Read in : English
சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பை பொறுத்தவரை தமிழகம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரி என்றே சொல்லலாம். பல மாநிலங்கள் தன்னுடைய மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தவே திணறும் வேளையில், மக்களை தேடி மருத்துவம் என்ற வகையில் முன்னேறி உள்ளது தமிழ்நாடு. அதேசமயம், தமிழகத்தில் தடுப்பூசிக்கெதிரான ஒரு தயக்கம் நிலவுகிறது.
தமிழகத்தில் தடுப்பூசிக்கெதிரான ஒரு தயக்கம் நிலவுகிறது
BMC Health Services Research எனும் அமைப்பின் ஆராய்ச்சி இதழில் செப்டம்பர் மாதம் வெளியான கட்டுரை ஒன்று, தமிழகத்தில் ஊடுருவியுள்ள இந்தத் தயக்கம் அல்லது மறுப்பு என்பது கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது என்கிறது.
குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசி கொடுக்கவே யோசிக்கும் மக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருகி வருகிறது என்பதை சுட்டிக்காட்டும் இந்த கட்டுரை, கோவிட் தடுப்பூசிக்கான தயக்கம் என்பது நமது மாநிலத்தை பொறுத்தவரை 40.7 சதவீதம் உள்ளதாக மதிப்பிடுகிறது.
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் 564 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார்கள். இதில் 19.5 சதவீதம் பேர் தடுப்பூசி மறுப்பாளர்கள் என்கிறது இந்தக் கட்டுரை. இளைஞர்கள், பெண்கள், கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் உடல் உழைப்பாளர்களிடம் இந்தத் தயக்கம் அதிகமாக உள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
அதேசமயம், Elsevier என்னும் ஆராய்ச்சி இதழின் ஒரு சமீபத்திய கட்டுரை, இந்தியா முழுதும் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, 29 முதல் 39 சதவீத மக்களிடம் இந்தத் தடுப்பூசி தயக்கம் உள்ளதாகவும், 12.7 சதவீத மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள போவதில்லை கூறுவதாகவும் தெரிவிக்கிறது.
தேசிய மதிப்பீடுகளை விட அதிகமாக தமிழகத்தில் நிலவும் இந்த தடுப்பூசி தயக்கம் மற்றும் மறுப்பின் காரணம் என்னவாக இருக்கும். இந்த மறுப்பாளர்களிடம் மேற்கொண்ட உரையாடலின் சாரம் இதோ.
அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 29 வயது இளைஞர். தனக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணம் அறவே இல்லை என்கிறார். அனைவருக்கும் தடுப்பூசி என்பதின் பின்னால் மிகப்பெரிய உலகளாவிய சதிவலை உள்ளதாக அருண் கருதுகிறார்.
“நோயெதிர்ப்பு குறைவாக உள்ளவர்களுக்குத் தடுப்பூசி என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதைவிட்டு எல்லோரும் தடுப்பூசி போடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவத்தன் நோக்கம் என்ன? இதனால் லாபம் அடையப்போவது யார்? தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தானே” என்பது அவரது வாதம். தன்னுடைய சகோதரரும் அவரது மனைவியும் தடுப்பூசி எடுத்துக்கொண்டபின் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதற்குக் காரணம் தடுப்பூசிதான் என்கிறார் அருண்.
“நமது உடலில் இயல்பாகவே உள்ள நோயெதிர்ப்பு சக்தியை தடுப்பூசி அழிக்கிறது” என்கிறார் மதுரையை சேர்ந்த ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தன்னுடைய நிறுவனம் கட்டாயப்டுத்தியதால் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக கூறும் ரகு, தடுப்பூசி உடலில் செலுத்தப்படும் நஞ்சு என்கிறார். ரகு மற்றும் அருண் போல பலர் தமிழகத்தில் உள்ளனர்.
ஆனால், இந்த அணுகுமுறை நம்மை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்று விளக்குகிறார் வைராலஜிஸ்ட் பவித்ரா வேங்கடகோபாலன். “தடுப்பூசி என்பது நோயின் தீவிரத்தை தடுப்பது; அதை ஒழிப்பது அல்ல. கோவிட் தொற்றின் ஓமிக்ரான் பிறழ்வின் தீவிரத்தை பற்றி இப்பொழுதே கருத்துக் கூறுவது கடினம்” என்று கூறும் பவித்ரா, “இவ்வாறு வைரஸ் பிறழ்வுகள் நிகழ்வதன் காரணம் முறையான தடுப்பூசி நடவடிக்கைகள் இல்லாததே” என்கிறார்.
வைராலஜிஸ்ட் பவித்ரா வேங்கடகோபாலன். “தடுப்பூசி என்பது நோயின் தீவிரத்தை தடுப்பது; அதை ஒழிப்பது அல்ல. கோவிட் தொற்றின் ஓமிக்ரான் பிறழ்வின் தீவிரத்தை பற்றி இப்பொழுதே கருத்துக் கூறுவது கடினம்”
“தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளாத உடல்களில் பெருகும் வைரஸ் புதிய பரிணாமங்களை அடைகிறது மற்றும் ஆபத்தான ஒன்றாக உருமாறுகிறது, என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த வைரஸ் பிறழ்வுகளை தடுக்கும் தடுப்பூசி போடுவதை மறுப்பது, இந்த வைரஸின் பிறழ்வுகளுக்கு காரணமாகி விடும்” என்றும் எச்சரிக்கிறார்.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி பேட்டியளித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தை பொறுத்தவரை 76.23 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் 40.31 சதவீத மக்களுக்கு இரண்டாம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விரைவில், இந்த தடுப்பூசி தயக்கம் அல்லது மறுப்பு முழு தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவது மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒரு சவாலாக இருக்கும்.
தேசிய சுகாதார அமைப்பில் பணியாற்றியுள்ள மருத்துவ நிபுணர் டாக்டர் சுந்தரராமன், தடுப்பூசி அளிப்பதில் உள்ள இடைவெளி நமக்குச் சவாலாக மாறும் என்கிறார். தமிழகம் நிர்வாகத்திற்கு பெயர் பெற்றிருப்பினும், சுகாதார சமூகத் தொடர்பு என்னும் அளவீட்டில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். தமிழகம் மிக வேகமாக நகர்மயமாகி வருகிறது.
தேசிய சுகாதார அமைப்பில் பணியாற்றியுள்ள மருத்துவ நிபுணர் டாக்டர் சுந்தரராமன் “சுகாதார சமூகத் தொடர்பு என்னும் அளவீட்டில் பின்தங்கியுள்ளதை” சுட்டிக்காட்டுகிறார்
பண்டைய கிராம அமைப்புகள் வலுவிழந்து வருகின்றன. அதே சமயம் நகர அமைப்புகள் மக்கள் தொடர்பு என்ற அளவில் அவ்வளவு வலுவாக இல்லை. தடுப்பூசி பற்றியும் அதன் மீதுள்ள ஐயங்களை நீக்கவும் முறையான மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இளையான்குடி மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் பாரூக் அப்துல்லா, மற்றொரு அலை வரும் பட்சத்தில் தடுப்பூசி மறுப்பாளர்கள் சந்திக்கப்போகும் ஆபத்தை விளக்குகிறார். மிகத் தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கிறார்.
தமிழகத்தில் நிலவும் இந்தத் தடுப்பூசி தயக்கம் மற்றும் மறுப்பை நீக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு விரைவில் ஈடுபட வேண்டும் என்பதை இந்த மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
Read in : English