Read in : English
ஒரு நாள் மழைக்கே, சென்னை நகரம் மழை வெள்ளத்தில் தள்ளாடுகிறது. சென்னை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் ஏரிகளிலிருந்து திறந்து விடப்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் செல்லும் கால்வாய் பாதைகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல சென்னையில் உள்ள பல சாலைகளில் தண்ணீர் புரண்டு ஓடுகிறது. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் சென்னை நகரையே உலுக்கிய பெருவெள்ளத்தைப் போல தற்போதைய பெருமழையும் அத்தகைய பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போதைய பெருமழையைத் தொடர்ந்து, வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் பெருமழையைக் கொண்டுவந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளும் பேரிடர் மீட்புப் பணிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினே நேரில் சென்று தண்ணீர் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். அரசின் உடனடி நடவடிக்கைகள் அவசியமானவை. தவிர்க்க முடியாதவை. ஆனால், தொலைநோக்குப் பார்வையில் இதுபோன்ற பேரிடர் ஏற்படாமல் செய்வதற்கான திட்டங்களும் செயல்பாடுகளும் தேவை.
2015ஆம் ஆண்டில் பெருமழையும் வெள்ளமும் ஏற்பட்டபோது, நகரில் ஏற்பட்ட அந்த பாதிப்புகளுக்கான காரணங்களும் மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்த யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
நகரிலும் அதைச்சுற்றியுள்ள Ñமழை நீர் பாதைகளான ஆறுகளும் கால்வாய்களும் நீரோடைகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பல இடங்களில் ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள. நீர் வழித் தடங்களைப் பாதுகாப்பதற்கு சட்டங்கள் இருந்தாலும்கூட, அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. அடையாறு, கூவம் ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி குறுகிப் போய் உள்ளன. பல இடங்களில் ஏரிகள் இருந்த இடங்கள் தூர்க்கப்பட்டு, அந்த இடங்களில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், குடிசைப் பகுதி மாற்றுக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. நீர் நிலைகளை மூடி புதிய நகரியங்கள் உருவாக்கப்படுகின்றன. தனியார் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. இதனால் மழை நீர் செல்வதற்குக் கிடைத்த தாழ்வான பகுதிகளில் எல்லாம் பெருமழை காலத்தில் தண்ணீர் குதித்து ஓடி நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. முன்யோசனையில்லாமல் திட்டமிடப்படாத நகர்ப்புற விரிவாக்கம், அறிவியல் அடிப்படை இல்லாத நகர்ப்புற நிலப் பயன்பாட்டுக் கொள்கைகள், தொலைதூரப் பார்வையற்ற வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை இதற்குக் காரணங்கள் என்பதை பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அப்போதே சுட்டிக்காட்டினார்கள்.
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவற்றில் உள்ள கோவில் குளங்கள், பாசனக் குளங்கள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் குறித்த ஒரு முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் தற்போதைய நிலை, எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவுக்கு சகதியும் மண்ணும் சேர்ந்து தூர்ந்து போயிருக்கிறது என்பதும் கணக்கிடப்பட வேண்டும். மேடு-பள்ளம், தாழ்வான பகுதிகள் குறித்த ஆய்வை நடத்தி, அவற்றை வரைபடமாக்க வேண்டும். பருவமழை மாதங்களில் உபரி நீர் பாய்வது குறித்து செயற்கை ஒத்திகை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்” என்று 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் பற்றிய குடிமக்கள் சாசனத்தில் பேராசிரியர் ஜனகராஜன் பல்வேறு யோசனைகள் கூறியுள்ளார்.
மழை முடிந்து விட்டதும், பிரச்சினை தீர்ந்துவிட்டதாகக் கருத முடியாது. தொடர் நடவடிக்கைகளும், தொலைநோக்குத் திட்டங்களும், செயல்பாடுகளும் தேவை. பெருமழை நேற்று பெய்தது. இன்றும் பெய்யும். நாளையும் இருக்கும். ஆனால், பெருமழை காரணமாக வரும் பாதிப்புகளுக்கு மனிதத் தவறுகள் காரணமாக இருக்கக்கூடாது. 2015ஆம் ஆண்டு மழை நீர் வெள்ளம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களை இப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
2015இல் ஏற்பட்ட சென்னைப் பெருமழையின் போது மனிதநேயத்துடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பலர் மீட்பு நடவடிக்கைகளில் களம் இறங்கினார்கள். அந்த மனிதாபிமான செயல்களைப் பார்த்து அனைவரும் மனம் நெகிழ்ந்து போனார்கள். ஆனால் அந்த மனிதாபிமானத்தை உயிர்ப்பிக்க, மீண்டும் ஒரு பெருமழை வெள்ளம் தேவையா என்ன?
பாக்ஸ்
அந்த மழை நாட்கள்
1903: சென்னையில் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது கனமழையும் வெள்ளமும் ஏற்பட்டது.
1918: நவம்பர் மாதத்தில் சென்னையில் 108.8 செமீ மழை பெய்தது. அந்த கனமழையால் சென்னை நகரம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது
1943: அக்டோபர் மாதத்தில் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாக கூவம், அடையாறு நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தோடியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தத்தளித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1976: சென்னை நகரம் பெருமழையும் வெள்ளத்தையும் சந்தித்தது. அப்போது, மழை காரணமாக பாதிப்புக்கு உள்ளான மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் செயல்பட வைக்க ராணுவம் கொண்டுவரப்பட்டது.
1985: சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால் கோட்டூர்புரத்தில் உள்ள குடிசைப் பகுதி மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. அதைப்போல அம்பத்தூர், மாதவரம் பகுதிகளிலும் வெள்ளம். அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் தங்கியிருந்த ராமாவரம் தோட்டத்தையும் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து அவர் படகு மூலம் மீட்கப்பட்டு, அவரும் அவரது மனைவி ஜானகியும் கன்னிமாரா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
2005: கனமழை காரணமாக, சென்னை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது.
2015: சென்னை நகரையே அதிரவைத்த வரலாறு காணாத பெருவெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட சேதாரங்களும் பாதிப்புகளும் சொல்லி மாளாது.
2021: நவம்பரில் சென்னையில் மீண்டும் பெருமழை
Read in : English