Read in : English

சிறுதானியங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, சென்னை, கோவை போன்ற நகரங்களில் ரேஷன் கடை மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத் துறை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக அமைக்கப்படும் குழுவில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைவராக இருப்பார். வேளாண்மை இயக்குநர், வேளாண் சந்தை மற்றும் வேளாண்மை தொழில் இயக்குநர், வேளாண் உற்பத்தி அமைப்பு பிரதிநிதி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பிரதிநிதி, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பிரதிநிதி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினராக இருப்பார்கள். அத்துடன், மாவட்ட கலெக்டர்களும் மாவட்ட அளவிலான குழுவை இதற்கென்று நியமித்துக் கொள்வார்கள். ராகி, கம்பு, திணை, குதிரைவாலி அரிசி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை அவற்றை உற்பத்தி செய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யலாம். 500 கிராம், ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைக்கபட்டு, அதில் விலை, உபயோகிக்கும் கால அளவு, சான்று எண் ஆகியவற்றை அச்சிடப்பட வேண்டும் என்றும் முதற்கட்டமாக சென்னை, கோவை மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்  கூறப்பட்டுள்ளது.

சிறுதானியங்களை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், சிறுதானியங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது குறித்து பகிர்ந்து கொண்டார் நெல்லையை சேர்ந்த இயற்கை வேளாண் விவசாயியான பாமயன்.

கேள்வி: சிறுதானியங்களை அரசு கொள்முதல் செய்யும் நடவடிக்கை விவசாயிகளை ஊக்குவிக்குமா?

பாமயன்: அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்கிறோம். சிறுதானியங்கள் மானாவாரி பயிராக இருப்பதாலும், குறைந்த அளவு நீர் தேவைப்படுவதால் வருங்காலங்களில் விவசாயிகளின் கவனம் சிறுதானியங்கள் மீது அதிகளவில் இருக்கும். இதனால் சிறு தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கு வருவாய் பெருகும்.

சிறுதானியங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் கூறும் விலைக்கு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது.

கேள்வி: அரசு கொள்முதல் செய்யும் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகுமா..?

பாமயன்: நம் முன்னோர்கள் சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை அன்றாட உணவாக உண்டு வாழ்ந்து வந்தனர்.  நாளடைவில் அதிகளவில் அரிசி உணவு எடுத்து கொள்ளப்பட்டதாலும், சிறுதானியங்களின் உற்பத்தி பெரும்பாலும் இல்லாததாலும் அவற்றின் பயன்பாடும் மெல்ல, மெல்ல குறைந்தது. தற்பொழுது மருத்துவத்திற்காக சிறுதானியங்களை உண்ணும் நிலையில் மக்கள் உள்ளனர். உற்பத்தி குறைவால் சந்தைகளில் சிறுதானியங்களின் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே உற்பத்தி செய்வதால் அரசு அதற்கான விலையை கொடுத்தால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியும். நெல்லை குறைந்த அளவுக்கு கொள்முதல் செய்யலாம். ஆனால், சிறுதானியங்கள் அந்த அளவுக்கு இல்லை. ஏக்கருக்கு 40 மூட்டை நெல் எடுக்கும் இடத்தில் 2முதல் 4 மூட்டை அளவுக்கு சிறுதானியங்களை அறுவடை செய்யலாம். எனினும், சிறுதானியங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் கூறும் விலைக்கு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது.

கேள்வி: சிறுதானியங்களை சந்தைப்படுத்தும் பிரச்சனைகளுக்கு அரசின் முடிவு தீர்வாகுமா..?

பாமயன்: ராகி,கேழ்வரகு, கம்பு, தி¬ணை போன்றவற்றிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அதன் விற்பனையில் சிக்கல் இல்லை. நியாய விலைக் கடைகளில் அரசே விற்பனை செய்வதால் விவசாயிகளால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். மானாவரி பயிராக சிறு தானியங்கள் இருப்பதால் சீசன் காலங்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சிறு தானியங்களை விளைவிக்க முடியும். மேலும், குறைந்த நீர் தேவைப்படுவதால் மக்காச்சோளம் உற்பத்தியை செய்து வந்த விவசாயிகள் இனி சிறுதானியங்களை விளைவிக்க தொடங்குவர்.

ஒரு கிலோ திணை 50 ரூபாய் என விற்பனை செய்யும் போது அடித்தட்ட மக்கள் வாங்க யோசிப்பார்கள். அரசே இந்த சிறுதானியங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் ஏழை, எளிய மக்களும் சத்தாண உணவை எடுத்து கொள்ள முடியும்.

கேள்வி: மக்களிடம் சிறுதானியங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது..?

பாயமன்: நெல்லுக்கு ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சிறு தானியங்களுக்கு அப்படி இல்லை. எந்தவித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாததால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. இதனால் நோய் தடுப்பு உணவாக சிறுதானியங்களை மக்கள் எடுத்து கொள்கின்றனர். உதாரணமாக ஒரு கிலோ திணை 50 ரூபாய் என விற்பனை செய்யும் போது அடித்தட்ட மக்கள் வாங்க யோசிப்பார்கள். அரசே இந்த சிறுதானியங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் ஏழை, எளிய மக்களும் சத்தாண உணவை எடுத்து கொள்ள முடியும்.

கேள்வி: தமிழகத்தில் எங்கெல்லாம் சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றன..?

பாமயன்: தென்மாவட்டங்களில் குதிரைவாலி, வரகு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. வடமாவட்டங்களில் சாமை, திணை பயிரிடப்படுகின்றன. கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவை அனைத்து பகுதிகளிலும் மானாவரி பயிராக விளைகின்றன. அரசு எடுக்கும் முயற்சியால் வருங்காலத்தில் நமது பாரம்பரியமிக்க சிறுதானியங்களை அதிகளவில் பயிரிட முடியும்.

கேள்வி: பொது விநியோக திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் அளிப்பதனால் மக்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானியங்களை பயன்படுத்த தொடங்குவார்கள் என்று நினைக்கிறீர்களா?

பாமயன்: உடனடியாக அது நடக்கும் என்று தோன்றவில்லை. மேலும் அரிசிக்கு மாற்றாக சிறு தானியங்களை தரும் அளவு அவை இப்போது விளைவதும் இல்லை. சிறு தானியங்கள் விலைகூடிய பொருளாகி விட்டது. பொது விநியோகத்தின் மூலம் கிடைப்பதால் ஆரோக்கியமான சிறுதானியங்கள் ஏழை மக்களுக்கும் கிடைக்கும்.

கேள்வி: பொது விநியோக திட்டம் மட்டும் அல்லாது மதிய உணவு திட்டத்துக்கும் அரசு சிறு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பாமயன்: சொல்லப்போனால் சிறு தானியங்களை நாங்கள் மதிய உணவு திட்டத்துக்கு வழங்குங்கள் என்று பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வருகிறோம். பொது விநியோக திட்டம் மட்டுமல்லாது மதிய உணவு திட்டத்துக்கும் சிறுதானியங்களை வழங்குங்கள் என்று தொடர்ந்து விவசாயிகளான நாங்கள் வலியுறுத்தவே செய்வோம்.

கேள்வி: பாரம்பரியமாக சிறு தானியங்கள் விளையும் இடத்துக்கருகே நுகரப்படும். இந்த பொது விநியோக திட்டம் என்பது இந்த பாரம்பரியத்துக்கு ஒரு முரணாக தோன்றவில்லையா?

பாமயன்: இந்த பாரம்பரியம் மாறி வெகு காலமாகி விட்டது. தமிழகத்தில் விளைவதைவிட அண்டை மாநிலங்களான கர்நாடகம் ஆந்திரத்திலிருந்து சிறு தானியங்கள் அதிகம் இங்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. அரசு சிறுதானியங்களை பொது விநியோக முறைக்கு கொண்டு வருவது தமிழ் நாட்டில் சிறு தானியங்கள் பயிரிடப்படும் அளவு அதிகரிக்க உதவும். விவசாயிகளும் பயனடைவார்கள்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival