Read in : English
ஆட்டுக்குத் தாடிபோல ஆளுநர் பதவி அவசியமற்றது என்றார் திமுக நிறுவனர் அண்ணா. ஆட்டுக்கு வேண்டுமானால் தாடி அவசியமற்றதாக இருக்கலாம்; ஆனால் ஓர் ஆணுக்கு அது அவசியமற்றதென்று சொல்லமுடியாது. ஆட்டுத்தாடி ஆணுக்குக் கம்பீரத்தைக் கொடுப்பது; கடுமையான தோற்றத்தையும் ஓர் அறிவுஜீவியின் பாவனையையும் கொடுப்பது.
ஆட்டுத்தாடி மனிதனுக்கு நிறைய தெரியும்; அவன் உங்களை சும்மா பார்ப்பதில்லை; கூர்ந்து நோக்குவான். மேலிருக்கும் மண்டைக்குள்ளே இருக்கும் பற்றாக்குறையை ஆட்டுத்தாடி ஈடுகட்டி ஆட்களின் கவனத்தைத் திருப்புகிறது. அதனால்தான் நடுத்தர வயது ஆண்கள் ஆட்டுத்தாடியை ஆசையோடு வளர்க்கிறார்கள்.
பிரபலமான மனிதர்களின் பிம்பத்தைக் கட்டியமைப்பதில் ஆட்டுத்தாடிக்கும் ஆகப்பெரிய பங்குண்டு. வாழும் முறையை, சிந்திக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்த பிரகாசமான வழுக்கைத் தலையைக் கொண்ட, வளமான தத்துவத் தலைவர் லெனினின் பிம்பத்தையும் ஆட்டுத்தாடியையும் பிரிக்க முடியாது; ஒருவேளை அந்த பிம்பத்தின் அடிநாதமே ஆட்டுத்தாடியாக இருக்கலாம்.
மக்கள் ஆதரவோடு மகத்தான புரட்சியை உண்டாக்கி புதியதோர் அதிகாரத்தை உருவாக்கிய அவர் அந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சக்திமிகுந்த ஓர் ஒற்றர் குழுவைக் கட்டமைத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டுக்கு வருவோம். இந்த மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆட்டுத்தாடி என்பது ரஷ்யாவின் ரகசிய கேஜிபி உளவாளியின் தமிழ் வடிவம்தான். ஆளுநரோடு மோதுவதை திமுக ஆனந்தத்தோடு செய்திருக்கிறது. மாநில சுயாட்சியின்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்சி இயல்பாகவே, ஆளுநர் என்ற கட்டமைப்போடு மோதிப் பார்க்கத்தான் செய்யும். ஆளுநரோடு உரசும் விஷயத்தில் அந்தத் திராவிடக்கட்சிக்கு ஆகப்பெரிய வரலாறு ஒன்று உண்டு.
நமது அரசியலமைப்புச் சட்டடத்தில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவர் போன்றவர் அல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் அவரது அமைச்சரவைக்கும் அவர் கட்டுப்பட்டவர் அல்ல. அவரை நியமிப்பது அவர்களும் அல்ல. அவரை நியமிப்பது குடியரசுத் தலைவர்; வேறுமாதிரி சொல்வதென்றால், ஒன்றிய அரசு ஆளுநரை நியமிக்கிறது. அதனால், அவர் ஒன்றிய அரசிடம் எல்லாவற்றையும் தெரிவிக்கிறார்.
கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் திமுக ஒரு மாபெரும் சக்தி. அது வெறும் சாதாரண மாநிலக் கட்சி அல்ல. அதை அவ்வளவு எளிதாக நினைத்து அதனுடன் விளையாடவும் கூடாது. அந்தக் கட்சிக்கு வளங்கள் உண்டு; பலமானதோர் அஸ்திவாரம் உண்டு; ஆழ்ந்த சிந்தனை உண்டு; மங்கிப்போகாத மரபுண்டு. ஒருசில மக்களுக்கு அதுவோர் பிரதிநிதியாக இல்லாமல் போகலாம்; ஆனால் பெரும்பாலான மக்களின் பிரதிநிதியாக இருக்கவே அது விரும்புகிறது.
முரசொலியில் தனக்கெதிராகக் கண்டனம் வெளிவந்த சிலநாட்கள் கழித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பிவிட்டார்; சண்டை போடுவது தனக்குப் பிடிக்கும் என்பதையும், சண்டையில் குதிக்க மிகப்பெரியதோர் ஆர்வம் தனக்குண்டு என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
அதனால் அவருக்கு எதிராக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் தங்குதடையில்லாத விமர்சனத்தை வீறுகொண்டு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது திமுக. கட்சித் தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஊர்ஊராகச் சுற்றி பரப்புரையாற்றும் போது அவர்கள் ஆளுநர்க்கு எதிராக ஆயிரம் அம்புகளை ஏவிவிட்டு நிச்சயமாக ’நீட்’ பிரச்சினையை மீண்டும் மையப்பிரச்சினையாக்குவார்கள்.
ஆனால் மேதகு ஆளுநர் ரவி, முன்னாள் ஆளுநர்கள் போலல்ல. திமுகவால் ‘செக்’ வைக்கக்கூடிய அல்லது எளிதாக வழிக்கு கொண்டுவரக்கூடிய ஒரு சாதாரண வழமையான அரசியல்வாதியல்ல அவர். 1991ஆம் ஆண்டில்ல் திமுக ஆட்சியில் இருந்த போது, அப்போதைய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் ஆதரவைப் பெற்றிருந்தது. ஆனாலு,ம் ஒன்றிய அரசால் திமுக அரசு அப்போது கலைக்கப்பட்டது.
தற்போதைய ஆளுநர் ரவி, ஒரு தொழில்முறை உளவாளி. முன்பு எல்லா மாநிலங்களிலிருந்தும் வரும் உளவுத் தகவல்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்தவர். அரசியலமைப்புப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு சூப்பர் உளவாளியான அஜித் தோவலின் முன்களவீரராக அவர் செயல்பட்டிருக்கிறார். தோவலுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அதை ரவி விரைந்து முடித்துக் கொடுப்பார். நாகலாந்தில் நீண்டநாட்களாக இருந்த தீவிரவாத பிரச்சினையைத் தீர்த்தவர், கிட்டத்தட்ட தீர்த்துவைத்தவர் ரவிதான்.
ஆளுநர் ரவி தான் ஒரு அமைதியான மனிதர், அதிகம் பேசாதவர் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கும் முன்கோபம் உண்டு. கோபத்தில் மற்றவர்கள் மீது பாயும் குணம் உண்டு. எதிராளியை முக்கியத்துவமில்லாத ஒரு சின்னப் பூச்சியாக்கும் தந்திர உபாயம் கொண்டவர். முன்னாள் பத்திரிகையாளராகவும், பாட்னா சமத்துவவாதியாகவும் இருந்த அவர், தனது தொழில்வாழ்க்கையில் அக்கரைக்குச் சென்றார்.
எல்லா உளவாளிகளுக்கும், விடாமுயற்சிகொண்ட பத்திரிகையாளர்களுக்கும் இருந்தது போலவே, அவருக்கும் தகவல் தரும் தொடர்புகள் நிறையவே இருந்தன. அவர் நிறைய மக்களிடம் பேசுவார்; நிறையபேரைக் கண்காணிப்பார்; அறிக்கைகள் சமர்ப்பிப்பார்; அந்த அறிக்கைகள் பல நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கும்.
யாராவது எதற்காகவோ அவரைச் சந்திக்க வந்தால், அந்த நபரை அவர் ஏற்கனவே இரண்டு அடிகள் தாண்டியிருப்பார். அந்த நபரைப் பற்றிய விஷயத்தைவிட, அவர் பேச வருகின்ற விஷயத்தைப் பற்றி ரவி நிறைய தெரிந்து வைத்திருப்பார். ரவி நினைத்தால், காரியத்திற்காக வருகின்றவர் நினைத்துகூட பார்க்காத வண்ணம் வருகின்றவரின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பார்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ’நீட்’ மசோதாவைத் திருப்பி அனுப்பியதற்காக ஆளுநரை நேரில் சென்று சந்தித்து நன்றி சொல்ல விரும்பியபோது, அவரால் யாரையும் சந்திக்க முடியவில்லை. ஆளுநர் ரவிக்குத் தெரியும் அரசியல்வாதிகளின் செயல்முறைகள்; அவர்களை எப்படி சமாளிப்பது என்றும் அவருக்குத் தெரியும்.
எங்கேயோ கேட்டது போல தெரிகிறதா? ஆம். கருணாநிதி என்னும் அந்த அரசியல் ஜாம்பவான்தான் ஞாபகத்திற்கு வருகிறார். இன்றைய சூழலில் அப்பா என்ன செய்திருப்பார்? இந்தக் கேள்வியை ஸ்டாலின் தனக்குத்தானே கேட்டிருப்பாரா என்று தெரியவில்லை. திமுகவில் எவரும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. கத்துக்குட்டிகள் சாணக்கிய வேடம் பூண்டு தந்திரங்களைக் கையாண்டால் அது அவர்களையே சுட்டு வீழ்த்திவிடும்.
இது அவர்களுக்கும் தெரியும். கருணாநிதி, நகல்படுத்த முடியாத தனித்துவமிக்கவர். தங்கள் கோரிக்கையை உரக்கச சொல்லிவிட்டு திமுகவால் வெளியே போக முடியுமா? ரவி அவர்களைச் சும்மா போகவிடுவாரா? அல்லது அவர்களோடு மல்லுக்கட்டுவாரா? கருணாநிதி அவரை எப்படி கையாண்டிருப்பார்?
Read in : English