Read in : English
பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியை 2024ஆம் ஆண்டுக்குள மக்கள் நல திட்டங்களான மதிய உணவு திட்டம், நியாய விலைக்கடைகள் (ரேஷன்) மற்றும் மத்திய அரசின் உணவு திட்டங்களில் பயன்படுத்துவது குறித்து அறிவித்தார். இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி யென்றால் என்ன என்பது ஒரு புறமிருக்க இது எந்த மாதிரி விளைவுகளை, முக்கியமாக விவசாயத்திலும் வர்த்தகத்திலும் ஏற்படுத்தும் என்ற பயம் மறுபுறம் இருக்கிறது.
இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?
உணவுப்பொருட்களை செறிவூட்டுவது என்பது நாம் வழக்கமாக உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துகளை கலப்பது. உணவின் நோக்கமே ஊட்டச்சத்துகளை உடலில் கொண்டு சேர்ப்பதுதான். ஆனால் சரிவிகித சத்தான உணவு என்பது எல்லாருக்கும் கிடைப்பது இல்லை. அதற்கான பொருளாதார வளங்களும் எல்லோருக்கும் அமைவது இல்லை எனும் நிலையில் நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் எல்லா சத்துகளையும் செயற்கையாக சேர்க்கும் முறைதான் செறிவூட்டுவது. உதாரணத்திற்கு அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பு.
இரத்தத்தில் இரும்புச்சத்துக் குறைபாடால் ஏற்படும் இரத்தசோகை இந்தியாவில் கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் கூறுகிறது.
இரும்புச்சத்து செறிவூட்டுவது என்பது போலிக் ஆசிட் போன்ற பொருட்களை கொண்டு அரிசியை செறிவூட்டுவது. பல விஞ்ஞான முறைகள் இருப்பினும், வழக்கமான ஒரு முறை என்னவென்றால் குருணை அரிசியை மாவாக அரைத்து அவற்றில் போலிக் ஆசிட், வைட்டமின் B12 போன்ற நுண்சத்துகளைக் கலந்து திரும்பவும் அரிசி மணிகளை போல செய்வார்கள். இந்த செறிவூட்டப்பட்ட அரிசிமணிகள் பின்பு வழக்கமான அரிசியுடன் 0.5 முதல் 2 விழுக்காடு வரை சேர்க்கப்படும்.
விதிகளின்படி ஒரு கிலோ அரிசியில் 28-45 மில்லி கிராம் இரும்புச்சத்தும், 75-125 மில்லி கிராம் போலிக் ஆசிட்டும் 0.75 1.25 மில்லி கிராம் வைட்டமின் B12ம் கலந்திருக்க வேண்டும். மத்திய அரசின் நுகர்வோர் அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி ஒரு கிலோ அரிசியில் 10 கிராம் அளவு செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளைக் கலக்கலாம்.
பெரும்பாலும் கிடைக்கும் அரிசியின் மீது நுண்சத்துகளை கோட்டிங் செய்வது எளிதெனினும், சமைப்பதற்கு முன்பு இரண்டு மூன்று முறை அலசும் இந்திய பழக்கத்திற்கு இந்த முறை சரிவராது.
எதற்காக அரிசியை செறிவூட்டவேண்டும்?
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்புப்படி இந்தியா இரத்த சோகை நோயின் தலைநகரம். உலகம் முழுதும் இரண்டு பில்லியன் மக்கள் இரத்தசோகையினால் பாதிக்கப்படுவதாகவும் அதில் ஒரு மில்லியன் மக்கள் ஓராண்டில் இரத்தசோகையினால் முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இரத்தத்தில் இரும்புச்சத்துக் குறைபாடால் ஏற்படும் இரத்தசோகை இந்தியாவில் கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் உற்பத்தித் திறனில் கிட்டத்தட்ட 4 விழுக்காடு இரத்த சோகையினால் பாதிக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
இரத்தசோகைக் குறைபாட்டை தடுக்கவேண்டுமெனில் உடலுக்கு இரும்புச்சத்து வேண்டும். நாட்டில் 65 விழுக்காடு மக்கள் அரிசியை பிரதான உணவாக உட்கொள்கிறார்கள். சரிவிகித உணவு கனவாக இருக்கும் மக்களுக்கு அரிசியாவது கிடைக்கிறது என்று கொண்டால் அரிசியை இரும்புச்சத்து கொண்டு செறிவூட்டும் பட்சத்தில் இரத்த சோகையை சமாளிக்க இது சிறந்த உத்தியாக அமையும் என்பது கண்கூடு.
இரத்தசோகை ஒழிப்பு மட்டும்தான் நோக்கமா?
ஓர் அற்புதத் திட்டமாக தெரியும் இதன் பின்னணியில் இரத்த சோகை ஒழிப்பு மட்டுமே அரசின் திட்டமா அல்லது சிறு அரிசி வியாபாரிகளை ஒழித்துக் கட்டும் திட்டமா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. “இதுபோன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருளை வாங்கி சாப்பிட எல்லோராலும் முடியுமா அல்லது அவற்றை விற்க சிறு வியாபாரிகளான எங்களால்தான் முடியுமா” என்று கேட்கிறார் மதுரையில் அரிசி கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர்.
மத்திய அரசு இதுபோன்ற செறிவூட்டப்பட்ட அரிசியை பரவலாக்கும் பட்சத்தில் அதை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் மத்திய மாநில அரசுகளின் உதவி வேண்டும் என்கிறார் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகளின் சங்கப் பொருளாளர் சாய் சுப்ரமணியம். தற்சமயம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஆலை மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை முறையில் தயாரிப்பதாகவும் அதற்கான உற்பத்தி செலவுகள் அதிகம் ஆகும் என்கிறார் சுப்ரமணியம்.
திரும்ப பெற்ற விவசாயச் சட்டங்கள் வேறுவழியில் வருகிறதா?
ஏறக்குறைய 15 மாதங்கள் போராடிய பின், மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை கடந்த நவம்பர் மாதம் திரும்ப பெற்றுக்கொண்டது. அதன் பின்னால் உத்தரபிரதேசத்தில் நடக்கப்போகும் தேர்தல்கள் இருந்ததாக ஒரு காரணமும் சொல்லப்பட்டது. விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்பட்டாலும் வேறுமுறைகளில் அவை திரும்ப வரும் என்றும் விவசாயிகள் தங்கள் அச்சத்தை தெரிவித்தனர். இந்நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசி அது போன்ற முறைகளில் ஒன்றோ என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சங் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங் கூட இந்த செறிவூட்டப்பட்ட அரிசி மீதான தங்களுடைய பயத்தை பிரதமரிடம் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. மத்திய அரசின் விவசாய சட்டங்களை ஆதரிப்பதாகக் கூறும் பாரதிய கிசான் சங்கின் தமிழ் நாடு மாநில செயலாளர் வீரசேகரன், இந்த இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி அனைவரும் வாங்க வேண்டியதுதானா என்ற கேள்வியை எழுப்புகிறார். விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோர்களுக்கோ இதனால் உண்மையான பயன் கிடைக்குமா என்ற ஐயத்தையும் எழுப்புகிறார்.
இதுபோன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருளை வாங்கி சாப்பிட எல்லோராலும் முடியுமா அல்லது அவற்றை விற்க சிறு வியாபாரிகளான எங்களால்தான் முடியுமா” என்று கேட்கிறார் மதுரையில் அரிசி கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர்.
“இடை தரகர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் இதில் பயனடையும் வாய்ப்புகளே அதிகம். மேலும் தென்னிந்தியர்களான நாம் உட்கொள்ளும் அரிசியின் அளவும் அதிகம். அளவுக்கு அதிகமாக சேரும் இரும்பு சத்தினால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றியும் நாம் யோசிக்க வேண்டியுள்ளது,” என்கிறார் வீரசேகரன்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்தியாவை உலக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது. வர்த்தக புள்ளி விவரங்கள் இந்தியாவில் அரிசி உற்பத்தி 2021 மற்றும் 2026 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் வளர்ச்சி 2.7 விழுக்காடு இருக்கும் என தெரிவிக்கிறது.
ஐடிசி போன்ற பெருநிறுவனங்கள் தற்சமயம் அரிசி வர்த்தகத்தில் கோலோச்சி வருகின்றன. செறிவூட்டப்பட்ட அரிசி மேலும் பல பெருநிறுவனங்களை சந்தைக்கு கொண்டு வருமா? நமது உள்ளூர் அரிசி மண்டி வியாபாரி இந்த செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தாக்கு பிடிப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
Read in : English