Read in : English
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அறிவித்தது. இது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் அரசியல் கட்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கலாம். அதற்குப் பதில் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு மிகுந்த நபர்களே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இருந்த போதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் மேயர் பதவி எந்த கட்சிக்குக் கிடைக்கிறது என்பது மிகவும் முக்கியம்.
நகர்ப்புற வாக்காளர்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்களே தவிர, நேரடியாக மேயர் பதவிகளுக்கு இல்லை.
கடைசியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், உள்ளாட்சி அமைப்பு கட்டமைப்பில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் மேயர் பதவிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சில மாநகராட்சிகள் பட்டியலினத்தவருக்கும் மற்றும் சில மாநகராட்சிகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறை மேயர் தேர்தல் மறைமுகத் தேர்தலாக நடத்தப்பட உள்ளது. அதாவது நகர்ப்புற வாக்காளர்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்களே தவிர, நேரடியாக மேயர் பதவிகளுக்கு இல்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக உள்ளன. சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. திமுகவைப் பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளுடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி அப்படியே தொடர்கிறது. இடப்பங்கீட்டில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமான முடிவு கிடைக்காததால் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாகப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. மேற்கு மண்டலத்தில் குறிப்பாகக் கோவையில் அதிமுக கூட்டணி பாஜகவுக்குப் பெரியளவு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளுக்கும் தனித்துக் களமிறங்க உள்ளன.
கடந்த சட்டசபைத் தேர்தலை விட சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்தத் தேர்தலில் களம் காண்கிறது. பொதுவாக மேயர் பதவிகளில் முக்கிய தலைவர்கள் தான் போட்டியிடுவார்கள். ஆனால் இந்த முறை மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த எதிர்பார்ப்பு அப்படியே காணாமல் போய்விட்டது. வார்டு கவுன்சிலர்களாக தங்கள் கட்சியினர் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே இப்போது அனைத்து கட்சிகளின் கவனமும் திரும்பி உள்ளது.
ஏமாற்றமடைந்த நடுத்தர வர்க்கம்
பெரு நகரங்களில்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் வாக்காளர்களை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டன. அதிக நுகர்வு, வாங்கும் திறன் மற்றும் முதலீடுகளைக் கொண்டுள்ள நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகள் தான் பெருநகரங்களில் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் இதர பிரிவினர் பெரும்பாலும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருப்பர். இருப்பினும், நகரத்திற்கான தொலைதூர திட்டம் எதுவும் இல்லாமல் இந்தத் தேர்தல் நடத்தப்படுவதால் நடுத்தர மக்கள் தேர்தலைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை மேயராக இருந்து போது ஸ்டாலின் “சிங்காரச் சென்னை“ என்ற லட்சிய முழக்கத்தை முன்னெடுத்தார். அதன் பின்னர் அதிமுகவின் சைதை துரைசாமி, பின்னர் திமுகவின் மா. சுப்பிரமணியன் ஆகியோர் மேயர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பெரியளவில் நிதி அல்லது அதிகார சக்தி இல்லை என்ற போதிலும், மேயர் பதவிகளில் இருப்போருக்கு ஒரு மாநில முதல்வர்களுக்கு இணையான புகழ் வெளிச்சம் கிடைத்தது.
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக வெள்ளம் ஏற்படும் சமயத்தில், கூவம் ஆற்றில் அதிக நீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த விஷயம் எப்படி கையாளப்படும் என்பது குறித்து மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து ஏற்படும் வெள்ள பாதிப்பு, மோசமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் ஆகியவற்றால் நகர்ப்புற வாழ்க்கைத் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்க்கை ஸ்மார்ட் ஆன ஒன்றாகக் கூறப்பட்டாலும் கூட மழை பெய்யும் போதும் சரி, மழை பெய்யாத போதும் சரி, நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை அப்படியே முடங்கிப் போகிறது.
பல புறநகர்ப் பகுதிகள் முனிசிபல் கார்ப்பரேஷன் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பின்னரும் கூட, அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சரியான வசதிகள் கிடைப்பதில்லை.
சென்னையைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர், போரூர் -பூந்தமல்லி – ஆவடி சுற்றுவட்டாரங்கள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் சுமார் 50 கிமீ சுற்றளவுக்கு நகரம் விரிவடைந்துள்ளது. இங்கு நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்குள் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோருக்கு இன்னும் கூட குழாய் நீர் இணைப்பு, கழிவுநீர், வடிகால் மற்றும் முறையான சாலை வசதிகள் கிடைக்கவில்லை. பல புறநகர்ப் பகுதிகள் முனிசிபல் கார்ப்பரேஷன் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பின்னரும் கூட, அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சரியான வசதிகள் கிடைப்பதில்லை.
குன்றத்தூர் மற்றும் மாங்காடு ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இவை சிறிய டவுன் பஞ்சாயத்துகளாக இருந்து நகராட்சிகளாக மாற்றப்பட்டன. இவை இரண்டிலும் சிஎம்டிஏ அங்கீகரித்த வீட்டுமனைகளைத் தாண்டியும்கூட, பல ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த வீட்டு மனைகள் உள்ளன. இருப்பினும், சம்பந்தப்பட்ட வீட்டுமனை நிறுவனங்கள் அங்கு வசிக்கும் மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை.
என்ன தேவை?
இது போன்ற சிக்கல்களுக்கு முக்கிய காரணம் இந்த உள்ளாட்சி அமைப்புகளின் குறுகிய அதிகார வரம்புகள் தான். இவற்றுக்கு திடக்கழிவுகளை நிர்வகிக்கும் திறன் குறைவு. சாலைகள், தெரு விளக்குகள் அமைக்கவும் நிதி குறைவு. இதில் வெளிப்படைத்தன்மையும் குறைவு. எனவே, இந்த அமைப்புகள் அளவுக்கு அதிகமாகவே இத்திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் ஸ்வச் பாரத் அதாவது தூய்மை இந்தியா போன்ற திட்ட நிதியைச் சார்ந்து இருக்கின்றன.
இதற்கிடையில், அதிகரிக்கும் சாலைப் போக்குவரத்து, கான்க்ரீட் காடுகளைப் போல இருக்கும் வீடுகள் நகரின் சுற்றுப்புறங்களில் ஏற்படும் பிரச்சினைகளை மோசமாக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்கள் சோழிங்கநல்லூர் முதல் பூந்தமல்லி வரையும் மாதவரம் வரையிலும் தனது சேவையை விரிவுபடுத்தக் குறைந்தது இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.
மறுபுறம், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் மக்களுக்கும் இடையோன உறவு மோசமாகவே உள்ளது. தாங்கள் முறையாக வரி செலுத்தும் போதிலும், நகர்ப்புற அமைப்புகள் தங்களுக்குக் குறைவான வசதிகளையே செய்து தருவதாக மக்கள் கருதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலைமை மிக மோசமாக இருந்தது. பல இடங்களில் மிரட்டி பணம் பறிப்பது, லஞ்சம் வாங்குவது போன்ற செயல்களில் முனிசிபல் கவுன்சிலர்கள் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. கவுன்சிலர்களின் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், கடந்த 2012 ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியைக் கலைக்கப் போவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார்.
இந்த முறை நிலைமை மாறுமா?
திமுக அரசு அனைத்து நிலைகளிலும் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் எனக் கூறலாம். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள் உட்பட அனைத்து நபர்களுக்கும் ஒவ்வொரு சேவையை வழங்கவும் ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயம் செய்யலாம். இவற்றை எல்லாம் தாண்டி சிறப்பாகச் செயல்படும் கவுன்சிலர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த பத்தாண்டுக் கால இடைவெளிக்கு சில தலைவர்களின் செயல்பாடுகளே காரணம். தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கம் பெரும்பாலும் இதைத் தொல்லையாகவே கருதுகிறது,
1990களில் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்களால் உறுதி செய்யப்பட்ட மூன்று அடுக்கு பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அரசு முறையை ஏற்படுத்துவதில் ஜெயலலிதாவின் அரசு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. சட்டப்படி உள்ளாட்சி தேர்தல்களை நடத்த எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தியது அதிமுக! திமுகவும் கூட 2021இல் ஆட்சிக்கு வந்த பிறகு, புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் நீதிமன்றங்களில் பல முறை கூடுதல் கால அவகாசம் கோரி முறையிட்டது.
நாட்டின் பல மாநிலங்களும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்த ஆர்வம் காட்டுவதில்லை என்பதே பல அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. மாநில அரசுகள் நகராட்சிகளுக்கு அதிகாரம் அளிப்பதைத் தவிர்க்கின்றன. ஏனென்றால் இது உள்ளூர் மட்டத்தில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களை உருவாக்கும் என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
இதுபோன்ற அமைப்புகளில் இருந்து வருபவர்கள் எதிர்காலத்தில் முதல்வர் பதவிகளை நிரப்பலாம். உதாரணத்திற்கு பெரும்பாலும் பாரிஸ் மேயர் பதவிகளில் உள்ளவர்கள், பின்னர் அந்நாட்டின் அதிபர்களாக ஆகியுள்ளனர். நியூயார்க் மேயர்களும் கூட உலக அளவில் அறியப்பட்ட நபர்களாகவே உள்ளனர். எனவே, இதுபோன்ற விஷயங்கள் தமிழக அரசியலுக்குக் கெடுதலை தருமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. முதல்வர் ஸ்டாலின் தனக்கு மக்களிடையே அசைக்க முடியாத செல்வாக்கு உள்ளது என்பதை உறுதியாக நம்பினால், அவர் சென்னை மாநகராட்சிக்கு அரசியல் ரீதியாக முக்கிய பெண்ணை மேயர் பதவிக்குக் கொண்டு வந்து, உலக வரைபடத்தில் சென்னையின் முத்திரையைப் பதிக்கும் அளவுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
Read in : English