Read in : English

தங்களை மருத்துவர்களாக்கிய சமூகத்துக்கு நாம் ஏதும் செய்யவில்லையோ என்ற எண்ணம் டாக்டர் பாலகுருசாமிக்கு வந்தபோது தான் தனியே இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. 2008ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு முடித்த பாலகுருசாமி மதுரையின் ஒரு பெரிய மருத்துவமனையில் 2009 ஆண்டு பணியில் சேர்கிறார். அங்கிருந்த டாக்டர்கள் அமுதநிலவன், வெங்கடேஷ், ஸ்ரீவித்யா மஞ்சுநாத், பிரபுராம் நிரஞ்சன், சபரிமணிகண்டன் மற்றும் சதீஷ் நண்பர்களாகிறார்கள். சாமானியக் குடும்பங்களிருந்து படித்து மருத்துவர்களான தங்களுடைய மருத்துவ அறிவு ஏழை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று தீர்மானித்த நண்பர்கள் மதுரை மகாத்மா காந்தி நகரில் ஒரு சிறிய கிளினிக் ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் இலவச வைத்தியம் அல்லது நோயாளிகளால் கொடுக்க முடிந்ததை வாங்கிக்கொள்வது. விடுமுறை நாட்களில் மதுரையை சுற்றிய கிராமங்களில் முகாம்கள் நடத்துவது.

இவ்வாறு மக்கள் சமூகப் பணியில் ஈடுபட்ட அந்த மனித நேய டாக்டர்களுக்கு, கைவிடப்பட்ட மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு மதுரை போன்ற நகரங்களில் மருத்துவ வசதிகள் மிகவும் அரிது என்பது தெரியவருகிறது. இதுபோன்ற மக்களுக்கு சேவை செய்யலாம் என்று முடிவெடுத்து 2014ஆம் ஆண்டு ஐஸ்வரியம் என்ற தொண்டு நிறுவனத்தை அவர்கள் ஆரம்பிக்கிறார்கள். மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிறிய அளவில் இருபது நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் நேத்ராவதி நோய்த் தீவிர தணிப்பு, வலி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மையம்.

ஆனால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடங்களில் இறக்கும் தருவாயில் உள்ளவர்களை பேணுவது என்பது எளிதாக இருக்கவில்லை. மரணத்தின் மேல் உள்ள பயம் மற்றும் இவர்களது  அமைப்பின் மேலுள்ள சந்தேகம் போன்ற காரணங்களால் கட்டட உரிமையாளர்கள் வாடகைக்கு இடம் தர மறுப்பதால் இவர்கள் நல்லதாக ஒரு கட்டடம் தேடி அலைந்து கொண்டிருந்த போது, மதுரையை சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட ஜனார்த்தனன், ஜலஜா தம்பதியினர் தங்களுடைய 27 சென்ட் நிலத்தை இவர்களுக்கு தானமாக அளித்தார்கள். இந்த நிலத்தில்தான் சொந்த கட்டடம் கட்டப்பட்டு நேத்ராவதி நோய்த் தீவிர தணிப்பு, வலி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மையம் தற்போது இயங்கி வருகிறது.

இந்த மையம் அமைந்து ஏழு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட  ஆதரவற்றகைவிடப்பட்ட சாகும் தருவாயில் உள்ளவர்களை  மீட்டு அவர்கள் சாகும் வரை பராமரித்துள்ளது.  

இந்த மையம் அமைந்து ஏழு ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட  ஆதரவற்ற, கைவிடப்பட்ட சாகும் தருவாயில் உள்ளவர்களை  மீட்டு அவர்கள் சாகும் வரை பராமரித்துள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் மாண்போடு இறந்து போயிருக்கிறார்கள். யாருமே சொந்தம் கோராத 30 பேரின் ஈமக்கிரியைகளை ன்த டாக்டர்கள் குழுவே செய்துள்ளது.

ஒரு மாதத்திற்கு நான்கு லட்ச ரூபாய் வேண்டும். தொண்டுள்ளம் கொண்டோரின் நல்ல மனதினாலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்றுவரை இந்த டாக்டர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பெரிய மருத்துவமனைகளில் பணி செய்கிறார்கள். நேத்ராவதி மையத்தை பராமரிக்க ஒரு மருத்துவக் குழுவை அமைத்துள்ளார்கள். தொடக்கத்தில் தங்களுடைய  ஊதியத்தை கொண்டு நடத்திவந்த நிலையில், தற்போது தேவையான அளவு நன்கொடைகள் வருவதாக சொல்கிறார் டாக்டர் பாலகுருசாமி. என்றாலும் பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (Corporate Social Responsibility Fund) என்று ஒன்று இவர்களுக்கு அமையாத நிலையில் ஒருவித அச்சத்தில் தங்கள் எப்போதும் இருப்பதாக தெரிவிக்கிறார் இவர். “ஒரு மாதத்திற்கு நான்கு லட்ச ரூபாய் வேண்டும். தொண்டுள்ளம் கொண்டோரின் நல்ல மனதினாலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து நடந்து வருகிறது” என்கிறார் பாலகுருசாமி.

சொந்த கட்டடத்தில் 50 பேர் வரை வைத்து பராமரிக்கலாம். மதுரையில் ஷக்தி கார்ட்ஸ் தொழில் நிறுவனம் நடத்தி வரும் ஷ்யாம் குப்தா என்பவரது நன்கொடையால் மேலும் 22 படுக்கை படுக்கை  வசதி கொண்ட கட்டடம் இப்போதுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. எனினும் பெருந்தொற்று ஒரு பெரிய சோதனை காலமாக இவர்களுக்கு அமைந்தது என்றே கூறலாம். புதிய கட்டடத்துக்கு திறப்பு விழா நடத்த வேண்டும். அது பயன்பாட்டுக்கு வந்தால் இன்னும் கூடுதலாகப் பலரை அங்கு அனுமதிக்க முடியும் என்கிறார் பாலகுருசாமி.

நேத்ராவதி மையத்தில் சிகிச்சை பெறும் மோகனராணி (35). மூட்டு வியாதியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக படுக்கையிலேயே இருக்கிறார். தற்போது அவரது உடல்நி¬லையில் மெதுவாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

நேத்ராவதி மையம் அமைந்தது மணிகண்டன் போன்ற சமூக சேவகருக்கு பெரிய வரம். “தெருவிலிருந்து நாங்கள் மீட்கும் ஆதரவற்றோரை எங்கு கொண்டு செல்வது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவால். மருத்துவமனைகள் அவர்களை சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுவார்கள். உண்மையிலேயே இந்த மருத்துவர்கள் செய்வது மிகப்பெரிய தொண்டு,” என்கிறார் மணிகண்டன்.

என்றாலும் நோய்த்தடுப்பு மற்றும் வலிநிவாரணம் பற்றிய புரிதலோ அல்லது அவர்களுடைய மையத்தின் நோக்கமோ மக்களுக்கு அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை. “நாங்கள் முதியோர் இல்லம் நடத்துவதாக பெரும்பாலோனோர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பாலகுருசாமி.

சொந்தபந்தங்கள் இருந்தாலும் யாருமற்ற அனாதை என்று மையத்தில் சேர்த்துவிட்டு ஒதுங்கிக்கொள்வதும் நடக்கிறது. சமீபத்தில் சொந்த மகனே, எனக்கு தெரிந்தவர் என்று தந்தையை சேர்த்துவிட்டு காணாமல் போனதும் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமா என்று டாக்டர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சவால்கள் நிறைந்திருந்தாலும் தங்களுடைய மையத்தை நூறு படுக்கை கொண்ட ஒன்றாக மாற்றுவதுதான் தங்களுடைய அடுத்த லட்சியம் என்கிறார்கள் இந்த ஏழு டாக்டர்கள்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival