Read in : English
நகரமயமாதல் எஞ்சியுள்ள பசுமையை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் வேளையில் சென்னையை மையமாக கொண்ட அமைப்பு ஒன்று சிறு காடுகளை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உருவாக்கி வருகிறது. பெரிய அபார்ட்மெண்ட்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள உபயோகப்படுத்தாத அல்லது தரிசு நிலங்களில் இந்த காடுகள் உருவாக்கப்படுகின்றன.
கம்யூனிட்ரீ என்ற இந்த அமைப்பு நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஏழு இலட்சம் மரக்கன்றுகளை நட்டிருப்பதாக கூறுகிறார் இந்த அமைப்பின் நிறுவனர் ஹஃபிஸ் கான். செப்டம்பர் மாதம் 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஏறக்குறைய 3.5 லட்சம் மரங்களை சென்னையில் மட்டும் நட்டிருக்கிறார்கள்.
இது வழக்கமான மரம் நாடும் நிகழ்ச்சியை போன்றதல்ல என்கிறார் கான். இடத்திற்கு தகுந்து திட்டமிட்டு உருவாக்கப்படும் சிறு காடுகள் இவை. ஒரு அபார்ட்மெண்ட் வளாகத்தில் காடு போன்ற அமைப்பை விட பட்டாம்பூச்சி பூங்கா சிறப்பாக இருக்கும். பள்ளி வளாகங்களில் பழ மரங்களை கொண்டு உருவாக்கப்படும் சிறுகாடு மாணவர்களை கவரும். அனைத்து மரங்களையும் கொண்டு முறையாக ஒரு தொழிற்சாலை வளாகத்தில் உண்டாக்கப்படும் காடு பறவைகளுக்கும் சிறு பிராணிகளுக்கும் இருப்பிடமாக அமையும். அங்குள்ள சூழலையும் மாற்றுவதாக அமையும்.
இதற்காக இந்த அமைப்பிடம் நூறு தோட்டக்காரர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த காடுகளை அமைக்க வேம்பு, புங்கம் போன்ற உள்நாட்டு மரவகைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பல்வேறு பண்ணைகளிலிருந்து வாங்கப்படும் மரக்கன்றுகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு அவற்றில் இருந்து இடத்திற்கு தகுந்து மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்கள் மரம் நடுவதில் பங்கேற்கலாம் ஆனால் மரம் நடுவதற்கு மட்டும் தன்னார்வர்களை தேடுவதில்லை என்கிறார் கான். மக்கள் தங்களுடைய நேரத்தை இந்த காடுகளில் செலவிடும் வகையிலானா நிகழ்ச்சிகளை நடத்த தன்னார்வலர்கள் தேவை படுகிறார்கள் என்கிறார். இந்த காடுகளை சுற்றி நடத்தப்படும் யோகா, ஓவிய வகுப்புகள், புகைப்பட நிகழ்வுகள் மக்களை இந்த சிறுகாடுகளோடு ஒன்றிணைக்கும் என்பது இந்த அமைப்பின் நம்பிக்கை.
இந்த சிறுகாடுகள் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைய வேண்டும். அப்பொழுதுதான் அவை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கப்படும். “ஒரு நாளை பறவைகள் குரலோடும் பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களோடு தொடங்க பழக்கப்படுத்த ஒருவர் அங்கிருக்கும் மரங்களின், பறவைகளின், பட்டாம்பூச்சிகளின் பாதுகாப்பாளராக மாறிவிடுவார். அங்கிருக்கும் மரங்களை வெட்ட அனுமதிக்க மாட்டார். இதுதான் நம்முடைய நோக்கம்,” என்கிறார் கான்.
இந்த சமூக பங்களிப்புக்காக கம்யூனிட்ரீ ரோட்டோர தேநீர் கடைகள், இளநீர் விற்பவர்கள், நடைபாதை உணவு கடைகள் நடத்துபவர்களையும் இக்காடுகளின் வளர்ப்பில் மறைமுகமாக ஈடுபடுத்துகிறது. அவர்கள் குப்பையில் கொட்டும் உபயோகித்த தேநீர் பொடி, முட்டை ஓடுகள், இளநீர் கூடுகள் போன்றவற்றை மரங்களுக்கு உரமாக போட தங்களிடம் தருமாறு கேட்டுக்கொள்கிறார்கள். “தயங்குவார்கள். சாக்கு சொல்வார்கள். ஆனால் ஒருமுறை ஒத்துக்கொண்டால் அவர்களது அக்கறை வியப்பூட்டுவதாக இருக்கும். சிலநாட்கள் அவர்கள் தரும் தேநீர் பொடி அல்லது முட்டை ஓடுகளை மரங்களுக்கு போடாமல் குவித்து வைத்தால் கோபித்து கொள்வார்கள்,” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு இடத்தில் சிறு காடுகளை உருவாக்கும் கம்யூனிட்ரீ அமைப்பு மூன்று ஆண்டுகாலம் அவற்றை பராமரிக்கும். மக்களோடு காடுகளை இணைக்கும் முயற்சியாக இந்த பகுதிகளில் சிறு நிகழ்வுகளை நடத்திக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு இந்த அமைப்பு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. தங்களுடைய இந்த முயற்சி நல்ல பலனளிக்கிறது என்கிறார் கான்.
Read in : English