Read in : English

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும் அவ்வாறு தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்’ என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனீஸ்வரநாத் பண்டாரி, ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு அண்மையில் ஆணை பிறப்பித்தது.

கொரானா தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரலாம்; அவர்கள் மூலம் கொரோனா பிறருக்கு பரவலாம் என்ற அறிவியல் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் டாக்டர் வீ. புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு, கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க கூடாது என்று மற்றொரு வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்.

டாக்டர் வீ. புகழேந்தி

இதுகுறித்து டாக்டர் புகழேந்தி கூறியதாவது:
கொரோனா தடுப்பூசி போடுவதாலேயே கொரோனா வராது என்றும் கொரோனா வந்தால் அவர்கள் மூலம் பிறருக்குப் பரவாது என்றும் சொல்ல முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதா என்று கேள்வி கேட்டதற்கு, தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்தி எந்தவித ஆணையும் வெளியிடப்படவில்லை என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்தி எந்தவித ஆணையும் வெளியிடப்படவில்லை என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது

உங்கள் விருப்பத்துடன்தான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்கள். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் அரசோ, தடுப்பூசி நிறுவனங்களோ பொறுப்பில்லை. எனவே அதற்கு இழப்பீடு தர இயலாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி க்கு பதிலளிக்கும்போது மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ‘லேன்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆராய்ச்சி இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு சி.டி. வேல்யூ (cycle threshold (Ct) value ) 22.8 என்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு சி.டி. வேல்யூ 21.5 என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி போட்டவர்களுக்கும் தடுப்பூசி போடாதவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

இந்த நிலையில் தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மத்தியில் நோய் பரப்பும் தன்மையில் பெரிய வேறுபாடு இல்லாத நிலையில் ஆசிரியர்களை கட்டாயமாக தடுப்பூசி போட்டால் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருகிற சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை 750க்கும் சற்று குறைவாகவே உள்ளது.

கொரோனா தொற்று ஏறு முகத்தில் இல்லை என்பதையும் பார்க்க வேண்டும். எனவே, ஆசிரியர்களையும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அத்துடன், கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசாணை எதுவும் இல்லை என்பதையும் பார்க்க வேண்டும். அத்துடன் 1939ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார நோய் தடுப்புச் சட்டத்தின்படி, நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்கள்தான் பொது இடத்துக்கு வரக்கூடாது என்றும் அவர்கள்தான் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி போடாதவர்களை நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களாகக் கருத முடியாது. அத்துடன், குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்னமும் செயல் முறைக்கு வரவில்லை.

பென்சிலின்தான் முதல் ஆன்டிபயாட்டிக். இந்த ஊசி போட்டவர்களில் சிலர் ஒவ்வாமை வந்து இறந்து போய் இருக்கிறார்கள். எனவே, இந்தத் தடுப்பூசியினாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இந்த நிலையில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதிலிருந்து மத்திய சுகாதாரத் துறை விலக்கு அளித்துள்ளது.

கேரளாவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது என்று செய்திகள் வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசிகள் அதிகமாக செலுத்தப்பட்டிருந்தாலும்கூட, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் இறப்பு அதிகமாகியுள்ளது என்பதை அமெரிக்க நோய் தடுப்பு மைய (Center for disease control) புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஒரு நோயைத் தடுப்பதற்கு சமூகத்தில் நோய் தடுப்பாற்றல் (ஹோர்ட் இம்யூட்டி) உருவாக வேண்டும். சமூகத்தில் நோய் தடுப்பாற்றலை உருவாக்குவதற்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்று சொல்லவில்லை. கொரோனாவைப் பொருத்தமட்டில், சமூக நோய் தடுப்பாற்றல் உருவாவதற்கு 80 சதவீதம் வரை போதும். உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றைப் பொருத்தவரை 90 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்கிறது அறிவியல் உலகம்.

ஒரு நோயைத் தடுப்பதற்கு சமூகத்தில் நோய் தடுப்பாற்றல் (ஹோர்ட் இம்யூட்டி) உருவாக வேண்டும். சமூகத்தில் நோய் தடுப்பாற்றலை உருவாக்குவதற்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்று சொல்லவில்லை

தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றான ஓமிக்ரான் பரவி வரும் நிலையில், தடுப்பூசி பெற்றவர்களிடம் அதிவேகமாகப் பரவும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. உருமாறிய தொற்றுக்கு இந்தத் தடுப்பூசி பயனளிக்குமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆப்ரிக்க நாடுகளில் 6 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி சமத்துவமின்மை நிலவும் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை (No one is safe until every one is safe ) என்பதுதான் உலக சுகாதார அமைப்பின் கருத்து. ‘தடுப்பூசி மட்டுமே பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்துவிடாது’ என்று உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்களுக்குக் கட்டாய தடுப்பூசிக்கான தேவை என்ன? லேன்செட் ஆய்வு கட்டுரையின்படி தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் மத்தியில் நோய்பரப்பும் தன்மை என வரும்போது பெருமளவு வேறுபாடின்றி இரு தரப்பும் நோயை பரப்பும்போது கட்டாய தடுப்பூசி ஏன் தேவை?

தடுப்பூசியில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு (Compoments and adjuvantss) ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் தடுப்பூசி கட்டாயம் என்பது பிரச்சினைகளை எழுப்பாதா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அறிவியல் பூர்வமாக விவாதித்து செயல்பட வேண்டிய நேரம் இது என்கிறார் டாக்டர் புகழேந்தி.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival