, நடந்து கொண்டிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களில் வழக்கம் போல் திராவிடக் கட்சிகள் நகரங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள முக்கியப் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதன் மூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. நகர்ப்புற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாத திராவிடக் கட்சிகளை நாடாளுமன்ற பாமக உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மேலும், சாலை போக்குவரத்து, காற்று மாசுபாடு, நிலம் – நீர் மற்றும் நீர்நிலைகள் மாசுபாடு, திடக்கழிவு மேலாண்மை போன்ற சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு மாஸ்டர் பிளான் வைத்திருப்பது போன்ற கட்டமைப்புகளை இந்தக் கட்சிகள் தொடர்ந்து அங்கீகரிக்கத் தவறிவிட்டன. இதனால் தான் கழிவுநீர் மேலாண்மை, தொழிற்சாலை கழிவுகள் போன்றவை ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளன. இந்த சேவைகளுக்காகவும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் உள்ளாட்சி அமைப்புகளின் செலவுகள் பல ஆண்டுகளாகக் குறைவாகவே உள்ளன. 2009ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி நடத்தியஆய்வின்படி, நிதிப் பரவலாக்கம் தமிழ்நாட்டின் மிக மோசமான செயல்பாடுகளில் ஒன்றாகும்.
கடந்த 2011இல் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்ட்டீஸ் நடத்திய ஆய்வில், ” பொதுவாக வரி வருவாயை அதிகரிக்கவும், வசதிகளை மேம்படுத்தவும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதி வருவாயை அதிகரிக்கவும் ஒரு நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுகிறது. அதேநேரம் இதுபோன்ற மாநகராட்சிகளில் சேவைகளையும் உள்கட்டமைப்பையும் பரவலாக்குவதில் சவால்கள் உள்ளன.”
ஒப்பீட்டு அளவில் கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களைப் பகிர்வதில் தமிழ்நாட்டைவிடச் சிறப்பாக உள்ளன.
ஒப்பீட்டு அளவில் கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களைப் பகிர்வதில் தமிழ்நாட்டைவிடச் சிறப்பாக உள்ளன. அண்டை மாநிலங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் ஜனநாயக அதிகார பரவலை தமிழகம் இன்னும்கூட அங்கீகரிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
1994 முதல், மாநில அரசு மொத்தம் 6 மாநில நிதி ஆணையங்களை அமைத்துள்ளன. கடைசியாக அமைக்கப்பட்ட 6வது மாநில நிதி ஆணையம் 2020இல் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் பதவிக்காலம் டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் இறுதி அறிக்கை இன்னும்கூட பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வைப் பொறுத்த வரையில், தமிழ்நாடு அரசுகுச் சொந்தமான வரி வருவாயில் 10 சசவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும், அதில் 56 சதவீதம் கிராம பஞ்சாயத்துகளுக்கும், 44 சதவீதம் மாநகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் செல்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக சதவீத நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என மாநில நிதி ஆணையங்கள் பரிந்துரைத்தாலும், பெரும்பாலும் அது ஏற்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில வரிவருவாயில் கேரளா 24 சதவீதமும் கர்நாடகம் 30 சதவீதமும் வழங்குகிறது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள்கூட தமிழகத்தை விட அதிக சதவீத நிதியை வழங்குகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டு மற்றும் நிதி சுயாட்சி (2017) பற்றிய ஆய்வில், “வேகமாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில அரசுகளை வலுப்படுத்துகின்றன, ஆனால் அதிகாரப் பரவலாக்கம் கீழ்நோக்கி நடப்பதாகத் தெரியவில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஜனநாயகத்தின் 3 அடுக்குகளுக்கு இடையே எந்தவிதமான இணைப்பும் இல்லை. மக்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் சுயாட்சியை வழங்க வேண்டும் என அடுத்தடுத்து வந்த தேசிய நிதி ஆணையங்கள் பரிந்துரைத்துள்ளன. ஆனால், இந்த பரிந்துரைகளுக்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் சுயாட்சியை வழங்க வேண்டும் என அடுத்தடுத்து வந்த தேசிய நிதி ஆணையங்கள் பரிந்துரைத்துள்ளன. ஆனால், இந்த பரிந்துரைகளுக்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை.
2021-26ஆம் ஆண்டுக்கான 25 நிதிக் குழுவின் அறிக்கையில், “கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போல இல்லாமல், நகர்ப்புறங்கள், குறிப்பாக நகரங்கள், சரியான சட்டங்கள் மற்றும் சரியான கொள்கைகளைக் கொண்டு இருந்தால் நிதி தன்னிறைவு பெறுவதற்கான பொருளாதார சக்தியைக் கொண்டுள்ளன. இந்தியாவில், மாநில நிதி ஆணையங்கள், நகராட்சிகள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதியை ஒதுக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்.
இங்குள்ள பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்தச் செலவுகளைகூட ஈடுகட்ட முடியாத நிலையிலேயே உள்ளன. இப்படி இருக்கும் போது, பல ஆண்டுகளாக, தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தும், சொத்து வரி விகிதங்கள் திருத்தப்படவில்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்ற, துடிப்பான தலைமையுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற நிர்வாகத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் வெற்றி பெறும்.
(கட்டுரை ஆசிரியர், ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Read in : English