Read in : English

கோவிட்-19 பெருந்தொற்று எனும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடந்த பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட் எதிர்வரும் ஆண்டுக்கான நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.  2022- 2023 மத்திய பட்ஜெட்டுடன்  இணைந்து வெளியாகும் 2021-22-க்கான பொருளாதார ஆய்வறிக்கையானது, அரசின் கொள்கைகள் பற்றி விமர்சனபூர்வமான தரவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆழமான ஆராய்ச்சி மூலமாக முந்தைய ஆண்டை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்படும் பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நாட்டுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும். இந்தப் பின்னணியில், மத்திய நிதி அமைச்சகத்தினால் அடுத்த தலைமைப் பொருளாதார ஆலோசகராக டாக்டர் வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் கே.வி.சுப்பிரமணியனின் மூன்றாண்டு பதவிக் காலம் கடந்த 2021 டிசம்பர் 17-ல் முடிந்து, அவர்  விலகியதில் இருந்து இந்த பதவியானது கடந்த ஒன்றரை மாதமாக காலியாகவே இருந்தது.

அனந்த நாகேஸ்வரன் மதுரையைச் சேர்ந்தவர்.  2019-இல் இருந்து 2021 வரை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் அவர் பகுதி நேர உறுப்பினராக இருந்தார்.

அனந்த நாகேஸ்வரன் மதுரையைச் சேர்ந்தவர். அவரது பணியின் காரணமாக  பல பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் உலகம் முழுவதும் சென்றிருந்தபோதிலும் அவர் இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பயின்று 1985-ல் எம்.பி.ஏ. முடித்தார். பின்னர் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றார்.  அவரின் பி.எச்டி. ஆய்வு `empirical behavior of exchange rates’ என்பது பற்றியது (1994).

சமீப காலம் வரையில், 2019-இல் இருந்து 2021 வரை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் அவர் பகுதி நேர உறுப்பினராக இருந்தார். இதற்கு முன்பாக சென்னை  IFMR Graduate School of Business கல்லூரியின் டீன் ஆகவும், சென்னை Krea பல்கலைக்கழகத்தில் வருகைதரு பொருளாதார பேராசிரியராகவும் பொறுப்பு வகித்தார். சென்னையிலும், சிங்கப்பூரிலும் உள்ள பல்வேறு தொழில்-வணிகவியல் கல்லூரிகளிலும்,  மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் நிதியியல் பொருளாதாரப் பாடம் பயிற்றுவித்து வந்தார். டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ், அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் (பி) லிமிடெட் உள்பட பல்வேறு கம்பெனிகளில் அவர் இயக்குநர்கள் குழு உறுப்பினராக இருக்கிறார். சமூக தொழில்நிறுவனங்களில் முதலீட்டாளர் முயற்சிகளுக்காக Aavishkaar Venture Capital என்ற நிறுவனத்தை அவர் இணைந்து உருவாக்கி இருக்கிறார். பொதுக் கொள்கை குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமான Takshashila நிறுவனத்தை இணைந்து நிறுவியவர் அவர்.

குறிப்பாக, பெருந்தொற்றின் காரணமாக பொருளாதாரம் சிதைந்து போயிருக்கும் ஒரு காலகட்டத்தில், நீடித்து நிலைத்து நிற்கும் ஆட்சி நிர்வாக கட்டமைப்புகளுடன் நிதி அமைப்புகளை நிலை நிறுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், நாட்டின் மிக உயர்ந்த நிலையிலான கொள்கை வகுத்தல் செயல்பாடுகளுக்கு பல்வேறு சிறந்த ஆற்றல்களை புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் தன்னுடன் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவையும் அதன் பொருளாதார அடித்தளங்களையும் குறித்த நன்நம்பிக்கையுடன் அவர் வருகிறார்.

ஆண்டாண்டுக் காலமாக இந்தியப் பொருளாதாரத்தை எவை பாதித்து வருகின்றன என்பதைப் பற்றி, அரசின் கொள்கைகளை திட்டமிடுதல் மற்றும் மாநிலப் பொருளாதாரங்களை கருத்தில் கொள்ளுதல் என்ற கண்ணோட்டத்தில் அனந்த நாகேஸ்வரன் விரிவாக எழுதி இருக்கிறார்.

ஆண்டாண்டுக் காலமாக இந்தியப் பொருளாதாரத்தை எவை பாதித்து வருகின்றன என்பதைப் பற்றி, அரசின் கொள்கைகளை திட்டமிடுதல் மற்றும் மாநிலப் பொருளாதாரங்களை கருத்தில் கொள்ளுதல் என்ற கண்ணோட்டத்தில் அனந்த நாகேஸ்வரன் விரிவாக எழுதி இருக்கிறார். “பொருளாதாரத்தில் வளத்தையும், சமூகத்தில் உறுதிநிலையையும் அடைவதற்கு அரசின் பங்குப் பணி தவிர்க்க முடியாதது என்ற போதிலும், அரசின் ஆற்றலுக்கு உள்ள வரம்புகள் கவலைக்குரியவை, எங்கும் ஊடுருவி இருப்பவை, அகற்றுவதற்கு கடினமாக பரவியிருப்பவை’’ என்று அனந்த நாகேஸ்வரன் குறிப்பிடுகிறார்.

ராஜாஜி, அம்பேத்கர், பி.ஆர்.ஷெனாய் ஆகியோரினால் ஊக்கம் பெற்றவரான அனந்த நாகேஸ்வரன்,  அதீத அரசு கட்டுப்பாடு என்ற கருத்தையோ அல்லது கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திர சந்தை அமைப்புகள் என்ற கருத்தையோ ஏற்றுக் கொள்பவர் அல்ல. அரசின் கொள்கைகளை இந்திய சித்தாந்தங்களுடன் ஒருங்கிணைப்பதில் நம்பிக்கை கொண்ட நடைமுறைக்கு ஏற்ற பொருளாதார வல்லுநர் என்று அவர் கருதப்படுகிறார்.

அனந்த நாகேஸ்வரன் கடந்த 2019-ல் `வேலைவாய்ப்புகளுக்கான இந்தியாவின் தேடல்: ஒரு கொள்கை செயல்திட்டம்’( ‘India’s Quest for Jobs: A Policy Agenda’) என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை குல்சார் நடராஜனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். அதை சர்வதேச அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace) அமைப்பு நூலாக வெளியிட்டுள்ளது. “தனியார் துறையை இந்திய அரசு எந்த வகையில் பார்க்கிறது எந்த வகையில் அதனுடன் கலந்துறவாடுகிறது என்பதில் சிந்தனை ரீதியிலான புதிய மாற்றம் ஏற்படாத வரையில் எந்த ஒரு சீர்திருத்தத்தின் செயலாக்கமும் தாழ்ந்த நிலையில்தான் இருக்கும்’’ என்று அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. “எதிர்நிலையிலான, ஒழுங்குமுறைப்படுத்துகின்ற வகையிலான அணுகுமுறைக்கு பதிலாக, கூட்டுறவு மற்றும் துணைபுரிந்து ஊக்கமளித்தல் என்பதற்கு அழுத்தம் தருவது அவசியம்.  அரசாங்கத்திலும் அரசின் கொள்கையிலும் வெளிப்படுகின்ற பெரும் தொழில்நிறுவனங்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான மனநிலைதான், பயனுள்ள வகையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினை’’ என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இன்றைய மத்திய அரசின் கொள்கைகளை பலரும் குறைகூறி வரும் நிலையில், “ பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கு வழி வகுத்திருக்கிறது. நிதிப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயம் ஆக்குவதற்கு ஒரு செயலூக்கியாக செயல்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வேரூன்றியுள்ள அமைப்புசாரா தன்மை குறித்து ஒரு விவாதத்தை எழுப்பியிருக்கிறது. குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSME)  மறு-வரையறை செய்வதற்கு இட்டுச் சென்றுள்ளது. கம்பெனிகள் சட்டத்தில் உள்ள தண்டனைக்குரிய பல விதிகள் மீறப்படுவதை குற்றமயம் ஆக்குவதை அகற்றியிருக்கிறது‘’ என்று அனந்த நாகேஸ்வரன் `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில் நம்பிக்கை உணர்வுடன் எழுதியிருக்கிறார்.

“இந்தியா வளர முடியுமா: சவால்கள், வாய்ப்புகள், முன்செல்வதற்கான வழி’’ (“Can India Grow: Challenges, Opportunities, and the Way Forward”) என்ற தலைப்பில் கடந்த 2016-ல் இன்னொருவருடன் இணைந்து அவர் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் அவர், “இந்திய அரசானது கீழ்நிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி, நகர்ப்புற ஆட்சி நிர்வாகம், வீட்டு வசதி, நிலம், கடன் வசதி, தொழிலாளர் சந்தைகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஒப்பந்தப் பணிகள் முதலிய துறைகளில்  சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அமைப்பு சாரா பொருளாதாரத்தை சுருங்க வைப்பதற்கும், வரிவிதிப்பு தளத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசு முயற்சி செய்ய வேண்டும்.   மேலும் அரசின் ஆற்றலையும், பணியாளர்கள் மேலாண்மையையும் அது மேம்படுத்த வேண்டும்’’ எனறு குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், மாவட்ட அளவிலான வழங்கல் அமைப்புகளின் மீது தனி கவனம் செலுத்தும் வகையில் அடித்தள நிலையிலான ஆட்சி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும்  அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் புறக்கணிக்கும் விஷயமாகும்.  “நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, மாவட்ட ஆட்சித் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிற மாவட்ட- அளவிலான அதிகாரவர்க்க அமைப்பானது,  அதன் கட்டமைப்பிலும் சரி பணியாளர்களை ஈடுபடுத்துவதிலும் சரி ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இதே காலகட்டத்தில், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட இடையீடுகள் மற்றும் அரசின் சந்தை முறைப்படுத்தல் ஆணை உள்பட  அரசாங்கத்தின் பொறுப்புக்கள் வியக்கத்தக்க வகையில் விரிவடைந்திருக்கின்றன… ஆனால் கூடுதல் பணியாளர்களை அமர்த்துதல் உள்பட மாவட்ட ஆட்சி நிர்வாகங்களை வலுப்படுத்துவதற்கான அடிப்படையான சீர்திருத்தங்களை செய்யாத வரையில், இந்த நடவடிக்கைகள் எல்லாம் வெறும் வலி குறைப்பு மருந்துகள் போலத்தான் இருக்கும்’’ என்று அவரது பகுப்பாய்வில் அனந்த நாகேஸ்வரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நிறுவன அமைப்புகள் மூலமாக சேவைகளை வழங்குவதற்கான அரசின் ஆற்றல்தான், பொருளாதார வளத்துக்கான முக்கிய உந்து சக்தி என்று   அவர் நம்புகிறார். அந்த வகையில், தேசிய, மாநில, மாவட்ட நிலைகளில் நிறுவன வழங்கல் அமைப்புகளையும், மாற்றங்களை ஏற்படுத்தும் சீர்திருத்த நடவடிக்கைளையும் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் என்ற முறையில் அனந்த நாகேஸ்வரன் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival