Read in : English

உடல்நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை (6.2.2022) காலமானார்.

மனதை மயக்கும் குரல் என்பது இசையுலகில் மிகை வார்த்தைகள் அல்ல. இசையின் உள்ளடக்கத்தில் அதுவும் ஒரு தவிர்க் முடியாத அம்சம். மிகச்சில சாதனையாளர்களிடம் மட்டுமே அப்படியொரு மயக்கும் குரலைத் தரிசிக்க முடியும். அவர்களில் ஒருவர் லதா மங்கேஷ்கர். அவருக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றாலும், அந்த தீஞ்சுவைக் குரலைக் கேட்டால் அப்படிச் சொல்லத் தோன்றாது. கலகலவென்ற சத்தத்துடன் வார்த்தைகளை உருட்டியவாறே ஆடிக் களிக்கும் ஒரு மழலையின் கொண்டாட்டத்தைத் தன் குரலில் உணரச் செய்வார் இந்த இசைக்குயில்.

இந்தியாவின் இசைக்குயில்!

திரைப்படங்களில் பின்னணி பாடுவதென்பது ஆகப்பெரிய சவால். படம் வெளியாகும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நடிப்புக் கலைஞருக்கு, திரைக்கதையின் போக்குக்குத் தக்கவாறு இருக்க வேண்டும். படம் வெளியான சூடு அடங்கியவுடன், காலத்தில் நிலைத்திருக்கும் பாடலாக மாறும் வகையில் அதே குரல் அமைய வேண்டும்.

அந்த வகையில் இந்தி திரையுலகில் முகமது ரபி, கிஷோர் குமார், முகேஷ் தலைமுறைக்கு முன் தொடங்கி எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ தலைமுறைக்குப் பின்னும் உதித் நாராயணன், சோனு நிகம், அட்னான் சமி உட்படப் பலரோடு இணைந்து பாடியவர் லதா மங்கேஷ்கர். தாதா சாகேப் பால்கே, பத்மவிபூஷண், பாரத ரத்னா உட்பட இந்தியாவின் மிக உயரிய விருதுகளைப் பெற்ற சிறப்பும் இவருக்குண்டு. அவற்றைவிட, ’இந்தியாவின் இசைக்குயில்’ என்று மக்களால் போற்றப்படுவது மாபெரும் கௌரவம்.

1942ஆம் ஆண்டு ’கிட்டி ஹசால்’ எனும் மராத்திப் படத்தில் தனது முதல் பாடலைப் பாடியபோது, அவருக்கு வயது 13. அப்படிப் பார்த்தால், அவரது திரையுலக சாதனையின் வயது கிட்டத்தட்ட 80. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் கணக்கு வழக்கில்லாமல் பல்லாயிரம் பாடல்களைப் பாடியிருக்கும் லதா ஒரு இசையமைப்பாளரும் கூட. தமிழ், தெலுங்கிலும் அதே போன்ற புகழ்பெற்ற சில பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழில் லதா!

இளையராஜாவின் இசையில் 1987இல் வெளியான ’ஆனந்த்’ திரைப்படம் தான் தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய முதல் நேரடிப் பாடல். உண்மையில், 1952களிலேயே அவரது குரல் தமிழில் ஒலித்துவிட்டது. மெகபூப் கான் தயாரித்து இயக்கிய பிரமாண்டத் திரைப்படமான ‘ஆன்’ இந்தி திரைப்படம், அதே பெயரில் தமிழிலும் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கான பாடல்களை கம்பதாசன் தமிழில் பெயர்க்க, நௌஷாத் இசையில் அதனை லதா பாடியுள்ளார்.

மெகபூப் கான் தயாரித்து இயக்கிய பிரமாண்டத் திரைப்படமான ‘ஆன்’ இந்தி திரைப்படம்அதே பெயரில் தமிழிலும் வெளியிடப்பட்டதுஇப்படத்திற்கான பாடல்களை கம்பதாசன் தமிழில் பெயர்க்கநௌஷாத் இசையில் அதனை லதா பாடியுள்ளார்.

’இழந்தேன் உனை அன்பே’, ’இன்று எந்தன் நெஞ்சில் சகி’, ‘நகரு நகரு’ ஆகிய பாடல்களைப் பாடினாலும், அவரது தமிழ் உச்சரிப்பு தெளிவாக இல்லை என்று எம்.எஸ். ராஜேஸ்வரியைப் பாட வைத்து மீண்டும் ஒலிப்பதிவு செய்திருக்கின்றனர். அதேபோல ஷம்சத் பேகம் எனும் பாடகிக்குப் பதிலாக சூலமங்கலம் ராஜலட்சுமியைப் பாட வைத்திருக்கின்றனர். இப்பாடல்களில் ‘இழந்தேன் உனை அன்பே’ பாடல் இப்போதும் யூடியூப்பில் லதாவின் குரலில் கேட்கக் கிடைக்கிறது.

lata mangeshkar-ms-subbulakshmiஅதைப்போலவே, நௌஷாத் இசையமைத்து தயாரித்த ‘உரன் கடோலா’ திரைப்படம் ‘வானரதம்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இந்தியில் முகமது ரஃபி பாடிய பாடல்களுக்கு தமிழில் டி.ஏ.மோதி உயிர் தர, தான் பாடிய பாடல்களில் பெரும்பாலானவற்றை லதாவே தமிழிலும் பாடியுள்ளார். ’எந்தன் கண்ணாளன் கரை நோக்கிப் போகிறான்’, ’எனைக் கண்டே ஏகுவாய்’, ’என் உள்ளம் விட்டு ஓடாதே’ பாடல்கள் அவரது கொஞ்சும் குரலில் இளமை சிறிதும் மாறாதிருப்பதைக் காட்டும்.

மகாராஷ்டிரிய, குஜராத்தி பாடல்கள், இசையைக் கேட்டு வளர்ந்த லதா உருது உச்சரிப்பில் தெளிவற்றிருப்பதாக விமர்சிக்கப்பட்டபோது, அதற்காகவே உருது கற்றுக்கொண்டு பல்வேறு பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்பட்டது. ஏனோ, தமிழில் அப்படியொரு முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை. ஆனால், தனது தொடர் முயற்சிகளின் வழியே இளையராஜா அதனைச் சாத்தியப்படுத்தினார். அதற்கு, ‘ஆனந்த்’ திரைப்படத்தை தயாரித்தது சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்பதும் ஒரு காரணம்.

சிவாஜியும் தீனாநாத் மங்கேஷ்கரும்!

தனது 13வது வயதிலேயே தந்தையை இழந்தவர் லதா மங்கேஷ்கர். சகோதரிகள் மீனா, உஷா, ஆஷா, சகோதரர் ஹிருதயநாத் ஆகியோர் அவரைவிடச் சிறுபிள்ளைகள். வெறுமனே தந்தையின் புகைப்படத்தைக் கண்டு வளர்ந்த இந்த ஐவரும் ‘பாவ மன்னிப்பு’ படத்தை பம்பாயிலுள்ள ஒரு திரையரங்கில் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். உடனே சென்னைக்கு விமானம் பிடித்து நேராக ‘அன்னை இல்லம்’ வந்திறங்கினர். அது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு என்பது அனைவருக்கும் தெரியும். திரைப்பட விஷயங்கள் தொடர்பாக தன் தாய், சகோதரர், சகோதரிகள் சகிதம் லதா சந்திக்க வந்திருப்பதாக சிவாஜியின் குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர். அவர்களும் ஏதும் பேசவில்லை.

lata mangeshkar-sivaji ganesanபடப்பிடிப்பு முடிந்து சிவாஜி வீடு நுழைந்தது தான் தாமதம், ஐந்து பேரும் சிவாஜியைக் கட்டிப் பிடித்து அழுதிருக்கின்றனர். அதன்பிறகே, சிவாஜியின் தோற்றம் லதாவின் தந்தை தீனாநாத் போன்றிருக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. அன்று முதல் சிவாஜியின் உடன்பிறவா சகோதரி ஆனார் லதா. இது, ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியின் சிவாஜியின் மகன் ராம்குமார் பகிர்ந்த தகவல்.

அன்று முதல் இன்றுவரை சிவாஜி குடும்பத்தினரும் லதா மங்கேஷ்கர் குடும்பத்தினரும் உறவு பாராட்டுவது திரையுலகம் அறிந்த கதை. அதுவே, ‘ஆனந்த்’ படத்தில் லதாவைப் பாட வைத்தது. அவரது ‘ஆராரோ’ வயது வந்தவர்களையும் தாலாட்டியது; நிம்மதியாக உறங்க வைத்தது. ஒரு டூயட் பாடல் என்றபோதும், லதாவின் குரலில் வழியும் அமைதி நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

ஆனந்தை அடுத்து ‘என் ஜீவன் பாடுது’ படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்’ பாடலைப் பாடியிருப்பார் லதா. கதைப்படி மரணமடைந்த நாயகன் ஆன்மாவைக் காதலிக்கும் நாயகி பாடும் பாடல் இது. காதலை எண்ணி மனம் பூத்தாலும், அது நிறைவேறாது என்ற உண்மை தரும் வெறுமையைக் குரல் பிரதிபலித்தாக வேண்டும். அந்த கட்டாயத்தை வெகு சாதாரணமாக கடந்திருப்பார் லதா.

குரலில் வழியும் இளமை!

Lata Mangeshkar-SPBகமல்ஹாசனையும் அமலாவையும் காலத்தோடு நிலைத்துவிட்ட காதலர்களாய் மாற்றிய பெருமை ‘சத்யா’ (1988) படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகலவென’ பாடலுக்கு உண்டு. அது உருவானதன் பின்னணியில் சுவாரஸ்யமான தகவலொன்று உண்டு. இளையராஜாவின் தனி ஆல்பமான ‘ஹௌ டூ நேம் இட்’ கோர்ப்புக்காக தயாரான மெட்டை அதில் சேர்க்காமல் தனியே வைத்திருக்க, அதனைக் கேட்ட மாத்திரத்தில் சத்யாவில் பாடலாக இணைக்க கேட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதற்கேற்றவாறு ‘வாலிபக் கவிஞர்’ வாலியிடம் பாடல் எழுதுமாறு சொல்லப்பட, இரட்டைக்கிளவி அதிகமாய் அமைந்த இந்த பாடலைத் தந்திருக்கிறார் அவர்.

கமல்ஹாசனையும் அமலாவையும் காலத்தோடு நிலைத்துவிட்ட காதலர்களாய் மாற்றிய பெருமை ‘சத்யா’(1988) படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகலவென’ பாடலுக்கு உண்டு.

லதா மங்கேஷ்கர் உடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதென்று முடிவும் செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், கடினமான வார்த்தைகள் கொண்ட இப்பாடலை லதாவுக்கு தருவதில் இளையராஜாவுக்குத் தயக்கம். அது மட்டுமல்லாமல், அவர் உடனடியாகப் பாடிவிட்டு கிளம்பும் சூழல் வேறு. வாலியின் வற்புறுத்தலால் பாடல் வரிகள் மாற்றப்படாமல் தரப்பட, அது லதாவின் குரலில் வெளியானபின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. இன்றுவரை அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் குரலில் இளமை துள்ளி விளையாடுவதை உணர முடியும். இணையுடன் பொழுதைக் கழிக்கும்போது இப்பாடலைக் கேட்டால், எவர் மனதிலும் தானாக ஒரு துள்ளல் வரும். ஆண், பெண் என்ற வித்தியாசம் அதில் கிடையாது. அந்தளவுக்கு எஸ்.பி.பியும் லதாவும் பாடியவிதம் ’காதல் ராகம்’ கூட்டியிருக்கும்.

lata mangeshkar - ilayarajaலதாவின் ‘ல’,. ’ள’, ’ழ’ உச்சரிப்பு மற்றும் வார்த்தைகளுக்கு தந்த அழுத்தம் தமிழ் பின்னணி பாடகிகளை விடப் பின்னுக்கு இருந்தாலும், அவரது குரலில் வழியும் இளமை அவற்றையெல்லாம் அநாயாசமாகத் தாண்டியிருக்கும். அதற்கேற்றவாறு காட்சியமைப்பிலும் நியாயம் சேர்த்திருப்பார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இப்பாடலில் வரும் ‘சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்’ என்ற வரிகளை லதாவுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளையராஜா பத்மவிபூஷண் பெற்றபோது பாராட்டிப் பேசிய லதா மங்கேஷ்கர், அவரது இசைக்கோர்ப்பு மேதைமையின் உச்சம் என்றார். அப்போது, தமிழில் தெளிவான உச்சரிப்பில் பாடுவதை விடவும் அவர் விரும்பிய வகையில் பாடுவது கடினமாக இருந்ததாகக் கூறியிருந்தார். இதுவே, அதிகளவில் அவர் தமிழில் பாடாமல் போனதற்கும் காரணமாக இருந்திருக்கலாம்.

ஒரு பொன் வீணை!

உண்மையில் ‘சத்யா’, ‘ஆனந்த்’, ‘ஒரு ஜீவன் பாடுது’ படங்களைவிட ஒருபடி அதிகமாகவே கொண்டாடப்படும் வகையில் ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ படத்தில் ‘இங்கே பொன்வீணை எங்கே சங்கீதம்’ பாடலை பாடியிருப்பார் லதா மங்கேஷ்கர். அப்படம் வெளிவராமல்போனது தமிழ் ரசிகர்களுக்குத்தான் பேரிழப்பு. இன்றுவரை, லதா தமிழில் பாடிய பாடல்களில் என் மனதுக்கு நெருக்கமானது அதுவே. சீரான ஒரு பயணத்தைப் போல வேகமெடுக்கும் இப்பாடல், இசையுலகில் தான் தேடியது எதனை என்று லதாவே ஆராய்வது போன்று தோன்றும். அந்த பொன் வீணையே அவர்தான் என்று எண்ண வைக்கும்.

தமிழில் ஜிக்கிராஜேஸ்வரி என்று பலரும் லதாவின் குரலை நினைவுபடுத்தினாலும்எஸ்ஜானகியின் குரலே அதற்கிணையான ரீங்காரத்தை நம்முள் எழுப்பும்.

lata mangeshkar-ar-rahmanதமிழில் ஜிக்கி, ராஜேஸ்வரி என்று பலரும் லதாவின் குரலை நினைவுபடுத்தினாலும், எஸ்.ஜானகியின் குரலே அதற்கிணையான ரீங்காரத்தை நம்முள் எழுப்பும். ‘தில்சே’வில் வரும் ‘ஜியே சலே’ பாடலைத் தமிழில் ’நெஞ்சினிலே’வாக தந்திருப்பார். மிக நுணுக்கமாக இருவருக்குமான வேறுபாடு அறிந்தவர்களுக்கே இரு வேறு குரல்கள் தமிழிலும் இந்தியிலும் ஒலித்தது தெரியும். அதையும் மீறி இருபதுகளில் இருந்த பிரீத்தி ஜிந்தாவின் தோற்றத்துடன் 70களை தொட்ட இருவரது குரல்களும் பொருந்திப்போனது நிச்சயம் அதிசயம் தான். ஆய்ந்து பார்த்தால், லதாவின் குரலில் தமிழில் ஒலித்த பொக்கிஷங்கள் வெளியே தெரியக்கூடும். இசைக்கு எல்லைகள் கிடையாது என்பதைப் போலவே, லதாவின் குரலுக்கு வயது என்றும் 16.!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival